துப்பறியும் கதையும் திகில்கதையும்

அன்புள்ள ஆசிரியருக்கு,

“ஜெயமோகன் இந்து அறத்தைத் தான் பேசுவாரா” என்று கேட்ட நண்பனுக்கு “பத்துலட்சம் காலடிகள்” கதையை அனுப்பினேன். அவர் அதைப் படித்துவிட்டு “இது இலக்கியமே அல்ல. சாதாரண துப்பறியும் கதை” என பதிலளித்தார். இது இலக்கியம் தான் என்று அவருக்கு தர்க்கப்பூர்வமாக என்னால் பதிலளிக்க முடியவில்லை.

இலக்கியம் குறித்து தர்க்கப்பூர்வமாக பதிலளிக்க முடியாத போது உங்களிடம் தான் வர வேண்டியிருக்கிறது. நண்பர்கள் கூடி “பேய்க்கதைகள் எப்படி இலக்கியம் ஆகிறது” என்ற தலைப்பில் நேற்றுப் பேசினோம். நான் உங்கள் துப்பறியும் கதையானதும் பேய்கதையானதுமான “ஓநாயின் மூக்கு” கதையைப் பற்றி விளக்க முற்பட்டுத் திக்கினேன்.

கேரளாவின் நிலவுடைமைச் சமூகமான நாயர் சாதி உருவாகி வந்த வரலாற்றையும் அதில் சிறுபகுதியினரின் வீழ்ச்சி குறித்து சுருக்கமாகவும், நுட்பமான வழக்காறுகளாலும் – “குடும்ப அந்நியம் நின்னு போவது” “அம்மவீடு” “துறை கேற்றல்” – சொல்ல முயலும் கதை “கலெக்டிவ் டிஸ் ஆர்டர்” என்கிற கூட்டு மனநோயைப் பேசி கதைக்குள் செல்கிறது. தர்க்கபூர்வமாகவே செல்லும் கதை யக்ஷி மேசினி சாபம் என்று அதர்க்கதுக்குள்ளும் சென்று விரிகிறது. ஒரு கட்டத்தில் தர்க்கத்தையும் அதர்க்கத்தையும் இணைக்கிறது. கதையை வாசித்து முடித்ததும் பெரிய திகைப்பே ஏற்பட்டது. இந்தத் திகைப்பு வெகுஜன துப்பறியும் கதைகள் தருவதில்லை.

இதைக்குறித்து மேலும் ஒரு விவாதத்தில் எழுத்தாளர் சுரேஷ் பிரதீப் உங்களுடைய “தம்பி” கதை குறித்து தான் எழுதிய கடிதத்தையும் அதற்கு நீங்கள் அளித்த பதிலையும் தந்து உதவினார். அது மிகவும் சிறப்பான தர்க்கப்பூர்வமான பதிலாக இருந்தது.

  • வரலாற்றின் பெருங்கொடுமைகளை எப்படி காலம் மிக இயல்பாக மண்மூடச்செய்து விடுகிறது என்னும் திகைப்பு.
  • எதிர்வினையாற்ற முடியாதவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் அப்படியே மறைந்துவிடத்தான் வேண்டுமா என்ற சீற்றம்
  • மானுட உறவுகளுக்குள் ஆழத்தில் இருக்கும் குரூரத்தின் உண்மையான பொருள் என்ன என்னும் அலைக்கழிப்பு.
  • இறப்பு என்பது வாழ்வின் நிகிழ்வொழுக்கிற்கும் உணர்ச்சிகளுக்கும் என்ன பொருள் எனும் தேடல்.
  • தான் என நாம் உணர்வது அன்றாடச்சூழலால் வகுத்துக் கொள்வதா அன்றி வரலாற்றால் தொகுக்கப்படுவதா எனும் ஊசலாட்டம்.

ஒரு கேள்வியைத் துரத்தி அதைக் கண்டறிந்து கொண்டதில் ஏற்படும் மகிழ்ச்சி இன்பகரமானதாக இருக்கிறது. கற்றலின் மகிழ்ச்சி. இலக்கியத்தில் தர்க்கத்தை மீற வேண்டும் என்று சொல்லும் உங்களிடம் தான் தர்க்கப்பூர்வமாகவும் பதில் கிடைக்கிறது.

