நாவலின் பேசுபொருள் -பி.கே.பாலகிருஷ்ணன்

அன்புள்ள ஜெ,

பி.கெ.பாலகிருஷ்ணனின் “நாவல் – சித்தியும் சாதனையும்” நூலில் உள்ள ஆரோக்கிய நிகேதனம் நாவல் தொடர்பான கட்டுரைகளில் “நாவலிலே பிரமேய சர்ச்ச” என்ற கட்டுரையை மொழிபெயர்த்திருக்கிறேன். மற்ற கட்டுரைகளையும் மொழிபெயர்க்க ஆரம்பித்திருக்கிறேன்.

அன்புடன்

மணவாளன்

பி.கெ பாலகிருஷ்ணன்

ஒரு வலுவான பேசுபொருளையோ பிரச்சனையையோ முன்வைக்காத, மதிப்பீடுகள் எதையும் நிறுவாத ஒரு நாவல் சிறந்த நாவலாக ஆக முடியுமா?  இந்த கேள்வி நாவலுக்கு மட்டுமல்ல, எல்லா கலை வடிவங்களுக்கும் பொருந்தக்கூடிய கேள்வி.  ஆனால், நாவலைப் பொறுத்தவரை அதன் வடிவம், கதைத்தொழில்நுட்பத்தில்(craft) உள்ள தனித்தன்மைகள் போன்ற காரணங்களால் இந்த கேள்வி விஷேஷ முக்கியத்துவம் கொண்டதாக ஆகிவிடுகிறது. ஒரு கலைப்படைப்பு என்பது பயன்பாடு சார்ந்ததாகவோ, அறிவார்ந்ததாகவோ இல்லாமல் வெறும் அழகியல் வெளிப்பாடாக மட்டுமே இருக்க முடியும்.  முடியும் என்பதல்ல, கலை என்பதே அழகியல் வெளிப்பாடுதான். கலைக்கு அழகியல் வெளிப்பாடுதான் முக்கியம், அதை சார்ந்து மட்டும்தான் கலைப்படைப்பின் மற்ற நோக்கங்களை பற்றி நாம் பேச வேண்டும்.

கலைப்படைப்பில் அழகியல் வெளிப்பாடு சாத்தியப்படுவதற்கான ஒரே வழி- வடிவம் சார்ந்த தொடர்ச்சியான கவனம், உணர்வுச் சமநிலை இவற்றின் வழியாகத்தான். இதை கலையின் அடிப்படை உண்மை என்றே சொல்லிவிடலாம். இதை புரிந்துகொள்ள ஒரு உதாரணத்தை எடுத்துக்கொள்வோம். திட்டவட்டமான உள்ளடக்கம் கொண்ட, அதேசமயம் வடிவத்தில் உட்சிக்கல்கள் நிறைந்த ஒரு யதார்த்தவாத நாவல்(realistic) ஒன்றை கற்பனை செய்யுங்கள். அந்த நாவலை நாம் மேலே விவாதித்த கலையின் அழகியல் வெளிப்பாடு சார்ந்த அம்சங்கள் சிக்கலான நிலையில் நிறுத்துகின்றன. நாவலில் வடிவ ஒருமை, உணர்வுச்சமநிலை போன்றவை அமைய நாவலின் கதைத்தொழில்நுட்பத்தை (craft) மிகமிக கவனத்துடன் கையாள வேண்டும். இங்கு நான் சிக்கல் என உத்தேசிப்பது கலையின் கதைத்தொழில்நுட்பம் சார்ந்த நடைமுறை சிக்கலைத்தான். உலக இலக்கியத்தைப் பொறுத்தவரை, வலுவான பேசுபொருள் அற்ற, முன்னரே உத்தேசித்த இலக்குகள் இல்லாத, வெறும் அழகியல் வெளிப்பாட்டால் மட்டுமே வெற்றியடைந்த நாவல் என்பது அபூர்வமான ஒன்று. ஜேன் ஆஸ்டனின்(Jane Austen) நாவல்களை தவிர்த்துப்பார்த்தால் ஏறக்குறைய பெரிய நாவல்கள் அனைத்தும் வலுவான பேசுபொருளாலும், அவை எழுப்பிய மோதல்களால்(conflict) மட்டும்தான் சிறந்த நாவல்களாக ஆகியிருக்கின்றன.

இந்த விஷயத்தில் மற்ற இலக்கிய வடிவங்களுக்கு இல்லாத சில வசதிகளும் நாவலுக்கு இருக்கிறது. ஒரு நாவல் தன் பேசுபொருளை மட்டுமே கவனத்துடன் கையாண்டு, அதை பகுதிகளாக பிரித்துக்கொண்டு, எந்த பகுதியை வேண்டுமென்றாலும் விரிவாக்கலாம்.  காவியம், நாடகம் போன்ற வேறு  கலைகளின் எந்த உத்தியையும்(technique) பயன்படுத்த நாவலாசிரியனுக்கு சுதந்திரம் இருக்கிறது.  இந்த வசதியானது நாவலை அறிவார்ந்த உள்ளடகத்தை நம்பி இயங்கும் ஒரு கலைவடிவமாக ஆக்கிவிடுகிறது. உலகில் உள்ள தலைசிறந்த நாவல்கள் எல்லாம் வலுவான பிரச்சனையையும் பேசுபொருளையும் திட்டவட்டமான வடிவத்தில் விவாதிப்பவை.

