வயதடைதலும் வயதாவதும் -ஒரு கடிதம்

வயதடைதல்

திரு. ஜெயமோகன் ஐயா அவர்களுக்கு,

வணக்கம்

வயதடைதல் – இக்கட்டுரையில் நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். வயதடைதலின் போது ஒரு பிரம்மசரியத்தை நீங்கள் கடைப்பிடித்தாகவேண்டும் என்று. என் வட்டாரத்தில் நான் சந்திக்கும் முதியவர்களின் சிக்கல்கள்.

எப்படி ஒரு பெண்ணோ அல்லது ஆணோ தன்னை தனது மற்ற எல்லா சவால்களிலும் இருந்து தற்காத்துக்கொண்டு வயதடைதலின் போது பிரம்மசரியத்தை நோக்கி பயணிப்பது.

அதிகப்படியான முதியவர்கள், வயதடைந்த காலத்திலும்  சொந்தமாக உழைத்து வாழவேண்டிய கட்டாயம், கலாச்சார சிக்கல்கள் – குடும்பத்தோடு ஒட்டி வாழவேண்டும் என்ற நிபந்தனைகள், பேரக்குழந்தைகளின் பாதுகாவலர், உடல் உபாதைகள், முறையாக வழி காட்டுதலின்றி நான்கு சுவற்றிற்குள் சிக்கித் தவிப்பு.

அதற்கும் மேலாக, குடும்ப வாழ்க்கை என்ற பயணத்தில் அவர்களது தனி விருப்பங்களும் திறமைகளும் தொலைந்து விடுகின்றன. வயதடைந்த காலத்தில் அவர்களுக்கு அவர்களை அடையாளம் காணமுடியாத இக்கட்டான மனநிலை.

நகர்புறங்களில், தனது 60 வயதில் அனைத்தும் அடைந்த பின்பும், தனது குழந்தைகளுடனும் ஒன்றி வாழமுடியாமல் தான் இத்தனை வருடம் உழைத்து உருவாக்கிய வசதிகளை முழுமையாக அனுபவிக்க நல்ல உடல் மற்றும் மனநிலமையும் இன்றி ஓர் கசப்பான வாழ்நிலை. வேலையாட்களின் பாதுகாப்பில் அவர்களது கடைசி காலங்கள் மரணத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறது.

இப்படி ஒரு கசப்பான வயதடைதலில் இருந்து எப்படி ஒவ்வொரு மனிதனும் தன்னை ஒரு காலகட்டத்தில் இருந்தே பயிற்சிகொண்டு நீங்கள் கூறியது போல முழு விருப்பத்துடனும் ஒரு பிரம்மசரியத்தை கையெடுக்க முடியும்.

உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.

நன்றி
எம் கிருஷ்ணப்ரியா

***

அன்புள்ள கிருஷ்ணப்பிரியா,

ஓர் ஆரம்ப வாசகர் என்பதனால் இக்கடிதம்.

நான் எழுதியதற்கும் நீங்கள் புரிந்துகொண்டிருப்பதற்கும் சம்பந்தமே இல்லை. நான் ‘வயதாவது’ பற்றிச் சொல்லவில்லை. முதுமையை எய்துவதைப் பற்றிச் சொல்லவில்லை. மாறாக ஒருவர் வாழ்க்கையில் பல்வேறு படிநிலைகள் வழியாக செல்வதைப் பற்றி பேசியிருக்கிறேன். ஒரு சிறுவன் எந்தக் கல்வி வழியாக ஓரு வளர்ந்த முழுமனிதனாக ஆவான் என்று சொல்லியிருக்கிறேன். முழுக்கமுழுக்க கல்வி பற்றிய கட்டுரை இது. இன்னொரு தடவை கூர்ந்து படித்துப் பாருங்கள்.

குழந்தைப்பருவத்திற்குப் பின் வாழ்க்கையின் ஒரு கட்டத்தை  முழுமையாகவே கல்விக்கு அளித்துவிடுவதைப் பற்றியே அக்கட்டுரையில் பேசப்பட்டுள்ளது. அப்போது கல்வி அல்லாத பிறவற்றுக்கு உள்ளத்தை கொடுக்கக் கூடாது. அந்தக் கல்வி உண்மையான கல்வி என்றால் நம்மை முழுமைப்படுத்தும் ஆகவே மகிழ்ச்சியும் நிறைவும் ஊட்டக்கூடியதாக இருக்கும்.

கல்விக்கு பிறகு உலகவாழ்க்கை. அதன்பின் ஒரு கட்டத்தில் உலகவாழ்க்கையில் இருந்து விலகுவதை நம் மரபு சொல்கிறது. அதையே வானப்பிரஸ்தம் என்கிறது. உலகவாழ்க்கையின் கடமைகளை முடித்துவிட்டு ஒதுங்குவது அது. ஏனென்றால் அதற்குமேல் உலகவாழ்க்கையின் சிக்கல்களை எதிர்கொள்ளும் திராணி இருக்காது. நாம் அறியாத புதிய உலகம் உருவாகி வந்திருக்கும். அந்த இளைஞர்களின் உலகில் நம்மால் நுழைய முடியாது.

