கல்வலைக்கோடுகள்

எனக்கு மூன்று வயதிருக்கும், அன்றெல்லாம் எங்கள் வீட்டில் ஆனந்தவிகடன், குமுதம், கல்கி, மலையாள மனோரமா, மாத்ருபூமி ஆகியவற்றை வாங்குவார்கள். அனேகமாக தினமும் ஒரு வார இதழ். அன்று வந்தது விகடன் தீபாவளி மலர். பேப்பர்போடும் மாமாவிடமிருந்து இதழை வாங்கி கொண்டுவந்து ஒட்டுத்திண்ணையில் வைத்து பிரித்து படம்பார்க்கலானேன். நடுப்பக்கத்தில் நான் கண்ட ஒரு கோட்டோவியம் இன்றும் மூச்சடைக்கவைக்கும் துல்லியத்துடன் நினைவிருக்கிறது. சில்பி வரைந்த அகோரவீரபத்ரன்.

அதன்பின் பலமுறை நான் மதுரை சென்று அகோரவீரபத்ரரின் முன் நின்றிருக்கிறேன். உக்கிரமும் குழைவும், கொடூரமும் அருளும் ஒன்றே என முயங்கும் அச்சிற்ப அற்புதம் ஒரு கனவு அழியாமல் அசைவிலாமல் நிலைகொண்டிருப்பதுபோல. அதன்முன் நின்ற கணங்களில் எல்லாம் இங்குள்ள அனைத்தும் அருளே என உணர்ந்து உளமெழுந்திருக்கிறேன்.

[இன்று அச்சிற்பம் பெரும்பாலும் நாற்றமடிக்கும் வெண்ணையால் மூடப்பட்டிருக்கிறது. சென்ற பத்தாண்டுகளில் யாரோ ஆரம்பித்த ஆகமமுறைக்கு நேர் எதிரான வழக்கம். சிற்பமுறைப்படி அனலாடை அணிந்த அகோரவீரபத்ரருக்கு இடுப்பில் அழுக்குத்துண்டை வேறு சுற்றிவிட்டிருக்கிறார்கள். வீசியறைந்த வெண்ணையை வழித்து மீண்டும் விற்கிறார்கள். வழித்து வழித்து சிற்பத்தை அழித்துக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் இருபதாண்டுகளில் அங்கே தேய்ந்துபோல ஒரு மூளிச்சிற்பமே எஞ்சும். அதிகாலையில் சென்று அந்த அர்ச்சகருக்கு நூறு ரூபாய் கொடுத்தால் அதை பார்க்கமுடியும். நம் பிள்ளைகளுக்கேனும் ஒருமுறை காட்டி வைப்பது நல்ல நினைவாக எஞ்சும்]

சில்பியின் ஓவியம் கோடுகளாலானது. கோடுகளே கல்லென, கல்நிழலென ஆனது. உடல்நெகிழ்வென, விழியொளியென, இதழ்மென்மையென, விரல்சுழிப்பென ஆனது. அந்த ஓவியத்தை இக்கணம் வரை என் விழி இழக்கவில்லை. பின்னர் சில்பியின் வெறிகொண்ட ரசிகனென ஆனேன். தேடித்தேடிப் பார்த்தேன்.

பழைய விகடன் ஓவியர்களில் சில்பியும் கோபுலுவும்தான் கோட்டோவியங்களில் கலையழகை கொண்டுவந்தவர்கள். சில்பி சிற்பங்களை ‘அப்படியே’ கோடுகளென ஆக்கினார். கோபுலு சிற்பங்களில் இருந்து தன் ஓவிய வடிவுகளை கண்டுகொண்டார். அவற்றை அசையும் உருவங்களென ஆக்கினார்.

கல்கோடாகும் விந்தையை எப்போதும் வியப்புடனேயே பார்த்துக்கொண்டிருக்கிறேன். கோடுகள் மென்மையானவை. சிலந்திவலை போன்றவை. கோட்டுச்சித்திரம் எழுதும் ஓவியன் ஒரு சிலந்தி. பாய்ந்து பாய்ந்து அவன் பின்னிப்பின்னி உருவாக்கிக் கொண்டிருக்கும் வலை அந்த ஓவியம். மென்மையானது, காற்றில் நெளிவது, ஒரு மலர்விழுந்தால் அறுந்துவிடுவது. ஆனால் அதிலெழுகிறது கல்! காலத்தால் இறுகி, காலத்தை வென்று நின்றிருக்கும் பருப்பொருள்.

