மொக்கவிழ்தலின் தொடுகை

நீண்டநாட்களுக்கு முன் உயிர்மையில் ஒரு கவிதைத் தொகுதி வெளிவந்தது. அதுவரை எந்தச் சிற்றிதழிலும் வெளிவராத கவிஞரின் பெயருடன். கிட்டத்த இருநூறு கவிதைகளுடன், பெரிய தொகுப்பு. எந்தச் சிற்றிதழாளனும் அத்தகைய தொகுதியை ஓர் ஆர்வமின்மையுடன்தான் எடுத்துப் பார்ப்பான். எவனோ சொந்தக்காசை காகிதத்தில் மைக்கறையாக்கித் தொலைத்திருக்கிறான் என்னும் எண்ணத்துடன். ஆனால் முதல் கவிதையே என்னை உள்ளிழுத்தது. முகுந்த் நாகராஜன் எனக்கு அறிமுகமானார். அவரைப் பற்றிய முதல் பாராட்டுக் குறிப்பை நான் எழுதினேன்.

அதன்பின் செல்லுமிடமெல்லாம் என்னிடம் கேட்பார்கள், மெய்யாகவே நன்றாக இருக்கிறதா? அப்படி என்ன இருக்கிறது அவற்றில்? ஏனென்றால் எந்தச் சிற்றிதழிலும் நாலைந்துபேர் கவிதை எழுதியிருப்பார்கள். திருகலான மலச்சிக்கல் மொழியில் தன்னுரையாடலாக காமப்புழுங்கல் அல்லது தனிமைத் தத்துவக் குமுறல். இரண்டும் இல்லாவிட்டால் புரட்சி. உரைநடையாளனுக்கு நவீனக்கவிதையின் மோசமான சொற்சேர்க்கை போல எரிச்சலூட்டுவது பிறிதொன்றில்லை. அச்சூழலில் முகுந்த் நாகராஜன் ஒரு குளிமென்காற்று. பைதல்களுக்குரிய அழகான அறியாமையுடன் பேசுவன அவருடைய கவிதைகள்.

இன்றும் தமிழ்க்கவிதையின் தவிர்க்கமுடியாத தனிக்குரல் அவருடையது. அவருடைய இடத்தை எவரும் அளிக்கவேண்டியதில்லை. நேற்றுகூட நெருக்கியடித்து ஜீப்பில் வரும்போது ஒருவர் இறங்கிக்கொள்ள சற்று கால்நீட்ட இடம் கிடைத்தபோது ஈரோடு வந்துவிட்ட தருணத்தில் ஒருவர் ‘இதெல்லாம் ஒரு காரணமா என்ன?’என்ற முகுந்த் நாகராஜனின் வரிகளைச் சொன்னார். அப்படித்தான் கவிஞன் வாழ்கிறான்.

தன்னியல்பான எளிமை என்பது கவிதையை நிகழ்த்தும் பெருவிசை. சிந்தனைகளோ விமர்சனங்களோ படிமச்சமையல்களோ அதைச் செய்யமுடியாது. அந்த எளிமையை நடிக்கவே முடியாது. அது கருத்தின் எளிமை அல்ல. அதைத்தான் முதிராக்கவிதைகளில் கண்டுகொண்டிருக்கிறோம். எளிமையான வாழ்க்கைப்பார்வை, எளிமையான அரசியல் கருத்துக்களை. அது மொழியின் எளிமை அல்ல. கவிதையின் மொழியில் தன்னியல்புத்தன்மைக்கே இடம், செயற்கையான எளிமைக்கு இடமில்லை. அந்த எளிமை கவிஞனின் அகஎளிமை. இயற்கையின்முன், பிரபஞ்சப்பெருக்கின் முன், வாழ்க்கைநாடகத்தின் முன் அவன் ‘புனிதமான அறியாமையுடன்’ நிற்கும்போது உருவாகும் எளிமை அது.

