அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
தமிழிசை குறித்த தங்கள் கட்டுரை அருமையாக இருந்தது. காழ்புணர்ச்சி மட்டுமே கலைய வளர உதவி செய்யாது என நன்கு விளக்கியுள்ளீர்கள்.
சமயம் இருந்தால் தமிழிசை குறித்த எனது கருத்துக்களையும் பார்க்க வேண்டுகின்றேன்.
http://simulationpadaippugal.blogspot.com/2006/12/blog-post.html
– சிமுலேஷன்
அன்புள்ள நண்பருக்கு
உங்கள் கருத்துக்கு நன்றி. விவாதங்கள் வழியாக காழ்ப்புணர்ச்சிகளை வெல்ல வேண்டும், வளர்க்கலாகாது. அதற்காகவே விவாதங்கள் என்பதே என் கொள்கை
ஜெ
ஜெ,
ஆனால் பொதுவாக இதற்கு மறு தரப்பும் உள்ளது. பல வருடங்களுக்கு முன்பு பரணி என்பவர் கர்நாடக சங்கீதம் பற்றி எழுதிய ஒரு கட்டுரையை மனோரமா இயர்புக் க்குக்காக நான் மொழியாக்கம்செய்தேன். அதில் தமிழை வேர் பறி ஒரு சிறு குறிப்புகூட இல்லை. நாதச்வரம் என்ற கருவியைப்பற்றிய பேச்சே இல்லை. அப்படிப்பட்ட ஓரம் சார்ந்த நோக்குகள் காலப்போக்கில் அகலும் என்று எதிர்பார்க்கலாம்
தீவண்ணர் திறமொருகால் பேசாராகில்”
என்னுந் தேவாரத்தை அதற்குரிய பண்ணோடு பாடாமல்-தீவண்ணரை-தீ வண்ணார்-வண்ணார் என்று நிரவிப் பாடியதை ஓர் இசைத்தட்டில் கேட்டேன்.(பிரியா சகோதரிகள் என்று நினைவு).தேவார திவ்யப்பிரபந்த இசைக்கலை விழா என்று அருட்செல்வர் மகாலிங்கமும்,மருத்துவர் இராமதாசுவின் மன்றமும் நடத்தும் இசைவிழாக்களில் இந்தத் தமிழசைக்கு போதிய முக்கியத்துவம் கிடைக்கிறது.
<<கேரளத்தில் யாரும் எல்லா பாட்டையும் மலையாளத்தில் பாடவேண்டுமென அறைகூவி நான் கேட்டதில்லை. சுத்த மலையாளிகளான ஜேசுதாஸ¤ம், நெய்யாற்றின்கரை வாசுதேவனும் பாடும்போதுகூட.. ஏனென்றால் இசையின் அந்த அகில இந்தியத்தன்மை அவர்களுக்கு தெரியும். அது பல நூற்றாண்டுகளாக மெல்ல மெல்ல உருவாகிவந்தது. அழுத்தமான வரலாற்றுப்பின்புலம் கொண்டது. ,>>
அன்புள்ள முத்தையா
தமிழிசை இயக்கத்தின் பண்பாட்டு பங்களிப்பை நான் குறைத்து மதிப்பிஅவில்லை. சொல்லப்போனால் அதை முன்வைத்து நானே நிறைய எழுதியிருக்கிறேன். தமிழிசை ஆய்வுச் சிறப்பிதழ் ஒன்றைக் கொன்டுவந்திருக்கிறேன். நா.மம்முதுவை நாங்கள்தான் முக்கியப்படுத்தினோம்.
தமிழ்ன் தொன்மையான இசை இடைக்காலத்தில் கைவிடப்படு மீண்டும் கர்நாடக சங்கீதமாக கண்டடையப்பட்டது. அது தமிழிசையே என்பதை நிறுவிவதற்கான பண்பாட்டு போராட்டம், முந்தைய மரபை மீன்டும் கண்டடைவதற்கான முயற்சி இரண்டுமே தமிழிசை இயக்கத்தின் நோக்கம்.
தமிழ் தொல்லிசையின் ஒரு கிளைதான் ஓதுவார் மரபின் பண்ணிசை. ஆனால் அது மட்டுமல்ல தமிழ் இசை என்றே நான் நினைக்கிரேன். சேலம் ஜெயலட்சுமி, வீ ப கா சுந்தரம் போன்றவர்களின் நூல்களில் வாசித்தும் உள்ளேன்.
தமிழிசை இயக்கம் இசையின் தமிழடையாளத்தை மீட்பது, கண்டடைவது ஆகிய இரண்டு நோக்கங்களைக் கொண்டது. இசைபாடும் மொழி தமிழ் மட்டுமாகவே இருக்க வேண்டும் என்ற ரசனையற்ற– வரலாற்று மறுப்பு போக்கு கொண்ட– குறுக்கல்வாதமாக அது பின்னர் அரசியல்வாதிகளால் சீரழிக்கப்பட்டது.
அந்நிலையில் அது இசையுடன் தொடர்பையே இழந்தது. தமிழிசை இயக்கம் அதன் மாமேதைகளின் பெரும் அர்ப்பணிப்பையும் மீறி தோல்வி அடைந்தமைக்குக் காரணம் இதுவே. ஆகவேதான் தமிழிசையை மீட்க தமிழிசையைப் பாடுவதும் பாட்டு கேட்பதுமே ஒரே வழி என்று சொல்கிறேன்
ஜெ
888
அன்புள்ள ஜெய மோகன் அவர்களே, தமிழிசை பற்றிய உங்கள் கருத்துக்கள் முற்றிலும் சரியானது. எனக்கு தெரிந்து தமிழ் மொழி மட்டுமே இயல் ,இசை ,நாடகம் என்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. கடைச் சங்க தமிழ் நூலான பஞ்ச மரபில் பண்களுக்கான இலக்கணம் ,தோற்றம் ,பயன்கள் விவரிக்கப்பட்டுள்ளது. இந்த நூலை படித்தாலே,தமிழிசை எந்த கலப்பும் இல்லாமல் தோன்றி கர்நாடக இசைக்கு தாயாக விளங்கியது என்பது புரியும் . நல்ல நரம்பு,குழல், கண்டம்(பாட்டு),தோல்,கூத்து – பஞ்ச மரபு. உதரணமாக யாழ் மரபில் நால் வகை யாழ்கள்,( பேரியாழ்,சகோட யாழ் ,மகர யாழ் ,செங்கோட்டு யாழ்) ஒவ்வவொரு யாழுக்கும் நரம்புகளின் எண்ணிக்கை , மரம் ,கோடு, ஆணி,பத்தல்,திவவு,தந்திரிகரம்( நரம்பின் நீளம்) முதலிய உறுப்புகளின் இலக்கணங்கள் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. முப்பத்தி இரண்டு வகை தோல் கருவிகளும் ,நூற்றி எட்டு தாளங்களும் அதற்கு இலக்கணமும் வகுக்கப்பட்டுள்ளது. அந்நிய படையெடுப்பில் அத்தனையும் இழந்து விட்டோம். அடுத்தவரை குறை சொல்வதில் அர்த்தமில்லை.
ஆர்.ரவீந்திரன்