திசைதேர்வெள்ளம்- கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

திசைதேர் வெள்ளம் செம்பதிப்பு உங்கள் கையெழுத்துடன் இந்தவாரம் கிடைக்கப்பெற்றேன்.  இந்தக் கொரோனாக் காலத்திலும் செம்பதிப்பு வெளிவருவது மகிழ்ச்சி, நன்றி.

இந்த நாவலில் எந்த அத்தியாயத்தைத் தனியாக எடுத்து வாசித்தாலும் ஒரு சிறுகதை வாசிப்பதைப் போலவே வாசிக்க முடிகிறது. போர்ச்சூழ்கைகள், ஆயுதங்கள், பல நாடுகள் குலங்களின் பங்களிப்பு, வீரர்களின் தனித்திறன்கள், தயக்கங்கள், இருள் எழும் தருணங்கள், இழப்புகள், போருக்குத்தேவையான உணவு விலங்குகள் ஆயுதங்களை நிர்வகித்தல்,  காயம்பட்டோருக்கான மருத்துவம் என போரைப்பற்றிய மிக விரிவான வர்ணனைகளோடும் நுண் தகவல்கலோடும்  விரியும் நாவல் பீஷ்மரின் வீழ்ச்சியோடு முடிகிறது.

வெண்முரசைப் பற்றிய என் நினைவுகளில் தவிர்க்கமுடியாத ஒரு பகுதி திசைதேர் வெள்ளத்தில் உள்ளது:

அர்ஜுனன் தேரிலேறும் முன் அவனை நோக்கினான். அவன் ஏதோ சொல்ல விழைவதை விழிகளில் கண்டுவிட்டிருந்தான்.

சுபாகு “மூத்தவரே” என தாழ்ந்த குரலில் அழைத்தான். “என் மைந்தன் சுஜயன், உங்களுக்கு அவன் முகம்கூட நினைவிருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவன் தந்தையென உங்களையே உளம்கொண்டிருந்தான்.” அர்ஜுனனின் முகம் உறைந்திருந்தது. “நீராடுகையில் அவனுக்காக ஒரு கைப்பிடி நீரள்ளி விடுங்கள், மூத்தவரே. சென்று நிறைக மைந்தா என ஒரு சொல் உரையுங்கள். இப்புவியில் இருந்து இனி அவன் எதிர்பார்க்க வேறேதுமில்லை.” கண்ணீர் கோக்க சுபாகு விழிகளை தாழ்த்திக்கொண்டான். அர்ஜுனன் வெறுமனே தலையசைத்துவிட்டு தேரிலேறிக்கொண்டான்.

பின்னர் பார்பாரிகனிடமிருந்து சுஜயன் விண்ணேகிய தருணத்தை சுபாகு அறிந்து கொள்வது தத்துவார்த்தமாக இருந்தாலும், இந்தப்பகுதி எப்போது வாசித்தாலும் மனதைத் தொந்தரவு செய்வதாகவே உள்ளது.

நான் வெண்முரசை வாசிக்க ஆரம்பித்தது பன்னிரு படைக்கலத்தில் இருந்துதான்.  எனவே ஜூலையில் வெண்முரசின் நிறைவிற்குப்பின்,  முதற்கனலில் ஆரம்பித்து வெய்யோன் வரை எஞ்சியிருந்த 9 நாவல்களையும் 3 மாதங்களில் படித்து முடித்தேன். அதன் பிறகு ஒரு இடைவெளி.  மனதிற்குள் தினமும் நிகழும் உரையாடல்களில், சிந்தனையில், மகாபாரதத்தைப் பற்றிய பிள்ளைகளின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கையில் என்று வாழ்வின் தவிர்க்க முடியாத அம்சமாக வெண்முரசு இருந்தாலும், மறுவாசிப்பு என எதுவும் செய்யவில்லை. இப்போது திடீரெனச் செம்பதிப்பு கையில் கிடைத்ததும் மீண்டும் வெண்முரசின் உலகிற்குள். நன்றி.

அன்புடன்,

S பாலகிருஷ்ணன், சென்னை

அன்புள்ள ஜெ,

திசைதேர் வெள்ளம் வாசித்துக்கொண்டிருக்கிறேன். இந்நாவலை இன்னும் முழுசாக வாசிக்கவில்லை. ஆனால் இந்த தலைப்பு என்னை அலைக்கழித்துக்கொண்டே இருக்கிறது. என் வயது 60. இளமையில் மார்க்சியம் தொழிற்சங்கம் என்று எவ்வளவோ பார்த்துவிட்டேன். வாழ்க்கை இன்னொரு கரைக்கு வந்துவிட்டது. ஆக ஒட்டுமொத்தமாக என்ன என்ற கேள்வி நிறைந்திருக்கிறது கண்முன். திசைதேர்வெள்ளம் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறேன். திசையை வெள்ளம் தேர்வுசெய்ய முடியாது. நிலம் அதை கொண்டுசெல்கிறது. ஆனால் வெள்ளத்தின் வழிந்தோடும்தன்மை, விசை எல்லாம் சேர்ந்துதான் அந்த திசையை தீர்மானிக்கின்றன. மகாபாரதம் என்னும் மாபெரும் வரலாற்று பெருவெள்ளத்திற்கு இதைவிட சரியான சொல் இருக்கமுடியாது

ஆர்.ராகவன்

முந்தைய கட்டுரைதளிர்வலையோ?
அடுத்த கட்டுரைபேசாதவர்கள், ஒரு குறிப்பு