இதையே அக்கட்டுரை சொல்கிறது. வயதானால் பிரம்மசரிய விரதம் மேற்கொள்ளவேண்டும் என்று அக்கட்டுரை சொல்லவில்லை. இரண்டு வகையான துறவுகள் உள்ளன. வாழ்க்கைக்கான கல்வியைப் பயிலும்போது முழுமூச்சாக அதில் ஈடுபடுவதற்காக பிற உலகச் செயல்பாடுகளை விலக்குவது ஒரு துறவு. வாழ்க்கையை நிறைவு செய்தபின் உலகியல் செயல்களிலிருந்து விலகுவது இன்னொரு துறவு. நான் பேசுவது அதைத்தான்.

வானப்பிரஸ்தம் என்பது முதுமையில் தன்னை அன்றாட உலகவாழ்க்கையின் சிக்கல்களில் இருந்து கூடுமான வரை விலக்கிக் கொள்வது, அவ்வளவுதான். பொருளியல் சிக்கல்கள், குடும்பச்சிக்கல்கள் ஆகியவற்றில் இருந்து விலகுவது. தன் உள்ளத்தை நிறைவு செய்யக்கூடிய, தன் ஆன்மிக வாழ்க்கைக்கு நிறைவு தரக்கூடிய, செயல்களைச் செய்வது.

அந்தத் துறவு எந்த அளவுக்கு என்பதையெல்லாம் அவரவர் முடிவு செய்யவேண்டும். அதில் நெறிகளெல்லாம் ஒன்றும் இல்லை. உலகியலில் இருந்து ஒதுங்கியபின் செய்யப்பட வேண்டியவற்றை அவர்களே கண்டடையவேண்டும். ஆன்மிகமாக இருக்கலாம், கலை இலக்கியச் செயல்பாடுகளாக இருக்கலாம், சேவையாக இருக்கலாம், அதைப்போன்ற ஏதேனும் செயல்பாடாக இருக்கலாம். அவரவர் இயல்புப்படி, அவர்கள் அதை முன்னரே பழகியிருக்கவேண்டும்.

ஒருவர் அந்த இறுதிக்கால வாழ்க்கையை முன்னரே திட்டமிடவேண்டும். அதற்காகச் சேமிக்க வேண்டும். அதற்குள் வாழ்வுமுறையைச் சுருக்கிக் கொள்ளவேண்டும். அது இயல்வதுதான். அப்படி பலரை எனக்குத் தெரியும்.

அவ்வாறன்றி, எந்த சேமிப்பும் இல்லாமல் கடைசிவரை ஒருவர் வேலை செய்யவேண்டியிருக்கும் என்றால் அது அவரது சொந்தத் தெரிவு. அல்லது எல்லாவற்றையும் பிள்ளைகளுக்கு அளித்துவிட்டு அவர்களுடன் ஒட்டிக்கொண்டு வாழவேண்டுமென ஒருவர் விரும்பினால் அவர் அதை வாழவேண்டியதுதான். நீங்கள் சொன்னதுபோல வாழ்க்கை முழுக்க உருவாக்கிய வசதிகளை அனுபவிக்க வேண்டும் என ஒருவர் ஆசைப்பட்டால் அதன் சிக்கல்களையும் அவர் அனுபவிக்க வேண்டியதுதான்.

நான் சொல்வது பொதுவாக எளிய உலக வாழ்க்கையில் ஊறியவர்களுக்காக அல்ல. வாழ்க்கை முழுக்க பொருள் சார்ந்த உலகவாழ்க்கைக்கு அப்பால் எந்த ஆர்வமும் இல்லாமல், எதையுமே அறியாமல் வாழ்பவர்கள் வயதான காலத்தில் எதையும் புதியதாகத் தொடங்க முடியாது. அவர்கள் அதுவரை வாழ்ந்த லௌகீகமான வாழ்க்கையை, அதன் அத்தனை சிக்கல்களுடனும், அப்படியே வாழ்ந்து முடிக்க வேண்டியதுதான். அவர்களுக்குச் சொல்ல என்னிடம் ஒன்றுமில்லை.

நான் பேசியிருப்பது வாழ்க்கையும் முக்கியம், கூடவே அதற்கு அப்பால் சில தேடல்களும் ரசனைகளும் உண்டு என நினைப்பவர்களுக்காக மட்டுமே.

ஜெ

***

முந்தைய கட்டுரைஇமையத்தின் செல்லாத பணம் – டெய்ஸி பிரிஸ்பேன்
அடுத்த கட்டுரைஊடும்பாவுமென ஒரு நெசவு