மொழியை பேணிக்கொள்ள…

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

சமீபத்தில் தங்களுடைய உரைகளை காணொலியில் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது.

இக்கடிதம் ஜப்பானில் சென்ற வருடம் இந்திய கலாச்சாரத்தைப்பற்றிய உரை. எனக்கு ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றியது.

நான் தாரமங்கலத்தில் பிறந்தவன். உங்களுக்கு அந்த ஊர் தெரியும். நீங்கள் அங்குள்ள கைலாசநாதர் கோயிலுக்குச் சென்று அதைப்பற்றி தங்கள் பயணக்கட்டுரை நூலில் எழுதியிருக்கிறீர்கள். எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல், நான் பள்ளிப் படிப்பை முடித்து சென்னைக்கு மேற்படிப்புக்கு செல்லும் வரை, தாரமங்கலத்திற்கு வருகைதரும் அனைத்து உறவினர்களுக்கும் கோவில் கைட் நான்தான்.

அங்குள்ள அனைத்து சிலைகளுக்கும் ஒரு கதை உண்டு. எப்படி எனக்கு அதைப்பற்றிய அறிவு வந்தது என்பதை என்னால் இன்று  நினைவுகூர இயலவில்லை. அங்குள்ள அம்பி குருக்கள் அங்கு வரும் வசதி படைத்த வெளியூர் மக்களுக்கு அதைப்பற்றி விவரிக்கும் போது அங்கு விளையாடிக்கொண்டிருந்த எனது மனதில் தானாகப் பதிந்திருக்கலாம்.

இன்றும் என்னால் மறக்க முடியாத ஒரு விஷயம் எனது தகப்பனாரின் மாமா மாமி ஒரு முறை வரும்போது வழக்கம்போல நான் அவர்களுக்கு கோயில் காண்பிக்கச்சென்றேன். அப்போது அர்ச்சகர்  கடவுளுக்கு அர்ச்சனை செய்யும்போது, பெரிய கேள்வி கேட்பதாக நினைத்துக்கொண்டு, எனது மாமியிடம் அவர்  எந்த மொழியில் அர்ச்சனை செய்கிறார் என்று கேட்டேன். எனது மாமி மிகுந்த ஆச்சாரமானவள். பழம் பள்ளிக்கூடத்தவள். எனது கேள்வி அவளை அதிரச்செய்தது என்று எனக்கு நல்ல நினைவு. அவர் பதில் சொல்லவில்லை. வீடு திரும்பியதும் எனது தந்தையிடம் அவர் இதைப்பற்றி பேசினார். உன் பையனுக்கு அர்ச்சனை சமஸ்க்ருதத்தில் செய்கிறார்கள் என்பது கூடத் தெரியவில்லை என்ன மாதிரி குழந்தைகளை வளர்த்திருக்கிறாய் என்றார். அப்பாவிடம் நமட்டு சிரிப்பைத்  தவிர வேறு பதிலில்லை.

நாங்கள் பிராம்மண குலத்தில் பிறந்திருந்தாலும் எங்கள் வீட்டில் கடவுள் பூஜை என்பது ஒரு சம்பிரதாயத்திற்கு மேலில்லை. திவசங்கள் வடை, எள்ளுருண்டை, அதிரசம் சாப்பிடும் தருணங்கள் மட்டுமே. எனது தாத்தா, அப்பா அனைவரும் தங்கள் மூதாதையருக்கு செய்யும் கடமைகளை செவ்வனே செய்து கொண்டு இருந்தார்கள். ஆனால் குழந்தைகளுக்கு அவற்றின் காரணங்கள் தின்பண்டங்களுக்கு மேல் அதிகமாக  ஒன்றும் இல்லை. நல்லது. அன்று பள்ளி செல்ல வேண்டாம் ஏனெனில் உணவு முடிய பள்ளி நேரம் தாண்டி விடும் இன்று நினைத்தால் அவர்கள் இன்னும்  மேலாக கலாச்சார வழிமுறைகளின் காரணங்களை விளக்கி இருக்கலாமோ என்று தோன்றுகிறது.

