ஆலயங்கள் சமூகக்கூடங்கள்

www.marvelmurugan.com

ஆலயம் எவருடையது?

ஆலயம் ஆகமம் சிற்பம்

நம் ஆலயங்களுக்கான ஐந்து நெறிகள்

அன்பு ஜெயமோகன்,

ஆலயங்கள் தொடர்பான கட்டுரைகளைத் தொடர்ந்து கவனித்து வருகிறேன். ஆகமம், சிற்ப சாஸ்திரம், பண்பாட்டு மையம் மற்றும் வரலாற்றுச் சின்னம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு உங்கள் கருத்தை நீங்கள் வலியுறுத்தி இருந்தீர்கள். அதுபற்றிய எனது பார்வையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

ஆலயம் எவருடையது எனும் பதிவு வெளியான மறுநாளே மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் சீற்றத்தோடு எதிர்வினை ஆற்றி இருந்தார். உங்களை நன்கு அறிந்திருக்கும் அவரின் சீற்றம் ஆச்சர்யம்தான். எனினும், அவர் சார்ந்திருக்கும் அமைப்பு சார்பில் பேசியாக வேண்டி இருந்திருக்கலாம்.

ஒன்றைத் தெளிவாக்கிக் கொண்டே மேல்நகர விரும்புகிறேன். இந்து அறநிலையத்துறை அல்லது அறங்காவலர்கள் தரப்புகளைக் குற்றஞ்சாட்டி பிரச்சினையை வம்பரசியலாகக் கடந்து போய்விடுவதில் பயனில்லை. ஆகவே, ஆலயம் பற்றிச் சிந்திக்கும்போது அதன் சமூக வரலாற்றுப் பின்புலத்தோடு பேசுவதே நலம்.

ஆலயங்களை மதத்துக்குள் மட்டுமே அடைத்துப் பேசுவது அறிவீனம். அதைப்போன்று ஆலயங்களை ஆகம, சிற்ப சாஸ்திர மரபுக்குள் மட்டுமே அடக்க முயல்வதும் என்னளவில் நியாயமில்லை. காலமாற்றத்திற்குத் தகுந்தவாறு, சமூகவெளியில் பண்பாட்டு மாற்றங்கள் நிகழ்வதைத் தவிர்க்க இயலாது. அவற்றை எதிர்கொள்வது குறித்தான பன்முகப்புரிதல் முதலில் முக்கியம். இங்கு அப்படியான உரையாடல்கள் சாத்தியமே இல்லாத வகையில் ஆலயங்களை அரசியல் மயமாக்கி ஆயிற்று. திராவிட இயக்கத்தவர்கள் இந்து அறநிலையத்துறை சரி என்பார்கள். ஆன்மீக அமைப்புகள் உள்ளூர் அறங்காவலர்களே சரி என்பார்கள். கிட்டத்தட்ட ஆத்திக எதிர் நாத்திகத் தரப்பு போன்று. இங்கு உரையாடலை முன்னெடுப்பதே அபாயகரமானது.

என்னளவில், ஆலயங்களைச் சமூகப் பண்பாட்டு நிறுவனங்கள் எனும் அளவில் இருந்து புரிந்து கொள்வதே முதலில் தேவை. சங்க்காலம் துவங்கி தற்போதைய காலம் வரையிலான கோவில் உருவாக்க வரலாறு குளித்த ஓரளவு தெளிவான தரவுகளை இன்றைக்கு நம்மால் தொகுத்து விட இயலும். அப்படி தொகுக்கும் ஒருவர் கற்றழி துவங்கி இன்றைய பிரகார மண்டபங்களை உள்ளடக்கிய பேராலயம் வரையிலான வரைபடத்தைத் தயாரித்து விட முடியும். ஆலயம் என்றாலே பக்தர்கள்தான் எனும்படியான தோற்றம் மத அரசியலால் விளைந்தது என்பதை அவ்வரைபடம் சுட்டிக்காட்டி விடும். குன்றக்குடி அடிகளார் திருச்சி வானொலி நிலையத்தில்(1986) ஆற்றிய ஆலயங்கள் சமுதாய மையங்கள் எனும் உரையை இவ்விடத்தில் பரிந்துரைக்கிறேன்(வானதி பதிப்பகம் அவ்வுரையை நூலாகவும் வெளியிட்டிருக்கிறது).

