குமரித்துறைவி பற்றி…

குமரித்துறைவி வாங்க

அன்பிற்கினிய ஜெ,

கடந்த சில மாதங்களாகவே எனக்கு ஆழ்வார்களின் பாசுரங்களின் மீது மிகுந்த ஈடுபாடு. தற்செயலாக திரு மாலோல கிருஷ்ணன் – ரங்கநாதன் இருவரும் பாடிய ஆண்டாளின் திருப்பாவை பாசுரங்களை கேட்க வாய்த்தது. ஆழ்வார் பாடல்கள் புரிய ஆரம்பித்ததற்கு காரணம் அவை இசைப்பாடல்களாக கேட்க வாய்த்ததுதான். பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் அவர்கள் மார்கழி மாதம் தினமொரு திருப்பாவை பாடலுக்கு விளக்கம் சொன்னார். பின்னர் இராமானுஜ நூற்றெட்டந்தாதி உட்பட அனைத்து ஆழ்வார் பாடல்களையும் இசைப்பாடலாகவே கேட்டேன். பாடுபவரின் குரல் ஏற்ற இறக்கங்கள், பண்களின் இழுவைகளும் அழுத்தங்களும் அப்பாடலுக்கு முழுமையான விளக்கத்தை அளித்து விடுவதை கண்டேன்.

பன்னிரு ஆழ்வார்களில் பெரியாழ்வார் மற்றும் ஆண்டாளின் இறைபாவங்களே என்னை உருக்கியது. இவர்கள் இருவருக்கும் பெருமாளும் கூட மனிதன்தான். பொதுவாக பக்தியுடையோர் யாவருக்கும் ஏதாவது நேர்ச்சை இருக்கும். முக்தியாவது கேட்பார்கள். பெரியாழ்வார் கண்ணனை தன் பிள்ளையாகவே பாவிக்கிறார். பெருமாளுக்கு கண்ணேறு கழிக்கிறார். அவன் சிறுநீர் துளி பட்டு சிலிர்த்ததாக பாடுகிறார்.

ஆண்டாள் கண்ணனை தன் காதலனாக, கணவனாக பார்க்கிறார். வாரணம் ஆயிரம் சூழ வலம் வர கண்ணனை கரம்பிடிப்பதாக கனா காண்கிறாள். செம்புலம் சேர்ந்த நீர்த்துளி போல் கண்ணனோடு கலக்கிறாள். அதை அவள் கெஞ்சவில்லை. உரிமை என்கிறாள். நான் சூடிக்கலைந்த மாலையை கண்ணன் தன் கருணையால் ஏற்று கொண்டான் என சொல்லவில்லை. காதலால் அது நிகழ்ந்தது. தெய்வ அணுக்கம் பக்தியால் நேரும்போது அது வெறும் சடங்காகிவிட கூடும். ஆனால் அது தன் குருதியுறவாகவோ அந்தராத்ம விழைவாகவோ பாவித்து வெளிப்படுகையில்தான் தெய்வமிறங்கிவிடுகிறது.

இடங்கொண்டு விம்மி இணை கொண்டு இறுகி என அபிராமியின் கொங்கைகளை அபிராமிபட்டன் பாடுகிறான். பிரபஞ்சத்தின் ஆதியந்த செளந்திரி என வர்ணிக்கிறான்.பாரதியார் கண்ணனை தன் பிள்ளையாக, காதலனாக கண்டு திளைக்கிறார்.

இவர்களெல்லாம் பக்திக்கும் மேல் சென்று கனிந்தவர்கள். பக்தி தெய்வத்தை மேலானதாக்கி பக்தனை தன்னிழிவுக்குள்ளாக்கி விடுகிறது. நாகரிக மனிதனுக்கான ஞான வழி தெய்வத்தை தன்னுறவாகவே கருதுவதே. சைவத்தில் சுந்தரமூர்த்தி நாயனார் பெருமானோடு தோழ மார்க்கம் கொண்டிருந்தாலும், தில்லை வாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் என தான் யாருக்கெல்லாம் அடியார் என பட்டியலிடுவது முரணாக இருக்கிறது.

