சிவபூசையின் பொறுப்பும் வழியும்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

வணக்கம். நீண்ட தயக்கத்திற்கு பின் இந்த கடிதம். கொரோனாவில் இருந்து மீண்டு நலமாக உள்ளீர்கள் என அறிந்தேன். ஹோமோயோபதி போன்ற மருத்துவ முறைகளில் கொரோனா தடுப்பு மருந்து கொடுக்கப்படுகிறது. அதை எடுத்துக்கொள்வதை பற்றி தங்கள் கருத்தை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்.

எங்கள் குடும்பத்தில் சென்ற 2, 3 தலைமுறைகளாக சிவராத்திரி பூஜை செய்வது வழக்கம். என் கொள்ளுத் தாத்தா காலம் வரை மந்திரம், மருத்துவம் போன்றவற்றைத் தொழிலாக கொண்டு இருந்தனர். அதன் ஒரு அம்சமாக சிவராத்திரி பூஜை செய்யப்பட்டது. என் கொள்ளுத் தாத்தா காலத்தில் அவருக்கு ஏற்பட்ட சில கெட்ட அனுபவங்களால் அவர் என் தாத்தா மற்றும் அவர் தம்பிகளிடம் மந்திரம், மருத்துவம் போன்றவற்றை தொழிலாகச் செய்யக்கூடாது என்று சத்தியம் வாங்கிக்கொண்டார். எனவே என் தாத்தா காலம் முதல் மந்திரம் செய்வது தொழிலாக இல்லை. நெசவு வேலையைத் தொழிலாக செய்து வருகிறோம். என் தாத்தா காலம் வரை சில மந்திர சடங்குகள் அதில் செய்யப்பட்டன.

அதற்குப்பிறகு என் தந்தை காலத்தில் என் முன்னோர்கள் உபயோகித்த நூல்கள் மற்றும் சில மாந்திரீகம் சம்மந்தப்பட்ட பொருட்கள் ஆற்றில் விடப்பட்டன. மற்றும் பூஜையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. மாந்திரிக உச்சாடனங்கள் மற்றும் அது சம்பத்தப்பட்ட சடங்குகள் நிறுத்தப்பட்டன. மற்றும் பூஜையை நடத்தும் செலவிற்கு ஒரு நிதி நிறுவனம் சிறிய அளவில் நடத்தப்படுகிறது. இந்தப் பூஜையை ஒரு கருவியாகக் கொண்டு எங்கள் பங்காளிகளுக்குள் யார் பெரியவர் என்ற சண்டை மற்றும் அரசியல் நடக்கிறது. பெரும்பணியிருக்கும் நிதி சம்மந்தப்பட்ட விஷயங்களில் இருக்கும் ஆர்வம் பூஜையில் இல்லை. இந்த பூஜையின் பெயரில் நடக்கும் பக்தியற்ற வெறும் சடங்குகளும், அரசியலும் என்னை இந்த பூஜையை வெறுக்க வைத்தது/வைக்கிறது. கடந்த 7,8 ஆண்டுகளாக நான் இதில் கலந்து கொள்வது இல்லை.

கடந்த சில ஆண்டுகளாக உங்கள் கட்டுரைகளை படித்து நம் மரபை தொடரவேண்டும் என்ற எண்ணம் எனக்கு தோன்றியுள்ளது. ஆனால் இந்த பூஜையில் எவ்வாறு பங்குகொள்வது என்று குழப்பமாக உள்ளது. உங்கள் நூல்களைப் படித்து எனக்கு ஏற்பட்ட புரிதலில் எந்த ஒரு பூஜையும் காலத்திற்கு ஏற்ப மாறுதல் அடைய வேண்டும். இப்போது எங்கள் குடும்பத்தில் என் தலைமுறையில் அனைவரும் படித்து வேறு வேறு ஊர்களில் வேலை செய்து வருகிறோம். யாரும் மந்திரம் மற்றும் வைத்தியம் செய்வது இல்லை எனவே இந்தப் பூஜை பற்றிய வரலாறு மற்றும் சடங்கு பற்றி யாருக்கும் தெளிவான புரிதல் இல்லை. நான் கவனித்த வரை நடக்கும் பூஜை முறையை சுருக்கமாக கீழே குறிப்பிட்டுள்ளேன்.

பூஜை முறை:

பூஜைக்கு முதல் நாள் மற்றும் பூஜை அன்று பிரசாத நெய்வேத்தியங்களை தயார் செய்வர். எங்கள் பங்காளிகளுள் ஒருவர் வரிசை முறையில் பூஜை செய்ய பணிக்கப்படுவார். பூஜை அன்று மாலையில் சிவனை ஒரு கும்பத்தில் எந்த மந்திர உச்சாடனமும் இன்றி ஆவாஹனம் செய்து இரவு ஒரு மணி அளவில் சூடம் காட்டிவிட்டு அந்த பூஜை பொருட்களை ஒரு கிணற்றில் கரைத்து விடுகின்றனர். பூஜை அன்று நிதி வசூல் செய்து பஜனை மற்றும் அன்னதானம் நடக்கிறது.