ஆசிரியருக்கு அன்பும் நன்றியும்,

மனோஜ்

***

அன்புள்ள மனோஜ்,

பொதுவாக இரண்டுவகையானவர்களிடம் விவாதிக்க முடிவதில்லை. முன்முடிவுகளும் காழ்ப்புகளும் கொண்டவர்களிடம் நீங்கள் என்ன பேசினாலும் அதற்கு வழக்கமான பதில்களுடன் கடந்துசெல்வார்கள். அறியாமையும் முரட்டுத்தனமும் கொண்டவர்களிடம் எதையுமே சொல்ல முடியாது. இலக்கியம் என்பது கற்பனைசெய்யும் திறனும், புனைகதைக்கு தன்னை அளிக்கும் திறந்த உள்ளமும் கொண்டவர்களுக்கு மட்டுமே உரியது. அரசியலாளர்களால் அவற்றை வாசித்து எதையுமே அடையமுடியாது. அவர்களுக்கு படைப்புகளை பரிந்துரைப்பதே வீண்.

தமிழ்ச் சிற்றிதழ் உலகம் அரைநூற்றாண்டுச் சுருங்குதலுக்கு உள்ளான ஒன்று. ஏனென்றால் அது இயல்பான பரிணாமம் கொண்டது அல்ல. தமிழில் பேருருக்கொண்டிருந்த வணிக எழுத்துக்கான எதிர்வினை அது. ஆகவே எவையெல்லாம் வணிக எழுத்தில் இருந்தனவோ அவையெல்லாம் இலக்கியமல்ல என்று எண்ணிக்கொண்டனர். எவையெல்லாம் அங்கே இல்லையோ அவையெல்லாம் எப்படி எழுதப்பட்டாலும் இலக்கியம் என கருதினர்.

ஆகவே இங்கே இரண்டுவகையான எழுத்தே இலக்கியமென கருதப்பட்டது. அந்தரங்கமான டைரிக்குறிப்பு, குடும்பசூழல் பற்றிய எழுத்து, பாலியல்பூடக எழுத்து ஒருபக்கம். யதார்த்தச் சித்தரிப்பு இன்னொரு பக்கம். இரண்டிலும் முக்கியமான படைப்புக்கள் உள்ளன. ஆனால் இந்த இருவகைக்குள் வந்தமையாலேயே ஒன்றுக்கும் உதவாதவையும் இலக்கியமென கருதப்பட்டன. இலக்கியத்திற்குள் வரலாறு, பண்பாட்டுமரபு, தொன்மங்கள், தத்துவம் எவையும் இடம்பெறலாகாது என கருதப்பட்டது. துப்பறியும் கதை, பேய்க்கதை, மிகுபுனைவு எல்லாமே விலக்கப்பட்டன.

நான் இங்கே நுழையும்போது வேறொரு இலக்கியச் சூழலில் இருந்து பயிற்சிபெற்று வந்தேன். ஆகவே இந்தக் குறுகலை ஏற்றுக்கொள்ளவில்லை. புதுமைப்பித்தனே எல்லா வகைமையிலும் எழுதியிருப்பதை எப்போதுமே சுட்டிக்காட்டினேன். மேலும் நான் எழுதவந்தபோது நவீனத்துவ அழகியல் உலகமெங்கும் உடைந்தது. எல்லா வகை எழுத்தும் இலக்கியமே, அவை பன்முக வாசிப்புக்கும் வாசகவிரிவுக்கும் இடமளிக்கும் என்றால் என்னும் பார்வை உருவாகியது. துப்பறியும் நாவலான உம்பர்டோ எக்கோவின் நேம் ஆஃப்த ரோஸ் போன்றவை பேசப்படலாயின. சிற்றிதழ்மரபே விரிந்து மேலும் வாசகப்பரப்பு கொண்டதாகியது. வணிக எழுத்து அதன் வீச்சை இழந்தது.

