வணக்கம்.கடந்த இரு வருடங்களாகவே உங்கள் தளத்தினை வாசித்து வரும் ஆரம்ப கட்ட வாசகி நான். உங்களது படைப்புகளை பற்றி சிலாகித்து கூறும் சிலரே உங்கள் கருத்துக்களையும் விமர்சிக்கிறார்கள். நீங்கள் வேறு உங்கள் படைப்புகள் வேறு என்று என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.உங்கள் படைப்புகளும் உங்கள் உரைகளும் என்னுள் நிறைய திறப்புகளை ஏற்படுத்தியுள்ளன. இருந்தாலும் உங்களை பற்றிய சில விமர்சனங்கள் என்னிடம் குழப்பத்தை ஏற்படுத்திவிடுகிறது. நான் எவ்வாறு உங்களை அறிந்து கொள்வது? நான் உங்களை சித்திரை திருநாள் அன்று மதுரையில் சந்தித்தேள். அன்று நீங்கள் நிகழ்த்திய உரையும் என் அகத்தினுள் பெரும் திறப்பினை. நிகழ்த்தியது. உங்களை இன்னும் அதிகமாக தெரிந்து கொள்ளவே இக் கேள்வியை எழுப்பி உள்ளேன். தவறாக இருப்பின் மன்னிக்கவும்.
மதுபாலா
***
அன்புள்ள மது,
நம்முடைய பொதுச்சூழலை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். இளையதலைமுறை அதைப்பற்றிய ஒரு தெளிவை அடைந்தாலொழிய சிந்தனைத்தளங்களில் முன்செல்ல முடியாது. இது ஜனநாயக யுகம். இங்கே வாக்கரசியலே அதிகாரத்தைத் தீர்மானிக்கிறது. வாக்கரசியலில் முதன்மையான விசை என்பது ஒருங்குதிரட்டப்பட்ட கருத்துதான். ஆகவே மக்களை ஏதேனும் ஒரு கருத்துநிலை சார்ந்து ஒன்றுதிரட்ட அத்தனை அரசியல்தரப்புகளும் முயல்கின்றன. அதிகாரம் வேண்டுமென்றால் கருத்துக்களை முன்வைத்து மக்களை திரட்டியாகவேண்டும் என்பது ஜனநாயகத்தின் விதி.
ஆனால், இது ஊடகங்கள் பிரம்மாண்டமாக வளர்ந்துள்ள காலகட்டம். அச்சு ஊடகங்கள், காட்சியூடகங்கள் பேருருவம் கொண்டுள்ளன. சமூகவலைத்தளங்கள், இணைய ஊடகங்கள் மேலும் பிரம்மாண்டமாக வளர்ந்துள்ளன. ஆகவே நம்மைச் சுற்றி அரசியல் கருத்துக்கள் பெருங்கடல்போல அலையடிக்கின்றன. நமக்கு அது ஒரு பொழுதுபோக்காக முதலில் தெரிகிறது. நம் அன்றாடவாழ்க்கையின் சலிப்பை அது போக்குகிறது. மெல்லமெல்ல அதற்கு நாம் அடிமையாவதை நாமே அறிவதில்லை.
எதிர்காலக் கனவுகள் சார்ந்தோ, உயர்ந்த இலட்சியங்கள் சார்ந்தோ மக்களைத் திரட்டுவது எளிதல்ல. அது உயர்ந்த ஆற்றல்கொண்ட மாமனிதர்களால் மட்டுமே இயல்வது, காந்தி போல. மக்களை அன்றாடத் தேவைகளின் பொருட்டு ஒருங்குதிரட்டுவதுகூட எளிதல்ல. ஏனென்றால் அவை மாறிக்கொண்டே இருப்பவை. மக்களை ஒருங்குதிரட்ட விரும்புபவர்கள் தங்கள் அதிகாரவிழைவுக்காக அதைச் செய்பவர்கள். அவர்களுக்கு இயல்பான குறுக்குவழி மக்களை எதிர்மறை உணர்ச்சிகளின் அடிப்படையில் திரட்டுவதுதான். மக்களிடையே கசப்பையும் காழ்ப்பையும் உருவாக்குவது.
அந்த எதிர்மறை உணர்ச்சிகளின் ஆற்றல் அளவிறந்தது. மக்கள் தங்கள் துயர்களுக்கும் சிக்கல்களுக்கும் தங்களுடைய குறைபாடுகளே காரணம் என நம்ப விரும்புவதில்லை. எல்லா துயர்களும் சிக்கல்களும் எதிரிகளால்தான் தங்களுக்கு வருகின்றன என்று நம்பவே விரும்புவார்கள். அவ்வாறு ஒரு சில எதிரிகளை அவர்களுக்குச் சுட்டிக்காட்டிவிட்டால் அவர்களை மிக எளிதில் ஒன்றாகத் திரட்டலாம். அந்த எதிரிமேல் காழ்ப்பை உருவாக்கவேண்டும். அவர்களை வசைபாடிக்கொண்டே இருக்கவேண்டும், அவ்வளவுதான். அந்த வெறுப்பின் அடிப்படையில் ஒருபெருந்திரள் ஒன்றாக கூடிவிடும்.