நான் அவர்களைவிட சிறிது மாறி  இருக்கலாம். ஆனால் எனது இரு மகன்களுக்கும் தமிழ் படிக்கத் தெரியாது. தமிழை வீட்டில் படித்துக்கொள்ளலாம் இன்னும் கூடுதலாக ஒரு மொழி தெரியட்டும் என்று இரண்டாவது மொழியாக இந்தியைப்படிக்க வைத்தோம். இன்று அவர்கள் இருவரும் இந்தியும் தெரியாமல் தமிழும் தெரியாமல் வெறும் ஆங்கிலத்தில் மட்டுமே வாழ்கிறார்கள். இது பாஸ்டனிலோ ,கலிபோர்னியாவிலோ அல்ல, சென்னையில் மயிலாப்பூரில்.

இன்று நினைத்தால் எந்த அளவிற்கு நான் என் மூதாதையரிடமிருந்து கீழிறங்கி இருக்கிறேன் என்று நொந்து கொள்வதைத்தவிர வேறு கதி எனக்கில்லை. இத்தனைக்கும் நான் எனது பள்ளிப்படிப்பு முடியுமுன்பே தாரமங்கலம் நூலகத்தில் உள்ள அநேகமாக எல்லா தமிழ்ப்புத்தகங்களையும் படித்து முடித்திருந்தேன்.

பொன்னியின் செல்வனை மூன்று நாள் பள்ளி செல்லாமல் ஒரே அறையில் உட்கார்ந்து படித்து முடித்திருந்தேன். எனது பதினேழாவது வயதில் கணையாழியில் ஒரு சிறுகதை, ஒரு வீதி நாடகம், நான்கு கவிதைகள் எழுதியிருக்கிறேன். (தங்களது டார்த்தீனியம் வந்த வருடம்)

இத்தனை இருந்தும் எனது இரு மகன்களுக்கும் தமிழ் தெரியாது. எனது தாத்தா கவிசாஸ்திரி என்று அறியப்பட்டவர். கம்பராமாயணத்தை மனப்பாடமாக பிரசங்கம் செய்தவர்.

இன்று எனது மகன்களின் நண்பர்கள் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் இருக்கிறார்கள். அவர்கள் அறையில் வெளியே நின்று கேட்டால் உள்ள பேசுவது இந்தியரா அமெரிக்கரா என்று கண்டுபிடிப்பது சுலபமல்ல. இனி ஏதுஞ்செய்ய இயலாது. அரிச்சுவடியிலிருந்து  26 வயது பிள்ளையை ஆரம்பிக்கச் சொல்லும் சக்தியும் மனநிலையும் எனக்கில்லை. எனக்கிருக்கும் ஒரே வாய்ப்பு பேரப்பிள்ளைகள். அதுவும் எந்த அளவு எனது சக்திக்குள் இருக்கும் என்பதும் கேள்விக்குரியே.

எனக்குத் தெரிந்த பலருக்கும் இதே நிலைதான். நமது தலைமுறை தான் இந்த சீரழிவுக்குப் பிரதான காரணம் என்பதில் எனக்கு சிறிதும் ஐயமில்லை. பெரும் சோகம் என்னவென்றால் இது அனைத்தும் நான் திட்டமிடாமல் தானாக நடந்து விட்டது.

Ignorance is NOT bliss; Ignorance is a sin.

அன்புடன்
தாரமங்கலம் மணி.