நவீன இலக்கியம் எழுதுபவர், வாசிப்பவருக்குள்ளே தெய்வத்தை உலவ விடுவதுதான் அதன் சிறப்பு. அல்லது இந்த பிரபஞ்சத்தில் தெய்வம் திகழும் நிலைகளை சொல்வது. அது மனிதர்களுக்கு அப்பாற்பட்டதல்ல. அவனுக்கு சாத்தியமற்றதுமல்ல. அந்த சாத்தியத்தை எழுதி இசைத்து காட்டியவர்கள் விஷ்ணுசித்தர், ஆண்டாள், பாரதியார், அபிராமி பட்டர் போன்றோர். அந்த வகையில்தான் தங்களின் குமரித்துறைவி நாவலும் வருகிறது.

மதுரைக்காரர்களுக்கு மீனாட்சி என்பவள் வளர்ந்த முது தாயல்லள். மதுரை வட்டாரத்தில் எல்லோர் வீட்டிலும் காலந்தோறும் வயதேறாமல் வசித்து வரும் செல்ல மகள்தான் ஆத்தா மீனாட்சி. புலவரென்பதால் குமரகுருபரர் பிள்ளைத்தமிழில் பாடி அரங்கேற்றினார். மதுரையின் எளிய மக்கள் பாடும் பிள்ளைத்தமிழையே அவர் வரிவடிவில் எழுதியிருக்கலாம்.

2017 ல் காவல் கோட்டம் நாவலை முதலில் வாசித்தேன். எங்கள் ஆத்தா மீனாட்சி புக்ககம் திரும்பி வரும் காட்சியை இரண்டு பக்கங்களுக்கும் குறைவான பக்கங்களில் விவரித்திருப்பார். அந்நாவலோ ஆயிரத்து எழுபது பக்கங்கள் கொண்டது. அவ்வப்போது சில தகவல்களுக்காக சில பக்கங்கள் வாசிப்பது நீங்கலாக, இருமுறை அந்நாவலை முழுமையாக வாசித்திருக்கிறேன். எங்கள் ஆத்தா மீனாட்சி நகர் திரும்பும் காட்சியும், மதுரைக்கோட்டையை இடிப்பதற்கு முன் கோட்டையின் காவல் தெய்வங்களை தரையிறக்கி, செல்லத்தம்மன் கோயில் வளாகத்தில் கொண்டு நிறுத்தும் காட்சிகள் வரும் பக்கங்களை வாசித்ததும், அது பற்றி பலருடன் பேசியதும் சிந்தித்ததையும் நான் கணக்கிலேயே வைத்து கொள்ளவில்லை. சு வெங்கடேசன் தன் அரசியல், அபிலாசைகளையெல்லாம் கைவிட்டாடிய சன்னதம். நவீன இலக்கியத்தின் அழகு இது என்பேன்.

கினியாழ்வினின் கதை இல்லையென்றால் பின்தொடரும் நிழலின் குரல் நாவலின் மற்ற பக்கங்கள் என்ன பொருள் கொள்ளும்? கிறிஸ்துவின் மலைப்பிரசங்கம் பற்றிய உரைகள் இடம்பெறாமல் போயிருந்தால் புத்துயிர்ப்பு நாவலின் இலக்கென்ன? டால்ஸ்டாய்தான் யார்?

சிந்திக்க தெரிந்தவன்தான் சிரிக்கிறான். இலக்கியம் வெற்றுச் சிரிப்புகளை விதைப்பதில்லை. பேரிலக்கியங்கள் அனைத்துமே மனிதனை அழச்செய்கின்றன. அந்த உச்சியில் உழன்று வெள்ளுயிராகி  அரும்பும் முறுவல், முறுகி முறுகி வெடிக்க வைக்கின்றன. அங்கு மனிதன் சிரிக்கிறான். குழந்தை போல பொக்கையான  புனித சிரிப்பு. வளர்ந்த மனிதன் சிரிப்பதற்கு அழுகை அவசியப்படுகிறது, வலி நிறைந்த வாழ்க்கை போல. இலக்கியத்தால் வரும் அழுகை என்பது அந்த பொக்கைச்சிரிப்புக்கான தயாரிப்புகள்தான்.