ஒரு நாவலாசிரியன் தன் நாவலில் தான் கையாளும் வலுவான பிரச்சனையைப்பற்றி சொற்பொழிவு ஆற்றுவேண்டுமென்றோ, அந்த பிரச்சனைக்கு தன் நாவலில் விளக்கவுரை எழுத வேண்டுமென்றோ நான் சொல்லவில்லை . ஒரு நாவலாசிரியர் தான் புனைந்துகாட்டும் வாழ்க்கைச் சித்திரத்தின் வழியாக தன் நாவலின் பேசுபொருளுக்கும் பிரச்சனைகளுக்கும் உயிர்த்துடிப்புள்ள, திட்டவட்டமான வடிவத்தை அளிக்க வேண்டும் என்று தான் நான் சொல்லவருகிறேன். நாவலில் ஒரு பெரிய பிரச்சனையை நேரடியாக அல்லாமல் வாழ்க்கை சித்திரங்கள் வழியாக நுட்பமான வடிவில் கையாள வேண்டும். அம்மாதிரியான முயற்சியில் இறங்கும் கலைஞனும் அந்த அளவு விரிவும், வலிமையும் கொண்ட ஆளுமையாகவும் இருக்கவேண்டும். மகத்தான நாவல்கள் என்பவை மகத்தான பேசுபொருட்களை கையாளக்கூடியவைகூட என்ற கருத்தைத்தான் நான் விளக்க முயற்சி செய்கிறேன். பெரிய நாவலில் வலுவான பேசுபொருளை கையாளும் முறை பற்றி அறிய ஆர்வம் கொண்ட வாசகர்களுக்கு “ஆரோக்கிய நிகேதனம்” நாவல் ஒரு முக்கியமான உதாரணம்.

ஆரோக்கிய நிகேதனத்தின் பேசுபொருள் என்பது சுருக்கமாக மானுடத்தின் மகத்துவமும், மனிதனில் வெளிப்படும் நன்மையும் என்று சொல்லலாம். இந்த பெரிய பேசுபொருள் நாவலில் நுட்பமாக கையாளப்பட்டிருக்கிறது. அசாதாரணமான லாவகத்துடன் நாவலாசிரியர் தாராசங்கர் பானர்ஜி இந்த பணியை செய்திருக்கிறார். புகழ்பெற்ற நாவலாசிரியர்கூட தங்கள் நாவலில் ஒரு வலுவான பேசுபொருளை முன்வைக்கும்போது, நாவலாசிரியர் என்ற நிலையை மறந்துவிட்டு தீர்க்கதரிசியைப் போல சொற்பொழிவு ஆற்ற ஆரம்பித்துவிடுவார்கள். உலக இலக்கியத்தில் அப்படி நிறைய உதாரணங்கள் இருக்கின்றன. பேசுபொருளை இன்னும் வலுவானதாகக் காட்டுவதற்காக அல்லது அதை இன்னும் தெளிவுபடுத்த நாவலுக்கு உள்ளே இருக்கும் கதாப்பாத்திரங்களை சொற்பொழிவு ஆற்ற வைக்கவோ, நீண்ட விளக்கவுரை அளிக்கவோ செய்வார்கள். அதற்குக்கூட பொறுமை இல்லாத நாவலாசிரியர்கள் நேராக நாவலுக்குள்ளே வந்து  ஆசிரியர் கூற்றாக வாசகர்களிடம் பிரசங்கம் செய்வதும் சாதாரணம்.

இந்த விஷயங்களைப் பற்றியெல்லாம் முன்னரே அறிந்து இருப்பது காரணமாக இருக்கலாம், ஆரோக்கிய நிகேதனம் நாவலில் இந்த மாதிரி பலவீனங்கள் எதுவுமே இல்லை. கலையின் எந்த விதியையும் மிக மெல்லிய அளவில் கூட மீறாத வகையில் அந்த நாவல் தான் கையாளும் பேசுபொருளை முன்வைக்கிறது. நாவலின் எந்த கதைச் சந்தர்ப்பத்திலும் அந்த சூழலுக்கு பொருந்தாத ஒரு உரையாடல் கூட இல்லை. நாவலின் ஒரு சம்பவத்தில்கூட, அந்த சம்பவத்திற்கு கொஞ்சமும் அவசியமில்லாத வகையில் பேசுபொருளை துலங்க வைப்பதற்காக கதாப்பாத்திரங்கள் எதையும் சொல்வதில்லை. அதைவிட நாவலாசிரியர் தானாகவே நாவலுக்குள் முகம்காட்டக்கூடிய பகுதிகள் இந்த நாவலில் சுத்தமாக இல்லை என்றே சொல்லிவிடலாம். ஆனால், ஆரோக்கிய நிகேதனம் நாவலின் கதைச்சந்தர்ப்பங்கள், கதாப்பாத்திரங்கள், சித்தரிப்பு முறை, மொழி என ஒவ்வொரு அம்சமும் மையமான பேசுபொருளின் வலிமையை உணர்ந்துகொண்டு அந்த பேசுபொருளின் வெவ்வேறு பகுதிகளை துலக்கிக்காட்டும் பணியை செய்கின்றன.

