அன்புநிறை ஜெ,
அருண்மொழி அக்காவின் எழுத்தைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். அதில் இந்தவாரம் வெளியான ‘சின்னஞ்சிறு மலர்’ பதிவு மிக அழகானது. ஒரு நுண்மையான உணர்வை சற்றும் மிகை குறையின்றிக் கையாண்டிருக்கிறார்கள். பள்ளி செல்வதற்கும் முந்தைய பால்யத்தில் துவங்கி குழந்தைப் பருவத்து லீலைகளில் குழந்தையின் மனநிலையோடே விளையாடித் திரிந்து, கலை விளையாட்டு முயற்சிகளைக் கதைத்து, எதிர்பாரா தருணத்தில் அந்த சிறு மலரை மலர்விக்கிறார். எழுத்து மேலும் மேலும் தன்னையே கண்டடைய வைக்கிறது என எண்ணிக்கொண்டேன்.
அக்கா இசை ரசனையோடு எழுதும் பதிவுகளுக்கு நான் மிகப் பெரிய ரசிகை என்றாலும், மன ஓட்டமாய் எழுதிச் செல்லும் இளம்பருவத்துக் கதை சொல்லும் பதிவுகளில் இன்னும் மனதுக்கு அணுக்கமாகிவிடுகிறார்கள்.
இதற்கு முன்னர் இரு பகுதிகள் என் மனதுக்கு மிக நெருக்கமானவை. “வானத்தில் நட்சத்திரங்கள்” பதிவை வாசித்து விட்டு வெகுநேரம் மனம்பொங்கி அமர்ந்திருந்தேன். அதில் நாடகத்துக்கு செல்வதற்கான ஆயத்தங்கள், பீஷ்ம அர்ஜுன சண்டையில் பறக்கும் அம்பு, கதைகள், தின்பண்டஙகள் என மகிழ்வாகத் தொடங்கி, ஏசு கதையில் உணர்வுகள் எடை கொண்டு, இறுதியாக தம்பியின் நினைவில் மனதை நெகிழ்த்தும் கணம் ஒன்றில் முடித்திருப்பார்கள். அந்த மூன்று நட்சத்திரங்கள் எத்தனை பேரின் குழந்தைப்பருவத்து சாட்சியாக இருக்கின்றன என என்று எண்ணிப் பெருமூச்சு விட்டுக்கொண்டேன்.
மற்றொரு பகுதி “மலையில் பிறப்பது” – மிக உணர்வுபூர்வமான ஒரு பதிவு. அதை வாசித்த போது மீனாட்சியின் முன்னிலையில் உணரும் நமக்கும் அவளுக்கும் மட்டுமேயான அந்தரங்கம், பிரகார வெளியின் ஒவ்வொரு துளியையும் நிறைந்து சூழும் நாதஸ்வர இசை, திருவையாற்றின் காற்றிலேயே கலந்திருக்கும் இசை, அந்த மாலைநேர ஆற்றுப்படிக்கட்டில் அமர்ந்திருக்கும் அனுபவம் என அனைத்தையும் அனுபவித்த தருணங்கள் மனதில் நிறைந்தன. இறுதியாக அந்த ‘ஹிமகிரி தனயே’ பாடல். நான் முதல் முறை இமயம் காணச் சென்ற போது மொத்த பயணத்திலும் அந்தப் பாடல்தான் ரீங்கரித்துக் கொண்டே இருந்தது. உடன் பார்வதி நதி உடன்வர இது அவளது நிலமல்லவா என்றேதான் எண்ணிக்கொண்டிருந்தேன்.. மலைமகள் என்ற பெயர் எவ்வளவு கம்பீரமாக அவளுக்குப் பொருந்துகிறது! இந்திரநீலத்தின் முதல் அத்தியாயத்தின் பெயரான மலைமுடித்தனிமை எனக்கு மிகப் பிடித்த தலைப்புகளில் ஒன்று. அதை உலகாளும் அன்னையோடும், விசாலாக்ஷி அம்மாவோடும், எங்கெங்கும் உடன்வரும் இசையோடும் அகம் இணைத்துக் கொண்டது மிக நெகிழ்ச்சியாக இருந்தது.
அந்த உற்சவமும், ஆசை ஆசையாய் கேசட்களைத் தேர்ந்தெடுத்ததும், முதன் முதலில் வாங்கிய டேப்ரிகார்டரும், காட்டன் புடவையும் மல்லிகைச் சரமும், ஆற்றூரின் அன்பும், கான கந்தர்வனின் வருகையும் என வர்ணித்திருந்தாலும் அனைத்திலும் அடிநாதமாக உங்கள் இருவரின் நேசத்தின் அழகு மிளிரும் பதிவு அது.
மேலும் மலரட்டும்.
மிக்க அன்புடன்,
சுபா