குறைந்தது பத்துக் கதைகளாவது இருக்கும் ஒரு சிறுகதைத் தொகுதியில். அதற்கும் குறைவாக இருக்குமேயானால் அந்தப் படைப்பாளியின் ஒரு குறுநாவலைச் சேர்த்துக் கொள்வார்கள்.அந்தப் புத்தகத்தை ஒரு குறிப்பிட்ட பக்கங்களுக்கான தொகுதியாக மாற்றுவார்கள்.
ஆனால் வெறும் ஆறே ஆறு கதைகளைக் கொண்ட ஒரு சிறுகதைத் தொகுதி எனக்குத் தெரிய இப்போதுதான் வந்திருக்கிறது என்று சொல்ல வேண்டும். கதைகளென்னவோ ஆறே ஆறு என்று இருக்கலாம். ஆனால் அது வெறும் ஆறு கதைகளல்ல. இந்த ஆறு கதைகள் அறுபது கதைகளுக்குச் சமம். ஒரேயொரு கதையை மட்டும் படித்துவிட்டு பட்டென்று புத்தகத்தை மூடிவிடுவதில்லையா? அந்தக் கதை ஏற்படுத்திய பாதிப்பிலேயே நாலைந்து நாள்கள் அலைவதில்லையா? ஆர்வ மிகுதியில் அதே கதையை எடுத்து திரும்பவும் படித்து ஆழ்ந்து போவதில்லையா?
ஆகையால் எண்ணிக்கை என்றுமே முக்கியமில்லை. எது நிற்கிறது, எத்தனை நிற்கிறது என்பதுதான் முக்கியம். ஒரு படைப்பாளிக்கு அவனது ஒரே கதை திரும்பத் திரும்பப் பலராலும் பேசப்பட்டுக்கொண்டேயிருக்குமானால் அதில் கிடைக்கும் ஆத்ம திருப்தி வேறெதிலும் கிடைப்பதில்லை. அப்படி நிறைய எழுத்தாளர்கள் நினைவு கூறும் கதைகளை எழுதியிருக்கிறார்கள். ஒரேயொரு நாவலை மட்டும் எழுதிவிட்டுப் பேசப்பட்டுக் கொண்டேயிருக்கும் பெருமையை அடைந்திருக்கிறார்கள். ஆகையால் எத்தனை படைப்பு என்பதை விட எழுதிய ஒன்றானாலும் அது என்ன சொல்கிறது, எப்படிச் சொல்கிறது என்பதே முக்கியம். அதுவே தரம். தராதரம். நிரந்தரம்.
எழுத்தாளர் திரு. நா.கிருஷ்ணமூர்த்தி பழம் பெரும் படைப்பாளி. கசடதபற- காலத்து எழுத்தாளர். 1965 முதல் 1975 வரையிலான காலகட்டத்தில் “கோணல்கள்” என்ற தொகுப்புக்காகவும், நடை, கசடதபற ஆகிய சிறு இலக்கிய ஏடுகளுக்காக
வும் அவரால் எழுதப்பட்ட ஆறு சிறுகதைகள் இப்போதுதான் தொகுப்பாக வந்திருக்கிறது.
க்ரியா பதிப்பகம் – படைப்பாளியை, படைப்பின் தரத்தை அறிந்து அவரை கௌரவிக்கும் விதமாக, அழகிய சிறு தொகுதியாக “மனிதர்கள்” என்ற தலைப்பிட்ட இத்தொகுதியைக் கொண்டு வந்திருக்கிறது.
ஒரு படைப்பாளிக்கு அவரது முதல் புத்தகம் வெளி வரும்போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதை வார்த்தைகளால் சொல்லி முடியாது. இவருக்கு அவரது எண்பதாவது வயதில் இந்த அதிசயம் நிகழ்ந்திருக்கிறது. எனக்குத் தெரிய இவ்வளவு வயதான காலத்தில் முதல் புத்தகம் வெளி வரும் முதல் எழுத்தாளர் இவராகத்தான் இருக்க முடியும் என்று நினைக்கிறேன். இந்தச் செய்தியே எனக்கு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்தது. அப்படியென்றால் படைப்பாளிக்கு எவ்வளவு திருப்தியளித்திருக்கும்? ஒரு இளைஞனின் மனநிலைக்கு சென்று அவர் உற்சாகமடைந்திருப்பார்தானே? என்ன ஆனாலும் மூத்தவர். பழைய மதிப்புமிக்க இலக்கியச் சிற்றிதழ்களில் எழுதியவர் என்கிற பெருமைக்குரியவர். அவரது இத்தொகுதியும் மிகுந்த மதிப்புக்குரியதாகத்தான் விளங்குகிறது.