நாம் மொழிபெயர்ப்பு வடிவத்தைதான் வாசிக்கிறோம் என்றாலும் , நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் இந்த நாவலின் மொழிநடை. உணர்ச்சிகளை குறைத்து சொல்லும் (under statement ) இயல்பைக்கொண்ட  மொழிநடை. உறுதியான, சமநிலை உள்ள, தத்துவ அறிவும், கருணையும் கொண்ட ஒருவரின் ஆணையிடும் தொனியில் உள்ள மொழி உண்டாக்கும் தனித்தன்மையும் இந்த நாவலுக்கு உண்டு. நாவலின் எந்த சூழலிலும், அது நகைச்சுவையான சம்பவத்தை விளக்கும்போதோ அல்லது உணர்வெழுச்சியின் நிறைந்த சம்பவத்தை விவரிக்கும்போதோ எதுவாக இருந்தாலும், பின்னணியில் கம்பீரமான முழக்கம் மட்டும்தான் பிரதானமானதாக இருக்கும். இதை ஒரு வகையில் நாவலின் நிமிர்வு என்று சொல்லலாம். அந்த நிமிர்வை குலைக்கும் எந்த அம்சமும் நாவலில் இல்லை. அபூர்வமாக இருக்கும் விவரணைகளும், நாவல் முழுக்கவே நிறைந்திருக்கும் நாடகீய தருணங்களும் (இந்த நாவலில் உள்ள பல உவமைகள் வரை) இந்த நிமிர்விற்கு பங்களிப்பாற்றுகின்றன. இம்மாதிரியான நிமிர்வை நாம் இயற்கையின் கம்பீரமான, என்றென்றைக்குமான நிலைகளில், இதிகாசங்களில், புராணங்களில் உள்ள பிரம்மாண்டமான வாழ்க்கைச்சித்திரங்களில் மட்டும்தான் காணமுடியும்.

இந்த நாவலில் உள்ள உணர்வுநிலைகளின் ஏற்ற இறங்கங்களை இன்னும்  வீரியமானவையாக ஆக்கும் கூறு என்று இயற்கையைச் சொல்லலாம். இந்த நாவலின் கதைக்களம் என்பது முழுக்கவே கிராமம் தான் இல்லையா? கிராமம் என்று எடுத்துக்கொண்டால் அங்குள்ள பூக்கள், செடி கொடிகள் வழியாக வெளிப்படும் காட்சியழகு என்பது எப்போதுமே இருப்பது. ஆனால், ஆரோக்கிய நிகேதனம் நாவலுக்கு பின்னணியாக உள்ள இயற்கையில் நாவலாசிரியர் கவனம் செலுத்துவது அதில் உள்ள காட்சியழகுகளில் அல்ல. எந்த காலமாக இருந்தாலும் சரி, எந்த ஊராக இருந்தாலும் சரி இயற்கையின் என்றென்றைக்குமான மகத்துவத்தை வெளிப்படுத்தக்கூடிய அம்சங்கள் சில இருக்கின்றன. நன்கு உழுத நிலம், நாற்று நடப்பட்ட வயல், தரிசாகக்கிடக்கும் பூமி, வானம், மேகங்கள், அவற்றை நோக்கி தலை உயர்த்தி நிற்கும் மரங்கள் ,பேய்மழை, இடிமின்னல் இப்படிப்பட்டவை. சிருஷ்டியின், படைத்தவனின் அழகுணர்வை விட, அவனது கம்பீரத்தை, அவனுடைய இருப்பை குறிப்பால் உணர்த்தும் இந்த இயற்கையைத்தான் ஆரோக்கிய நிகேதனத்தில் உள்ள கதாநாயகனும், மற்ற கதாப்பாத்திரங்களும் சுவாசிக்கிறார்கள்.

இந்த கம்பீரத்தின் எதிரொலிகள் நிறைந்த சூழலில், சிறு சிறு இடைவெளிகளில் அடிக்கப்படும் முரசின் கார்வைபோல மரணம் என்ற எதிர்பாராமை கடந்துவரும். இந்த பின்னணியில்  திடமான மனதுடன், கண்களை மேகங்களுக்கு அப்பால் என செலுத்தியபடி , சூழலை மறந்து, யானை போன்ற உறுதியான நடையுடன்  ஜீவன் மஷாய் நுழைகிறார். அந்த காட்சியைப் பார்த்தால் ’எவ்வளவு உன்னதமானது!’ என்று தோன்றும். அபூர்வமான சில சந்தர்ப்பங்களில் ’எவ்வளவு மங்கலமானது!’ என்று தோன்றும். ஆனால் எப்போதுமே நம் மனதில் அந்த காட்சியைப் பார்த்தால் ’எவ்வளவு கம்பீரமானது!’ என்ற எண்ணம்தான் பிரதானமானதாக இருக்கும். ஒரு மரஉச்சியில் இருந்து, எங்கிருந்தோ என அசிரீரி போன்ற குரலில் கத்தும் ஹாட்குடோ மீனவன் வளர்க்கும் மைனாவின் குரலைக்கேட்டு ஆச்சரியப்பட்டு, அதை நினைத்துநினைத்து சிரித்தபடி மறுபிறவி பற்றி ஒரு நீண்ட மன ஓட்டத்தில் மூழ்கியிருப்பார் மஷாய். அவ்வப்போது மரணத்தை பற்றிய எண்ணங்களும் கடந்துவரும். அது ஒரு ஆவணி மாத பின்மதியம். கருமேகங்களால் சூழப்பட்ட, வானிலிருந்து துளித் துளியாக மழை விழத்தொடங்குகிற நேரம், நீளமாக வளர்ந்த தாடி மீசையுள்ள 70 வயதையுடைய ஜீவன் மஷாய் இடிந்து கிடக்கும் ஆரோக்கிய நிகேதனத்தின் முற்றத்தில், தன் தந்தை நட்டுவைத்த, இப்போதும் அதே பொலிவுடன் பூத்து நிற்கும் இரண்டு அரளிச்செடிகளை பார்த்துக்கொண்டு நிற்கிறார். “ செடிகளின் ஆயுள் மனிதனின் ஆயுளை விட எவ்வளவோ மடங்கு! ” நாவலில் ஜீவன் மஷாய் சித்தரிக்கப்பட்டிருப்பது கிட்டத்தட்ட இவ்வாறுதான். நாவல் என்ற இலக்கிய வகைமையை எடுத்துக்கொண்டால் வடிவ நோக்கில் முழுமை கொண்ட, நம்பகத்தன்மையான, கம்பீரமான வேறொரு சிறந்த உதாரணத்தை நம்மால் காண முடியாது.