எனக்கு கீழ்கண்ட கேள்விகள் உள்ளன.

நான் எவ்வாறு இந்த பூஜையில் தொடர்வது? ஏதேனும் நூல்களை படித்தோ அல்லது இதைப்பற்றிய அறிஞர்களிடம் ஆலோசனை பெற்றோ பூஜை முறையை மாற்ற முயல்வதா? அல்லது அப்படியே தொடர்வதா? அல்லது இந்த பூஜையில் கலந்து கொள்ளாமல் சிவராத்திரி அன்று ஏதும் சிவன் கோவிலில் கலந்து கொள்வதா?

உங்கள் கருத்து மற்றும் ஆலோசனைகளை தெரிவித்தால் எனக்கு மற்றும் என்னைப்போன்ற தலைமுறையினருக்கு உதவியாக இருக்கும்.

அன்புடன்,
அருண் தேவ்பால்யா

***

அன்புள்ள அருண்

முதலில் தெளிவுசெய்து கொண்டாகவேண்டிய விஷயம் ஒன்றுண்டு, இந்து மெய்மரபில் ஆன்மிகப்பயணம் என்பது தனிநபர் சார்ந்தது. எந்தவகையிலும் அது மரபுப்பொறுப்பு கொண்டது அல்ல. உங்கள் முன்னோர் ஒரு பூசையைச் செய்தனர் என்பதனால் நீங்கள் அதைச் செய்தாகவேண்டும் என்ற கட்டாயமேதும் இல்லை. அதைச் செய்யாமலிருந்தால் உங்களுக்கு தீங்கு விளையும் என்பதும் இல்லை.

இந்து ஞானவெளி என்னும் இந்த பெரும்பரப்பில் ஒவ்வொருவரும் முற்றிலும் சுதந்திரமானவர்கள். தன் பாதையைத் தேர்ந்தெடுக்கும் முழு உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு. ஒருவரின் பாதை இன்னொருவருக்கு உரியது அல்ல. ஒவ்வொன்றும் தனித்தன்மை கொண்டது.

சொல்லப்போனால் இந்து மெய்மரபின் மையச்சிக்கலே இதுதான். உறுதியான நிறுவன அமைப்பு இல்லை. மாறாத வழிமுறைகள் இல்லை. ஒவ்வொருவரும் தங்கள் வழியைத் தாங்களே தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் என்பதன் பொருள் தாங்களேதான் தங்கள் வழியை தேர்வுசெய்து கொள்ள வேண்டும் என்பதும்கூடத்தான். சுதந்திரம் என்பது பெரும் பொறுப்பும்கூட.

ஆகவேதான் எளிய உள்ளங்கள் ஏதாவது உறுதியான அமைப்பை நாடுகிறார்கள். பலர் மதம் மாறுவதும் இதனால்தான். அங்கே தெரிவே இல்லை. திட்டவட்டமான ஆணைகளே உள்ளன, அவற்றை ஏற்று ஒழுகுவது மட்டும்போதும். அது எளிது.

ஆகவே உங்கள் முன்னோர் உங்களுக்கு எந்தப் பொறுப்பையும் அளித்துச் செல்லவில்லை. முன்னோரிடமிருந்து நாம் பெற்றுக்கொள்ளும் தவிர்க்கமுடியாத பொறுப்பு என்பது ஒன்று மட்டுமே. அவர்கள் செய்துவந்த அறங்களை நாம் தொடரவேண்டும். மற்றபடி வழிபாட்டைத் தொடர்வது பொறுப்பு அல்ல. ஆகவே அந்த வழிபாட்டுப் பொருட்களை கோயிலுக்கு அளித்துவிட்டது பிழையல்ல. அதற்காக வருந்தவோ அஞ்சவோ வேண்டியதில்லை.

உங்கள் முன்னோர் செய்துவந்த மாந்த்ரீகம் மருத்துவம் போன்றவற்றை இனி நீங்கள் செய்யமுடியாது. இளமையிலேயே தொடராவிட்டால் அந்தக் கண்ணி அறுந்துவிடும். அவர் செய்துவந்த பூசைமுறைகள் அவற்றைச் சார்ந்தவை. அவற்றை நீங்கள் செய்யமுடியாது, தேவையும் இல்லை.

உங்கள் முன்னோர் முறைப்படி சிவதீக்கை எடுத்திருக்கலாம். மந்திர உபதேசம் பெற்றிருக்கலாம். வழிபாடுகளையும் நோன்புகளையும் கடைப்பிடித்திருக்கலாம். அவர்கள் அடைந்த அந்த தீக்கையையும் மந்திரத்தையும் அடையாமல் நீங்கள் அந்த வழிபாடுகளைச் செய்யமுடியாது. அது அவர்களின் ஞானவழி. உங்களுடையது அல்ல. வெறுமே அதை நீங்கள் ‘மிமிக்’ செய்ய முடியாது.

