வெய்யோன்,பன்னிரு படைக்களம்-பலராம கிருஷ்ணன்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வெண்முரசு – நாவல் வரிசையில் ஒன்பதாவது மற்றும் பத்தாவது நாவல்களான ‘வெய்யோன் மற்றும் பன்னிரு படைக்களம்’ கெளரவர்கள் தரப்பில் இரு முக்கிய ஆளுமைகளான துரியோதனன் மற்றும் கர்ணனின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களையும் அம்மாற்றங்களால் அவர்களின் குணங்களில் ஏற்படும் நிலைத்தன்மையையும் விவரிக்கிறது.

ஆதிக்க விருப்புறுதி அற்றவனாக இருந்த கர்ணன் தனக்கான இடத்தை, தனக்கான விருப்பத்தைக் கண்டறியும் இடமும் காலமும் நிகழ்வது வெய்யோன் நாவலில்.

எரிமாளிகை நிகழ்வின் காரணமாகத் திருதராஷ்டிரரிடம் அடி வாங்கியபின் அலைமோதிக் கொண்டே இருக்கும் துரியோதனன் தன் வாழ்நாள் விழைவை கைக்கொள்ளும் தருணம் நிகழ்வதும் வெய்யோனில் தான். அவ்விரு தருணங்களுக்கு பிறகு இருவரும் நிலைத்தன்மைப் பெறுகின்றனர். நாகர்களின் வஞ்சத்தை கர்ணன் ஏற்கிறார், திரெளபதியின் ஏளனத்துக்கு உள்ளாகிறார் துரியோதனன். அதுவே அவர்களின் நிலைத்தன்மைக்கு காரணமாக அமைகிறது.

வெண்முரசில் ஏதேனும் ஒரு பாத்திரத்தை நல் படிமங்களால் மூழ்கடிக்க முடியுமென்றால் அது கர்ணனாகத் தான் இருக்கும். சூரிய புத்திரன் – கருணையுள்ளம் கொண்டவன் – நிகரற்ற வீரன் – வஞ்சிக்கப்பட்டவன் என சாகச நாகயனுக்கு உரிய அனைத்து பண்புகளையும் கொண்டவர். வாசிக்கும் அனைவரும் ஏதோவொரு கணத்தில் “நானும் கர்ணன் தான்” என உணரும் பல ஏற்ற இறக்கத் தருணங்கள் சூழ்ந்தவர். இதற்கு மாறாக துரியோதனன் எதிர்மறை படிமங்களையே கொண்டிருக்கிறார். அஸ்தினாபுரிக்கு அழிவைக் கொண்டு வரும் மதக்களிறு, இந்திரபிரஸ்தத்தில் இருந்து கரும்பாசிகளை கொண்டு வந்தவர் என மக்களால் எதிர்மறையாகவே பார்க்கப்படுகிறார்.

முதல் மனைவியான விருஷாலிக்கு கர்ணன் அவள் தகுதிக்கு மீறிய கணவன். இரண்டாவது மனைவிக்கு வெறும் குதிரைச் சூதன். திரெளபதியிடம் கொண்ட காதலும் காமமும் கர்ணனிடம் எஞ்சியுள்ளதை இருவரும் கண்டு கொள்கின்றனர். அவர்களின் வெறுப்பு அதனுடன் நெருங்கிய தொடர்ப்பு கொண்டது. அவர்களுக்காக அறையின் வாசலில் காத்திருக்கும் போது அங்கே இல்லாத இராதையுடன் உரையாடுகிறான்.

துரியோதனனின் மனைவியும் காசி நாட்டு இளவரசியுமான பானுமதியும் கூட துரியோதனன் திரெளபதியிடம் கொண்ட வஞ்சத்தை கண்டு கொள்கிறார். பன்னிரு படைக்களம் – நாவலில் கர்ணனிடம் பானுமதி, திரெளபதியின் மீது நீங்கள் கொண்டிருக்கும் வெறுப்பை என்னவர் மீது ஏற்ற வேண்டாம் என்கிற அளவிற்கு – கர்ணனிடம் திரெளபதி ஆதிக்கம் செலுத்தியிருக்கிறார். வெய்யோன் நாவல் முழுவதும் பானுமதியின் சொல்லுக்கு செயல் என்று இருந்த துரியன், திரெளபதியின் ஏளனத்துக்கு பிறகு, பானுமதியை அறையும் அளவிற்கு நிலை கொள்ளாதிருக்கிறார்.

துகில் உரிக்கப்படும் நிகழ்வே இருவரின் ஆணவத்திற்கும் ஆத்திரத்திற்கும் முடிவாக அமைகிறது.

வெய்யோன் நாவல் வரை வெண்முரசு மனித மனங்களை பிரதானப்படுத்தியிருந்தது. பன்னிரு படைக்களம் – வேதத்தை ஏற்பவர்களை ஒரு தரப்பாகவும் வேதமுடிவு ஏற்பவர்களை மறுதரப்பாகவும் நிறுத்துகிறது. நாகர்கள், ஜராசந்தன், சிசுபாலன், கெளரவர்கள், ஜயத்ரதன், அஸ்வத்தாமன் என வேத ஏற்பாளர்கள் ஒருபுறம் அவர்களுக்கு எதிராக இளைய யாதவர் மற்றும் பாண்டவர்கள்.

வெண்முரசின் மைய தரிசனமாகக் எடுத்துக் கொள்ள வேண்டிய இந்த விவாதம், பன்னிரு படைக்களத்தில் நேரடியாக தொடங்குகிறது. இளைய யாதவரே மறுதரப்பில் விவாதம் செய்கிறார். ஜராசந்தனிடமிருந்து தொடங்கும் விவாதம் – சிசுபாலன் வரை நீடிக்கிறது.

