மரபு, உரை- ஒரு கடிதமும் பதிலும்

அன்புள்ள ஆசானுக்கு

மரபை விரும்புவதும் வெறுப்பதுவும் எப்படி? என்ற உரை எந்த ஒரு நல்ல உரையைப் போலவும் அதை விட மேலும் அதிகமான குழப்பங்களுடன் விட்டுச் சென்றது நிறைவளிக்கிறது. எவ்வித சலனமுமின்றி வேறேந்த சிந்தை இடருமின்றி மூன்று மணிநேரத்திற்குமதிகமாக உரையை நான் கவனித்தது எனக்கே வியப்பளித்தது. கட்டண உரை நிச்சயம் ஓர் நற்புது அனுபவம்.

மரபு என தலைப்பை கண்டதும் எவ்வித சந்தேகங்களும் ஐயப்பாடுகளுமின்றி நேரடியாக இலக்கிய மரபை அல்லது மரபிலக்கிய உரை என யூகித்து ஆர்வத்தோடு காத்திருந்தேன் . ஆனால் தலைப்பின் உண்மைப் பொருள் மேலும் ஆர்வமாக்கியது.

இப்போது யோசிக்க மரபு என்ற வார்த்தையை கூட நான் சரி வர விளக்கி கொள்ளவில்லை என உணர்கிறேன். மரபு என எவற்றை சொல்லலாம் எவற்றை தள்ளலாம் என யோசிக்க முதலில் தோன்றுகின்றன மதமும் மத சடங்குகளும். மதம் மரபல்ல விருப்ப நோக்கில் மதம் மாறுவதும் இயல்பானது ஆனால் மத சடங்குகள் மரபானவை விருப்ப நோக்கில் மாறாதவை . இம்முரனே முதலில் தோன்றி அதிர்ச்சியளிக்கிறது. இவ்வுரை ஏற்படுத்திய குழப்பங்களில் (அல்லது என் அறியாமையின் இடைவெளியை சுட்டி காட்டிய தருணங்களில்) முக்கியமானது மரபின் எல்லைகள் என்னேன்ன ?? பண்பாட்டிற்கும் மரபிற்குமான வேறுபாடு பண்பாடு தனிதன்மையுடையது , தனியுடைமை ஆனது (ஒரு குறுங்குழுவிற்கோ தேசத்திற்கோ உடைமையானது) ஆனால் மரபு என்பது வரம்புகளற்ற ஒரு மேலதிகமான நுண்சொல்லேன தோன்றுகிறது. மரபின் கிளைகளில் பண்பாடு முளைத்தலும் பண்பாட்டில் மரபு பரவியிருப்பதும் இயல்பென கொண்டாலும் மேலும் மேலுமென ஐயம் சூழ்கிறது.

மரபென்பது ஒரு தொடர்ச்சி. ஆதியும் அந்தமும் இன்றி ஆகி பெருகும் நதி. நிற்க. ஆனால் விதை, மரம் மற்றும் மைந்தர், தந்தை போன்றவே தவிர அனைத்து மரபும் முடிவிலியாக சுழலும் மரபல்லவே ?. எங்கேனும் எப்பொருட்டேனும் துவங்கியவே தானே. 30000 வருடங்களின் எடை தாங்கி இங்கிருக்கும் ஒரு பாறை மிக கனமானது. ஆனால் 30000 வருடங்கள் முன் ஒரு சிறு கல் தானே. அச்சிறு கல்  20 வருடங்கள் முன்பு எறியப்பட்டிருந்தால் அது மரபென ஆக எத்தனை காலமாக காத்திருப்பது. அதை இப்போதே மரபென கூறினால் என்ன சொல்லி மறுப்பது ??

மரபு தோன்றியது முதலே மரபை மறுத்தலும் தோன்றியிருக்கிறது , (முளைக்காத விதை மற்றும் பிரம்மச்சாரிகள் போல) அப்போது மரபை மறுத்தலும் மரபென கொண்டால் “மரபை மறுக்கவோ மாற்றவோ கூடாது” என்ற தரப்பை சேர்ந்தவர்கள் “மரபை மறுத்தல்” என்ற மரபை மறுக்கிறார்கள் அல்லவா ?? அல்லது “மரபை மறுத்தல்” என்ற மரபை ஏற்று அதையே மறுக்கிறார்களா??

மரபை ஆதரிப்பது, எதிர்ப்பது மற்றும் நடுநிலைமை என மூன்று தரப்புகளை குறிப்பிட்டு அதற்கான நெடிய வரலாற்றினை கூறினீர்கள். மரபை எதிர்க்கும் ஒரு தரப்பு வளர்ந்து இயக்கமாகி இப்போது இவர்கள் ஒரு மரபு ஆகிவிட்டனர் என குறிப்பிட இயலுமா?? அல்லது மரபு என்பது விதை,மரம் போல ஆதியந்தம் இல்லாதவே மட்டும் தானா??.

மரபு என்பதை எத்தனை யோசித்தும் ஒரு அருப  சிந்தனை(எண்ணம்) மட்டுமே என எண்ணவியலவில்லை. இங்கு செய்வது அனைத்துமே மரபு என பழக்கப் படுத்தப் பட்டிருத்கிறோம். இறந்தவர்களின் புகைபடத்திற்க்கு மாலையிடுவது முதல் வாசலில் கோலமிடுவது வரை மரபு என நம்பி கொண்டிருக்கிறோம். அல்லது இவையும் மரபு தானா ?? மரபு அருப சிந்தனை இல்லையா??

ஒரு தனிமனிதன் தன்னுள்ளத்தில் அடியாளத்தில் தன்னந்தனிமையில் எண்ணுபவற்றிற்கும் முன் பின் உதாரணங்களிருப்பின் அவற்றை மரபெனலாகுமா?? உதாரணமாக மரணத்தை பற்றிய ஒரு மனிதனின் முதல் சிந்தனை.

அழகான சில மணித்துளிகளுக்கும் ஆழமான ஒரு உரைக்கும் நன்றிகள்.

இப்படிக்கு

எஸ்.பி.ஆர் 

***

அன்புள்ள சிவா,

இவை உங்கள் வினாக்கள். இவற்றுக்கான விடையை நீங்களே சென்றடையவேண்டும். அதற்கான சில வழிகளைத் துலங்கவைப்பதே என் உரையின் நோக்கம்.

எது மரபு? நன்று தீது எல்லாமே மரபுதான். நினைவென, ஆசாரமென , அடையாளங்கள் என எஞ்சியிருப்பவை எல்லாமே மரபின் கூறுகளே. அவற்றில் எவை தேவை, எவை தேவையில்லை என நிர்ணயிப்பதில் முதன்மையிடம் வகிப்பது அறவியலே. இன்றைய அறத்துக்கு உவப்பற்ற எதுவும் தவிர்க்கப்படவேண்டியதுதான்.அறமே அடிப்படை, பிற அனைத்தும் அதன் வழிதொடர்வன தான். மானுடசமத்துவம் ஓர் அறக்கொள்கை. இயற்கையுடன் இயைதல் இன்னொரு அறக்கொள்கை. இவை இன்றைய நூற்றாண்டின் விழுமியங்கள். இவையே முதன்மை அளவுகோல்கள்.

அவற்றில் தேறுவனவற்றையே அழகியல், தத்துவம், மெய்யியல் என்னும் தளங்களில் பரிசீலனைசெய்து கொள்வன கொண்டு அல்லன விலக்கவேண்டும்

ஜெ

***

முந்தைய கட்டுரைஅஜ்மீர் பயணம்-2
அடுத்த கட்டுரைஅருண்மொழி உரை, கடிதம்