வெறுப்பின் அடிப்படையில் திரட்டுவதில் உள்ள வசதிகள் எல்லையற்றவை. எதற்கும் எந்த தர்க்கமும் சொல்லவேண்டியதில்லை. எல்லாம் எதிரிகளின் சதி, எல்லாம் அவர்களின் திரிபு என்று கூறிக்கொண்டே இருந்தால்போதும். தங்கள் தரப்பை எதிர்ப்பவர்கள் அல்லது சந்தேகப்படுபவர்கள் அனைவரையும் எதிரிகளின் தரப்பினர் என்று முத்திரை குத்திவிடலாம். எந்த அறிவார்ந்த விவாதமும் இல்லாமல் ஆழமான உணர்ச்சிகளின் அடிப்படையில் பல்லாயிரம்பேரை தொகுத்துவிடலாம்.
இந்தியாவைப் பொறுத்தவரை அவ்வாறு தொகுப்பதற்கு அடிப்படைகளாக இருப்பவை முதன்மையாகச் சாதி, அதன்பிறகு மதம், மொழி. குறைந்த அளவுக்கு வட்டார உணர்வுகள். எந்த அரசியல் மூர்க்கத்தைப் பார்த்தாலும், அவர்கள் சாதி ஒழிப்பு அல்லது மத எதிர்ப்பு என எது பேசினாலும், அடித்தட்டில் இருப்பவை மேலே கூறப்பட்ட அடையாள அரசியல்சார்ந்த உணர்வுகள்தான். அவைதான் மூர்க்கமாக, மிகையாக வெளிப்படுகின்றன.
பொழுதுபோக்குக்காக அரசியலைக் கவனிக்க ஆரம்பிப்பவர்கள் மிக எளிதாக அந்த மாபெரும் வலைக்குள் விழுந்துவிடுகிறார்கள். அந்த ஆட்டத்தில் ஈடுபடவேண்டும் என்றால் ஏதேனும் ஒரு தரப்பை எடுத்தே ஆகவேண்டும். அப்போதுதான் கட்சிகட்டி உணர்ச்சிக்கொந்தளிப்பை அடையமுடியும். தன் சாதி, மத, மொழி, இன அடிப்படையில் ஒரு தரப்பை எடுத்தபின்னர் அதை மெல்ல மெல்ல நம்ப ஆரம்பிக்கிறார்கள். எதிரிகளுடன் பூசலிடும்பொருட்டு தன் தரப்பை ஆணித்தரமாக வலியுறுத்துவார்கள். மெல்லமெல்ல அதை அவர்களே நம்ப ஆரம்பித்துவிடுவார்கள். அதுவாகவே ஆகிவிடுவார்கள். நாடகத்தில் நடிப்பவன் கதாபாத்திரமாக ஆகிவிடுவதுபோல.
ஆண்களில் பெரும்பாலானவர்களுக்கு இரண்டு காலகட்டங்களில் பெரிய வெறுமை உருவாகிறது. முதலில் இருபதை ஒட்டிய வயதுகளில். அவன் சிறுவனாக இருந்து ஒரு கட்டத்தில் வளர்ந்தவனாக உணர்கிறான். ஆனால் அவனுக்கென எந்த அடையாளமும் இருப்பதில்லை. ‘நான் கவிஞன்’ ‘நான் ஒரு பொறியாளன்’ ‘நான் ஒரு கலைஞன்’ என்றெல்லாம் அவனால் நம்பிக்கையுடன் சொல்லமுடிவதில்லை. படித்திருப்பான், வேலையில் இருப்பான். ஆனால் அதிலெல்லாம் அவனுக்கு பெரிய இடம் ஏதும் இல்லை என அவனே நன்றாக அறிந்திருப்பான். அவனுக்கு அடையாளம் தேவை
அவன் தன்னை ஓர் ‘ஆண்மகன்’ ஆக உணரவேண்டியிருக்கிறது. அதற்குச் அடையாளம் இருந்தே ஆகவேண்டும். ஆகவே சட்டென்று அவன் அரசியல் அடையாளத்தைப் பிடித்துக்கொள்கிறான். தன்னை ஓர் இடதுசாரிப் புரட்சியாளனாக, தமிழ்த்தேசியனாக, திராவிடவாதியாக, இந்துத்துவப் போராளியாக கற்பனை செய்துகொள்கிறான். அப்போது அவனுக்கு ஒரு பெருமித உணர்வு உருவாகிறது. பெருந்திரளில் ஒருவனாக இருக்கும் உணர்வு ஏற்படுகிறது. அவனுக்கு ஒரு கும்பலும் கிடைக்கிறது. ஆகவே மிகையான ஆவேசத்துடன் அவன் அந்த அடையாளத்தை பொதுவெளியில் முன்வைக்கிறான்.
