வணக்கம்.
கடந்த 30/10/2020 அன்று உங்களை சந்தித்தது பெரும் மகிழ்ச்சி. நீங்கள் கையெழுத்துத்திட்டு கொடுத்த கொடுத்த தெருக்களே பள்ளிக்கூடம் புத்தகத்தை படித்து முடித்தேன்.
மூன்றாண்டுகள் Bsc. Zoology படித்து கிடைக்காத அனுபவம் இதில் கிடைத்தது. அப்படியானால் பயிற்சியை பெற்ற ராகுல் அல்வரிஸ் ன் அனுபவம் எத்தனை சிறப்பானதும், பயனுள்ள தாகவும் இருந்திருக்கும் என்று நினைத்து பார்த்து முடிவு செய்ய எனக்கு அனுபவம் இல்லை.
பக்கம் 156, “இந்தத் தகவல்களையெல்லாம் எந்தவொரு தேர்வுக்காகவும் நான் மனப்பாடம் செய்ய வேண்டியிருக்கவில்லை, இருந்தாலும் நான் வாசித்த எந்த ஒரு விசயமும் என் தலையை விட்டுப் போகவில்லை! ”
இந்த வரிகளை ஆசிரியர்கள் மனதில் கொள்ள வேண்டிய வரி.
ஆனால் இதிலிக்கும் உண்மையை பேசத் துணிந்த போதெல்லாம் அறிவுரையும், அறிவுரை போன்ற மிரட்டலும், அதைத் தொடர்ந்து choose the correct answer, Fill in the blanks, 2 mark questions, Detail answers இவற்றிற்குள்ளேயே மூழ்கிப் போக வேண்டும்.
எல்லாவற்றிலும் எதிர் பக்கம் நின்று சிந்திப்பது என்ற ஒன்று எனக்குள் இருக்கிறது. தேவையா? தேவையற்றதா? என்று விளங்கவில்லை.
படிப்பிலிருந்து ஓராண்டு இடைவெளி எடுத்து பயிற்சி பெற மிகப்பெரிய பின்பும் தேவைப்படுகிறது. ராகுல் அல்வரிஸுக்கு அது கிடைத்திருக்கிறது. ஆனால் விடுமுறை நாட்களில் வேலைக்கு சென்று காசு சம்பாதிக்க வேண்டிய நிர்பந்தம் உள்ள மாணவர்கள் அதிகம்.
நீங்கள் இந்து தமிழ் நாளிதழில், கல்வி பற்றி எழுதிய போது உங்கள் மகன் வகுப்பு சக மாணவர்கள் அந்த நிலையில் இருந்ததாக குறிப்பிட்டிருந்தீர்கள். என்னுடைய மாணவப் பருவமும் அப்படியே இருந்தது. அதனால் எத்தனை பேருக்கு படிப்பிலிருந்து ஓராண்டு இடைவெளி எடுத்து பயிற்சி பெற வாய்ப்பு கிடைக்கும். அப்படி கிடைத்தாலும் அவர்கள் இயற்கை சார்ந்த விசயங்களை கற்றுத்தேற விரும்புவார்கள? வேறு தொழில் நுட்பங்களை கற்றுக் கொள்ள நினைத்தால் அது போருக்கான நுட்பம் தானே? என்ற கேள்வியே மனதில் எழுகிறது.
இந்த அருமையான புத்தகம் உங்கள் கையெழுத்தோடு என் புத்தக அடுக்கில் இருப்பது கர்வமா இருக்கிறது.
நன்றியும்
அன்புடனும்
சி . ஜவஹர்.
அன்புள்ள ஜவகர்
மாற்றுக்கல்வி பற்றிய பேச்சுக்கள் எப்போதுமே உள்ளன. அவை வழக்கமான கல்வியில் இருக்கும் போதாமைகளைச் சுட்டுகின்றன. மாற்றுக்கல்வி அனைவருக்கும் உரியது அல்ல. அப்படி ஒரு தனிப்பாதையை தேர்வுசெய்ய ஒரு துணிச்சல் வேண்டும். கொஞ்சம் பின்னணி வலிமையும் வேண்டும். சாமானியர்களுக்கு அது உகந்தது அல்ல என்பது உண்மைதான்.
