ஸ்ரீநிவாச கோபாலன் – பேட்டி

[2021 ஆம் ஆண்டுக்கான முகம் விருது பெறும் ஸ்ரீநிவாச கோபாலன் அவர்களுடன் ஒரு பேட்டி]

முகம் விருது,ஸ்ரீனிவாச கோபாலனுக்கு

ஶ்ரீநிவாச கோபாலன் திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை அருகே உள்ள கீழநத்தம் எனும் கிராமத்தில் மே14, 1994-இல் வேதாந்த தேசிகன் மற்றும் ரெங்கநாயகி தம்பதிக்கு இரட்டையரில் முதல்வனாகப் பிறந்தார். மின்னணு ஊடகவியல் துறையில் முதுநிலை பட்டம் பெற்று பெங்களூரில் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ குழுமத்தில் நான்கு ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். 2017ஆம் ஆண்டு ‘அழிசி’ (Azhisi eBooks) என்ற மின்னூல் பதிப்பகத்தை தொடங்கி நடத்திவருகிறார். நாட்டுடைமையான நூல்களையும் அச்சில் இல்லாத முக்கியமான நூல்களையும் தேடிக் கண்டடைந்து மின்புத்தகமாக வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். அவற்றை இலவசமாகவும் மிகக் குறைந்த விலையிலும் அளித்துவருகிறார். இதுவரை ஐநூறுக்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்துள்ளார். மாறிவரும் மின்னூல் வாசிப்புச் சூழலைச் சரியாகக் கணித்து பெருவாரியான வாசகர்களை மின்னூல்களை வாசிக்கத் தூண்டும் தளம் ஒன்றை ஏற்படுத்தியிருக்கிறார். இந்த ஆண்டுக்கான குக்கூ குழந்தைகள் வெளி அமைப்பின் ‘முகம்’ விருது ஶ்ரீநிவாச கோபாலனுக்கு வழங்கப்படவிருக்கிறது. அதனை முன்னிட்டு அவருடைய இல்லத்தில் நிகழ்த்திய நேர்காணல்.

அழிசிஎன்று உங்களுடைய பதிப்பகத்திற்குப் பெயர் வைத்திருக்கிறீர்கள். உச்சரிக்கவே இனிமையாக உள்ளதே. அதற்கு ஏதாவது பின்புலம் இருக்கிறதா?

சங்கப் புலவரான ‘கொல்லன் அழிசி’ என்பவரின் பெயர் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. குறுந்தொகையில் அவரது நான்கு பாடல்கள் உள்ளன. அதில் ‘கொன்னூர் துஞ்சினும் யாந்துஞ் சலமே…’ எனத் தொடங்கும் பாடல் அறிமுகமான போது அந்தப் பாட்டுடன் அதன் ஆசிரியரும் எனக்கு நெருக்கமானார். ‘அழிசி’ என்ற பெயரைச் சொல்லிக் கொண்டே, கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்றொரு கிறுக்குத்தனம். தமிழினி வெளியிட்ட‘தேவதேவன் கவிதைகள்’ பெருந்தொகுப்பைப் படித்தபோது ஒரு வருஷத்துக்கு “தேவதேவன்… தேவதேவன்…” என்று சொல்லிக்கொண்டே திரிந்தேன். கூட இருப்பவர்களையும் சொல்லச் சொல்லி பதிவு செய்து மீண்டும் மீண்டும் கேட்பேன். அப்படித்தான் ‘அழிசி’ என்ற பெயரும் மீண்டும் மீண்டும் என் காதுகளில் ஒலிக்க வேண்டும் என்று நினைத்தேன். நம்மாழ்வாருக்கு பெருமாளின் பெயர் ‘செவிக்கினிய செஞ்சொல்லாக’ இருந்ததைப் போல எனக்கு ‘அழிசி’ என்ற பெயர் இருந்தது. அந்தப் பெயரைத் திரும்பத்திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கலாம் என்பதற்காக ‘அழிசி இலக்கிய வானொலி’ ஆரம்பித்தேன். கொஞ்ச காலத்துக்கு மேல் அதைத் தொடரவில்லை. பிறகு ஒருநாள் நெடுஞ்சாலையோரத்தில் திரிந்து கொண்டிருந்த ஒரு நாய்க்குட்டியை வீட்டுக்குத் தூக்கிவந்தேன். அதற்கு ‘அழிசி’ என்று பெயரிட்டேன். இப்போது வீட்டில் தினமும் “அழிசி…” என்ற அழைப்பு கேட்கத் தொடங்கிவிட்டது. அழிசி வீட்டுக்கு வந்த அடுத்த மாதத்தில்தான் என் பதிப்புப்பணியை ஆரம்பித்தேன். வெளியிடும் மின்னூல்களைப் பற்றிப் பகிர்வதற்காக சமூக வலைத்தள பக்கங்களை உருவாக்கும்போது, அவற்றுக்கும் ‘அழிசி’ பெயரையே வைத்தேன்.

