வெங்கட் சாமிநாதனின் ‘கலை அனுபவம் வெளிப்பாடு’

வெங்கட் சாமிநாதனின் புத்தகங்களிலேயே, படிக்கக்  கடினமானதாக நான் உணர்ந்தது இப்புத்தகம்தான். இலக்கியம், மரபு, புலமை, சிந்தனை, தத்துவம், சிற்பம், ஓவியம், சங்கீதம் என்று இவருக்குத் தெரியாத சப்ஜெக்டே அல்லது இவர் நுழைந்து புறப்படாத பொருளே  இருக்காதோ என்றுதான் தோன்றுகிறது.

எந்தவொரு விஷயத்தையும் மேம்போக்காகச் சொல்வதில்லை இவர். நுனிப்புல் மேயும் பாணியே கிடையாது. ஆழ்நிலைப் பயணம்தான் எல்லாவற்றிலும். ஒரு குறிப்பிட்ட பொருளில் பல்வேறு பட்டவர்களும் எவ்வாறு செயல்பட்டிருக்கிறார்கள் என்பதை ஒப்பிட்டு நோக்கி, யார் மனதும் புண்படுமோ என்றெல்லாம் யோசிக்காமல், அவர் ஏதேனும் நினைத்துக் கொள்வாரோ அல்லது இவர் அப்படி நினைத்து விடுவாரோ, நட்பு பாழாகுமோ  என்றெல்லாம் நினையாமல் மனதில் தோன்றியதைப் பளிச்சென்று முன் வைத்து, ஒரிஜினல் சரக்கு இதுதான் என்றும், இதுதான் உசத்தி என்றும்  அறுதியிட்டு நிலை நிறுத்தி விடுகிறார்.

அதன் மூலம் வானளாவப் புகழப்பட்ட கலை அம்சம் பொருந்திய விஷயங்களெல்லாம், இவரென்ன இப்படிச் சொல்கிறார் என்று எண்ணும்போது நம் மனதில் மதிப்பு குன்றிப் போகிறது அல்லது வருத்தம் மேலிடுகிறது. அதே சமயம் அவர் சொல்வதை ஒப்புக் கொள்ளவும் வேண்டித்தான் இருக்கிறது.

பழக்கத்திற்கு அடிமையாகிப் போய் ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் பலரும் தேங்கிப் போகிறோம் என்றும், நாம் நினைப்பதுதான் உச்சம் என்ற முடிவில் அதிலிருந்து நகர மறுத்து, அதையெல்லாம் முறியடித்து முன்னே சென்று விட்ட விஷயங்களை எட்டிக் கூடப் பார்க்கத் தவறி கிணற்றுத் தவளையாய் இருந்துவிட்டதை ஒப்புக் கொள்ளவும் மறுக்கிறோம் என்று எடுத்துரைக்கிறார்.

இம்மாதிரிக் கருத்துக்களை ஒரு சாதாரண மனிதன் சொல்லியிருந்தால் கவலைப்பட்டிருக்க மாட்டேன் என்று சொல்லி தி.ஜா. அவரது உதயசூரியன் என்கிற பயணநூலில் கூறியிருக்கும் ஒரு விஷயத்தைச் சுட்டிக்காட்டி, தாம் அறிந்திராத, சம்பந்தப்படாத, தம்மைத் தகுதிப்படுத்திக் கொள்ளாத விஷயங்களைப்பற்றியெல்லாம் அபிப்பிராயம் சொல்ல தமக்குத் தகுதி கிடைத்திருப்பதாக நினைத்து அவர் எழுதியுள்ளார் என்று குறிப்பிடுகிறார். போதாததற்கு செல்லும் இடங்களில் எல்லாம் இந்த அபிப்பிராயங்களைத் திரும்பத் திரும்பக் கூறிவருகிறார் என்றும் வருந்துகிறார். அது ஒரு ஓவியக் கண்காட்சி பற்றியதும், ஜப்பானிய ஓவிய மரபுகளை அங்கே காண முடிந்தது என்றும் தி.ஜா. கூறியதற்கான மறுப்பாக அமைகிறது.

இது தி..ஜா.வைப் பற்றிய கண்டனமாக யாரும் எடுத்துக் கொள்ளக் கூடாது…நம்மிடம் உள்ள பார்வைக் குறுகலையே இது காட்டுகிறது என்று குறிப்பிட்டு, நம் நாட்டில் சங்கீதம், நாட்டியம் ஆகியவற்றிற்குத்தான் ஒரு மரபு உள்ளது…ஓவியம், சிற்பம் ஆகிய வேறு எதற்கும் எக்காலத்திலும் பயிற்சி பெற்ற minority audience கிடையாது என்று நிறுவுகிறார்.