கவனியுங்கள், இப்படி தன்னை முன்வைக்கும் எவரும் எந்தத்துறையிலும் முக்கியமானவர்களாக இருக்க மாட்டார்கள். ஒரு நல்ல மருத்துவர், நல்ல பொறியாளர், நல்ல எழுத்தாளர் இந்த வகையான மலிவான அடையாளம் ஒன்றை அரசியலில் இருந்து எடுத்துக்கொள்ள வேண்டிய தேவை இல்லை.
இரண்டாவது காலகட்டம் நாற்பதை ஒட்டிய வயதுகளில் வருகிறது. காமம், குடும்பம் எல்லாம் கொஞ்சம் சலிப்புற்றுவிட்ட காலம் இது. தொழிலில் பெரிய சாதனை எல்லாம் சாத்தியமில்லை என்று தெரியவந்திருக்கும். எந்தத்துறையிலும் தான் ஒரு சாதனையாளன் அல்ல, தனக்கென ஒரு இடம் இங்கே இல்லை என உணர்ந்திருப்பான். அப்போது மீண்டும் அரசியல்வெறி உருவாகிறது. சமூகவலைத்தளங்களுக்கு வருகிறான். அங்கே அரசியல்பூசல்களில் மெய்மறந்து திளைக்கிறான். டிவியில் அரசியல்சண்டைகளை நாடகம்போல ரசிக்கிறான்.
இது வாழ்க்கையின் மாபெரும் வெறுமையை அவன் நிரப்பிக்கொள்ளும் முறை. அவனுக்கு கலை, இலக்கியம் எதிலும் ஆழமான ஈடுபாடு இருக்காது. தத்துவம், வழிபாடு, சேவை என ஆன்மிகத்தின் எந்த தளத்திலும் ஆர்வமோ பயிற்சியோ இருக்காது. எந்த பண்பாட்டுப் பயிற்சியும் இல்லாத பெண்கள் நாளெல்லாம் சீரியல் பார்த்து எதிர்மறையான உணர்ச்சிகளில் திளைப்பதுபோலத்தான் இவனும் அரசியலில் ஈடுபட்டிருக்கிறான். ஆனால் தான் உருப்படியான ஒன்றைச் செய்வதாக நம்பிக்கொண்டு பெண்கள் பார்க்கும் சீரியல்களை பழிப்பான்.
பரிதாபத்திற்குரியவர்கள் இந்த ஆண்கள். இவர்களில் சிலருக்கு இலக்கியம் வெறும் செய்தியாக மட்டும் தெரிந்திருக்கும். இலக்கியரசனையென ஏதும் இருக்காது. இலக்கியவம்புகள், அரசியல் சர்ச்சைகள் வழியாக இலக்கியவாதிகளைப் பற்றி ஓரிருவரி அபிப்பிராயங்களை தெரிந்துகொள்வார்கள். அதை தாங்களே வாசித்து உருவாக்கிக்கொண்ட பாவனையில் சொல்வார்கள். நீங்கள் குறிப்பிடும் நபர்கள் பெரும்பாலும் அத்தகையவர்களே. அவர்களை ஒருவகையான உளச்சிக்கல் கொண்ட மனிதர்கள் என்றே எடுத்துக்கொள்ளவேண்டும். ஒரு பொருட்படுத்தும்படியான தரப்பாக அல்ல.
இதற்கு அப்பால் மிகச்சிலர் என்னுடைய கருத்துக்களுடன் முரண்பட்டு என் படைப்புக்களில் ஈடுபாடு கொண்டு வாசிப்பவர்களாக இருக்கிறார்கள். எவ்வாறு என இலக்கியம் எப்படி எழுதப்படுகிறதென தெரிந்துகொண்டால் அது உங்களுக்குப் புரியும். இலக்கியப் படைப்பில் ஒரு படைப்பாளி முன்வைப்பது அவன் கற்று, தெளிந்து ஏற்றுக்கொண்டவற்றை அல்ல. அவனுடைய திட்டவட்டமான நிலைபாட்டை அல்ல. இலக்கியப்படைப்பு என்பது ஒருவகை கனவு என எடுத்துக்கொள்ளுங்கள். மொழியில் நிகழும் ஒரு கனவு. ஒரு படைப்பு என்பது அந்த எழுத்தாளன் மொழிவழியாக கண்ட ஒரு கனவு. நம் கனவு நம் கட்டுப்பாட்டில் இல்லை அல்லவா? நாம் நினைப்பதே நம் கனவில் இருக்கவேண்டும் என்பதில்லை அல்லவா?