குமரித்துறைவி நாவலை வாசிக்கையில் என் கண்கள் நீர்கட்டிக் கொண்டது எத்தனை முறையோ தெரியவில்லை. இந்த கடிதத்தை எழுதி முடிப்பதற்குள் ஒரு சொட்டாவது உருண்டு இதில் விழுந்து அதற்கு சாட்சியாக வேண்டும்.

முன்பெல்லாம் பெருங்கோயில்களில் வழிபட விருப்பம் காட்டியதில்லை. பல கோயில்களின் வாசல்வரை சென்று கோயிலுக்குள் செல்லாமல் திரும்பியிருக்கிறேன். கன்னியாகுமரியும் அதிலுண்டு. அந்த இழப்புகளை எங்ஙனம் ஈடு செய்வேன் என தெரியவில்லை.

சுமார் அறுபதாண்டுகள் எங்கள் ஆத்தா எங்கள் மண்ணில் இல்லை. எத்தனை ஆசைகளோடு தன் புக்ககம் திரும்புகிறாளெனில் எத்தனை துயரங்களோடு இந்நகர் நீங்கியிருப்பாள்? ஆனால் மதுரை நகர் விட்டு போகும் வழியில் கொண்டையத்தேவன் கண்டது குறும்புசிறுமியையல்லவா? சுந்தரேசனும் உடனிருக்க பிள்ளைக்கனாக்களோடு பிறந்தகம் வருகிறாள் எங்கள் ஆத்தா மீனாட்சி.

எங்கள் ஆத்தா மீனாட்சி இம்மாமதுரை நகர்விட்டு போகும் போது எத்தனை உயிர்கள் என்னென்ன சொல்லி ஒப்பு வைத்திருக்கும்? இந்நகர்த்தெய்வங்களின் அழுகையை யாரறிவார்?

அவர் வேணாடு விட்டு கிளம்பும் பொது வேணாட்டுயிர்கள் என்ன உணர்ந்த்தனவோ எங்கனம் கலங்கியழுதனவோ அதைவிட கூடுதலாகவே எம் நகர் மக்களும் அழுதிருப்பர்.அவளை தன் வலத்தொடையிலும், உலகளந்த பரம்பொருள் ஆதிகேசவ பெருமாளை இடத்தொடையிலும் இருக்க, எதிரில் சுந்தரேச பெருமானைக்காணும் வேணாட்டு மகாராஜாவின் மனம் போல பெரும்பேறுடைய பிறிதொன்றுண்டோ?

அங்கயற்கண்ணியை புக்ககம் அனுப்புவதே சரி என, சிவீந்திரம் பெரிய திருமேனியின் கூற்றை வாசித்த போது, கருவேல முள்ளின் நுனியிறாங்க இடமில்லாமல் உடம்பெல்லாம் சிலிர்த்தது.

மகாராஜா பேசும் காட்சிகளிலெல்லாம் எனக்குள்ளிருக்கும் எல்லாம் உருகியோடின. மகளின் முன் பானகம் அருந்தி அவள் முன் அயர்ந்துறங்கும் காட்சியை கண்ட நான் பேறு பெற்றேன். அடுத்த வரியில் உறைந்தே போனேன். “அன்னையின் முலைப்பால் உண்ட பிள்ளை போல.”  இது ஜெயமோகன் விரல்வழியே எங்கள் ஆத்தா சுரத்தி அருளிய அமுதம். அந்தச் சுவையுணர முடிந்ததே சாமி! தந்தைக்கு மகளும் அன்னைதானே சாமி!