தனது உரையில் கல்விச்சாலை, கலைக்கூடம், மருத்துவச் சாலை, ஊராட்சி மன்றங்கள், நீர்நிலைப் பாதுகாப்பு, தமிழாய்வு, இலக்கிய அரங்கேற்றம், நீதி சபை, முறை மன்றம் போன்றவற்றை உள்ளடக்கியதாக ஆலயங்கள் இருந்தமையாகக் குறிப்பிடுகிறார். அவ்வுரையின் சில முக்கிய அம்சங்கள் வருமாறு :

”இன்று நமது திருக்கோயில்களுக்கும் நமது சமுதாயத்திற்கும் நெருக்கமான உறவில்லை. திருக்கோயில் வணிகக்கூடமாக உருமாற்றம் பெறுவதைத் தவிர்க்க வேண்டும். திருக்கோயில், சமுதாயத்தின் நல்லமைப்புக்கு எதிராக இருக்கிற தீமைகளிலிருந்து மக்களை விடுதலை செய்ய வேண்டும். அதாவது சாதி வேற்றுமை, தொழில் வேற்றுமை, தீண்டாமை பாராட்டுதல் முதலிய தீமைகளிலிருந்து மீட்கவேண்டும். திருக்கோயில் ஒரு சுரண்டும் நிறுவனமாக வளர்வது, திருக்கோயில் தத்துவத்திற்கே முரணானது! அதனால், நாடு கெடும். பொதுமை நெறிக்கு மாறான ஒரு மேலாதிக்கக்குடி திருக்கோயிலைச் சார்ந்து தோன்ற அனுமதிக்கக் கூடாது.

திருக்கோயிலைச் சார்ந்தவர்கள் அனைவரும் தொண்டர்கள். திருக்கோயிலைச் சார்ந்து, மீண்டும் திருநெறிய தொண்டு உயிர்ப்புப் பெறுதல் வேண்டும். திருக்கோயிலிலிருந்து வெளியேற்றப்பட்ட ஊராட்சி மன்றங்கள், கல்விச்சாலைகள், மருத்துவச் சாலைகள் மீண்டும் திருக்கோயில் வளாகத்துக்குள் வந்தாக வேண்டும். நாம் ஒவ்வொருவரும் திருக்கோயிலுக்குக் கடமைப்பட்டிருக்கிறோம். நாம் அனைவரும் இறைவனின் பிள்ளைகள்!

நாம் ஒவ்வொருவரும் திருக்கோயிலுக்குரிய கடமைகளை-அவை எத்தகையவாக இருந்தாலும் தவறாது செய்தல் வேண்டும். ஆண்டுதோறும் ஈட்டிய செல்வத்தில் ஒரு பகுதியினைத் திருக்கோயிலுக்கு உளமார மனமுவந்து செலுத்த வேண்டும். இங்கனம் செலுத்துவதன் மூலம் திருக்கோயில் நிதிநிலை சீராகும். இது நடைமுறைக்கு வந்தவுடன் அருச்சனைச் சீட்டு முறைகளை(வணிக முறைகளை) அறவே நீக்க வேண்டும். திருக்கோயில் நிதி சீராகச் செலவழிக்கப் பெறவேண்டும். சிக்கனமாகச் செலவழிக்கப் பெறவேண்டும். திருத்தொண்டின் மூலமே, ஊதியம் பெறாத உழைப்பின் மூலமே, திருக்கோயில்கள் தூய்மையுடன் பேணப்படவேண்டும்.

திருக்கோயிலில் ஆரவாரமான செலவுகளைத் தவிர்க்க வேண்டும். திருக்கோயிலில் பொது நிதி ஆதாரத்தை வலிமைப்படுத்தி, வளமாக வாழ வாய்ப்பில்லாதவர்களுக்கு வாய்ப்பை உருவாக்கி உதவி செய்து அவர்களை உயர்த்த வேண்டும். மீண்டும் திருக்கோயிலை மையமாகக் கொண்ட சமுதாயத்தை அமைப்பது நமக்கும் நல்லது நாட்டுக்கும் நல்லது.

திருக்கோயில்கள் சமுதாயத்தின் மையங்களாகவும் சமுதாயத்தின் உடைமைகளாகவும் இருக்க வேண்டும். திருக்கோயில்கள் தனியார் உடைமைகளாகவும் மதச்சார் பற்ற அரசாங்கத்தின் உடைமைகளாகவும் இருப்பது விரும்பத்தக்கதல்ல. திருக்கோயில்களை மீண்டும் சமுதாய மையமாக மாற்றுவோம்”

குன்றக்குடி அடிகளார் இருதரப்புகளையுமே மறுத்து இருக்கிறார். அவரின் ஆலோசனை தற்கால நடைமுறைக்கு ஒத்துவருமா எனத் தெரியவில்லை. என்றாலும், அவர் முன்வைக்கும் தரவுகளின் வழியாக ஆலயங்கள் எவ்வாறு சமூக நிறுவனங்க்ளாக இருந்தன என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

சத்திவேல்,

கோபிசெட்டிபாளையம்.

ஆலயம் கடிதங்கள்-2
ஆலயம் கடிதங்கள் 3
ஆலயம் கடிதங்கள் 4
ஆலயம் கடிதங்கள்-5
முந்தைய கட்டுரைஜீன் ட்ரெஸ்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைபுகழ்- ஒரு கேள்வி