***

அன்புள்ள மணி அவர்களுக்கு,

நான் ஒரு விஷயத்தைக் கவனித்திருக்கிறேன். புலம்பெயர் வாழ்க்கையில் மிக எளிதாக கைவிட்டுச் செல்வது மொழிதான். ஏனென்றால் இன்னொரு மொழியில் புழங்கியே ஆகவேண்டிய கட்டாயம் இருக்கிறது. வெளிநாடுகளை விடுங்கள். கேரளம்வாழ் தமிழர்களே ஒரு தலைமுறைக்குள் மலையாளத்தில் பேசி, தமிழை மறந்துவிட்டிருக்கிறார்கள். கேரளத்தில் புகழ்பெற்ற ஒரு நடிகர், அமைச்சராகவும் இருந்தவர், தமிழ்வம்சாவளியினர். அவருடைய பாட்டி தமிழ் பேசுவார். அவருக்கு தமிழ் பேசவே தெரியாது.

இச்சூழலில் இளமையிலேயே தமிழை, அதாவது தாய்மொழியை, அறிமுகம் செய்து வைக்கலாமா? அறிமுகம் செய்துவைப்பது மிகமிக நல்லது. உண்மையில் குழந்தைகள் ஆரம்பக் கல்வியை முடித்து கடுமையான போட்டி கொண்ட அடுத்தகட்ட கல்விக்குச் செல்லும்போது அந்த தமிழ்க்கல்வியை முற்றிலுமாக மறந்துவிடுவார்கள். அப்போது நாம் ஏமாற்றம் அடையக்கூடாது. ஏனென்றால் அந்த வாழ்க்கைச்சூழல் அப்படிப்பட்டது. நம் குழந்தைகள் அங்குள்ள மொழி – கல்விச்சூழலை எதிர்கொண்டு போட்டியில் முந்தவேண்டுமென்பதை நினைவில் கொள்ளுங்கள்.

வீட்டில் புழக்கமொழி தமிழாக இருப்பது மட்டுமல்ல, நம் உதட்டமைப்பேகூட ஆங்கில மொழியில் இயல்பாக புழங்குவதற்கான தடைதான். அத்தடைகளை நம் குழந்தைகள் வெல்லவேண்டும். ஆகவே அவர்கள் தமிழிலிருந்து விலகிச்சென்றே ஆகவேண்டும். ஆனால் இளமையில் அடிப்படைச் சொற்களும் இலக்கணமும் எழுத்துக்களும் அறிமுகமாகும் என்றால், அவர்கள் வளர்ந்தபின் தன்னுடைய மொழியை நோக்கி வரவேண்டும் என்று விரும்பும்போது அந்த அறிமுகம் மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்கும். வளர்ந்தபின் முற்றிலும் புதிதாக தமிழைக் கற்றுக்கொள்வதை விட, ஏற்கனவே கற்ற அடிப்படைகளை மீட்டுக்கொள்வது மிகமிக எளிது.

*

என்னுடைய வாசகர்கள் அடிக்கடிக் கேட்கும் கேள்வி இது. தங்கள் குழந்தைகளுக்கு அவர்கள் தமிழிலக்கியத்தை அறிமுகம் செய்துவைக்க நினைக்கிறார்கள். ஆனால் அக்குழந்தைகள் கேட்பது ஆங்கிலமொழியாக்கம் உள்ளதா என்றுதான். அல்லது படித்துக்காட்டு என்றோ, சுருக்கமாகச் சொல் என்றோ கேட்கிறார்கள். கதைகளை வாசிப்பவர்களை விட ஒலிவடிவை கேட்பவர்கள் மிகுதி. கதையாக கேட்பவர்கள் பத்துமடங்கு. இது இன்றைய தமிழின் போக்கை காட்டுகிறது. தமிழ் வாசிப்பது தமிழர்களுக்கு மிகக்கடினமான ஒன்றாக ஆகிக்கொண்டிருக்கிறது.

