ஜீன் ட்ரெஸ்- கடிதங்கள்

ஜீன் ட்ரெஸ் – பொருளியல் பேராசிரியர்; மனிதாபிமானி; துறவி!

அன்புள்ள ஜெ

இன்று ஜீன் ட்ரெஸின் கட்டுரையின் மறுபிரசுரத்தை கண்ட பின் இக்கடிதத்தை எழுதுகிறேன். முன்பு முதல்முறை பாலாவின் இன்றைய காந்திகள் புத்தகத்தை வாசிக்கும் போது, ஒவ்வொரு கட்டுரையையும் என் நோக்கில் சுருக்கி தொகுத்து எழுத ஆரம்பித்தேன். சோனம் வாங்சு மற்றும் ஜீன் ட்ரெஸ் குறித்து எழுதியவுடன் மற்ற ஆளுமைகள் குறித்து எழுத காந்தியம் குறித்த என்னுடைய அறிவு போதாமையை உணர்ந்தேன். எனவே இடையிலேயே நிறுத்தி வைத்துவிட்டேன்.

இன்று நீங்கள் மீள் பிரசுரம் செய்தவுடன் அவரை பற்றிய என் சுருக்க குறிப்பை மட்டும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

பொருளாதாரம் என்னும் ஞானம்

மையமும் விளிம்பும் இல்லாத ஒவ்வொரு அலகையும் தன்னில் நிலைத்து மையம் கொள்ளும் பொருளாதார கட்டமைப்பையே காந்தியின் கிராம சுயராஜ்ய கனவும் பொருளியல் குறித்த பார்வையும் என்று கூறலாம்.

ட்ரெஸ் பற்றி இந்த கட்டுரையில் குஹா கூறுவது எனக்கு பண்டைய இந்திய ரிஷிகளின் சித்திரத்தை நினைவூட்டியது. லூவெனில் பிறந்து இந்தியாவை தன் இருப்பிடமாக கொண்டு வசிப்பதிலிருந்து, அவரது இல்லத்தின் மூங்கில் புதர் சூழ்ந்து புளியமரம் தழைந்திருக்கும் குடிலும் கிரிம்சன் பறவையின் குரலும் அந்த சித்திரத்தை வலுவாக கட்டி எழுப்புகிறது.

இம்மரபில் ஞானம் என்பது அறிவையும் அதை கொண்டு அறிதலையும் பின் எல்லாவற்றையும் தூக்கியெறிந்து கடந்து செல்லுதல் என்கிறோம். ட்ரெஸை அப்படி பார்க்கலாம். கட்டுரை தலைப்பின் அடிக்குறிப்பில் குஹா அவரை துறவி என்பது அவருக்கு பொருந்துகிறது. அமர்த்தியா சென்னோடு அவர் உறவை சுட்டுவது அவரது அறிவுப்பணியை மட்டுமல்ல, சமகால அறிவியக்கத்தில் இந்திய மனதையும் ஐரோப்பிய மனதையும் அலசி பார்க்க வாயில் திறக்கிறது. மொத்தத்தில் இந்த தகவல்கள் ஒரு நாவலுக்கு தூண்டு கோலாக அமையலாம் என நினைக்கிறேன்.

இந்த சிறிய கட்டுரையில் ஜான் ட்ரெஸின் வாழ்க்கை முறை, அறிவுப்பணி, அவருடைய புத்தகம் ஒன்றின் அறிமுகம் என்று சுவரசியமாக ஒரு அழகிய கோட்டு சித்திரத்தை வரைந்தளிக்கிறார் குஹா.

இந்நூலில் உள்ள ஒரெயொரு மொழிப்பெயர்ப்பு கட்டுரையானலும் மூல ஆசிரியரின் நடையை தனித்து தெரியும் வகையில் அமைத்திருக்கிறார் பாலா. நேரடியாக காந்தி குறித்து ஒரு சொல்லும் இல்லையெனினும் இக்கட்டுரையை நூலின் பிற கட்டுரைகளோடு சேர்த்து வாசிக்கும் போது நமக்கு காந்தியின் பொருளியல் குறித்து புதிய வெளிச்சம் ஒன்றை காட்டுகிறது.

அன்புடன்

சக்திவேல்

***

அன்புள்ள ஜெ

ஜீன் ட்ரெஸ் பற்றிய கட்டுரை முன்னரே தளத்தில் வந்தபோது நான் வாசிக்கவில்லை. அது அடிக்கடி நடக்கிறது. பலசமயம் கொஞ்சம் நீளமனா, சீரியசான கட்டுரைகளை அப்படியே தூக்கி வைத்துவிடுகிறோம். அது இந்த சமூக ஊடகச்சூழல் உருவாக்கும் மனச்சலிப்பு. ஆச்சரியம்தான். சில்லறை அக்கப்போர்களால் எரிச்சல் வருகிறது. சலிப்புற்று வேறு சில்லறை விஷயங்களை மேலும் வாசிக்கிறோம். சீரியசாக வாசிக்க சோம்பல் படுகிறோம்.

இப்போது ட்ரெஸ் தமிழக அரசின் பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டிருப்பதை ஒட்டி அவரைப்பற்றி ஆர்வம் ஏற்பட்டதனால் அக்கட்டுரையை வாசித்தேன். அற்புதமான ஓர் அறிமுகம். ஒரே வரியில் அதை இப்படிச் சொல்வேன். எவருக்காக நீ பொருளியல் கொள்கைகளை வகுக்கிறாயோ அவர்களுடன் வாழ்ந்துபார். அந்த அனுபவமே மெய்யான பொருளியல் கல்வி

டிரெஸ் அவர்களுக்கு வணக்கம்

ஜெ.ஆர்.பத்மநாபன்

முந்தைய கட்டுரைஅ.முத்துலிங்கமும் ஈழப்போரும்
அடுத்த கட்டுரைஆலயங்கள் சமூகக்கூடங்கள்