பேசாதவர்கள், கடிதங்கள்-3

பேசாதவர்கள்[சிறுகதை]

அன்புள்ள ஜெ

ஊமையை தூக்கிலிடுதல் என்ற ஒற்றை வரியாக நான் பேசாதவர்கள் கதையை புரிந்துகொண்டேன். சிலசமயங்களில் பெரிய நிகழ்வுகளை விட இதைப்போன்ற படிமங்கள் ஆழமான வடுவாக நெஞ்சிலே நின்றுவிடுகின்றன. வெறுமே தூக்கில்இடுதல் அல்ல. முச்சந்தியில் ஒரு வசைச்சொல் போல நிறுத்துதல். முச்சந்தியில் தொங்குபவன் எந்த தெய்வத்திடம் முறையிடுவான்? மொத்தச் சமூகமே அவனை அப்படி தொங்கவிட்டுவிட்டது.

இப்படி அழிக்கப்பட்டவர்கள் தெய்வமாகிறார்கள். அதை முந்தைய கதைகளில் சொல்லிவிட்டீர்கள். வேறுவழியே இல்லை. மலையத்தி வருவது ஒரு தெய்வத்திடமிருந்து கருக்கொள்ள. அந்த தெய்வம் சொல்லாத அத்தனை சொற்களையும் பெற்றுக்கொள்ள. எத்தனை ஆயிரம் சொற்கள் வழியாக இனி வரலாற்றில் அதைச் சொல்லிச் சொல்லி முடிக்கவேண்டியிருக்கிறது!

தமிழ்க்குமரன்

***

அன்புள்ள ஜெ,

என்றாவது நாம் அனைத்தையும் எரித்து விட்டு வெளிவர வேண்டி இருக்கிறது. அது மலரும் நினைவுகள் ஆனாலும் சரி, மோசமான அனுபவங்கள் சார்ந்த நினைவுகள் ஆனாலும் சரி. ஒரு பீடிக்கப்பட்ட நிலையில், வெளிவர முடியாத அல்லது வெளிவர தோன்றாத ஒரு மீளா சூழலில் நம்மை சிக்க வைத்து விடக்கூடிய பெரும் அபாயங்கள் நிறைந்தது அந்த நினைவுகள் என்று தோன்றுகிறது. அந்த சிறையில் தென்படும் சித்திரவதை கருவிகள், அந்த டம்மி அனைத்தும் வெறும் பொருள்கள் என்ற நிலை மட்டும் தான் அவற்றிற்கு இந்த பரு உலகில். ஆனால், அதன் மீதெல்லாம் ஏற்றி வைக்கப்படும் அந்த பயங்கரம் அல்லது அமானுஷ்யம் அனைத்தும் நம் நினைவுகளில் இருந்தும் அல்லது வழிவழியாக சொல்லப்பட்டு வரும் யாரோ ஒருவரின் நினைவில் இருந்தும் கொடுக்கப்பட்டவை என்றே நினைக்கிறேன். அவை நம் கற்பனைகளின் வழியாக மேம்படுத்தப்பட்டு வேறொருவனுக்கோ அல்லது வேறொரு தலைமுறைக்கோ கடத்தப்படுகிறது. இந்த கதையில் தன் பாட்டனின் நினைவை வாங்கிச் செல்லும் அந்த பேரன் அதனை இன்னொரு பரிணாமத்திற்கு இட்டு செல்லலாம்.

இதனை அந்த மலைமகள் புரிந்து கொண்டிருக்க வேண்டும். அதனால் தான் குஞ்ஞன் இறந்ததை அறிந்தும் அவன் உடல் எரிவதை பார்க்காத அவள் மனம் அவன் இறப்பை ஒப்புக்கொண்டிருக்காது. அவன் நினைவுகளில் இருந்து அவள் வெளிவர வேண்டும் என்றால் அவன் நினைவின் உருவமாக ஏதோ ஒன்றை அவள் அழிக்கவேண்டும். அந்த ஒன்றாக தான் அந்த டம்மியை அவள் வேறொரு நிலையில் பார்த்திருக்கக் கூடும். அவள் அதை எரித்து விட்டு செல்லும் போது, தன் நினைவுகளை மட்டுமில்லாமல் அதுவரை  அதன் மேல் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் அத்தனை நினைவுகளையும் சாம்பலாக்கிச் சென்றுவிடுகிறாள். அங்கே தான் வேலையில் இருந்து நீக்கப்பட்டதை, ஓய்வுபெற்றதாக நம்பியிருக்கும் தாணப்பன் பிள்ளை வாழ்கிறார். ஆனால், வேலையில் இருந்து நீக்கப்பட்டதை தாங்கமுடியாத கருணாகரக் கைமள், அதில் இருந்து விடுபட முடியாத நினைவினால் மாரடைப்பு ஏற்பட்டு இறக்கிறார். கடந்து வருவதில் ஒரு பெரும் விடுதலை இருக்கிறது, ஆனால் மனிதன் பற்றிக்கொண்டிருக்க மட்டுமே விரும்புகிறான். இதுவே அவனது ஆதி குணமாக இருந்திருக்க கூடும். ஒரு பெரும் தரிசனம் நோக்கி மறுபடியும் அழைத்து சென்றதற்கு பெரும் நன்றி.

பேரன்புடன்,

நரேந்திரன்.

பேசாதவர்கள், ஒரு குறிப்பு

முந்தைய கட்டுரைதலித் அறிவுஜீவிகளை இழிவுசெய்பவர்கள் – கடிதம்
அடுத்த கட்டுரைகுகை