ஜீவன் மஷாய் என்ற ஆளுமையின் கதையான ஆரோக்கிய நிகேதனம் இயல்பாகவே மனித மகத்துவத்தின் கதையாக ஆகிவிடுகிறது. பல்வேறு வகையில் ஜீவன் மஷாயின் கதாப்பாத்திரப்படைப்பு அசாதாரணமான ஒன்று.  எல்லா புகழ்பெற்ற நாவல்களிலும் வலுவான கதாப்பாத்திரங்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் எப்போதுமே நாவலின் வேறொரு நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டவர்கள், இன்னும் நுட்பமாகப் பார்த்தால், அவர்கள் நாவலின் இன்னொரு முழுமையான கதாப்பாத்திரத்தை சார்ந்தவர்கள். இயல்பாகவே, அம்மாதிரியான கதாப்பாத்திரங்களை முழுமையான உயிர்த்துடிப்பு கொண்டவர்கள் என்று சொல்லிவிடமுடியாது. ஒரு குறையாக இதை சொல்லவில்லை. இலக்கியங்களை ஒப்பிட்டு பார்க்கும்போது நம்மால் தெளிவாகவே காணமுடியும் தரவு என்ற அடிப்படையில்தான் இதை சொல்கிறேன். லே மிசிரபில்ஸ் நாவலில் உள்ள மெத்ரான் (ஏன் ஜீன்வல்ஜீன் கூட), கரமசோவ் சகோதரர்கள் நாவலில் ஃபாதர் ஸோசிமாவ் போன்றவர்கள் பாதி நம்பகத்தன்மை கொண்ட பாதி கதாபாத்திரங்கள் தான். ஆரோக்கிய நிகேதனம் நாவலில் ஜீவன் மஷாய் என்ற ஒரு சாத்வீகமான கதாப்பாத்திரத்தை உருவாக்கி, நாவலை முழுக்க அவரை மட்டுமே முழுமையாக சித்தரித்து,  அதை மைய இழையாகக்கொண்டு மற்ற சிக்கல் நிறைந்த பகுதிகளை இந்த மைய ஓட்டத்தில் இணையவிட்டு கிட்டத்தட்ட கங்கை நதியைப்போல தன் நாவலை தாராசங்கர் பானர்ஜி படைத்திருக்கிறார். இயல்பாகவே, நாவலின் ஒட்டுமொத்த இயல்பு என்பது இந்த மைய இழையின் இயல்பு என்னவோ அதுதான். அதனால், இந்த மைய இழையின் இயங்குமுறை என்னவோ அதைத்தான் நாம் நாவலின் பேசுபொருள் என எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த கட்டுரையில் ஒரு கதாபாத்திரம் என்ற நிலையில் ஜீவன் மஷாய் பற்றி ஆய்வு செய்வது என்னுடைய நோக்கம் அல்ல. ஆரோக்கிய நிகேதனத்தின் பேசுபொருளை பற்றி விவாதிக்கும்போது அது நேரடியாகவே ஜீவன் மஷாயைத்தான் சுட்டுகிறது என்றுதான் சொல்ல வருகிறேன்.  மனித மகத்துவம் என்ற ஆரோக்கிய நிகேதனத்தின் பேசு பொருளோடு தொடர்புடைய வேறு சில விஷயங்களையும்  சுட்டிக்காட்டப்பட வேண்டியிருக்கிறது.  முதலாவதாக, தன் கதையை நிறுவ நாவலாசிரியர் தேர்ந்தெடுத்த களம்.  ஒரு கிராமத்திலிருக்கும் சாதாரண மனிதர்களும் அவர்களின் வாழ்க்கையிலுள்ள அன்றாட விஷயங்களும் மட்டும்தான் இந்த நாவலில் இருக்கிறது.  அப்படிப்பட்ட ஒரு சூழலில் என்றும், எப்போதும் இருக்க சாத்தியமான ஒரு வைத்தியர் மட்டும்தான் ஜீவன் மஷாய்.  நாவலில் மஷாய் சம்பந்தப்பட்ட விஷயங்கள் யதார்த்தத்தை எந்த வகையிலும் மீறாதபடி தான் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.  சொந்த இயல்பை மீறி நாவலில் உள்ள எந்த கதாப்பாத்திரமும் பேசியதாக ஒரு உரையாடல் கூட இல்லை.