ஆனால், சில பூஜைகள் தலைமுறைகளுக்குப் பயனளிக்கக்கூடியவை. மரபுரிமையாக அவற்றின் தொடர்ச்சியின் பயனை பெறமுடியும். அவ்வாறென்றால் மூதாதையர் எங்கே அந்த தீக்கையையும் மந்திரத்தையும் பெற்றார்களோ அங்கேயே அதை நீங்களும் பெறவேண்டும். அந்த நெறிகளின்படியே முறையாகத், தொடர்ச்சியாக அவற்றைச் செய்யவேண்டும். நீங்களே செய்யக்கூடாது, வேறெந்த இடத்திலும் தீக்கையோ மந்திரமோ பெறக்கூடாது. அந்த முறைமையை மாற்றக்கூடாது.

அவ்வாறன்றி உங்களுக்கே சைவ தீக்கை பெற்று வழிபாடு செய்ய விழைவு இருந்தால், முந்தையவரின் தொடர்ச்சியைப் பேணும்நிலையில் இல்லை என்றால், அதற்குரிய மரபான அமைப்புகளை நாடி தீக்கை பெற்றுக்கொண்டு அதைத் தொடரலாம். அது முந்தைய வழிபாட்டின் தொடர்ச்சி அல்ல, உங்களுக்கு நீங்களே எடுத்துக்கொண்ட உறுதி. உங்கள் பாதை.

தீக்கையும் மந்திரமும் உபாசனைக்குரியவை. எளிய பக்திக்கு அவை தேவை இல்லை. அதற்கு ஆலயவழிபாடும், இல்லத்தில் எளிமையான தொடர்வணக்கமுமே போதுமானவை. படங்களுக்குப் பூஜைசெய்வது, திருமுறை நூல்களை ஓதுவது, பாடல் என அதற்குரிய வழிமுறைகள் எங்கும் உள்ளவை. உங்களுக்கு உகந்தவற்றைத் தேர்வுசெய்யலாம்.

உங்கள் குலதெய்வ வழிபாட்டின் நடைமுறைகளில் உங்களுக்கு ஒவ்வாமைகள் இருந்தால், ஒத்துப்போக முடியாவிட்டால் உங்களுக்குரிய நிதிப்பங்கை மட்டும் அளிக்கலாம். பிறிதொருநாளில் சென்று நீங்கள் வழிபட்டு வரலாம். நீங்கள் குறிப்பிட்ட பூசை தாந்த்ரீக அடிப்படை கொண்டது என தெரிகிறது. அதை நீங்கள் செய்ய முடியாது. அதை அதற்குரிய தன்னுறுதி எடுத்துக்கொண்டு நெறிநிற்பவர்களே செய்யமுடியும்.

நீங்கள் செய்யக்கூடுவது ஒன்றே. அதைச் செய்பவர்களை ஆதரிப்பது. அதற்கான நிதியை அளிப்பது. அது நின்றுவிடாமல் பார்த்துக்கொள்வது. முடிந்தபோது அங்கு சென்று வழிபட்டு வருவது.

இறைவழிபாடு செய்யாவிட்டால் அது நம் குறையே ஒழிய பிழை அல்ல. இறைச்சக்திகள் பழிவாங்குவதில்லை, தீங்கிழைப்பதில்லை. இறைச்சக்தியை அகத்தே அல்லது புறத்தே உள்ளதாக எப்படி எடுத்துக்கொண்டாலும்.

குலதெய்வம் மற்றும் ஊர்த்தெய்வங்கள் வழிபடாவிட்டால் தீங்கிழைக்கும் என தொல்நம்பிக்கை உண்டு. சோதிடர்கள் சொல்வதுண்டு. அதுவும் உண்மை அல்ல. ஆனால் முற்றிலும் அத்தெய்வங்களைக் கைவிட்டுவிடுவது இழப்பு. ஆகவே வாழ்க்கையின் குறை. வேரற்றவராக, மூதாதையற்றவராக ஆதல் அது. ஆகவே அதை தவிர்க்கலாகாது. அதை ஊன்றிச் சொல்லும்பொருட்டே அவற்றால் தீங்கு நிகழுமென அச்சுறுத்துகிறார்கள்.

தெய்வம் என்பது அச்சத்தால் வழிபடவேண்டியதல்ல. அது பிரபஞ்சதரிசனம் ஒன்றை நாம் நமக்குரிய வழியில் உணர்வதேயாகும். உணரவில்லை என்றால் அது நமக்கு குறை, அவ்வளவுதான்.

ஜெ

***

முந்தைய கட்டுரைஏதோ ஒரு நதி
அடுத்த கட்டுரைதீயின் எடை- கடிதங்கள்