நாயக்கர் ஆட்சிக்காலம் பற்றிப் படித்துக்கொண்டிருந்தேன். உதிரிச் செய்திகளினூடாகச் சென்றபோது ஆரல்வாய்மொழியில் பரகோடி கண்டன் சாஸ்தா ஆலயத்தில் அறுபத்தொன்பது ஆண்டுக்காலம் மதுரை மீனாட்சி ரகசியமாகக் கோயில் கொண்டிருந்தாள் என்ற செய்தியை வாசித்தேன். முன்பு அதை அறிந்திருந்தேன், அங்கு சென்றுமிருக்கிறேன். ஆனால் வாசித்தது ஒரு நள்ளிரவில். அந்த தனிமையில் அச்செய்தி உடல்கரைந்து பறப்பதுபோன்ற உணர்வினை உருவாக்கியது. உடனே எழுத ஆரம்பித்து இரண்டு நாட்களில் எழுதி முடித்த சிறிய நாவல் இது- குமரித்துறைவி.
சிறுகதையாகவே எழுத ஆரம்பித்தேன். கொஞ்சம்போனதுமே குறுநாவல் என தோன்றியது. எழுதிமுடித்தபோது சிறிய நாவலாக ஆகிவிட்டது. இந்நாவலைப் பற்றி இதற்கு வெளியே நின்று நான் ஏதும் சொல்லக்கூடாது. ஏனென்றால் இதை எழுதியபோதிருந்த நிலை வேறொன்று. அங்கே எளிதாகச் சென்றுவிட முடியாது. இது ஒரு மங்கலப்படைப்பு.மங்கலம் மட்டுமே கொண்ட ஒன்று.
மனிதர்களை வைத்து தெய்வங்கள் விளையாடுகின்றன என்றால் தெய்வங்களை வைத்து மனிதர்கள் விளையாட முடியாதா என்ன? இரு விளையாட்டுக்களும் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. ஒன்றையொன்று ஆடிபோல் பிரதிபலித்து பெருக்கிக்கொள்கின்றன. அலகிலா ஆடலுடையது தெய்வம். தன்னை வைத்து ஆடும்படியும் மானுடனை ஆட்டிவைக்கிறது
இந்நாவலை என் பிரியத்திற்குரிய சைதுக்குட்டி என்னும் ஜெ.சைதன்யாவுக்குச் சமர்ப்பணம் செய்கிறேன்.
ஜெ
குமரித்துறைவி வாங்க
***