இந்த  பின்னணியில், ஜீவன் மஷாய் என்ற கதாபாத்திரத்திற்கு ஒரு பரிணாமத்தை ஏற்படுத்துவது மிகமிக சவாலான  விஷயம்.ஏனெனில் மோதல்(Conflict) வழியாக, நெருக்கடி(tension) வழியாக மட்டும்தான் ஒரு ஆழமான கதாபாத்திரம் உருவாக முடியும்.  அவ்வாறு மட்டும்தான் செறிவான பேசுபொருள் சரியான முறையில் நாவலில் வெளிப்பட முடியும், வேறு வழியில்லை. ஜீவன் மஷாய்க்கும் அந்த ஊர்ச்சூழலுக்கும் உள்ள முரண்பாடு (ஊர்க்காரர்களின் இயல்பான  சிறுமைக்கும் ஒரு வைத்தியருக்கும் இடையேயான முரண்பாடு )என்பது சாதாரண பூசல் அவ்வளவு தான். இந்த சின்ன முரண்பாட்டிலிருந்து அசாதாரணமான உணர்வுநிலைகளும், செறிவான பேசுபொருளும் வெளிவருவது என்பது சாத்தியமில்லாத காரியம். ஜீவன் மஷாய் போன்ற ஒரு பெரிய ஆளுமையை சிருஷ்டிக்க எப்படிப்பார்த்தாலும் இந்த ஊர் ஆட்களுடனான சில்லரைப்பூசல் என்பது சுத்தமாக உதவாது. அப்படியிருக்க, இந்த நாவலை வாசித்தபிறகு நாவலாசிரியர் தன் கலைத்தன்மையால் இந்த இக்கட்டை லாவகமாக கடந்துவிட்டிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.

இந்த நாவலின் கதைக்களமான கிராமத்தில் இருக்கும் மனிதர்கள் மிக யதார்த்தமான(realistic) சித்திரங்களில் விவரிக்கப்பட்டிருகிறார்கள். அந்த கிராமத்தின்  சூழலுடன் முழுமையாக இணங்கி அந்த மனிதர்களை நேசிக்கும் விதத்தில்தான் ஜீவன் மஷாய் சித்தரிக்கப்பட்டிருகிறார். அப்படியென்றால், மனிதனின் மகத்துவங்கள் வெளிப்பட அவசியமான  மோதல் (conflict) இந்த நாவலில் எங்கே இருக்கிறது? யாருடனானது அந்த மோதல்(conflict)? உடனே நம் மனதில் நாம் வாசித்த துன்பவியல் நாடகங்களில்(Classical Tragedy) உள்ள  வீரநாயகர்கள் நினைவுக்கு வருவார்கள். இந்த நாவலில் ஜீவன் மஷாயின் எதிர்கொள்ளும் மோதல்(conflict) என்பது தனக்குள்ளேயே உள்ள மோதல். அதை ஆன்மிகமான முழுமைக்காக துடிக்கும் உயிரும், அந்த உயிர் எதிர்கொள்ளும் வாழ்க்கைக்கும் இடையேயான மோதல் என்று சொல்லலாம்.

மஷாயுடைய ஆளுமையின் உள்ளார்ந்த இயல்புகளை வைத்துதான் அவருக்கான குருக்ஷேத்ரம் போன்ற மோதல் களத்தை நாவலாசிரியர் புனைந்திருக்கிறார். மஷாயின் இயல்பான மனநிலை(ஸ்தாயிஃபாவம்), வாழ்க்கை அவரில் ஏற்படுத்திய மனநிலைகள்  இவை இரண்டிற்குமான கொந்தளிப்பான மோதலின் வழியாகத்தான் மஷாய் என்ற ஆளுமையின் மகத்துவத்தை புடம்போட்டு காட்டியிருக்கிறார் நாவலாசிரியர். இந்த நாவலில், மஷாய்க்கு புறச்சூழல் ஏற்படுத்தும் அழுத்தம் என்பது ஒரு நிமித்தம்தான்.  புறச்சூழல் ஏற்படுத்தும் அழுத்தத்தை பெரிய,ஆற்றல்கொண்ட ஏதோ ஒன்றை இயக்கவைக்கும் ஸ்விட்ச்(switch) என்று சொல்லலாம். இந்த நாவலை வாசிக்கும்போது துன்பவியல் நாடகங்களின்(Classic Tragedy) வீரநாயகர்களில் வெளிப்பட்ட மோதலைப்போல, அவற்றில் வெளிப்பட்ட மோதலின் அளவுக்கு இந்த நாவலில் மோதல்(Conflict) வெளிப்படவில்லை என்று நமக்குத் தோன்றும். அதற்கான காரணத்தை பார்க்கலாம்.

