விகடன் பேட்டி -கடிதம்

அன்பு நண்பர் ஜெயமோகனுக்கு வணக்கம்,

நலம்தானே? விகடன் நேர்காணல் முதல் இருபாகங்கள் பார்த்தேன். நேர்காணல் என்பது வினாக்கள் தொடுப்பவராலேயே சிறப்பாக அமையும் என்பது என் கருத்து. ஏனெனில் விடையளிப்பவர் தன் கருத்து எதனையும் தாமாக முன்வந்து சொல்லமுடியாது. கேள்வி கேட்பவர்கள் தம் கேள்விகள் வழி அரிய செய்திகளை வெளிக்கொணர வேண்டும். அந்த வகையில் இரண்டாவது பாகம்தான் என்னை மிகவும் ஈர்த்தது

இரண்டாம் பாகத்தில் வினாக்கள் ஆழமானவை. அத்னாலேயே தங்கள் பதில்கள் கூர்மையாகக் கனமானவையாக இருக்கின்றன எனக்கும் பிடித்திருக்கின்றன. குறிப்பாகத் தாங்கள் சொன்ன, கம்பன் விழா மேடையனுபவம். புதுச்சேரியில் நடைபெற்ற அந்நிகழ்விற்கு நண்பர்களுடன் நானும் வந்திருந்தேன். உங்களுக்கு நினைவிருக்கும் என எண்ணுகிறேன். நண்பர் நாகராசன் ஏற்பாடு செய்திருந்த புதுவை பொறியியல் கல்லூரி நிகழ்ச்சியிலும் தாங்கள் உரையாற்றுகையில் ஒரு சம்பவம் நடந்தது. தங்களின் உரைக்கு நடுவில் இருவர் எழுந்து சென்றனர். அவர்கள் அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் என்றெண்ணுகிறேன். உடனே தாங்கள் பேச்சை நிறுத்திவிட்டு “வெளியில் செல்ல விரும்புபவர்கள் இப்பொழுதே சென்றுவிடலாம், இதன் பின் இடையில் எழுந்துச் செல்வது எனக்குப் பிடிக்காது” என்று துணிச்சலாகக் கூறினீர்கள்.

இலங்கை ஜெயராஜ் சொன்னது போல ஒரு பேச்சாளர் அவரைக் கேட்கும் வாய்ப்பை நமக்களித்திருக்கிறார் என்பதையே நிகழ்ச்சிக்கு வருபவர்கள் உணர்வதில்லை.   உங்கள் வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டும் என்றால் ஏதோ கேளிக்கை அளிப்பவனாகப் பேச்சாளரை இன்று பார்க்கிறார்கள். மேடையில் இருப்பவருக்கு மரியாதை தரவேண்டும் என்ற கூற்று உண்மையானது. ஒருவர் மேடையில் உரையாற்றத் தன்னை எந்த அளவுக்குத் தயார் செய்ய வேண்டும் என்பதைக் கேட்க வந்திருப்பவர் உணர வேண்டும்.

ஆனால் தொழில்முறைப் பேச்சாளர்கள் இதுபோல நடைபெறும் இடையூறுகளைப் பற்றிக் கவனிப்பதில்லை. அதைத்தான் “நாங்கள் காம்ப்ரமைஸ் பண்ணிக்கிட்டமோ” எனப் பாரதி பாஸ்கர் வெளிப்படையாகவே கூறினார். இந்த நேர்காணலைப் பார்க்கும் நிகழ்ச்சி அமைப்பாளர்களும் பேச்சாளர்களும் சற்றுத் திருந்தினால் இங்கு நல்ல மேடைப்பேச்சுகள் நிகழும். அடுத்து முக்கியமானது

ஓர் எழுத்து தொடங்கி அடுத்தக் கட்டத்திற்குப் போகவில்லை எனில் அதைப் பிரசுரிக்கக் கூடாதென்பது.  கொற்றவையே சரியாக வரவில்லை என்று ஞானி அவர்கள் முன்னாலேயே கிழித்து விட்டு எழுதியது; விஷ்ணுபுரத்தில் “என் கால்களுக்குக்கீழே என்று தொடங்கும் முதல் வரி ஒரு விடியலில் தோன்றியது, நீலம் தொடங்க ஒன்றரை மாதம் காத்திருந்து, கோழி கூவ அதிலிருந்து வார்த்தை பிறந்தது என்பன பலர் அறியாத அரிய செய்திகள். தாங்கள் சொன்ன தர்க்கம் கற்பனை, உள்ளுணர்வு எனும் வகைப்பாடுகள் முக்கியமானவை எனக் கருதுகிறேன்.

எப்பொழுது மழைபெய்யும் என்பது விவசாயியின் உள்ளுணர்வுக்குத் தெரியும் என்பதை அனுபவ பூர்வமாகக் கூறி உள்ளீர்கள். அதிலும் வாழ்வின் அனுபவம் உள்ளுணர்வோடு கலந்து எதன் மூலமாவது வெளிப்படுவதே எழுத்து என்பது சரியான ஒன்று. ரப்பரில் பைபிள் வாசகம் இடம் பெற்றது குறித்துக் கேட்டபோது டால்ஸ்டாயின் அன்னாகரினாவில் பைபிள் வாசகம் இருப்பதைக் கூறியது பொருத்தம். அது மட்டுமன்று. நானும் குட்டி டால்ஸ்டாய் என்று கூறினீர்கள். இல்லை ஜெ. நீங்கள் தமிழின் டால்ஸ்டாய்தான். வட இந்தியாவின் பல பாரதங்களில் திரௌபதி சிரித்தது மற்றும் வஸ்திராபரணக் காட்சி இல்லை என்பது எனக்குப் புதிய செய்தி. மேலும் தென்னிந்தியாவில்தான் தோற்ற மன்னரை அவமானப்படுத்தும் ஒரு மரபு இருப்பதைச் சான்றாகக் கூறியது நல்ல எடுத்துக் காட்டு.

வெண்முரசில் கிருஷ்ணனிடம் இடம் என்பது அவன் ஒரு ஞானியான அரசன் என்பது சிறப்பான ஒன்று. மேலும் அவரைக் கடவுளாக்கினால் ஏன் துச்சாதனின் கைக்குப் பக்கவாதம் வரச்செய்திருக்கலாமே என்பது நகைச்சுவைக்காகத்தான் என்றாலும் சரியான கேள்விதானே? மேலும் கிருஷ்ணை ஆடை தந்தாலும் கிருஷ்ணன் தந்தாலும் ஒன்றுதானே என்பதும் பொருத்தமாகத்தான் உள்ளது. தமிழின் மகாபாரத உபன்யாசகர்கள் பாரதத்தை வரலாற்று ரீதியாகப் பயிலாதவர்கள் என்பது முற்றிலும் உண்மையே. ஆக மொத்ததில் பல புதிய செய்திகளையும் தங்களின் எழுத்து அனுபவங்களில் சிலவற்றையும் அறிந்துகொள்ள இந்த நேர்காணல் மிகவும் உதவி செய்திருக்கிறது,

வளவ. துரையன், கடலூர்  

முந்தைய கட்டுரைபாரதநிலம் -கடிதம்
அடுத்த கட்டுரைபேசாதவர்கள்- கடிதங்கள்