இந்நாவல் முழுக்க என்னையொரு தந்தையாகவே பெரும்பாலும் உணர்ந்தேன் என்பதற்கு என் மகள் குழலினியா மீன ராசி திருவோணத்தில் பிறந்தவள் என்பதும் காரணம். திருப்பூட்டுக்கு முன் மகாராஜா மீனாளுக்கு திலகமிடும்போது ‘இதுதான் கடைசி. இனி உன் மகளை தொட முடியாது’ என்ற வரிகள் என்னை உலுக்கி விட்டது. என் மகளை ஆத்தா மீனாட்சி என்றே கொஞ்சுவேன். என் மகளும் பிறந்தகம் நீங்கி புக்ககம் செல்வாள் எனும் எதிர்காலத்துக்கு ஆயத்தமாயிருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியது.

கதைகளிலிருந்து வாழ்க்கையின் சுரங்களை புரிந்து கொள்ளவேண்டும் என்பார் ஜெயகாந்தன். குமரித்துறைவி வெறும் கதையல்லவே! வரலாறு! மக்கள் மனங்களில் உறைந்த வரலாறு!

இந்நாவலை வாசிக்க தொடங்கிய போதிருந்து இப்போது இக்கடிதத்தை முடிக்கும் இத்தருவாய் வரை அவ்வப்போது மழை வந்தது. சாரலாக, தூறலாக, வழிவாக, ஒழுகலாக, பொழிவாக. இப்போதும் சொட்டிக்கொண்டே இருப்பதற்கு, இது பருவ காலம் என்பதொன்றே காரணம் என என்னால் நம்ப முடியவில்லை. நம் புரிதலுக்கு அப்பாற்பட்ட எல்லையற்ற, அளவற்ற, முடிவற்ற அருளுக்கு சாட்சிகளிருக்கலாம். காரணங்கள் அத்தனை வலிமை கொண்டதல்லவே!

குமரித்துறைவி நாவல் வாசிப்பவரை வெள்ளுயிராக்கவல்லது. ஏனென்றால் அன்னை மீனாட்சி மீண்டும் மதுரையில் குடியேறினாள் என்பதல்ல. எல்லோர் வீட்டுக்கும் வருவதாகவே உணர செய்கிறது. ஆத்தா மீனாட்சி எப்போதும் எங்கள் வீட்டு செல்லப்பெண்தான்.

அன்பன்
அ மலைச்சாமி
கண்ணூர், கேரளா

***

அன்புள்ள மலைச்சாமி,

குமரித்துறைவி வெளிவந்தபோது உணர்ச்சிக்கொந்தளிப்பான கடிதங்கள் ஏராளமாக வந்தன. எவற்றையும் வெளியிடவேண்டாம் என முடிவு செய்தேன். ஏனேன்றால் அன்று அந்த உணர்வெழுச்சிகள் அந்தரங்கமாகவே இருக்கவேண்டும் என நினைத்தேன். இன்றும் அவ்வாறே நினைக்கிறேன். அந்த உணர்வெழுச்சி அந்தரங்கமானது, ஆகவே புனிதமானது.

இன்று உங்கள் கடிதம் அந்நினைவுகளை மீண்டும் எழுப்புகிறது. அது ஒரு நிறைந்த ஆக்கம். மணச்சடங்குகள் போன்ற மங்கலநிகழ்வுகளில் என் படைப்புக்களை பரிசாக அளிக்கும் வாசகர்கள் பலர் உண்டு. சங்கசித்திரங்கள் அறம் வரை பல நூல்கள் அவ்வாறு அளிக்கப்பட்டுள்ளன. நூல் எதுவானாலும் நன்று. ஆனால் குமரித்துறைவி அந்த கொடையை மெய்யாகவே மங்கலமாக்கக்கூடிய ஒன்று

ஜெ

***

குமரித்துறைவி இரு கலைஞர்கள் வான் நெசவு
பொலிவதும் கலைவதும் தங்கப்புத்தகம் ஆனையில்லா
முதுநாவல் ஐந்து நெருப்பு மலைபூத்தபோது
தேவி எழுகதிர் அந்த முகில் இந்த முகில்
கதாநாயகி ஆயிரம் ஊற்றுகள் உடையாள்
பத்து லட்சம் காலடிகள்

முந்தைய கட்டுரைதுறவும் இலக்கியவாசிப்பும்- ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைவெங்கட் சாமிநாதனின் ‘கலை அனுபவம் வெளிப்பாடு’