துன்பவியல் ஆக்கங்களின்(Classical Tragedies) வீர நாயகர்கள் என்பவர்கள் நூற்றாண்டுகளாக திரண்டு வந்த கற்பனையின் வீச்சில் தோன்றியவர்கள்தான். ஜீவன் மஷாய் 1957ம் ஆண்டில் வங்காளத்தில் ஒரு கிராமத்தில் வாழ்கிறார் (தான் வாழ்கிறோம் என்று நூறு சதவிகதம் உறுதியுடன் நம்புகிறார்). வைத்தியம் என்பது அவரது தொழில். யதார்த்தவாதத்தின்(realism) ஒரு விதியைக்கூட மீறாமல், கதாப்பாத்திரங்களின், சூழலின் நம்பகத்தன்மையை குலைக்காமல் நாவல் எழுதப்பட்டிருக்கிறது. இம்மாதிரி நாவலில் துன்பவியல் நாடகங்கள்(Classic Tragedies) அளவுக்கு மோதல் கொண்ட ஒரு களத்தை அமைப்பது சாத்தியமில்லை. துன்பவியல் ஆக்கங்களின்(Classical tragedy) காலம் முடிந்துவிட்டது. நவீன இலக்கியத்தைப் பொறுத்தவரை வீரநாயகர்களின் கொந்தளிப்பான மோதல்கள் என்பவை மகத்தான துயரத்தை ஏற்படுத்தாமல் கீழ்நிலையில் உள்ள பகடியைத்தான் வாசகனில் ஏற்படுத்துகின்றன. நவீன யுகத்தின் பெரிய அவலம் இதுதான் என்று விளக்கும் நவீன இலக்கிய விமர்சகர்கள் இருக்கிறார்கள். இந்த பின்னணியில், 1957ல் நடக்கும் கதையாக எழுதப்பட்ட ஒரு நாவலின் கதாநாயகன்தான் ஜீவன் மஷாய். அப்படித்தான் நாம் இந்த நாவலை மதிப்பிட வேண்டும். இப்படிப்பட்ட ஒரு நாவலில், துன்பவியல் நாடகங்களில்  (Classic Tragedies) உள்ள வீரநாயகர்களின் நினைவை நம்மில் ஏற்படுத்தும் அளவுக்கு ஒரு பேசுபொருளையும் ஒரு கதாநாயகனையும் உருவாக்குவது என்பது எளிதான விஷயமில்லை.

ஜீவன் மஷாயுடைய ஆன்மாவின் இயல்பான மனநிலையான சஞ்சலம் அல்லது அமைதியின்மை என்பது என்ன? அந்த அமைதியின்மை எந்த வடிவில் வெளிப்படுகிறது? அவரிலிருக்கும் கடல் அளவுக்கு பரந்த பரிவுணர்வு முழுவதையும் வற்ற வைத்து, அங்கு கண்ணீரின் உப்பை நிரப்பிய அந்த துயரம் என்பது என்ன? எளிமையான மனம் கொண்ட மஷாய்க்கு சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்கள்தான்  அமைதியின்மையையும், துயரத்தையும் ஏற்படுத்தின என்று சொல்லலாமா? மேலோட்டமாகப் பார்த்தால் அப்படி தோன்றலாம். ஆனால் அப்படி சொல்லிவிடமுடியுமா என்ன? புகழ்பெற்ற, செல்வந்தரான ஜகத் மஷாயின் மகனாக நல்ல உருவ அமைப்பு, ஆரோக்கியம், அறிவாற்றல் போன்றவற்றோடு பிறந்த ஜீவன் தத்த மஷாய்க்கு ஏன் இந்த நிறைவின்மை? சாரமற்றவள் என்று பின்பு தான் உணர்ந்துகொள்ளும் ஒரு பெண்ணில் முதிரா இளமையில் ஏற்பட்ட ஈர்ப்பு ஜீவன் மஷாய் போன்ற ஆளுமையில் ஏன் என்றென்றைக்குமான நிறைவின்மையை உருவாக்கியது?

ஒன்று உறுதி. அதை ஊழ் என்றுதான் சொல்ல முடியும். இந்த நாவலில்  ஆத்தர் பௌ, பிரத்யோத்போஸ் போன்றவர்களை நிமித்தங்கள் என்று சொல்லலாம். முத்து உயிர்கொள்ள சிப்பிக்குள் தூசி நுழையவேண்டும் என்பதுபோல ஒரு நிமித்தம் அவசியம். ஆனால், இவையெல்லாம் மஷாய் போன்ற  பெரிய ஆளுமையின்  அமைதியின்மைக்கும், மகத்தான துயரத்திற்கும், பொருளின்மைக்கும் போதுமான விளக்கங்கள் இல்லை. கணவனை வேதனைக்கு உள்ளாக்குவது என்பதற்கும் அப்பால் தன்னைத்தானே வதைத்துக்கொள்ளும் ஆத்தர் பௌ மீது மஷாய்க்கு அவ்வளவு  பரிவுணர்வு! ஒட்டுமொத்தமாக, மஷாயின் மனதில் அவள் மேல் தன் இதயம் நோகும் அளவுக்கு பரிவுணர்வுதான் இருக்கிறது. “ நீ என் வாழ்க்கையின் நிழல். நான் போன பின்புதான் நீ மறைவாய்”. ஆத்தர் பௌ என்பது மஷாயின் வாழ்க்கையை பின் தொடரும் மரணமா? ”இல்லை, அவள் மரணத்தின் நிமித்தமான நோய் மட்டும்தான். மரணம் மஞ்சரி ” என்ற மஷாயின் கிண்டல் கலந்த மனஓட்டம் நாவலை ஆழமாக வாசிப்பவர்களின் சிந்தனையை, கற்பனையை எங்கெங்கோ இட்டுச்செல்லும். ஜீவன் மஷாயின் துயர் என்பது மகத்துவங்களுக்கு இயல்பாகவே உள்ள துயர்(tragedy).