அத்தகைய எளிமைதான் கவிஞனை மலர்களை, விலங்குகளை, குழந்தைகளை நோக்கிக் கொண்டுசெல்கிறது. அவனுடைய கவித்தன்னிலை வானை, வெளியை,.கடலை,ஏரியை எல்லாம்கூட மலராக குழந்தைகளாக ஆக்கிவிடுகிறது. நான் விரும்பும் கவிஞர்கள் எல்லா மொழியிலும் முதன்மையாக அத்தகையவர்களே. சட்டையைக் கழற்றிவிட்டு ஒளிரும் குளிர்ச்சிற்றோடையில் இறங்குவதுபோல அவற்றுக்குள் நுழைந்துவிட முடிகிறது. தேவதேவன், கல்பற்ற நாராயணன், பி.ராமன், இசை என பலருடைய கவிதைகளில் நான் காணும் அழகு அது.

ஆனந்த்குமார் கவிதைகளை அந்த மனமலர்தலுடன் கண்டடைந்தேன். வாசித்தபின் புன்னகையுடன் அவற்றை காட்சியாக விரித்தபடி அமர்ந்திருந்தேன். எந்த ‘எண்ணத்தையும்’ ‘கருத்தையும்’ உருவாக்காத கவிதைகள். வெறும் புன்னகையில் கனியச்செய்பவை. காட்சிகளாக விரிந்து சட்டென்று இப்புடவி என நமைச் சூழ்ந்துள்ள மாபெரும் லீலையை உணரச்செய்யும் வரிகள்.

மலையாளக் கவிதைவரி ஒன்றுண்டு, கே.ஏ.ஜெயசீலன் எழுதியது. ‘இத்தனை எளிதாகவா இவையெல்லாம் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன? இத்தனை பிந்தியா அதை நான் உணரவேண்டும்?’ எளிமையான ஒரு எண்ணம், ஆனால் சென்ற முப்பதாண்டுகளாக என்னை தொடர்கிறது இந்த வரி. இங்கே மலர்கள் விரிகின்றன, மலர்களைப்போல் எரிமலைகள் புகைமலர்கின்றன. விண்மீன்கள் தோன்றி மறைகின்றன. அத்தனை எளிமையாக. அதை உணரும் ஒரு தனிநிலை அகத்தே உண்டு. அதை வெளியே நிகழ்த்திக் காட்டுகின்றன ஆனந்த்குமாரின் கவிதைகள்.

நகர் நடுவே
அந்த ஏரியை
வேலியிட்டு வைத்திருந்தார்கள்
தொட்டிலுக்குள்
எழுந்துவிட்ட குழந்தைபோல
கவிழ்ந்து கிடந்து
உருள்கிறது
அழவில்லை சமர்த்து.

கம்பித்தடையின்றி
ஏரியைப் பார்க்க
சுற்றிவந்தேன்
சாலை தாழும்
ஒரு பழைய
ஓடையருகே
விரல்விட்டு வெளியே
மணல் அளைந்துகொண்டிருந்தது
ஏரி

அந்த கவித்தொடுகையையே இன்னொரு கவிதையில் கண்டேன். மலர் எழுந்து தொட்டு கற்சுவரை சற்றுக் கனியச் செய்கிறது. பட்டுத்திரை என சுவர் நெகிழும். மலரிதழ் என விரியும். வீடு ஒரு மாமலர் என ஒளியும் வண்ணமும் கொள்ளும் என நினைத்துக்கொண்டேன். மிகமிக மென்மையான மலர்த்தொடுகையைப்போல அத்தனை பேராற்றலை வேறேதும் அளித்துவிடக்கூடுமா என்ன?

மலர்த் தொட்டியை கொஞ்சம்
சுவற்றிற்கு அருகிலேயே வைத்துவிட்டேன்
புதிய மலரென
பூப்பதற்கு முந்தைய நாள்
சுவற்றை கொஞ்சம்
சீண்டிப் பார்க்கிறது மொட்டு.

அம்மாடி,
அத்தனை உறுதி ஒன்றுமில்லை.
சிறுமகள் தொட்ட
தந்தையின் உடலென
கொஞ்சம்
நெகிழ்ந்துதான் போனதென்
வீடு

யாவரும், ஆனந்த் குமார் கவிதைகள்

கனலி ஆனந்த்குமார் கவிதைகள்

முந்தைய கட்டுரைசின்னஞ்சிறு மலர்- அருண்மொழி நங்கை 
அடுத்த கட்டுரைபாரதநிலம் -கடிதம்