வல்லினம் சிங்கப்பூர் சிறப்பிதழ் ஆழமான படைப்புக்கள், விமர்சனங்கள் மற்றும் உரையாடல்கள் ஆகியவற்றாலானதாக உள்ளது. அதற்குப்பின்னாலிருக்கும் உழைப்பு வியப்பூட்டுவது. இன்று இணைய இதழ்கள் தீவிரமான உழைப்பும் அர்ப்பணிப்பும் கொண்டு வெளியிடப்படுகின்றன. வாசித்தேயாகவேண்டிய இதழ்கள் என தமிழினி, கனலி, யாவரும் என சிலவற்றைக் குறிப்பிடலாம். வல்லினம் மலேசிய- சிங்கப்பூர் இலக்கியத்தையும் அகழ் ஈழ இலக்கியத்தையும் மையமாக்கி வெளிவருகின்றன. அரூ இணையதளம் மாற்று எழுத்து, மற்றும் அறிவியல்புனைவுகளுக்கான தளமாக வெளிவருகிறது. சென்றகாலச் சிற்றிதழ்களையும் நடுத்தர இதழ்களையும் பார்த்தவன் என்ற வகையில் இது ஒரு மூன்றாவது இலக்கிய அலை என்றே சொல்வேன்.
வல்லினம் இதழில் சிங்கப்பூர் லதாவின் பேட்டி வந்துள்ளது. லதா கவிஞராகவும், கதையாசிரியராகவும் இதழாளராகவும் அறியப்படுபவர். அத்துடன் சிங்கப்பூர் இலக்கியமரபை விமர்சனரீதியாக நன்கறிந்தவரும்கூட. பொதுவாகவே பேட்டிகளில் உள்ள எண்ணிச் சொல்லெடுக்கும் கணக்கீடுகள் இல்லாமல் நேரடியாக, இயல்பாக பேசியிருக்கிறார். முக்கியமான பேட்டி இது
இந்நாட்டு படைப்பிலக்கியம் குறித்த கூர்மையான விமர்சனத்தை முன்வைக்க வெளிநாட்டு, உள்நாட்டு விமர்சகர்கள் ஒரு சிலரைத் தவிர, பலருக்கும் தயக்கம். ஏனென்றால், இந்நாட்டில் இன்னமும் விமர்சனத்துக்கும் அவதூறுக்கும் இடையேயான வேறுபாடு உணரப்படவோ, உணர்த்தப்படவோ இல்லை. அதனால் எதிர்மறையான விமர்சனங்களை தனிப்பட்ட நிந்தனையாகவே பார்க்கிறார்கள். அதனால் மனவருத்தம் ஏற்படுகிறது. சில நேரங்களில் அது பகைமையாகிறது அல்லது போலிஸ், சட்டம் என்பது வரை நிலைமை போய்விடுகிறது. இப்போக்குக்கு ஆதரவுக்குரலே இங்கே அதிகம் உள்ளது.
1991இல் சுந்தர ராமசாமி சிங்கப்பூர் சிறுகதைகள் மீது வைத்த எதிர்மறையான அபிப்பிராயத்துக்குப் பின்னர் அவர் இங்கு அழைக்கப்படவே இல்லை. ஜெயமோகன் இந்நாட்டு கதைகள் குறித்து தீவிரமாக விமர்சனம் செய்தபோது போலிசில் புகார் செய்தார்கள். மலேசியாவிலிருந்து ம.நவீன் எழுதியபோது அரசாங்கத்துக்குக் கடிதம் எழுதினார்கள். அதன்பிறகு, ஏன் வம்பு என்று இவர்களை இங்கே அழைப்பதற்கே யோசிக்கிறார்கள். தெரியாத, புரியாத ஒன்றைக் குறித்த பயம், கோபமாகவும் வெறுப்பாகவும் காழ்ப்பாகவும் வெளிப்படுவது இயல்பு என்பது மனோதத்துவியலாளர்கள் கூறுவது.