எழுத்தாளன் எல்லாரையும்போல ஒரு அன்றாட உள்ளம் கொண்டவன். அவனுக்கு பல கருத்துக்கள் இருக்கும். அவை அவன் தன் வாழ்க்கையிலிருந்து பெற்றுக்கொண்டவையாக இருக்கும். அவனுக்கான ஓர் அரசியலும் இருக்கலாம். ஆனால் அவன் எழுதுபவை அப்படியே அந்த கருத்துக்களை வெளிப்படுத்துபவை அல்ல. சிலசமயம் நேர்மாறாகவும் இருக்கலாம். அவனே அறியாத நுட்பங்கள் அதில் வெளிப்படலாம். ஆகவே எழுத்தை எழுத்தாளனிடமிருந்து பிரித்தே பார்க்கவேண்டும். எழுத்து தன்னளவில் முழுமையான ஒன்று.
நான் என் எழுத்துடன் முரண்படாமல் வாழ முயல்பவன். முடிந்தவரை வெளிப்படையாக. ஆனால் சில எழுத்தாளர்கள் அவ்வண்ணம் இல்லாமல் இருக்கலாம். அவர்களுடைய தனிவாழ்க்கையில் அவர்கள் வேறொன்றாக இருக்கலாம். அதைக்கொண்டு அவர்களின் எழுத்தை மதிப்பிடக்கூடாது. இது இலக்கியவிமர்சனத்திலுள்ள விதிகளில் ஒன்று.
ஒருவர் அழுத்தமான அரசியல்நம்பிக்கை கொண்டவராக இருக்கலாம். அந்த அரசியல்நம்பிக்கையை நான் ஏற்காமல் இருக்கலாம். அந்நிலையில் அவர் என்னை மறுக்கலாம். ஆனால் என் எழுத்தை வாசிக்கும்போது அவர் அதில் ஆழமான இலக்கிய அனுபவத்தை அடையலாம். அவ்வாறு நிகழ்கையில் அவர் என்னை மறுப்பவராகவும் என் எழுத்தை ஏற்பவராகவும் ஆகலாம்
ஏனென்றால் இலக்கியப்படைப்புகள் அரசியல்வெளிப்பாடுகள் அல்ல. அரசியலைத் தவிர வேறொன்றும் தெரியாதவர்கள் இலக்கியப்படைப்புகளில் அரசியலை மட்டுமே பார்ப்பார்கள். இலக்கியப்படைப்புக்கள் பொதுவாக மானுடவாழ்க்கையின் தருணங்களையும், மானுடர்களின் நுண்ணிய இயல்புகளையும், அவர்களின் உள்ளத்தின் ஆழங்களையும், உணர்ச்சிகளையும்தான் பேசுகின்றன. வரலாற்றுப்பெருக்கை, இயற்கையின் பிரம்மாண்டத்தை, பிரபஞ்ச தரிசனத்தை முன்வைக்கின்றன. அவற்றுக்கும் இங்கே உள்ள எளிமையான அதிகார அரசியலுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
ஒருவர் உண்மையிலேயே நுண்ணுணர்வு கொண்டவர் என்றால் எளிய அதிகார அரசியலை இலக்கியப்படைப்பின்மேல் போட்டுப்பார்க்கமாட்டார். அந்த அரசியல்நிலைபாடுகளை அப்பால் நிறுத்தி வாழ்க்கையை அறியும் ஆவலுடன் இலக்கியப்படைப்பை வாசிப்பார். அவ்வாறு வாசிப்பவருக்கு அந்த ஆசிரியரின் கருத்துக்கள் ஏற்பற்றவையாக இருந்தாலும் அவருடைய படைப்புக்கள் இலக்கிய அனுபவத்தையும் அறிதல்களையும் அளிப்பவையாகவே இருக்கும்.
அத்தகைய நுண்ணுணர்வு கொண்டவர்களை எளிதில் அடையாளம் காணமுடியும். அவர்கள் ஓர் இலக்கியப்படைப்பு எத்தனை அரிதானது என அறிந்திருப்பார்கள். அதை உருவாக்கும் படைப்பாளி என்னென்ன வகையான அகப்பயணங்கள் மற்றும் உணர்வுநிலைகள் வழியாக அதை சென்றடைந்திருப்பான் என உணர்ந்திருப்பார்கள். ஆகவே ஒருநிலையிலும் அவர்கள் இலக்கியப்படைப்பாளி மேல் காழ்ப்பும் கசப்பும் கொண்டிருக்க மாட்டார்கள். சில்லறை வசைகளையும் அற்பத்தனமான ஏளனங்களையும் வெளிப்படுத்த மாட்டார்கள்.அது பண்படாதவர்களின் இயல்பு என அறிந்திருப்பார்கள்.
ஜெ