மனிதர்கள் சுயநலமிக்கவர்கள் என்பது பொதுவான விதி. அதிலும் இக்கட்டான காலகட்டத்தில் அது விஞ்சி நிற்கும். அது மட்டுமே தலைதூக்கி செயல்படும். தான் எப்படித் தப்பிப்பது, தன்னை மட்டும் எப்படிக் காத்துக் கொள்வது, இக்கட்டிலிருந்து தன்னை எப்படி விலக்கிக் கொள்வது – இது எல்லா மனிதர்களுக்குமான இயல்பு.
இப்படியான கருத்துப் பொதிந்த ஒரு நிகழ்வே முதல் கதையாகியிருக்கிறது. “மனிதர்கள்” – இது தலைப்பு. புத்தகத்தின் தலைப்பும் இதுவே. மனிதர்கள் என்பவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்பதை அழுத்தமாகச் சொல்கிறது இக்கதை. சொந்த அனுபவச் செழுமையும், பார்த்த, அனுபவித்த, மனதில் பதிந்த காட்சிகளுமே கதையாகுதல் நியாயம், அப்பொழுதுதான் அந்தப் படைப்பு முழுமையாக வெளிப்படும் என்பதில் உறுதியாக இருக்கிறார் இவர். இந்தக் கதையின் அனுபவம் அவருக்கு ஏற்பட்டிருக்குமா தெரியவில்லை. பார்த்து, அனுபவித்த கொடுமையாய்க் கூட இருக்கலாம் என்றுதான் தோன்றுகிறது.
அண்ணாமலை வலிய சிதம்பரத்தை தண்ணீருக்குள் இழுத்துப் போகிறான். வேண்டாம், வேலாயுதம் இறை கிணற்றில் தலை முழுகிக் கொள்கிறேன்…என்று சொல்கிறான் சிதம்பரம். அதே சமயம் அங்கு போனால் அவன் ரொம்பக் கிராக்கி பண்ணிக் கொள்வான் என்றும் அலுத்துக் கொள்கிறான். அதைவிட காட்டாற்று வெள்ளமாய் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிய போதும் கூட அசராது அக்கரைக்குச் சென்று அநாயாசமாய்த் திரும்பிய அண்ணாமலை மீது அவனுக்கு நம்பிக்கை இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும் பயமும் போகமாட்டேனென்கிறது. அப்படி ஆபத்தை எதிர்நோக்கி போய்த்தான் ஆக வேண்டுமா என்று தன்னைத்தானே பலமுறை கேள்வி கேட்டுக் கொண்டும், தனக்குள்ளேயே – அதான்…அண்ணாமலை அண்ணாச்சி இருக்காருல்ல…அப்டி விட்டிடுவாரா நம்மள…என்கிற நம்பிக்கையும் ஊசலாட…அட…சும்மா பயப்படாம வாங்க…நா இருக்கன்ல…அப்டி விட்டிருவனா உங்கள….என்று கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு தண்ணீரில் இறங்கி விடுகிறார் அண்ணாமலை.
முழங்கால் முழுகி, இடுப்புக்கு வந்து, பின்பு மார்பு தொட்டு, வாய், மூக்கு, கண் என்று ஏறி, தலையே முழுகிவிடும் நிலையில் பயந்து போகிறான் சிதம்பரம். அதுநாள் வரை அத்தனை வேகமான, ஆழமான வெள்ளத்தைப் பார்த்திராத, அனுபவப்படாத அணாணமலையும்கூட கொஞ்சம் மலைக்கத்தான் செய்கிறான். இறுக்கிப் பிடித்த கையோடு எதிர்க்கரை நோக்கிப் பாய்கையில், அதையும் மீறிய தண்ணீரின் வேகம் அவர்களை நகர்த்திக் கொண்டே போகிறது. அண்ணே…உங்களை நம்பித்தான் இருக்கேன்…ஊசலாடும் நிலையில் சிதம்பரத்தின் கூக்குரல்.
இன்னும் பத்தடி போனால், முதலைபள்ளச் சுழலில் மாட்டிக்கொண்டு உள்ளே இழுத்து அமிழ்த்தி விடுமே என்கிற பயம் தலையெடுக்க, ஏதோவொரு உத்வேகம் உந்தித்தள்ள முன்னேறுகிறான் அண்ணாமலை. இனிக் கையைப்பற்றிப் பலனில்லை என்று கால்களைத் திடமாய்ப் பிடித்துக் கொள்கிறான் சிதம்பரம். எதிர்த்து முன்னேற, இழுத்து இழுத்துப் பிடித்தால் எப்படிக் கரையைத் தொடுவது? எப்படி எதிர்த்து நீந்துவது ?தண்ணீரின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் இருவரும் தடுமாறுகிறார்கள். காலைப் பிடிக்காதே…விடுப்பா….காலை விடு….மேலே வந்து மூச்சு வாங்கி…கத்துகிறான் அண்ணாமலை.
