பேசாதவர்கள், கடிதங்கள் -4

பேசாதவர்கள்[சிறுகதை]

பேசாதவர்கள் சிறுகதையின் காலம் இந்திய சுதந்திர காலகட்டத்தின் இறுதி மற்றும் தொடக்கத்தின் நிகழ்வுகளிலிருந்து சொல்லப்பட்டுள்ளது. இது இந்தியா தனது நில உடமை சமூக கட்டமைப்பை கைவிட்டு விட்டு ஜனநாயகத்திற்குள் காலடியெடுத்து வைத்து ஆரம்பிக்கும் புதிய தொடக்கம். மேற்கத்திய நாடுகளில் ஜனநாயக விழுமியங்கள் நீண்ட கால உரையாடலின் வழி  மக்களை பழக்கி  நில உடமை சமூக மனநிலையை மழுங்கடித்து நிறுவப்பட்டதாகும் ஆனால் இந்தியா நேரடியாக, எந்தவித முன் தயாரிப்புகளுமின்றி ஜனநாயகத்திற்குள் பாய்ந்தது. எனவே தான் சுதந்திரம் கிடைத்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் பழைய மனநிலைகளின் எச்சங்கள் நம்மில் பெரும்பாலானவிகளிடம் இன்னும்  ஒட்டிக்கொண்டிருக்கிறது.

இந்த சிறுகதை இந்தியாவின் இந்த பாய்ச்சலை நீலி எனும் தொன்மத்துடன் இனைத்து சொல்லப்படுவதினாலேயே முற்போக்கு எனும் போர்வைக்குள் நிகழும் பொங்குதலை தாண்டி வாசகனின் மனதில் அழுத்தமான பாதிப்பை ஏற்ப்படுத்துகிறது. நில உடமை சமூக சித்தரவதை கருவிகளில் ஒன்றான சாதிய கட்டமைப்பின், அதன் Dummy-Dumpy குரலும், முகமுமற்ற மனிதர்களுக்காக தெய்வம் (நீலி) மேலிருந்து கீழிறங்கி வருகிறாள். எல்லா காலகட்டங்களிலும் தெய்வங்கள் (ஏசு, புத்தர், காந்தி) யாக மண்ணிலிறங்கி வந்திருக்கின்றன. இங்கே நீலி சென்ற காலத்தின் சித்தரவதை கருவிகளை எரியூட்டி, டம்மிகளுக்கான புது உயிரை தன்னில் சுமந்துகொள்கிறாள். அதுவே ஜனநாயக இந்தியா. அங்கே தனது மகன் சிருகண்டனின் இடி, மின்னல் போன்ற குரலை ஒலிக்க விடுகிறாள். அவள் எரியூட்டியது முழுதும் எரிந்து இன்னும் அடங்கவில்லை. அது இன்னும் இந்த சமூகத்தில் நீடித்துக்கொண்டு தான் இருக்கிறது. ஆனால் வரலாற்றில் அவை எரிந்து அடங்கத்தான் போகிறது. அதற்கான பாதையில் தான் நாம் பயணம் செய்துகொண்டிருககிறோம்.   அதற்கான சான்றுகளில் ஒன்று தான் நீங்கள் இனைத்துள்ள ஓவியத்தில் சித்தரிகப்பட்டிருக்கும் பழங்குடியினரான  ‘மது’ கேரளாவில் அடித்து கொள்ளப்பட்ட  நிகழ்வு. சென்ற காலத்தில் பண்டிட் கறம்பனின் சாவுக்கு நீதி கேட்க தெய்வம் இறங்கி வரவேண்டியிருந்தது, ஆனால் ஜனநாயகத்தில் மது வின் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைக்கு எதிராக பல சமூக நிறுவனங்கள், காவல்துறை, நீதிமன்றம் எதிர்வினையாற்றின. இதுவே ஜனநாயகத்தின் கொடை.

இந்த கதை ஒரு நாவலின் விரிவை தன்னுள் கொண்டுள்ளது. அனைத்தையும் பூடகமாகவும், குறியீட்டுரீதியாகவும் கூறி செறிவான மொழியினால் கதையை எல்லா திசைகளிலும் விரியும் வண்ணம் கட்டமைத்திருக்கிறீர்கள். உதாரணமாக, ஜனநாயகத்தால்  குரலும், அடையாளமும் பெறப்பட்டுள்ள நிலையில் சென்ற காலத்தில் மன்னனுக்கு சாபமிட்டு இறந்து போனவன் தூக்குமாடசாமியாக மக்களால் வழிபடப்படும் அதேவேளையில், சாமிநாத ஆசாரி அனைவரது நினைவிலிருந்தும் மறைந்துபோகிறான். பெண்கள் மேலெலுந்து வரும் சித்திரம், தாணப்பன் பிள்ளை மனைவியின் வாயிலாக தொட்டுக்காட்டப்பட்டுள்ளது. இப்படி கதை முழுக்க பல நுண் தளங்கள் இழையோடுகிறது. இது ஒரு நுரை போல பொங்கி அனையும்  முற்போக்கு கதை அல்ல, வாசகனின் அகத்திற்குள் ஊடுருவி சென்று உணர்தலுக்கு ஆட்படுத்தும் ஒரு ஒவியம், அழிந்திருக்கும் மதுவின் முகத்தை நம் அகத்தில் வரைந்துவைக்கும் ஒரு தூரிகை இந்த சிறுகதை.

அன்புடன்,

வேலாயுதம் பெரியசாமி

***

அன்புள்ள ஜெ

பேசாதவர்கள் கதையை அந்தத் தலைப்பிலிருந்துதான் வாசிக்க ஆரம்பிக்கவேண்டும். மீண்டும் மீண்டும் தூக்கிலேற்றப்படும் விதி கொண்ட டம்மி. பேசாததனால் அது தூக்கிலேற்றப்படுகிறதா, அல்லது தூக்கிலேற்றப்படுவதனால் அது பேசாமலாகியதா? தன்னைப்போல் ஒரு உருவத்தை படைத்து அதைத் தூக்கிலேற்றுகிறான் மனிதன். தனக்குத்தானே அவன் அந்த இழிந்த மரணத்தை விதித்துக்கொள்கிறான்.

பத்மநாபபுரம் அரண்மனையில் அந்த கூண்டை நானும் பார்த்திருக்கிறேன். ஆனால் அங்கே என்னை பெரிதும் தொந்தரவு செய்தது கைகளை கூட்டி ஆணியால் துளைத்து கிடுக்கிட்டு கும்பிடுவதுபோல ஆக்கி வைத்துக்கொல்லும் சித்திரவதைக் கருவிதான். கொடுமையானது அது. கும்பிட்டபடியே சாகச்செய்வது.

நம் மரபை அதன் பெருமையுடன் அறிமுகம் செய்யும் நீங்கள் அதன் ஆத்மாவில் படிந்த வரலாற்றின் இருட்டையும் சற்றும் தயங்காமல் முன்வைக்கிறீர்கள். ஆற்றல் கொண்ட எழுத்தாளனின் பார்வை என்பது அதுதான்

ஆர்.என்.ஸ்ரீனிவாஸ்

***

முந்தைய கட்டுரைகீதை, அம்பேத்கர்
அடுத்த கட்டுரைஇந்திய இலக்கியத்தை அறிய…-கடலூர் சீனு