உங்களுக்கு இலக்கியத்தின் மீதான அறிமுகம் எப்போது?

நான் புத்தகங்களை ஆர்வமாகத் தேடி வாசித்தது கல்லூரி காலகட்டத்திலிருந்து தான். சிறுபிராயத்தில் பத்திரிகைகளில் வந்த கதைகள், குறிப்பாக மூன்று நான்கு பக்கங்களுக்குள் ஒரே இதழிலேயே முடிந்துவிடக்கூடிய படக் கதைகளை சிறுவர்மலர், சிறுவர் மணி, கோகுலம் போன்றவற்றில் வாசித்திருக்கிறேன். திருச்சியில் கல்லூரிப் படிப்புக்குச் சென்றபோது அந்தச் சூழல் எனக்குப் பிடிக்கவில்லை. யாருமே இல்லாத இடத்திற்குள் சென்று ஒளிந்துகொள்ள ஒரு இடம் தேவைப்பட்டது. நூலகமே அந்த இடத்தை வழங்கியது.

பள்ளிகாலத்திலிருந்தே எனக்குத் தமிழ்ச் செய்யுள் பகுதியின் மீது ஆர்வம் உண்டு. சுவாரஸ்யமாகச் செய்யுள்களை விளக்கிய என் தமிழாசிரியர்கள்தான் அதற்குக் காரணம். எனக்குத் தெரிந்த பழந்தமிழ் நூல்கள் பற்றி மேலும் அறிந்துகொள்ளும் முயற்சியாகத்தான் நூல்களைத் தேர்ந்தெடுத்தேன். புலியூர் கேசிகன் முதலியவர்கள் எழுதிய சங்க இலக்கியங்களின் உரை நூல்களைப் படிக்க ஆரம்பித்தேன். அப்போது வாசித்த மயிலை சீனி. வேங்கடசாமியின் ‘மறைந்துபோன தமிழ் நூல்கள்’ இன்றும் எனக்குப் பிடித்த நூல்களில் ஒன்று. செய்யுளை பொருள் கொள்ளும்போது அடையும் பரவசம் என்னைத் தொடர்ந்து வாசிக்க வைத்தது.

பின், கல்கி, நா.பார்த்தசாரதி, சாண்டில்யன், ஜெகசிற்பியன், பாலகுமாரன், ஜெயகாந்தன், தி. ஜானகிராமன், சுந்தர ராமசாமி, ஜெயமோகன் ஆகியோரை வாசித்தேன். பட்ட மேற்படிப்புக்காக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தபோது அங்கிருந்த நூலகத்தை அதிகம் பயன்படுத்தினேன். ஓர் இலக்கிய வாசகன் விரும்பிய அனைத்தையும் படித்துவிடமுடியும் அளவுக்குச் சிறப்பான நூல் சேகரம் அங்கே உண்டு.

அழிசி பதிப்பகம் உருவான கதையைக் கொஞ்சம் சொல்லுங்களேன்?

2017 மார்ச் மாதம் கிண்டிலில் மின்னூல்கள் வெளியிட ஆரம்பித்தேன். அதற்கு முன்பு வரை பழைய புத்தகங்களைத் தேடிக் கண்டடைந்து பதிப்பிக்க வேண்டும் என்ற ஈடுபாடு இல்லை. ஒரு வாசகனாக முதல் பதிப்புகளை வாசிக்க எப்போதும் விரும்புவேன். நூலகங்களில் இதுபோன்ற புத்தகங்களை வாசித்தால் இனிமேல் இதை லேசில் காண இயலாது என்று தோன்றும் போது அதை செல்போனிலேயே நகல் எடுத்து வைத்துக்கொள்வேன். இப்படி அரிய முதல் பதிப்புகள் கிடைத்தால் உற்சாகத்துடன் வாசிப்பதும், பிடித்திருந்தால் ஸ்கேன் செய்து வைப்பதுமாக இருந்தேன். பதிப்பிக்க வேண்டும் என்ற எண்ணம் 2017க்கு முன் இல்லை. ஆனால் என் இந்தப் பழக்கம் பின்னால் எனக்கு உதவியிருக்கிறது.

எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் நான் இந்த வேலையைத் தொடங்கும் முன்பே பல எழுத்தாளர்களை கிண்டிலில் மின்னூல்கள் வெளியிட ஊக்குவித்து உதவிக்கொண்டிருந்தார். அவரது தூண்டுதலால் விக்ரமாதித்யன், பிரம்மராஜன், வண்ணநிலவன், சமயவேல், சி. மோகன், ரவிக்குமார் முதலிய பல முக்கியமான எழுத்தாளர்களின் நூல்கள் கிண்டிலுக்கு வந்திருக்கின்றன. அவர் மூலம்தான் கிண்டிலில் புத்தகங்கள் வெளியிடும் வாய்ப்பு உள்ளதை அறிந்தேன். வேலை நேரம் போக மற்ற நேரத்தில் நாட்டுடைமையான நூல்களை மின்னூலாகத் தயாரித்துப் பதிவேற்றத் தொடங்கினேன்.

நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள் பெரும்பாலும் இணையத்திலேயே PDF வடிவில் கிடைக்கின்றன. ஆனால், நாட்டுடைமையானபோதும் க. நா. சுப்ரமண்யம், தி. ஜ. ரங்கநாதன் முதலிய எழுத்தாளர்களின் நூல்கள் PDF வடிவில் இல்லை. இவர்களைப் போன்ற எழுத்தாளர்களின் நூல்கள் எனக்குக் கிடைக்கும்போதெல்லாம் எனக்குப் பழக்கமான முறையில் ஸ்கேன் செய்து, கூகுள் தொழில்நுட்ப உதவியுடன் அவற்றை யூனிகோட் எழுத்துக்களாக மாற்றுவேன். பின் மெய்ப்பு நோக்கி, பக்க ஒழுங்கு செய்து, அட்டைப்படமும் தயாரித்து பதிவேற்றுவேன்.

நீங்கள் வெளியிடும் நூல்கள் தவிர இப்போது எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்களுக்கும் கிண்டிலில் புத்தகங்களை வெளியிட உதவுகிறீர்கள் இல்லையா?

ஆமாம். அதை எனக்குக் கிடைத்த நல்வாய்ப்பாகக் கருதுகிறேன்.ஆரம்பத்தில்எழுத்தாளர் விமலாதித்த மாமல்லனுடன் இணைந்து சில ஆசிரியர்களின் மின்னூலாக்கத்தில் உதவியிருக்கிறேன். பின்எழுத்தாளர்கள் தேவதேவன், அ. முத்துலிங்கம்,சுரேஷ்குமார இந்திரஜித், க. மோகனரங்கன், எம். கோபாலகிருஷ்ணன், பாவண்ணன், கண்மணி குணசேகரன், பாரதிமணி, க. கலாமோகன்,சுரேஷ் பிரதீப், சுனில் கிருஷ்ணன், கே. என். செந்தில், அரிசங்கர், ம. நவீன், செல்வேந்திரன், ஜான் சுந்தர், வேணு வெட்ராயன், பவுத்த அய்யனார் ஆகியோரின் படைப்புகளை கிண்டிலில் வெளியிடுவதில் பங்காற்றிருக்கிறேன். எழுத்தாளர்கள் என். சொக்கன், வானதி ஆகியோரின் நூல்களுக்கு அட்டைப் படங்கள் மட்டும் செய்கிறேன்.

அந்தந்த எழுத்தாளர்களின் பெயரிலேயே ஒரு கணக்கு தொடங்கி, புத்தகங்களைப் பதிவேற்றுவேன். இப்படிச் செய்வதால் மாதாமாதம் ராயல்டி நேரடியாக எழுத்தாளரின் வங்கிக் கணக்குச் சென்றுவிடும். நானாக என் விருப்பத்தின் பேரில் வெளியிடும் நூல்களைவிட இப்போது எழுதிக்கொண்டிருக்கும் ஆசிரியர்களின் மின்னூல்கள் வெளியாவதில் பங்காற்றுவதையே முக்கியமாகக் கருதுகிறேன். அதற்கே முன்னுரிமை தருகிறேன்.