ஏனென்றால் உங்களைப்போன்ற புலம்பெயர்ந்தவர்களின் பிள்ளைகள் மட்டுமல்ல இந்தியாவின் நகரங்களில் உள்ள தமிழர்களின் குடும்பங்களிலும் குழந்தைகள் இந்நிலையிலேயே உள்ளனர். இங்கே தமிழ் பயிற்றுமொழி அல்ல, ஓர் இரண்டாம் மொழி மட்டுமே. அதாவது ஒரே ஒரு பாடம். அதுவும் திறனற்ற ஆசிரியர்களால் வேண்டாவெறுப்பாகக் கற்றுக்கொடுக்கப்படுகிறது. எந்த இடத்திலும் அந்த மதிப்பெண் முக்கியமல்ல. ஆகவே எவரும் ஆழ்ந்து கற்பதில்லை. தமிழ்நாட்டு நகர்சார்ந்த இளையதலைமுறையினர் தமிழ் சரளமாக படிக்கமுடியாதவர்கள் என்பது ஓர் அப்பட்டமான உண்மை.

தமிழக அரசுப்பள்ளிகளிலும் இன்று ஆங்கிலம் பயிற்றுமொழி ஆகிக்கொண்டிருக்கிறது. இன்னும் இருபதாண்டுகளில் தமிழை சரளமாக வாசிக்கும் இளைஞர்கள் ஐந்து சதவீதம்பேர் கூட இருக்கமாட்டார்கள். இதுவே இந்தியமொழிகள் அனைத்திலுமுள்ள நிலைமை. இன்றைக்கே பிழையில்லாமல் தமிழில் ஒரு கடிதம் எழுதும் தகுதிகொண்ட இளைஞர்கள் அரிதினும் அரிதானவர்கள். ஆகவே தமிழ்வாசிப்பு மிகவேகமாகச் சரிந்துகொண்டிருக்கிறது. அத்தனை வாசிப்பு சார்ந்த தமிழ் ஊடகங்களும் இந்த வீழ்ச்சியை அறிந்து கொண்டிருக்கின்றன. பழையபுத்தகக் கடைக்காரர்களே கூட இதைச் சொல்வார்கள்.

இதை தவிர்க்கமுடியாது. ஆங்கிலமே தொழில் வாய்ப்புக்கான மொழி என்பது இங்கே அப்பட்டமான உண்மை. ஆகவே அரசுப்பள்ளிகளிலும் ஆங்கிலவழிக் கல்வி வந்தே ஆகவேண்டும். இல்லையேல் இரண்டுவகை குடிமக்களை உருவாக்குவதாகவே நம் கல்வி அமையும். ஆங்கிலத்திறன் கொண்டவர்களுக்கே எங்கும் எல்லா வாய்ப்பும் அமையும். தமிழ் மட்டும் அறிந்தோர் பொருளியல் வாழ்க்கையை அடையமுடியாது. இப்போதே அந்நிலைதான் உள்ளது. ஆகவே பெரும்பொருள் செலவில் எளியமக்கள்கூட தங்கள் குழந்தைகளை ஆங்கில வழிக்கல்விக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். அரசு அவர்களுக்கும் நிகரான ஆங்கில கல்வியை இலவசமாக அளித்தே ஆகவேண்டும். அதுதான் சமூகநீதி. ஆனால் அதன் விளைவாக தமிழ்க்கல்வி அழியும்.

இதை வெல்வதற்கான வழிகளில் ஒன்று, தமிழை ஆங்கில எழுத்துக்களில் எழுதுவது. என்னதான் பயிற்றுவித்தாலும் மனித மூளை ஒரு எழுத்துருவிலேயே தன்னை முதன்மையாக ஈடுபடுத்திக்கொள்ளும். இன்னொரு எழுத்துருவை நினைவில் கொள்வது அதற்கு மேலதிகச் சுமை. இன்னொரு எழுத்துருவை எழுதுவது கடும் பயிற்சியால் வருவது. மூன்று எழுத்து வடிவங்களில் தொடர்ந்து ஈடுபடுபவன் என்ற அளவில் என் அனுபவத்தில் சொல்கிறேன். மிக அதிகமாகப் புழங்கியாக வேண்டிய ஒரேயொரு எழுத்து வடிவமே மூளையில் நீடிக்கும். மற்றவை நினைவில் மங்கிக் கொண்டேதான் செல்லும். இங்கே நம் கல்வி- தொழிற்சூழலில் ஆங்கிலமே முதன்மை மொழி. அதன் எழுத்துருவமே நம் முதன்மை நினைவாக மூளையில் உள்ளது. இனி அதை தவிர்க்க முடியுமென தோன்றவில்லை.