மகத்துவங்களை துலங்க வைக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட இழைகள் இந்த நாவலின் கதாப்பாத்திரப்பரப்பில் இருக்கின்றன. அவற்றை ஒப்பிட்டுப்பார்க்கலாம். முதல் ஆள், ஜகத் மஷாய். அறிவும், பரிவுணர்வும், நிமிர்வும் கொண்ட லட்சிய வடிவம்தான் ஜகத் மஷாய். அவர் அதிமானுடர். ஆனால் நடைமுறை வாழ்க்கையின் சிக்கல்கள் அனுமதிக்கும் எல்லைவரைதான் அந்த அதிமானுடத்துவம் வெளிப்பட முடியும். நேரெதிராக, வேறு ஒரு சிறந்த குணாதிசயத்தின் பிரதிநிதியான கதாப்பாத்திரம்தான் ரங்க்லால் டாக்டர். அவர் ஒரு அசாதாரணமான கதாப்பாத்திரம். சாத்வீகமான  மனம், நீதியுணர்வு, பரிவுணர்வு என்ற மூன்று நேர்நிலையான குணநலன்கள் எந்தவகையிலும் தீண்டாத விசித்திரமான ஆளுமை. இரண்டு ரூபாய் ஃபீஸ் தேவைப்படும் இடத்தில் ஒரு ரூபாய் மட்டுமே இருக்கும் ஒரு நோயாளி வேதனையில் துடித்து அலறும்போதும் ” போய் இன்னும் ஒரு ரூபாய் சேர்த்துக்கொண்டு வா! திருடா! நீ செத்து போகவெல்லாம் மாட்டாய்” என்று இரக்கமே இல்லாமல் ரங்கலால் சொல்வார். பாலியல் சார்ந்த நோய்கள் பற்றிய விவரங்களை வெளிப்படையாகச் சொல்ல தயங்கும் நோயாளிகளை திட்டித் தீர்த்துவிடுவார். ஆனால், தனக்கு என்று ஒரு நீதித்தொகுப்பும் அசாதாரணமான விழைவும் மேதைமையும் உள்ள ஆள்தான் ரங்கலால். தன் இயல்புகள், மேதைமை,அகச்சான்று  போன்றவற்றுடன் உண்மையாக, மற்ற விஷயங்களை கவனிக்காத ஆளுமைகள் மகத்துவத்தை சூடிக்கொள்கிறார்கள். அதுதான் ரங்கலால். அதாவது, ஜகத் மஷாயின் நேரெதிரான எல்லையில் உள்ள மகத்துவத்துவம் தான் ரங்கலால்.

நாவலில் இந்த பெரிய கதாப்பாத்திரங்கள் போக சர்வ சாதாரணமான தன் அன்றாட வாழ்க்கையை வழியாக மகத்துவத்தின் மகரந்தங்கள் நிறைந்த மற்ற பல கதாப்பாத்திரங்கள் இந்த நாவலில் இருக்கிறார்கள். வரையறுக்கப்பட்ட வாழ்க்கைச் சூழல்களில், தன்னறம் என தாங்கள் நினைக்கும் வேலையை எந்த சஞ்சலமும் இல்லாமல் உறுதியுடன் செய்பவர்கள். அவர்களுடைய வாழ்க்கையும், சிந்தனையும், செயல்பாடுகளும் சாதாரணமானவை. பல சமயம் பண்படாதவை அல்லது  தன்னிச்சையானவை. ஆனால் மகத்துவத்தால் ஈர்க்கப்பட்டு நன்மையின் உதாரணங்களாக ஆகிவிடுகிறார்கள். இதை சொல்லும்போது என் மனதில் தோன்றுவது 1947ல் அரசியல் செயல்பாடுகளை நிறுத்திவிட்டு ஹோமியோபதி மருத்தவத்திற்காக, ஊர்க்காரியங்களுக்காக உழைத்து, தான் எதிர்கொள்ளும் ஒவ்வொருவரின் மனதையும் கவரும் தன்மைகொண்ட கிஷோர் போன்ற கதாப்பாத்திரம் அல்ல. தன் கணவனின் மரணத்தை முன்கூட்டியே உணர்ந்து தன்னிடம் கருணைகாட்ட முன்வரும் மஷாயை தவறாகப்புரிந்துகொண்டு, அவரை சாபம் இட்டு, அந்த சாபம் நிறைவேறிவிட்டது என்று எண்ணி மஷாய்க்காக மிகவும்  பரிதாபப்பட்டு தவிக்கும் உடன்கட்டை ஏறிய அபயா போன்ற கதாப்பாத்திரத்தைத் தான் நான் உத்தேசிக்கிறேன். ஒழுங்கங்கள் அற்ற, தான்தோன்றியான  ரானாபடக் போன்ற கதாப்பாத்திரம்கூட  சஞ்சலமே இல்லாத சுயநிமிர்வுடன் ஒருமாதிரி லட்சியவாத பிடிப்பு உள்ள ஆளுமையாகத்தான் நம்முன்னே வருகிறார். இனியும் இந்த கதாப்பாத்திரங்களின் பட்டியலை நீட்டலாம். ஆனால், ஆரோக்கிய நிகேதனத்தின் பேசுபொருள் மனிதமகத்துவம்தான் என்றும் அந்த பேசுபொருளை திட்டவட்டமாக வடிவில், எல்லா கோணங்களிலும் காண்பிக்க நாவலாசிரியரால் முடிந்திருக்கிறது என்ற கருத்தை நிறுவ மேலும் மேலும் உதாரணங்களை அடுக்குவது அவசியமேயில்லை.