சமூக வலைத்தளங்கள் மூலம் மின்னூல்களைப் பரவலாக்கும் முயற்சியையும் செய்துகொண்டிருக்கிறீர்கள். ‘அழிசி’ என்ற தளத்தையும் நடத்துகிறீர்கள். இவை பற்றிச் சொல்லுங்கள்.

புத்தகங்களை வெளியிடுவதைப் பொருத்தவரை நூல்களின் தட்டச்சுப் பிரதியை உருவாக்குவது, மெய்ப்பு நோக்குவது, அட்டைப்படம் வடிவமைப்பது போன்ற வேலைகளைச் செய்கிறேன். சமூக வலைத்தளங்களில் புதிய புத்தகங்கள், சலுகை விலையில் கிடைக்கும் புத்தகங்கள், இலவச நூல்கள் என கிண்டிலில் வாசிப்பவர்களுக்கு பயன்படக்கூடிய தகவல்களைப் பகிர்கிறேன்.

‘அழிசி’ இணையதளத்தில், நான் வெளியிடும் நூல்களிலிருந்து சில பகுதிகளைப் பதிவிடுகிறேன். ‘எழுத்தாளர்களும் மின்னூல்களும்’ என்ற ஒரு தொகுப்பை உருவாக்கியிருக்கிறேன். அதில் உள்ள ஒவ்வொரு எழுத்தாளரின் மின்னூல்களையும் பெறுவதற்கான இணைப்பைத் தந்திருக்கிறேன். நூற்றுக்கு மேற்பட்ட எழுத்தாளர்களின் மின்னூல்களுக்கான சுட்டிகள் அந்தத் தொகுப்பில் உள்ளன.

கிண்டிலில் புத்தகங்கள் தொடர்ந்து விற்பனையாக எழுத்தாளர்கள் வாசகர்களுடன் சமூக வலைத்தளங்களில் தொடர்பில் இருக்கவேண்டும். அவ்வப்போது தங்கள் நூல்களின் சுட்டிகளைப் பகிர்வது, வாசகர் எதிர்வினைகளைப் பகிர்வது போன்றவை அந்த நூல்களை மற்ற வாசகர்களிடம் கவனப்படுத்தும். பெரும்பாலான எழுத்தாளர்கள் இதைச் செய்யத் தயங்குகிறார்கள். நான் சமூக வலைத்தளப் பக்கங்களில் வெவ்வேறு எழுத்தாளர்களின் நூல்களை அவ்வப்போது பகிர்ந்துகொண்டே இருக்கிறேன். இல்லாவிட்டால் அமேசானில் உள்ள லட்சக்கணக்கான நூல்களில் சில நூல்கள் இருப்பதே தெரியாமல் இருந்துகொண்டிருக்கும். சில மாதங்களுக்கு முன் எழுத்தாளர் பா. ராகவனின் ‘யானி: ஒரு கனவின் கதை’ என்ற நூலின் சுட்டியைப் பகிர்ந்தேன். பலர் இப்படி ஒரு நூல் இருக்கிறது என்பதையே அப்போதுதான் அறிந்துகொண்டதாகவும் எப்போது எழுதினீர்கள் என்று விசாரித்ததாகவும் பா. ரா. கூறியிருக்கிறார்.

புத்தகங்களைத் தொட்டு, பக்கங்களைப் புரட்டி வாசிப்பதையே விரும்பும்வாசகர்கள் மின்னூல்களை நோக்கி நகர்ந்துவிட்டதாக நினைக்கிறீர்களா?