ஆகவே தமிழை ஆங்கில  [ரோமன்[ எழுத்துக்களிலேயே வாசிக்க முடியும் என்றால் மிக எளிதாக தமிழ்க்குழந்தைகள் தமிழில் ஈடுபடமுடியும். எழுத்துவடிவம் என்பது மொழி அல்ல. சொற்களும், சொற்பொருளான பண்பாடும், அப்பண்பாட்டின் விளைவான இலக்கியங்களும்தான் மொழி. எழுத்துவடிவங்கள் மாறிக் கொண்டேதான் இருக்கின்றன. தங்கள் எழுத்துவடிவை மாற்றிக்கொண்ட மொழிகள் எவையும் அழியவில்லை, அவை மேலும் தழைக்கவே செய்திருக்கின்றன. மொழியின் எழுத்துருவை மாற்றலாம், ஆனால் அயல்மொழிச் சொற்கள் கலப்பதை கடுமையாக தடுக்கவேண்டும். அதுவே இன்றைய சூழலில் செய்யக்கூடுவது.

ஆனால் நம்மூரில் இதை மிகையுணர்ச்சியுடன் அணுகுகிறார்கள். மொழிப்பற்று என்பது ஒருவகை அடையாள வெறியாக இங்குள்ளது. மொழியின் அடிப்படைகளை கற்றுக் கொள்வதில்லை, இலக்கியங்களை பொருட்படுத்துவதில்லை. மொழி அழிவதைப் பற்றியும் கவலை கொள்வதில்லை. மொழிப்பகைவர் என எவரையாவது உருவகித்து அவர்களை வசைபாடினால் மொழி வெல்லும் என ஒரு பாவனை இங்குள்ளது. தமிழை அதிகம்பேர் பேசி வாசிக்கும்போதே அது வாழும் மொழி. இதை  தமிழ்ப்பற்றை நடிக்கும் அரசியல்வாதிகள் ஏற்க மறுக்கிறார்கள். அவர்களுக்கு நிதர்சனம் முக்கியமல்ல, தங்களுடைய மூர்க்கமான பற்றுகளும் கற்பனைகளுமே முக்கியம்

இந்தியமொழிகளை ரோமன் எழுத்துருவில் எழுதுவது இயல்பான ஒரு நவீனமயமாக்கம். உலகமயமாக்கம் அது. பேரறிஞர்கள் மிக நெடுங்காலம் முன்னரே இதைச் சொல்லியிருக்கிறார்கள். உதாரணம், பி.ஆர்.அம்பேத்கர். அவருடைய பரிந்துரையின் பேரிலேயே இந்தியமொழிகளை ஆங்கில எழுத்துக்களில் எழுதுவதற்கான ஆய்வுகளை நிகழ்த்த இந்திய அரசு முயன்றது. மொழிசார்ந்த அடிப்படைவாதம் அந்த முயற்சிகளை வளரவிடவில்லை.

ஒரு சோதனை முயற்சியாக புலம்பெயர்ந்த மக்கள் சிலர் ஓர் அமைப்பை உருவாக்கி, தமிழை ஆங்கிலத்தில் எழுதி படிப்பதற்கான சில பொதுநெறிகளை வகுத்து அதை குழந்தைகளுக்குப் பயிற்றுவித்துப் பார்க்கலாம். கூகிள் தட்டச்சில் தமிழை எழுத என்னென்ன பொதுநெறி உள்ளதோ அதையே எழுத்திலக்கணமாகக் கடைப்பிடிக்கலாம். தமிழ்ச்சொற்களை ரோமன் எழுத்துக்களில் வாசிக்கவும் உச்சரிக்கவும் சொல்லிக் கொடுக்கலாம். ஆறுமாதங்களில் ஆயிரம் சொற்களைச் சொல்லிக் கொடுக்க முடியும். ஓராண்டில் தமிழை சாதாரணமாக வாசிக்கவைக்க முடியும்.

