அறமென்ப – கடிதங்கள்

அறமென்ப…  [சிறுகதை]

அன்புள்ள ஜெ

இத்தனை நாட்களுக்குப் பிறகும் தொந்தரவு செய்துகொண்டே இருப்பது அறமென்ப என்னும் சிறுகதைதான். மற்றச் சிறுகதைகளை விட இதில் என்ன சிக்கல் என்று பார்த்தேன். ஆழமான தத்துவச்சிக்கல் இல்லை. அழகியல் உச்சமும் இல்லை. ஆனால் ஒரு முக்கியமான கேள்வி உள்ளது. பொது அறம் என்ற ஒன்றை நம்பித்தான் நாம் வாழ்கிறோம். அதற்கு மதிப்பில்லாமலானால் எதைநம்பி வாழ்வோம் என்னும் பதைபதைப்பை அக்கதை உருவாக்குகிறது

ராம்குமார் மகாதேவன்

***

அறமென்ப -சிறுகதை நாம் இதுவரை கதைகளில் படித்து வந்த , நமது பொதுபுத்தியில் ஆழப்பதிந்து விட்ட பார்வையை மறுபரிசீலனை செய்கிறது. ஒரு எழுத்தாளன்  தனக்கு போதிக்கப்பட்டதையல்ல ,தான் கண்ட நிதர்சனங்களையும் பதிவிடுவதே தார்மீக கடமை என்பதை உணர்த்திவிட்டீர்கள்.பாதிக்கப்பட்டவரின் சார்பாக பேசுபவர் ” எங்க மனசாட்சி வேற கஷ்டபடுறவன் மனசாட்சி வேற” என்பது அருமை. இதில் என்னை வெகுவாக கவர்ந்தது செல்வாவின் மனைவி தான். நடைமுறை யதார்த்தத்தை மனைவியை விட யார் அறிந்து விடக்கூடும்? பலரும் செல்வாவை போல அந்த சமயத்தில் செயின்ட் போலவே நினைப்பர். இந்த வீடடங்கு காலத்தில் உங்கள் கதைகளே என் அகம் முழுவதையும் நிரப்பி உள்ளது.

அன்புள்ள,

செல்வா

பட்டுக்கோட்டை.

திசையெட்டும்தமிழ்

***

அன்புள்ள ஜெ

அறமென்ப கதையை மீண்டுமொருமுறை வாசித்தேன். நடுவே ஒன்று நடந்தது. அந்தக்கதையை தெரிந்தவருக்கு நடந்தது என்ற வகையில் ஒரு நண்பர்வட்டத்தில் சொன்னேன். நாலைந்து மணிநேரம் கொந்தளிப்பான உரையாடல்கள் நடந்தன. பலர் அதற்கிணையான அனுபவங்கள் தனக்கு நடந்ததாகச் சொன்னார்கள். அப்படி அவர்கள் நடந்துகொண்டதில் என்ன பிழை என ஒருசிலர் வாதிட்டனர்.

அந்த கொந்தளிப்பிலிருந்து ஒரு விஷயத்தை அறிந்துகொண்டேன். அதில் எவரும் அந்த வகையான ஏமாற்றத்தின் விளைவாக தங்கள் அறநிலைபாட்டை மேலும் உறுதிப்படுத்திக் கொண்டதாகச் சொல்லவிலை. அறமே கிடையாது என்ற முடிவையே வந்தடைந்தனர். அந்நிலையில்தான் கதையின் இறுதியில் கதாநாயகன் அடையும் விடுதலையும் உறுதிப்பாடும் முக்கியமானது என்று தோன்றியது.

அறமென்ப, வழக்கறிஞர்கள் – கடிதம்

முந்தைய கட்டுரைஅனிதா அக்னிஹோத்ரி, கடிதம்
அடுத்த கட்டுரைஆணவத்தின் தேவை