மரபிலக்கியம் – கடிதம்

அன்புள்ள ஜெ

வணக்கங்கள். ரப்பர், விஷ்ணுபுரம், காடு, பின் தொடரும் நிழலின் குரல், வெள்ளை யானை, இன்றைய காந்தி,  வெண்முரசு தொகுப்பு, கொரோனா காலச் சிறுகதைகள், குறு நாவல்கள், பலதரப்பட்ட தலைப்புகளில் தினமும் வரும் செறிவான கட்டுரைகள் என எங்களின்  ஒவ்வொரு நாள் அதிகாலையையும் பயனுள்ளதாக மாற்றிக் கொண்டிருக்கும் தங்களின் எழுத்து – இன்னும் பல்லாண்டு பல்லாண்டு நிறைவாய்த் தொடர எல்லாம் வல்ல அருட்பேராற்றலை எப்போதும் பணிந்து வேண்டுகிறேன்.

ஓர் எளிய வாசகனாய், தங்களுக்கு என் மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகளை பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன். உடன்  தங்களின் அன்பையும் ஆசீரையும் என்றும் வேண்டுகிறேன். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக, மீண்டும் மீண்டும்  ’சங்கச் சித்திரங்கள்’ நூலை வாசித்துக் கொண்டிருக்கிறேன். அதில் வரும் ஒரு கவிதையையோ அல்லது ஒரு நினைவுக் குறிப்பையோ வாசிக்காமல்  என் ஒரு நாளும் கடந்ததில்லை. சங்கக் கவிதைகளை எப்படி அணுக வேண்டும் என்பதற்கு அந்த நூல். மிகச் சிறந்த ஒரு முன்மாதிரி என்பேன்.

ஒவ்வொரு கவிதையையும் அடி மனத்தின் ஆழத்தில் ஊற வைத்து, நமது வாழ்வோடு பொருத்திப் பார்க்கும் போது, கவிதையின் சாரம் வேறு தளத்திற்கு உயர்ந்து விடுகிறது. அதிலும், ஒவ்வொரு சங்கப் பாடலையும் நவீன வடிவத்தில் தாங்கள் கவிதை ஆக்கியிருக்கும் அழகு, பேரழகின் உச்சம். அதே போல, ’இந்திய ஞானம்’ நூலில் ஒரு சில பாடல்களுக்கும், சில குறட்பாக்களுக்கும் சாலப் பொருந்தும் விளக்கங்களைச் சொல்லி எழுதியிருக்கிறீர்கள். ஊட்டி காவிய முகாம்- கம்பராமாயண வகுப்புகளில் நாஞ்சில் நாடன் சார் விளக்கம் சொன்ன பிறகு, அதனை ஒட்டியும், தாங்கியும், மறுத்தும் நீங்கள் சொல்லும் விளக்கங்களை சுவையோடு ரசித்திருக்கிறோம். கம்ப ராமாயணப் பாடல்களில் பயின்று வரும் வைப்பு முறை, காரண காரியம் பற்றி எல்லாம் அழகாகத் தொகுத்திருக்கிறீர்கள். இவை யாவும் ஒரு வாசகனுக்கு அடிப்படைப் பாடங்கள். நன்றி ஜெ.

ஓர் எழுத்தாளனை அதை எழுதுங்கள், இதை எழுதுங்கள் எனக் கேட்கக் கூடாது என்பதை அறிகிறேன். ஆயினும், இந்தப் பிறந்த நாளில், இதனை வேண்டுகோளாக வைத்திடத் துணிகிறேன். தேர்ந்தெடுக்கப்பட்ட குறட்பாக்கள், தங்களின் பார்வையில் அதிநுட்பம் மிகுந்த  ராமாயணப் பாடல்கள், சங்கக் கவிதைகள் இவை தொடர்பான, தொடர் கட்டுரைகளை  நீங்கள் எழுதித் தர வேண்டும்.  ஆர்வத்தோடு சங்கத் தமிழை அணுகும் ஓர் இளைஞனுக்கு மிகப் பெரும் கொடையாக அது இருக்கும். காரணமே இல்லாமல் தங்களை, தங்கள் படைப்புகளை புறக்கணிக்கத் துணியும் பேராசிரியர்களில் சிலர் , காடு நாவல் மற்றும் சங்கச் சித்திரங்கள் நூல்களை, வியந்து  பாராட்டுவதை (தனிப்பேச்சில்!) நான் பார்த்திருக்கிறேன். ஆகையால், இந்தக் கட்டுரைகள் இளைய வாசகர்களுக்கு மட்டுமல்ல, ஒரு சில பேராசிரியர்களுக்கும் கூட உதவியாக இருக்கும். இரு தரப்பினருக்கும் ஒரு புதிய திறப்பினை ஏற்படுத்தவும்  கூடும்.  இந்தக் கட்டுரைகளுக்கான நற்காலமும் நேரமும்  விரைவில் கனிந்திடட்டும்! நன்றி.

மீண்டும் ஒரு முறை எங்களின் பணிவான வணக்கங்களும், நிறைந்த வாழ்த்துகளும்.

மிக்க அன்புடன்,

வளநாடு சேசு.

***

அன்புள்ள சேசு அவர்களுக்கு,

சங்க இலக்கியங்கள் பற்றியும் குறள் பற்றியும் எழுதும் எண்ணம் உண்டு. ஆனால் நான் எழுதுவது அவற்றைப் பொருள்கொள்ளவேண்டிய வழிமுறைகளைத்தான். மொத்தப் பாடல்களுக்கும் விளக்கம் எழுதினால் அவற்றை வாசித்து தானே முன்னகரவேண்டிய பொறுப்பை வாசகனிடமிருந்து பறித்தவன் ஆவேன்.

ஜெ

முந்தைய கட்டுரைஉடல், உள்ளம் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைவெண்முரசு, அருண்மொழி- கடிதம்