தாம் சொல்வது என்ன என்று அர்த்தம் அறிந்து சொன்னவனின் வார்த்தைகள்  இவை என்று சொல்லி ஒரு உதாரணத்தை முன் வைக்கிறார்.”I can’t describe her beauty in words. But I can play it on a violin…”

மது சிந்தனை வெளியீட்டிற்கும் அனுபவ வெளியீட்டிற்கும் நாம் தேடிக் கொள்ளும் குறியீடுகள் நம் மன இயல்பைப் பொறுத்தவை. நம் பார்வையையும், அனுபவத்தையும் பொறுத்தவை. நாம் ஒவ்வொருவரும் தனித்துச் சஞ்சரிக்கும் வெவ்வேறு கிரகங்கள் போன்றவர்கள். தன் சோகத்தைக் கேட்கத் தயாராய் எவரும் இல்லாத நிலையில்,வண்டிக்காரக் கிழவன் தன் குதிரையிடம் அழுது புலம்பித் தீர்த்துக் கொள்வதைப் போன்ற (செகாவின் சிறுகதை) பரிமாணம் கொண்டது நம் உணர்வுகளும், மன எழுச்சிகளும் என்று தத்துவார்த்தங்களை விரித்துக் கொண்டே போகிறார். படிக்கும் வாசகனுக்கு இவற்றை உள் வாங்குவதும், மனதில் நிறுத்திக் கொள்வதும் மிகுந்த கடினமாகத்தான் நிச்சயம் இருக்கும். நான்கைந்து முறை படிக்க வேண்டி வரும் என்றே தோன்றுகிறது.

பிக்காஸோ பார்த்த பொருட்களுக்கு ஒரு யதார்த்தம் இருந்தது. அது அனுபவத்தில் படும் யதார்த்தம் இல்லை. பொருட்களில் உறைந்திருக்கும் யதார்த்தம் என்கிறார். 20-ம் நூற்றாண்டின் யதார்த்த அனுபவம், 19-ம் நூற்றாண்டின் யதார்த்த அனுபவம் இல்லை. அதை ஓவியத்தில் உணர்ந்த ஒரே ஒருவர் பிக்காஸோதான் என்று நிறுவுகிறார். 1970 ல் ஞானரதம் முதல் இதழிலிருந்து தொடராக வெளிவந்தது  இந்தக் கட்டுரை.  இதிலிருந்து ஒரு சிறு துளியைத்தான் இங்கே விரித்திருக்கிறேன்.

இரண்டாவதாக உள்ள “பத்மினியின் நினைவில்….”என்ற தலைப்பிலான இன்னொரு ஓவியரைப் பற்றிய கட்டுரையும் நம்மை வியக்க வைக்கிறது. இவரது காலம் 1940-1969. அம்ரிதா ஷேர் கில் என்ற ஓவியரின் நினைவில் டெல்லி வானொலியில் மூன்று நிகழ்ச்சிகள் தொகுக்கப்படுகின்றன. அதில் பங்கேற்க வருபவர் காலஞ்சென்ற பத்மினியின் கணவரான தாமோதரன். அவர் மூலமாக அநேக விஷயங்களை அறிய முடிகிறது. அம்ரிதா பஞ்சாபில் பிறந்து வளர்ந்தவர்…பத்மினி கேரளத்தில் பிறந்தவர். இருவரது சிறந்த படைப்புக்களும் கேரள மக்களைப் பற்றியதானவை.  கேரளத்திலும், சென்னையிலுமாக ஓவியப் பயிற்சியை ஆறு ஆண்டுகளுக்கும் மேலாகப் பயில்கிறார்.

பத்மினியின் படைப்புக்கள் அனைத்தும் தான் பிறந்து வளர்ந்து வாழ்ந்த கேரளத்து மக்கள், அவர்களின் வாழ்க்கை, பசுமை, செழுமை, கொழிக்கும் வயல்கள், வெளி, மரங்கள், பெண்கள் கூட்டம், சிறுவர், கேரளக் கோயில்கள், கோயில் தீபங்கள், கன்னிகைகள், சன்னியாசினிகள், குடிசைகள், கூரையில் அமர்ந்திருக்கும் பறவைகள், குழந்தைகள், பின்னிக் கிடக்கும் சர்ப்பங்களின் சிலைகள் இவைதான் அவரின் உலகமாய் இருந்திருக்கின்றன என்று அறிய முடிகிறது. சுமார் 200 க்கும் மேற்பட்ட ஓவியங்களை அவர் விட்டுச் சென்றிருக்கிறார் என்கிற தகவல் நமக்கு இந்நூலில் கிடைக்கிறது.

இந்திய மரபில் அவரது இடம் என்ன என்பதையே “கசடதபற“ ஆகஸ்ட் 1971 இதழில் வெளிவந்த இந்தக் கட்டுரை விளக்குகிறது. திரு வெங்கட்சாமிநாதன் அவர்கள் இலக்கிய விமர்சனங்களுடன், ஓவியம், இசை, திரைப்படம்  நாடகம் என்று பல துறைகளிலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவராக விளங்கியவர் என்பதை நாம் அறிவோம்.  அவரது கருத்துக்கள் விவாதங்களையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தியவை. ஜான் ஆப்ரஹாம் இயக்கிய “அக்ரஹாரத்தில் கழுதை” என்ற திரைப்படத்திற்கான திரைக்கதையை எழுதியவர் என்பதையும் இங்கே வாசகர்களுக்குத் தெரிவிக்க வேண்டியிருக்கிறது.

உண்மையில் நமது அநேக நம்பிக்கைகளில், தீர்மானங்களில், முடிவுகளில், நாம் வெறும் அடிமைகள். பழக்கத்தின் அடிமைகள், பழக்கம் சிந்தனையின் இடத்தைப் பறித்துக் கொள்கிறது  என்கிற இவரின் தீர்மானமான கூற்றை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.  அதை மனம் ஒப்புதல் செய்யும்போது அதற்காக வெட்கப்படவும் செய்கிறது என்கிற உண்மையை உணராமல் இருக்க முடியவில்லை.

உஷாதீபன்

முந்தைய கட்டுரைகுமரித்துறைவி பற்றி…
அடுத்த கட்டுரைஐந்து நெருப்பு