உளச்சோர்வு -கடிதம்

வெண்முரசு- பெருஞ்செயலும் தடைகளும்

எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

தங்களின் நிறைய பதிவுகள் என்னை நான் கண்டடைய வைத்துள்ளன.

உளச்சோர்வு என்பது ஒரு இனிய நோய். உளச்சோர்வுள்ளவர்கள் மேலும் உளச்சோர்வை முயன்று திரட்டிக்கொண்டு அதில் மூழ்கி திளைப்பார்கள். வேறெந்த நோயிலும் அந்நோயிலிருந்து விடுபடும் துடிப்பு இருக்கும். உளச்சோர்வுநோய் அந்நோயிலேயே மூழ்கும் விருப்பத்தை நம்மிடம் உருவாக்கும்.

எனக்கு மேல சொல்லப்படுவதில் மிகுந்த அனுபவம் உண்டு. ஆம் 28 வருடம் அதில் மூழ்கி கடந்தேன். முதலில் அதில் இருக்கிறேன் என்பதை நானும்(எனது மனமும்) எனது அறிவும்(அகந்தை) ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டன. எனது மனசாட்சி படிதான் நடப்பதாக மயக்கியவை.

இன்று அது ஏற்படுத்திய பாதிப்புகளில் இருந்து வெளியே வருவதற்கு மிகவும் சிரமத்துடன் ஒரு வண்ணத்து பூச்சியை போல் வளர்ந்து கொண்டிருக்கிறேன்.

அதில் உங்களின் பாதிப்பு அதிகம் என்பதை நன்றியுடன் நினைத்து திளைக்கிறேன்.

இப்படிக்கு

அழகுவேல்

திருப்பூர்

***

அன்புள்ள அழகுவேல்,

நவீன வாழ்க்கையின் தவிர்க்கமுடியாத அம்சம் உள அழுத்தம். அது உருவாக பல காரணங்கள். முதன்மையானது இலட்சியம், இலக்கு. சிறுவயதிலேயே நாம் ‘ஆம்பிஷன்’ எனப்படும் உயர் இலக்குகளுடன் வாழக் கற்றுக்கொள்கிறோம். சூழல் அப்படி நமக்குச் சொல்கிறது. ஆகவே நம் முன் எப்போதுமே இலட்சியங்களும் இலக்குகளும் உள்ளன. அதைநோக்கிச் செல்லும்போது ஆழ்ந்த சோர்வும் அவ்வப்போது வந்தமைகிறது. எட்டமுடியுமா என்னும் மலைப்பு. பின்னடைவுகளின் விளைவான துயரம். நம் எல்லைகளை நாமே காணும்போது வரும் பதற்றம். ஆகவே சோர்வு.

நம் இலக்குகள் அல்ல நாம். இலக்கு என்பது நம் வாழ்க்கையின் ஒரு பகுதி மட்டுமே. நம்மை செயலூக்கம் கொன்டவர்களாக ஆக்குவதற்கான ஒரு தூன்டுதல் அது. அதற்கப்பால் ஏதுமில்லை. அதன்பொருட்டே நாம் வாழவேன்டும் என்பதில்லை.அன்றாடமே முக்கியம். வாழ்க்கை என்பது நாளை அல்ல, இன்றுதான். இன்று இனிமையாக நிறைவாகச் சென்றாலே நாம் வாழ்ந்துவிட்டோம் என்று பொருள். ஆகவே இலக்கு நோக்கிய பதற்றங்களையும் சோர்வுகளையும் விட்டுவிட்டாலே பெரும்பாலான உளச்சோர்வுகள் அகன்றுவிடும். அன்றாடத்தில் முழுமையாக மூழ்கி, தன் இலக்குக்கு உரிய செயல்களை நிறைவுடனும் மகிழ்வுடனும் செய்தாலே, நாம் இலக்குநோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம் என்றுதான் பொருள்.

சோர்வை உருவாக்குவது இன்றைய உறவுகள். இன்று ஒவ்வொருவரும் தனக்கு என்னவேண்டும் என தெளிவுடன் இருக்கிறார்கள். உறவுகளில் தன் இடத்தை, தன் நோக்கத்தை முன்வைக்கிறார்கள். அளிப்பதையே உறவெனக் கொன்ட சென்றகால மனிதர்களுக்கு இல்லாத உளச்சிக்கல் பெறுவதையே உறவு என நினைக்கும் இன்றைய மனிதர்களுக்கு உள்ளது. அது ஓர் தன்னகங்காரம். அது இந்நூற்றாண்டின் விதி. நாம் அதை ஒன்றும் செய்ய முடியாது. எனக்கு என்ன வேன்டும் என என் அப்பாவிடம் நான் பேரம்பேசியதில்லை. அவர் அளித்த எல்லாமே கொடை என கொண்டேன். எனக்கு அவர் தன்னை முழுதாக அளித்தார். இன்று மகன் தந்தையிடம் கேட்டுக்கொண்டே இருக்கிறான். முழுதளித்தாலும் நிறையாது இன்றைய தேவை.

இன்றைய சூழலில் இன்னொருவரை திருத்தியமைக்க முயலாமல் இருந்தால், இன்னொருவர் வாழ்க்கையில் தலையிடாமல் இருந்தால், நம் வாழ்க்கையை மட்டுமே முன்கொண்டுசென்றால், உளஅழுத்தங்களை தவிர்க்கமுடியும். இன்னொருவருடன் முட்டி மோதிப் போராடுவதே உளச்சோர்வாக ஆகிறது. இன்னொருவர் அணுகாமல் நம் அகவாழ்க்கையை பாதுகாத்துக்கொள்ளவும் வேண்டும்

ஜெ

முந்தைய கட்டுரைஇரண்டு அன்னப்பறவைகள் – அருண்மொழி நங்கை
அடுத்த கட்டுரைஅன்புராஜ் கடிதங்கள்