மெல்ல நகர்ந்துகொண்டிருக்கிறார்கள். தொடர்ந்து மின்னூல்களை வாசிப்பவர்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டிருக்கிறது. மின்னூல்களை விரும்பி வாசிக்கும் சிலவாசகர் குழுக்களும் உருவாகியுள்ளன. பல எழுத்தாளர்களும் தங்கள் புத்தகங்களை கிண்டிலில் வெளியிட முன்வருகிறார்கள். பதிப்பகங்கள் மூலமும் நூற்றுக்கணக்கான நல்ல நூல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. சில எழுத்தாளர்கள் அச்சு நூல்களை பதிப்பகங்கள் மூலமாக வெளியிட்டுவிட்டு, மின்னூல்களை மட்டும் தாமே வெளியிடுகிறார்கள். அண்மையில் எழுத்தாளர் என். சொக்கன் இனி தன் நூல்கள் அனைத்தும் முதலில் மின்னூலாகத்தான் வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார். இது வாசகர்கள் மின்னூல்களை ஏற்கும் இடத்திற்கு நகர்ந்திருப்பதால்தானே.

எழுத்தாளர் சி.மோகன் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாட்களில் தனது புத்தகங்கள் அனைத்தையும் இலவசமாகக் கொடுத்தார். ஒரே நாளில் ஆயிரக்கணக்கான வாசகர்கள் அவற்றை பதிவிறக்கம் செய்து வாசிக்கிறார்கள். தொடர்ந்து வாசக எதிர்வினைகள் வருகின்றன. நண்பர் முத்து பிரகாஷ் ‘வானதி’ என்ற பெயரில் பல முக்கியமான நூல்களை மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறார். அனைத்தும் கிண்டிலில் மட்டுமே கிடைக்கும். இருந்தாலும் அவரது மொழியாக்கங்களுக்கு நிறைய வாசகர்கள் இருக்கிறார்கள். சிறப்பாக நூல்களைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்க்கிறார். விரைவில் அச்சிலும் அவரது நூல்கள் வெளியாகவுள்ளன. இனி மின்னூல்களை மட்டுமே படிப்பது என்று முடிவெடுத்தவர்கள்கூட இருக்கிறார்கள். சில பதிப்பகங்களும் அச்சு நூல் வெளியாகும்போதே மின்னூலையும் வெளியிட ஆரம்பித்துள்ளன. கிண்டிலில் மட்டுமே கிடைக்கும் நூல்களையும் வெளியிட்டுள்ளன. சில பதிப்பகங்கள் ஒருசில நூல்களை முதலில் கிண்டிலில் வெளியிட்டு பின்னர் அச்சில் கொண்டுவந்திருக்கின்றன. இவையெல்லாம் வாசகர்கள் மத்தியில் மின்னூல்களுக்கு குறிப்பிடத்தக்க அளவு வரவேற்பு கூடியிருப்பதையே காட்டுகின்றன.

எதிர்காலத்தில் அமேசான் கிண்டில் தவிர வேறு ஏதேனும் தளங்கள் மின்நூல் வாசிப்பில் கவனத்தை ஏற்படுத்துமா?

இந்தியாவைப் பொருத்தவரை இப்போது அமேசான் கிண்டில் (Amazon Kindle) மட்டுமே மின்னூல் வாசிப்புக்கு அதிகம் பயன்படுத்தும் தளமாக உள்ளது. கூகுள் நிறுவனத்தின் பிளே புக்ஸ் (Play Books) என்ற தளத்திலும் ஏராளமான மின்னூல்கள் தமிழிலும் வெளியாகியுள்ளன. எதிர்காலத்தில் Kobo, Nook போன்ற வேறு நிறுவனங்களும் இந்தியாவில் மின்னூல் விற்பனையைத் தொடங்கப்போகிறார்கள்.

கவிஞர் தேவதேவனுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறீர்கள். அவரதுபல நூல்களை கிண்டிலுக்குக் கொண்டுவந்திருக்கிறீர்கள். அவருக்கும் உங்களுக்கும் இடையேயான உறவு பற்றிப் பகிர்ந்துகொள்ளுங்களேன்.

2014 ஏப்ரலில் அவருடைய ‘தேவதேவன் கவிதைகள்’ தொகுப்பை வாசிக்க ஆரம்பித்தேன். அந்தப் பெருந்தொகுதியை மாதக்கணக்காக மெதுவாகத்தான் வாசித்தேன். அத்தொகுப்பில் ராஜசுந்தரராஜன் ‘ஆற்றுப்படை’ என்ற முன்னுரையை தேவதேவன் கவிதை வரிகளையே அழகாகக் கோர்த்து எழுதியிருப்பார். அந்த முன்னுரையில் கிட்டத்தட்ட அனைத்தும் தேவதேவன் கவிதைகளில் உள்ள சொற்கள்தான். அவரைப் பற்றிப் பேசும்போதெல்லாம் அவரது கவிதைகள்தான் முன்னெழுகின்றன.

