அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
தமிழில் வந்துள்ள இருத்தலியம் சார்ந்த நாவல்களை பற்றி எழுதியிருந்தீர்கள்.பின்தொடரும் நிழலின் குரல் நாவலையும் அப்படியான ஒன்றாக கொள்ள இயலும் என்று நினைக்கிறேன். அரசியல், தத்துவம் வீரபத்திரபிள்ளையை , அருணாச்சலத்தை முழுமையாக கைவிடுகிறது இல்லையா.
மேலும் விஷ்ணுபுரம் நாவலில் அஜிதன் பவதத்தரை வாதத்தில் வென்று கொள்ளும் வெறுமை , திருவடி கொள்ளும் உன்மத்த நிலை, சங்கர்ஷணன் தன் மகன் அனிருத்தனை இழந்து அடையும் துயர், பிங்கலனின் தேடலும் அவனது கன்டடைதலும் ஆகியவை ஒரு பெரும் அமைப்பின் தனி மனிதர்கள் கொள்ளும் பாடுகளை பேசுவதாகவும் பொருள் கொள்ள இயலும்.
நன்றி
சர்வோத்தமன்.
கசாக்,இருத்தலியல்,ஹைடெக்கர் -கடிதம்
அன்புள்ள சர்வோத்தமன்,
இருத்தலியல் எனும்போது மானுட இருப்பு சம்பந்தமான எல்லா சிந்தனைகளையும் அதற்குள் கொண்டுவந்துவிட முடியாது. உண்மையில் எல்லாச் சிந்தனைகளும் மானுட இருப்பின் பொருளென்ன என்பதிலிருந்தே ஆரம்பிக்கின்றன.
பெரும்பாலான புனைவிலக்கியங்கள் இருத்தலியல் சிக்கலைப் பேசத்தொடங்குகின்றன. ஏனென்றால் அவை ஓர் எழுத்தாளனில் இருந்து தொடங்குகின்றன. அவனுடைய இருத்தலை அவன் தத்துவப்பிரச்சினையாக ஆக்கிக்கொள்வதில் இருந்துதான் அவனுக்கு வினாக்கள் எழுகின்றன. அவன் அவ்வினாக்களுடன் வெளியுலகைச் சந்திக்கிறான். அந்நோக்கில் வெளியுலகையும் மாற்றியமைக்கிறான்
ஆகவே பேரிலக்கியங்களில் இருத்தலியல் பறதி [ angst] கொண்ட மையக்கதாபாத்திரங்கள் இருக்கும். போரும் அமைதியும் நாவலில் பியர் அன்னா கரீனினாவில் லெவின் போன்றவர்கள் அத்தகையவர்கள். லெ மிசரபிள்ஸ் நாவலின் ஜீன் வல்ஜீன், மோபி டிக் நாவலின் காப்டன் அஹாப் ஆகியோரையும் அப்படிச் சொல்லலாம். இருத்தலியல் என்பது ஓர் அடிப்படையான தத்துவச்சிக்கல்.
ஆனால் அவர்கள் இருத்தலியல் கதைநாயகர்கள் அல்ல. அந்நாவல்கள் இருத்தலியல் உருவாவதற்கு முன்னரே எழுதப்பட்டுவிட்டன. என்ன வேறுபாடு? அக்கதாபாத்திரங்கள் இருத்தலியல் சிக்கலை அடைகின்றன, அச்சிக்கலில் நின்றுவிடவில்லை. அந்நாவல்கள் இருத்தலியல் வினாக்களை எழுப்புகின்றன, ஆனால் ஏதோ ஒன்றைக் கண்டடைகின்றன.
விஷ்ணுபுரம், பின்தொடரும் நிழலின் குரல் இரண்டிலும் இருத்தலியல் சிக்கலுக்குச் சமானமான சிக்கல்கள் கொண்ட மையக்கதாபாத்திரங்கள் உள்ளன. ஆனால் அது அவர்களின் வாழ்க்கைச்சிக்கல், இருத்தலியல் முன்வைக்கும் அதே கோணத்தில் அவர்கள் அதைச் சந்திக்கவில்லை. அவர்கள் இருத்தலியல் சென்றடையும் இடங்களையும் சென்றடையவில்லை.
விஷ்ணுபுரம் ஒருவகை அகவயமாம தன்வரலாறு. தன் வரலாறாக தெரியாமலிருக்கும்பொருட்டு விரித்து விரித்து வேறொரு நிலத்தில் வேறொரு புனைவுக்களத்தில் வேறொரு தொன்மக்காலகட்டத்தில் நிறுத்தப்பட்டது. அதிலுள்ள மையக்கதாபாத்திரங்களின் எல்லா சிக்கல்களும் அதற்கு முந்தைய பத்தாண்டுகளில் நான் கடந்துசென்றவை. அவற்றை வெவ்வேறு கோணங்களில் வெவ்வேறு ஆளுமையாக ஆக்கியிருக்கிறேன், அவ்வளவுதான்.
அது இருத்தலியல் அல்ல. மெய்யறிதல் என ஒன்று உண்டா, அது மானுடனுக்கு தேவையா, அதை அறிந்தவன் விடுதலைபெறமுடியுமா, அவ்விடுதலை என்பது என்ன என்னும் வினாக்கள்.அம்மெய்யறிவை அன்றாடத்துடன் பிணைத்துக்கொள்ளும் தவிப்பு. வெவ்வேறு கதாபாத்திரங்கள் வெவ்வேறு கோணங்களில் அந்த வினாக்கள்மேல் முட்டிக்கொள்கிறார்கள். சிதைகிறார்கள், கடந்துசெல்கிறார்கள், கண்டடைகிறார்கள்.
அவர்களின் ஒட்டுமொத்தமாக அந்நாவலில் திரண்டுவரும் ஒரு விடை உள்ளது. அந்த விடை இருக்கும்வரை அது இருத்தலியல் நாவல் அல்ல. அந்த விடை மிக அகவயமானது, நானே அடைந்தது, என்னை அது விடுவிக்கவும் செய்தது என்பதற்கு என் வாழ்க்கையே ஆதாரம். நான் அதனூடாக கடந்து இப்பால் வந்துவிட்டேன்.
பின் தொடரும் நிழலின்குரலும் அப்படியே. அதிலிருப்பது கருத்தியலுக்கும் தனிமனிதனுக்குமான உறவு. அவன் அதிலிருந்து எந்தவகையில் விடுதலைகொள்ள முடியும், அவன் அதற்கு எவ்வகையில் பொறுப்பேற்றுக்கொள்ள முடியும் என்னும் வினா. அந்நாவலில் ஏசு வந்து பேசவில்லை என்றால் அது இருத்தலியல் நாவல் என்று ஒருவாறாக வகுத்துவிடலாம். ஆனால் அவர் தோன்றுகிறார். எழுதுபவனின் அகம்பிளந்து வந்து நின்று தெய்வம்பேசும் சில தருணங்கள் உண்டு. அந்நாவலில் அந்த அத்தியாயம் அப்படிப்பட்டது.
ஜெ