அக்குழந்தைகளுக்கு தமிழ் எழுத்துருக்களே அறிமுகமாகவில்லை என்றால் அவர்கள் தமிழை ஆங்கில வடிவிலேயே கற்பது மிக எளிது. எழுத்துக்களுடன் உச்சரிப்பை இணைக்கும் ஒரு மென்பொருள் உருவாக்கப்பட்டால் போதும். ammaa என்றால் அம்மா என்று அது ஒலிக்க வேண்டும். சில முறை ஒலித்தாலே அந்த எழுத்துக்கள் அந்த ஒலியாக மூளையில் பதிந்துவிடும். அதன்பின் அந்த எழுத்துக்களை அம்மா என வாசிப்பது இயல்பாக நிகழும். அதன்பின் எழுத்து எழுத்தாக வாசிக்கவேண்டாம், அந்த சொல்லையே அம்மா என அவர்கள் ஒரு கணத்தில் வாசிப்பார்கள். தமிழ் எழுத்துருவில் பழகிய நமக்கு தமிழை ஆங்கிலத்தில் வாசிக்க கடினமாக இருப்பதை வைத்து இதை குழப்பிக் கொள்ளக்கூடாது. இன்று நாம் அனைவருமே தங்கிலீஷில் தட்டச்சு செய்கிறோம். எப்படி கையும் மனதும் பழகின?

இன்று புலம்பெயர்ந்த, ஆங்கிலம்வழி கல்விகற்கும் குழந்தைகளுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கும்போது உருவாகும் பெரும் சிக்கல் அவர்கள் மிகவிரைவாக எழுத்துக்களை மறந்துவிடுவதுதான் என்பதைக் காணலாம். நினைவுகூர்ந்து நினைவுகூர்ந்து வாசிப்பார்கள். ஆகவே ஒரு பத்தி வாசிப்பதற்குள் மூளை களைப்படைந்துவிடும். அந்தச் சிக்கலை தவிர்ப்பதற்கான வழி இது. எவராவது ஒருசிலர் முயன்று பார்க்கலாம். இதன்பொருள் இன்றைய எழுத்துவடிவை கைவிடவேண்டும் என்றல்ல. அது இருக்கட்டும், தேவையானவர்கள் பயன்படுத்தட்டும். அதை கையாள கடினமாக இருக்கும் தலைமுறையினருக்கு இன்னொரு வாய்ப்பு இருக்கவேண்டும் என்பதுதான் என் பரிந்துரையின் நோக்கம். அவர்கள் தமிழிலக்கியத்தை வாசிக்க, தமிழ்ப்பண்பாட்டை அறிய வழி இருக்கவேண்டும்.

தமிழகத்தில் பத்துகோடி மக்கள் வாழும்வரை தமிழ் இங்கே இருக்கும். ஆனால் இன்றைய போக்கு தொடர்ந்தால் தமிழ் வெறும் பேச்சுமொழியாக, மருவிய நிலையில் மட்டுமே நீடிக்கும். அது அறிவுத்தளமொழியாக நீடிக்கவேண்டுமென்றால் அதை இளையதலைமுறையினர் பரவலாக வாசிக்கவேண்டும்.அதன் நவீன இலக்கியங்களும் மரபிலக்கியங்களும் அவர்களின் அன்றாடவாசிப்பில் இருக்கவேண்டும். அதற்கான வழி இது.

ஜெ

முந்தைய கட்டுரைஇலக்கிய நிதிவசூல்கள்
அடுத்த கட்டுரைஅஞ்சலி: பிரான்ஸிஸ் கிருபா