எல்லாமே புனைவுதான். ‘இது அப்பட்டமான யதார்த்தம்’ என்றும்  ‘இது என் அந்தரங்க வெளிப்பாடு’ என்றும் சொல்லி முன்வைக்கப்படுபவையும் புனைவுகள்தான். நாகர்கோயிலை எழுதுவதும் அஸ்தினபுரியை எழுதுவதும் புனைவுதான். இதுதான் சென்ற முப்பதாண்டுகளில் இலக்கியம் உருவாக்கிக் கொண்ட தெளிவு. ஏன் அந்த புனைவு நிகழ்கிறது, எதை முன்வைக்கிறது, என்ன விளைவை உருவாக்குகிறது என்பதே முக்கியமானது.

பேய்க்கதையோ துப்பறியும் கதையோ அது வாழ்க்கையைப் பேசுகிறது என்றால், வரலாற்றையும் பண்பாட்டையும் ஊடுருவி ஆராய்கிறது என்றால், வாசகன் கற்பனையில் விரித்துக்கொண்டு சென்றடையும் விரிவை அளிக்கிறதென்றால் அது இலக்கியமே.  ‘பத்துலட்சம் காலடிகள்’ யார் செய்தது குற்றத்தை என்று தேடிச்சென்று, குற்றவாளியை கண்டடைந்ததும் நின்றுவிடும் கதை அல்ல என்பது இலக்கியத்தில் ஒன்றாம் வகுப்புப் புரிதல் கொண்டவர்களுக்கே தெரிந்துவிடும்.

அது முன்வைப்பது ஒரு கவித்துவப் படிமத்தை. அதன் தலைப்பே அதைச் சுட்டுகிறது. அந்தப் படிமம் வாசக உள்ளத்தில் விரிவதனால், அதன்வழியாக ஒரு பெரிய சமூகப்பரிணாமம், ஒரு வரலாற்று மாறுதல் தெரியவருவதனால் அது இலக்கியம். அது தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த கதைகளில் ஒன்று என உணர அடிப்படை நுண்ணுணர்வு இருந்தாலே போதும்.

அதையே ஓநாயின் மூக்கு கதைக்கும் சொல்வேன். நீங்கள் வாசித்ததுபோல அது வரலாற்றின் வண்டல் என நம் ஆழ்மனதில் தங்கியிருக்கும் குற்றவுணர்ச்சிகளை, பழிகளைப் பற்றிப் பேசும் படைப்பு. நாம் இன்று வாழ்கிறோம், நம் உள்ளமோ ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக விரிந்துகிடக்கும் வரலாற்றுப்பரப்பில் வாழ்கிறது. அங்கிருந்து வருகின்றன நமது ஆழுள்ளத்துக் கொந்தளிப்புகள். அந்த முரண்பாட்டைப் பேசுவது அக்கதை.

துப்பறியும்கதை அல்லது திகில்கதை அல்லது அறிவியல்புனைவு என்பதெல்லாம் வடிவங்கள் அல்லது கருவிகள் மட்டுமே. ஒரு குறிப்பிட்ட விஷயத்தை கூர்மையாகச் சொல்ல அவை உதவுகின்றன. குறுப்பாகச் சொல்லவேண்டுமென்றால் சம்பந்தமில்லாத பலவற்றை தொகுத்து ஒரு பெரும்படிமத்தை உருவாக்க துப்பறியும்கதை என்னும் வடிவம் உதவியானது. உளவியல் சிக்கல்களுக்குள் செல்ல, தொன்மங்களைக் கையாள திகில்க்கதை வடிவம் உதவியானது.

மீண்டும் சொல்லவேண்டியது இதுதான், இலக்கியம் எல்லாருக்குமானது கிடையாது. அதை இலக்கிய நுண்ணுணர்வு அற்றவர்களுக்குச் சொல்லியெல்லாம் புரியவைக்க முடியாது.

ஜெ

***

குமரித்துறைவி

வான் நெசவு இரு கலைஞர்கள்

பொலிவதும் கலைவதும்

தங்கப்புத்தகம்

“ஆனையில்லா”

முதுநாவல்

ஐந்து நெருப்பு

மலைபூத்தபோது

தேவி

எழுகதிர்

அந்த முகில் இந்த முகில்

உடையாள்

கதாநாயகி

ஆயிரம் ஊற்றுகள்

பத்துலட்சம் காலடிகள்

ஞானி

 

முந்தைய கட்டுரைதங்கப்புத்தகம்
அடுத்த கட்டுரைதற்சிறை – கடிதங்கள்