கற்சிற்பங்களை கோட்டோவியங்களாகப் பார்க்கையில் அவை மெல்ல நெளிந்தாடுவதாக, கருந்தழலென கரியமலரிதழென ஒளியும் மென்மையும் கொண்டுவிடுவதாக எண்ணிக்கொள்கிறேன். சில்பியின் கோட்டோவியங்களில் அச்சிற்பங்களில் சிறைப்பட்ட அசைவே கோடுகளென திகழ்கிறது. இன்றைய நவீன ஓவியங்களில் அந்த உருவங்கள் விழிக்கோணத்திற்கேற்ப கோணலாகின்றன, நெளியும் திரைச்சீலையில் வரையப்பட்டவை போல நடிக்கின்றன. ஆதிமூலத்தின் கோட்டோவியங்கள் அத்தகையவை. அவை விழியுடன் ஓவியனின் உள்ளமும் ஊடாடிய ஓவியங்கள்.

என் நண்பனின் மகனும் ஓவியனுமாகிய ஜெயராம் வரைந்த படங்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன். சில்பியின் கோட்டோவியங்கள் நுணுக்கமானவை. கோபுலுவின் ஓவியங்கள் இயல்பாக வீசிவளைந்தவை. ஆதிமூலத்தின் கோடுகள் வேண்டுமென்றே கிறுக்கல்கள் என பாவனை காட்டுபவை. ஜெயராமின் கோடுகள் ஆவேசமாக வரையப்பட்டவை என காட்டுகின்றன. ஒரு சிற்பத்தின் முன் நின்று அக்கணத்து உள எழுச்சியை வெறியுடன் வரைகோடுகளாக பதிவுசெய்தவை என நினைக்கச் செய்கின்றன.

இக்கோட்டோவியங்களைப் பார்க்கையில் ஏன் சிற்பங்களைப் புகைப்படமெடுக்க முடியவில்லை என்று புரிகிறது. வெண்கலச் சிற்பங்களில் அத்தருணத்தின் ஒளி வெவ்வேறுவகையில் மின்னி தனக்குரிய காட்சியை உருவாக்கிவிடுகிறது. கற்சிற்பங்களில் நிழல்களும் ஊடுகலந்துவிடுகின்றன. சீராக அனைத்து இடங்களிலும் ஒளிவிழும்படி படமெடுத்தால் சிற்பமே பொம்மையாகிவிடுகிறது. மிக அரிதாகவே நல்ல புகைப்படங்கள் அமைகின்றன.

சிற்பம் என்பது அதன் மொத்தக் கல்வடிவமும் அல்ல. அதில் நாம் காணும் விசையும் உணர்வும்தான் அது. அந்த நுண்மைகளை மட்டும் வைத்து அக்கல்வடிவத்தின் திரளலை தவிர்த்து கோட்டோவியமாக ஆக்கிவிடலாம். அதில் சிலைக்குப் பதில் சிலையென்றானவை திகழத்தொடங்குகின்றன. உள்ளமும் கலந்த கல். கனவிலெழுந்த கல்.

இந்தக் கோட்டோவியங்களில் அச்சிற்பங்களின் உள்ளார்ந்த வேகம் வெளிப்படுகிறது. திமிறி எழத்தொடங்கும் புரவி. எக்கணமும் வீசப்படக்கூடும் படைக்கலங்கள். பார்வைக்கோணத்திற்கு ஏற்ப அவை மாறியிருக்கின்றன. இழுபட்டு, கோணலாகி, மேலே திரண்டு பிறிதொன்றாகிவிட்டிருக்கின்றன

கல் நீர்த்துளிபோல திரண்டு சொட்டிவிடக்கூடுமென காலத்தில் நின்றிருப்பதை கோட்டோவியங்களே காட்டுகின்றன. ஜெயராமின் இந்த ஓவியங்கள் இன்று காலையை அழகுறச்செய்தன.

முந்தைய கட்டுரைகதாநாயகி
அடுத்த கட்டுரைவெண்முரசு அறிமுகம் – முனைவர் குமரவேல்