கரையேறுவோமா, சுழலில் அமிழ்ந்து செத்துப் போவோமா என்கிற நம்பிக்கையற்ற தடுமாற்றத்தில், வெள்ளத்தின் ஆர்ப்பரிப்பும், வேகமும், சுழற்சியும் அவர்களைத் தடுமாறச் செய்ய, என்ன ஆனாலும் சரி…கால்களை விடுவதில்லை என்று அண்ணாமலையின் கால்களை நெஞ்சோடு சேர்த்து இரு கைகளாலும் பற்றிக் கொண்டு உயிருக்குப் போராடும் அந்தக் கணத்தில்…
அடப்பாவி…கொஞ்சமாச்சும் முன்னேறுவோம்னா…இவனே இழுத்து உள்ள அமுக்கிடுவான் போலயே….இந்தக் கதில எப்டிக் கரையைத் தொடுறது…? எமப்பிடியால்ல பிடிச்சிருக்கான்…. ஒரு கணம் நினைத்த அண்ணாமலை…ஏதோவோர் எண்ணம் பிடியாய் உந்தித்தள்ள….இருக்கும் சக்தியையெல்லாம் சேர்த்து, ஒன்று திரட்டி…..ஒரே உதை…….
கட்டிய வேட்டியோடு சேர்ந்து பிடி நழுவிப் போகிறது அந்தக் கணம்….வெள்ளத்தோடு வெள்ளமாய் சிதம்பரம்….
பய மவனே …உடும்புப்பிடியால்ல பிடிக்கிறான்….கொஞ்சம் அசந்திருந்தா…நம்மளையுமில்ல இழுத்துவிட்டுப் போயிருப்பான்….சுழித்தோடும் சுழல்களுக்கு நடுவே வெகு நேரத்துக்கு சிதம்பரம் எங்குமே தென்படவில்லை.
கதை முடிந்து போகிறது.
வெறும் கோவணத்தோடு,புளிய மரங்களும், இலுப்பை மரங்களும் நிறைந்த ஆற்றங்கரையோடே அண்ணாமலை நடந்து போய்க் கொண்டிருந்தான்.
இந்த அனுபவத்தில்-தைரியமுள்ளவர்கள் அண்ணாமலையாய்த் தங்களை வரித்துக் கொள்ளலாம். அல்லாதவர்கள், நாமளா இருந்தா இந்தக் கதிக்குத்தான் ஆளாகியிருப்போம் என்று சிதம்பரமாய்த் தங்களை நினைத்துக் கொள்ளலாம். அது அவரவர் விருப்பம். ஒரு வெள்ளத்தினூடே தாறுமாறாய் அல்லது ஏறுக்கு மாறாய்ச் சிக்கிக் கொண்ட அனுபவம் கிடைக்கிறது இந்தக் கதையில். கிராமங்களில் வாழ்ந்தவர்களுக்கு, அவர்கள் ஊர் ஆற்றில் பெரு வெள்ளத்தை அடிக்கடி கண்ட அனுபவம் உள்ளவர்களுக்கு…இந்தக் கதை ஒரு பயங்கரம்தான் என்பது திண்ணம்.
மனித சமூகத்தில் அநேகம் மாற்றம் ஏற்பட்டிருப்பினும், வாழ்வின் அடிப்படை குணாதிசயங்கள், மதிப்பீடுகள் அவ்வளவாக மாறிவிடவில்லை என்கிறார் ஐராவதம் ஆர்.சுவாமிநாதன். அதுதான் உண்மை என்பது இந்தக் கதையைப் படித்து முடிக்கும்போது சுள்ளென்று உறைக்கிறது.
மனித இழிநிலையைப்பற்றிப் பேசுவதால் இத்தொகுப்பின் சிறந்த கதையாகிறது இது என்று நடை இதழின் ஆசிரியர் திரு.கண்ணன் எடுத்துரைக்கிறார்.
ஒரு சோறு பதம் என்று இத்தொகுதியின் இந்த ஒரு படைப்பும், எழுத்தாளர் திரு.நா.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் படைப்புத் திறனும் வெளிப்பட உரைத்தது போதும் என்றே நினைக்கிறேன்.
உஷா தீபன்