பொதுக்கல்வி என்பது உலக அளவிலேயே இருநூறாண்டுகளுக்கு முன்பு தொடங்கிய ஒன்று. அதாவது அனைவருக்கும் ஒரே கல்வி என்பது. ஐரோப்பாவிலிருந்து அது நமக்கு வந்தது. அதற்கு முன் உலகமெங்கும் இருந்தது தொழில்சார் கல்வியும் உலகியல்கல்வியும் அதற்குரிய எளிய அறக்கல்வியும் மட்டுமே. பொதுக்கல்விக்கு பல சாதகமான அம்சங்கள் உள்ளன. முதன்மையாக அது அனைவருக்கும் ஒரே வகை அகப்பயிற்சியை அளித்து ‘சராசரி’ குடிமகனை உருவாக்குகிறது. அடிப்படைக் கல்விக்குப் பின் எவரும் எத்தொழிலையும் தேர்வுசெய்யலாம் என்னும் வாய்ப்பை அளிக்கிறது. பிறப்பின் அடிப்படையில் ஒரு தொழிலில் மாட்டிக்கொள்ளும் ஊழ் அமையாமல் காக்கிறது. ஆகவே அதுவே நவீன காலகட்டத்துக்கான கல்வி. அதுவே ஜனநாயகத்தின் அடிப்படை.
டோட்டோ-சான் ஜன்னலில் ஒரு சிறுமி
ஆனால் அனைவருக்கும் ஒரே கல்வி என்னும்போது அது அனைவரையும் சராசரி அளவுகோலைக் கொண்டு பார்க்கவும், அனைவரையும் பொதுமைப்படுத்தி ஒரேதரமாக ஆக்கவும் வாய்ப்புள்ளது. தனித்திறன்களை அது அழிக்கக்கூடும். அதற்கு எதிராகவே உலகமெங்கும் மாற்றுக்கல்வி முறைகள் முன்வைக்கப்படுகின்றன.
தமிழில் வெளிவந்த ‘டோட்டோசான் – ஜன்னலில் ஒரு சிறுமி’, ருஷ்ய நூலான ‘குழந்தைகள் வாழ்க’ ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இந்நூலும் அவ்வகையில் ஒன்று.
இத்தகைய நூல்கள் இன்றுள்ள கல்விமுறையை விமர்சிக்கின்றன, மாற்றுகளை முன்வைக்கின்றன. ஆனால் நாம் மரபான கல்வி அமைப்புக்குள் நின்றுகொன்டு உடனடியாக இவற்றை அப்படியே எடுத்துக்கொள்ள, செயல்படுத்த இயலாது. பொதுக்கல்விக்கு இருநூறாண்டு வரலாறு உன்டு. அது மாபெரும் அமைப்பு. அதை நம் விருப்பப்படி மாற்றமுடியாது. வெளியுலகம் இந்த பொதுக்கல்விக்கு உகந்த முறையில் அதன் நெறிகளை வடிவமைத்துக் கொண்டிருக்கையில் அப்படி கல்விமுறையை ஒரு சிலருக்காக மட்டும் மாற்றுவதும் உகந்தது அல்ல.
குழந்தைகளை கொன்டாடுவோம் அமனீஷ்விலி
ஆனால் இந்த மாற்றுக்கல்வி முறையின் சில அம்சங்களை இன்றிருக்கும் பொதுக்கல்விமுறைக்குள் கலந்து பார்க்கலாம். மெல்ல மெல்ல அறிமுகம் செய்யலாம். விளைவுகளை கூர்ந்து பார்த்தபடி, எச்ச்சரிக்கையுடன் சில மாறுதல்களைச் செய்யலாம். அப்படித்தான் இதுவரை நடந்துள்ளது. நம் கல்விமுறையில் இன்றுள்ள எல்லா மாற்றங்களும் இப்படி மாற்றுக்கல்வி முறைகளை கூர்ந்து கவனித்து அவற்றில் இருந்து பெற்றுக்கொண்டமையால் வந்து சேர்ந்தவைதான்
ஜெ
***