’நீர்க்கரை மரக்கிளையில் முழுநிலா

அபூர்வமான ஒரு கனி

நீரில் குதித்து அள்ளி அள்ளிப் பருகினேன்

உனக்கென நான் அதை

அள்ளி வரத்தான் முடியவில்லை.’

காந்தி பற்றி பல முக்கியமான தொகுப்புகளைக் கொண்டுவந்திருக்கிறீர்கள். உங்களுடைய வாழ்வைப் பார்க்கும்போது காந்திய வாழ்வு என்று தோன்றும். உங்கள் செயல்பாடுகளுக்கு காந்திதான் காரணமா?

காந்தி என் வாழ்க்கையைப் பாதித்திருக்கிறார் என்று சொல்லலாம். ஆனால் ‘காந்திய வாழ்வு’ என்று சொல்வது எவ்வளவு தூரம் பொருந்தும் என்று தெரியவில்லை. எளிமையாய் இருக்கவேண்டும் என்று எப்போதும் மெனக்கெடுவதில்லை. இது எனக்கு வசதியாய் இருக்கிறது. அதனால் இப்படி இருக்கிறேன். அவ்வளவுதான்.

எனக்குக் கிடைத்த சில நூல்களை ‘காந்தி இன்று’ தளத்தில் தொடர் பதிவுகளாக வெளியிட்டேன். அந்தத் தளத்தின் ஆசிரியர்களில் ஒருவரான சுனில் கிருஷ்ணன் அந்த வாய்ப்பை அளித்தார். அவற்றை கிண்டிலிலும் வெளியிட்டேன். காந்தி நூல்களை தொடர்ந்து அவ்வப்போது இலவசமாக வழங்கிக்கொண்டிருந்தேன். அதற்கு நிறைய வரவேற்பு இருந்தது. நான் வெளியிட்ட காந்தி நூல்கள் சிலவற்றை வெளியிட நவஜீவன் ட்ரஸ்ட், சர்வோதய இலக்கியப் பண்ணை முதலிய அமைப்புகளின் அனுமதி பெற்றுதான் வெளியிட வேண்டும் என்பதை பின்னர்தான் அறிந்தேன். உடனே அவற்றை நீக்கிவிட்டேன். அவற்றுக்கான அனுமதி பெற்று வெளியிடும் எண்ணம் இருக்கிறது.

எதிர்காலத்திட்டம் என்ன? அச்சிலும் நூல்களை வெளியிடுவீர்களா?

எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் ’கவனம்’, ’ழ’, ’மீட்சி’ ஆகிய சிற்றிதழ்களின் தொகுப்பைக் கொண்டுவந்திருக்கிறார். அதுபோல இன்னும் பல சிற்றிதழ் தொகுப்புகளைக் கொண்டுவரவேண்டியிருக்கிறது.

ந.பிச்சமூர்த்தியின் கதைகளை முழுத்தொகுப்பாக வெளியிட முயன்று கொண்டிருக்கிறேன். கிடைக்காத சில கதைகளைத் தேடிக் கொண்டிருக்கிறேன். தி. ஜ. ரங்கநாதன் மொழிபெயர்த்த ’லூயி ஃபிஷரின் காந்தி வாழ்க்கை வரலாறு’, வ. ரா. மொழிபெயர்த்த ’நேருவின் சுயசரிதை’, க. நா. சு.வின் விமர்சனக் கட்டுரைத் தொகுதிகள், ஆர். ஷண்முகசுந்தரம், த. நா. குமாரஸ்வாமி, த. நா. சேனாதிபதி ஆகியோரின் மொழியாக்கங்கள், ராஜம் கிருஷ்ணன் மொழிபெயர்த்த ’பீகார் நாட்டுபுறக் கதைகள்’, நாமக்கல் கவிஞர் மொழிபெயர்த்த ‘காந்தீய அரசியல்’ என்ற நூல் என பல அச்சில் இல்லாத நூல்களை கிண்டிலில் கொண்டுவர வேண்டும் என்ற ஆவல் உள்ளது. இவையெல்லாம் நாட்டுடைமையானவை. இவை தவிர, வெங்கட் சாமிநாதன் பல்வேறு தளங்களில் எழுதிய விமர்சனக் கட்டுரைகள், மு. அருணாசலத்தின் இசை, இலக்கிய வரலாறுகள் முதலியவற்றையும் வெளியிட வேண்டும்.