மகத்துவத்தின் அடிப்படையான கூறு என்ன என்று கேட்டால் அதை ‘நன்மை’ என்றுதான் சொல்ல முடியும். ஒரு கதாப்பாத்திரம் மகத்துவத்தை அடைகிறது என்றால், ஏதோ ஒரு வாழ்க்கைத் தருணத்தின்  அசாதாரணத்துவம் வழியாக மேன்மையை அடைவது என்பது ஒரு வழிமுறை. அவ்வாறு அல்லாமல், ஒரு ஆளுமையின் இயல்பிலேயே, அதாவது அவனது  தனிவாழ்க்கையில் தன்னிச்சையாகவே மகத்துவம் வெளிப்படும் என்றால், அது ஒரு ஒளிவட்டம்போல அந்த ஆளுமையின் தலையை அலங்கரிக்கும். இங்கே நன்மை என்பது மகத்துவத்தின் சர்வசாதாரணமான அடிப்படைக்கூறாக ஆகிவிடுகிறது. இந்த நன்மை ஆரோக்கிய நிகேதனம் நாவல் காட்டும் வாழ்க்கைச்சித்திரத்தில் தாராளமாகவே இருக்கிறது. ஒருவகையில் பார்த்தால், எல்லா கதாப்பாத்திரங்களின் வழியாகவும்  நன்மையை கொண்டாடும், நன்மையை வழிபடும் ஒரு நாவல்தான் ஆரோக்கிய நிகேதனம். வெவ்வேறு வகையான மனித ஆளுமைகளை நன்மையின் ஒற்றை சரடில் இணைத்திருக்கும் ஒரு நாவல் என்று சொல்லும்போது படைப்பூக்கம் துளியும் இல்லாத நீதிநெறித்கதை என்று தவறாக புரிந்துகொள்ள வேண்டாம். பார்வைக்கோணத்தின் மந்திரக்கோலை வைத்துதான்  இந்த வித்தையை நாவலாசிரியர் சாதித்திருக்கிறார். பார்வைக்கோணத்தின் அசாதாரணத்தன்மையின் காரணத்தால் அன்றாட வழ்க்கையின் மிகச் சாதாரணமான அம்சங்கள்கூட அசாதாரணமான உணர்வுநிலைகளை வெளிப்படுத்துகின்றன. இந்த நாவலில் ராணா பாடக், ராமஹரி, சசி, தந்துகோஷால் போன்ற கதாப்பாத்திரங்கள் வேறு எந்த நாவலில் வந்திருந்தாலும் வாசகனில் வெறுப்பையும் அருவருப்பையும்தான்  ஏற்படுத்தியிருப்பார்கள். கிட்டத்தட்ட வாசகன் தன் சொந்த வாழ்க்கையில் அம்மாதிரியான ஆட்களை எதிர்கொள்ளும்போது என்ன அனுபவத்தை அடைவானோ அதேபோல. ஆனால், ஒரு பெண்ணுடனான முறைமீறிய உறவில் காசநோயை பெற்றுக்கொள்ளும்  தான்தோன்றியான  ராணாபாடக் ஒரு இலட்சியவாதத்தின் பீடத்தில்தான் நிற்கிறான். நாவலுக்கு தீவரத்தையும், உணர்ச்சிகரத்தையும் ஏற்படுத்த கதாப்பாத்திரங்களுக்கு நோய்க்கூறுகளை திட்டமிட்டு உருவாக்கி, அந்த நோய்மைகளை வெளிச்சம்போட்டு காட்டும் நாவல்களை(கலைத்திறமைகளை) எளிதாக எங்கு காணமுடியும்.

அழகிய மணவாளன்

அம்மாதிரியான நாவல்களில் ஆர்வம் உள்ள வாசகர்களுக்கு ஆரோக்கிய நிகேதனம் நாவல் கதாப்பாத்திரங்களை கையாளும் முறை  கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்று தோன்றாது. கவனித்தாலும்கூட அவர்களை அது கவராது. தன் சொந்த இயல்புகளுக்கும், விழைவுகளுக்கும், விதிக்கும் கீழ்ப்பட்ட கைவிடப்பட்டவனும், பலவீனமானவனும், நேசிக்கப்பட வேண்டியவனும் தான் மனிதன்  என்ற கருதுகோளை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கைப் பார்வையில் சிபிலிஸ்(Syphilis) போன்ற பால்வினை நோய்வாய்ப்பட்டவர்கள் நம் எண்ணத்திற்கும், பரிவுணர்ச்சிக்கும் முன் இன்னும் பெரிய கையை நீட்டியவர்களாக, நம்மிடம் மேலும் இரப்பை பெறுபவர்களாக ஆகிவிடுகிறார்கள். பேசுபொருளின் நிமிர்வும் வடிவத்தின் நிமிர்வும் ஒன்றாக ஆகிய உயித்துடிப்புள்ள இந்த நாவல் விவாதிப்பதற்கு எண்ணற்ற சாத்தியங்கள் கொண்ட ஆக்கம்.

தமிழாக்கம்  அழகிய மணவாளன்

தாரா சங்கர் பானர்ஜியின் ‘ஆரோக்கிய நிகேதனம்’

ஆரோக்கிய நிகேதனத்தின் கண்ணீர்

ஆரோக்கிய நிகேதனம், வனவாசி -கடிதங்கள்

முந்தைய கட்டுரைபுதிய எழுத்தாளர்களுக்கு…
அடுத்த கட்டுரைஅரசன் ராமாயணம் தொடக்கம்