துகில் உரியும் நிகழ்விலேயே பாண்டவர்கள் நேரடியாக வேதமுடிவை ஏற்கிறார்கள். பீமனின் சொற்களிலும் அர்ஜுனனின் சொற்களிலும் அது வெளிப்படுகிறது. அதுவரை நிலத்திற்கு – அரசிற்கு என நடந்து கொண்டிருந்த பூசல்கள் தத்துவத்திற்காக நடைபெறப் போகும் போர்ராக மாறுகிறது. அந்நிகழ்விற்கு முன் அவர்கள் இளைய யாதவரிடம் அது குறித்த விவாதங்களில் ஈடுபடுவதில்லை. சிசுபாலன் மரணத்தின் போதும் அவர்களின் தத்துவ தரப்பு வெளிப்படுவதில்லை. விவாதங்களை கேட்கும் இடத்திலேயே இருக்கிறார்கள்.

துரியோதனனோ – கர்ணனனோ இந்த தத்துவ விவாதங்களில் நேரடியாகப் பங்கேற்பதில்லை. இருவருக்கும் அவர்களின் மன உணர்ச்சிகளும், அவர்களின் சிறுமைகளுமே அவர்கள் எடுக்கும் முடிவுகளுக்கு காரணமாக அமைகிறது.

கர்ணன் – வேதமுடிவு என்பதை நோக்கியே நகர்ந்து இருக்க வேண்டும். ஆனால் துரியோதனன் மீது அவன் கொண்ட பாசமும் பற்றும் – இயல்பில் தத்துவத்தின் மீது அவருக்கு ஈடுபாடு இல்லாததும் அவனை கெளரவர்கள் பக்கம் நிறுத்துகிறது. மறுமுனையில் அர்ஜுனன் தன் தத்துவ ஈடுபாட்டால் கேள்வி கொண்டே இருக்கிறார். வண்ணக்கடல் – நாவலில் பீமன் அவரிடம் ‘நீ அடைய விரும்புவது ஒரு ஞானயாசிரியனை’ என சொல்லும் பகுதியும் வருகிறது.

தன்னை காட்டாளன் என அழைத்துக் கொள்ளும் பீமன் – தத்துவம் மூலம் தன் அககேள்விகளுக்கு விடைபெற முயலாவிட்டாலும், துகில் உரியும் நிகழ்வில் பீஷ்மர், துரோணர், விதுரர், கிருபர் எடுக்கும் முடிவுகளால் வேதமுடிவு என்ற இடத்தை நோக்கி நகர்கிறார்.

துரியோதனனும் கர்ணனும் தங்கள் சிறுமையை இகழ்ச்சியை தீர்க்க உதவியாதால் மட்டுமே வேத ஏற்பு தரப்பை எடுக்கின்றனர். மெய்மை நோக்கிய பயணம் அவர்களிடத்தில் இல்லாதது அதற்கு காரணமாக அமைகிறது. வேத ஏற்பு தரப்பின் தத்துவ மூகமாக பன்னிரு படைக்களம் முன்னிறுத்துவது சிசுபாலனையும் – பீஷ்மரையும் – சகுனியையும் – கணிகரையும் மட்டுமே. அவர்களே அதை தத்துவார்த்த உரையாடலாக மாற்றுகின்றனர்.

ஜராசந்தன் தங்கள் நண்பர் என்பதால் மட்டுமே துரியோதனனும் கர்ணனும் போருக்கு தயாராகிறார்கள். கணிகர் நாகர்களின் வஞ்சம் குறித்து தத்துவ ரீதியாக கர்ணனிடம் கேள்வி கேட்கும் போது, தடுமாறும் கர்ணன் தன் மனம் கொண்ட அன்பாலும் பற்றாலும் – துரியோதனன் முடிவே தன் முடிவு என்பதை தெளிவாக்கி விடுகிறான்.

பன்னிரு படைக்களம் நாவலில் துரியோதனன் நிழலாகவே கர்ணன் மாறுகிறார். வெய்யோன் நாவலில் வரும் கர்ணனிடம் காந்தாரி ‘நீ மூத்தவன் என கெளரவர்களை வழி நடத்த வேண்டும்’ என கூறுகிறாள். பன்னிரு படைக்களம் நாவலில் இருவரும் நிலைத்தன்மை அடைந்த பின் காந்தாரி கர்ணனிடம் ‘என் மகனை காப்பாய் என்று நினைத்தால் நீயே அவனை வெள்ளத்தில் தள்ளுகிறாய்’ என கடிந்து கொள்ளும் நிலை ஏற்படுகிறது.

வெண்முரசில் மன எழுச்சியாலும் – துயராலும் – சிறுமையாலும் முன்நகரும் கதாபாத்திரமாகவே துரியோதணனும் கர்ணனும் இருக்கிறார்கள். அணி சேரல்கள், படை நகர்வுகள் அதன் பொருட்டே அவர்களிடம் முக்கியத்துவம் பெறுகிறது. தத்துவத்தின் பொருட்டு அல்ல.

வெய்யோன் நாவலில் – கர்ணன் இளைய கெளரவர்களிடமும் அவர்களின் குழந்தைகளிடமும் கொஞ்சி விளையாடும் இனிய தருணங்கள் பல உண்டு. பன்னிரு படைக்களம் – நாவலின் பேசு பொருள் தன்னியல்பில் கொண்ட எடைமிகு நிகழ்வுகளால் இனிய தருணங்கள் அற்றது. எடைமிகுந்தது.

இப்படிக்கு

பலராம கிருஷ்ணன்

முந்தைய கட்டுரைமாற்றுக்கல்வி எதுவரை?
அடுத்த கட்டுரைதுவந்தம், கடிதங்கள்