சில நூல்களை அச்சிலும் கொண்டுவரலாம் என்ற எண்ணமும் உள்ளது. அச்சு நூல்களையும் வாசகர்கள் எளிதாக வாங்கும் வகையில் மிகக் குறைந்த விலையில் கொண்டுவர வேண்டும், ஒவ்வொரு நூலிலும் கணிசமான பிரதிகளை விலையில்லாமலும் அளிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். முதல் நூல் இந்த ஆண்டு வெளிவந்திருக்கிறது. அடுத்த வெளியீடுகளுக்காக ஆயத்தம் செய்து கொண்டிருக்கிறேன்.

உங்கள் பணிக்கு குடும்பச் சூழல் ஆதரவாக இருக்கிறதா?

குடும்பச் சூழல் ஆதரவாகத்தான் இருக்கிறது. சில சமயம் வேறு வேலையைத் தேடிக்கொள் என்றோ போட்டித் தேர்வுகளை எழுதி அரசு வேலைக்கு முயலலாம் என்றோ சொல்வார்கள். முயற்சி செய்தால் என்னால் அவற்றை அடைய முடியும். ஆனால் இதுதான் நான் செய்யவேண்டிய வேலை என உணர்வதால் இப்படியே இருக்க விரும்புகிறேன். குடும்பம் மட்டுமின்றி நண்பர்களின் துணையும் எனக்குத் தேவை. நண்பர்கள் மதார், சுரேஷ், அருண் பிரசாத் ஆகியோரும் அண்ணன் யமுனை செல்வனும் பல வகைகளில் உதவி ஊக்கமளிக்கிறார்கள்.

முகம்விருது உங்களுக்கு கிடைத்ததைப் பற்றி

எழுத்தாளர் ஜெயமோகன் ஒரு கடிதத்துக்கு எழுதிய பதிலில், செயல் தளத்தில் இயங்குவோருக்காக கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் சொன்ன நெறிகள் சிலவற்றைக் குறிப்பிட்டிருக்கிறார். ‘ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காகத் தொடங்கப்படும் இயக்கம் அதை மட்டுமே செய்யவேண்டும். செயற்களத்தை விரிவாக்கிக் கொண்டால் எதையும் செய்ய முடியாமலாகும். அதை பிடிவாதமாக, என்ன வந்தாலும் சரி என, ஒரு இருபதாண்டுகள் செய்வது என முடிவெடுத்துக்கொண்டு செயல்பட்டுக்கொண்டே இருக்கவேண்டும்’ என்பது தான் அவர் முதலில் சொல்வது. நான் முதல் படியையே இன்னும் பூர்த்தி செய்யவில்லை. இந்த நிலையில் பேராளுமைகள் பலருக்கும் கொடுக்கப்பட்ட இவ்விருதுக்கு என்னைத் தேர்வு செய்திருப்பது என் பேறு. கூடுதல் பொறுப்புணர்வுடனும் அக்கறையோடும் செயல்பட வேண்டும் என்ற ஊக்கத்தை அளிக்கிறது. எழுத்தாளர்கள் ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் ஆகியோரின் இணையதளங்களில் சுட்டிக்காட்டப்பட்ட பல நூல்களைப் பதிப்பித்திருக்கிறேன். அவர்களுக்கு என் அன்பான வணக்கத்தையும் நன்றியையும் தெரிவிக்கிறேன். குக்கூ காட்டுப்பள்ளி நண்பர்களுக்கும் குறிப்பாக சிவராஜ் அண்ணனுக்கும் மனமார்ந்த நன்றியைச் சொல்கிறேன். ஆனால் இந்தச் சம்பிரதாயமான நன்றி நவிலலுக்கு அப்பால் அவர்களை என் மனதுக்கு நெருக்கமாக உணர்கிறேன்.

பேட்டி: மதார் மற்றும் இரம்யா

முந்தைய கட்டுரைபேசாதவர்கள்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைவெண்முரசு நாள் – குருபூர்ணிமா – ஜூலை 23 நிகழ்வு