மரபுக்கலையும் சினிமாவும்- கடிதம்

மரபுக்கலையும் சினிமாவும்

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம்

 என் மாணவன் யானை சிவா அனுப்பித்தந்த ஒரு சிறிய கதகளி காணொளியை பார்த்ததை குறித்து உங்களுக்கு எழுத இருந்தேன், எதிர்பாராமல் இன்று தளத்தில் ’’மரபுக்கலையும் சினிமாவும்’’ குறித்த பதிவில் கதகளி, கேரள சினிமா குறித்த பல முக்கியமான தகவல்களும் வந்ததில் கூடுதல் மகிழ்ச்சியாயிருந்தது.,

கதகளியைக்  குறித்து சமீபத்தில்தான் அறிந்துகொள்ள துவங்கி இருக்கிறேன். சிபிமலயில் படங்களாக தேடித் தேடி பார்த்துக்கொண்டிருந்த  பல்கலைகழக காலத்தில் வடவள்ளியில் ஒரு சிறு தியேட்டரில்  கமலதளம் பார்த்தேன். அதுதான் கதகளிக்கு அறிமுகம்  எனக்கு. எனினும நந்தகோபனாக  இருந்த மோகன்லாலில் என்னால் அப்போது  கதகளி கலைஞனை கண்டு கொள்ள முடியவில்லைமனைவியை இழந்த ஒரு குடிகார கதாபாத்திரம் என்னும் அளவிற்கே என் புரிதல் இருந்தது. ஆனால் அந்த புரிதலுக்கே  அப்படம்  எனககு மிகப்பிடித்ததாக இருந்தது.

கதகளியின் நுட்பங்கள் தெரியாவிட்டாலும் அவர்களின் ஒப்பனையும் உடையலங்காரமும் பிடித்திருந்தது.   .சில வருடங்களுக்கு முன்பு  திருவனந்தபுரத்தில் ஒரு மாத பயிற்சிக்கு சென்றிருக்கையில் பத்பநாபஸ்வாமி கோவிலின் முன்பிருந்த கடையொன்றில் கதகளி முகமொன்றை மரத்தில் செய்துவைத்திருந்தார்கள் வாங்கி வந்து  வந்து வீட்டின் நுழைவாயில் சுவற்றில் மாட்டி வைத்திருக்கிறேன்.

களியாட்டத்தில் தெய்யம் கலைஞரான சுரேஷ்கோபியை கதகளி களைஞரென்று நினத்துக்கொண்டிருந்தேன் அத்தனைதான் என் கதகளி குறித்த அறிவு.

இப்போதும் இக்கலையின்மீது எனக்கு ஆர்வம் மட்டுமே இருக்கிறது அறிந்துகொள்ள  நான் வெகுதூரம் போகவேண்டி இருக்கிறது எனினும் தொடர்ந்து தேடி தேடி தெரிந்துகொள்ள துவங்கி இருக்கிறேன்

என் மாணவன்   யானை சிவா கேரளாவின் தத்தமங்கலம் என்னும் சிற்றூரை சேர்ந்தவன் அங்கு அருகிலிருக்கும்  ஒருகோவிலில் மாதத்தில் ஒரு  சனிக்கிழமை  மாலையில் கதகளி  நிகழ்ச்சி நடக்கும் அவன் காட்டிலில்லாமல் வீட்டிலிருந்தால் எப்படியும் அங்கு சென்று விடுவான். இரவு வெகுநெரத்துக்கு பிறகு என்னைஅழைத்து அன்றய அந்த நிகழ்வை குறித்து பேசிக்கொண்டே இருப்பான். என்னையும் வரச்சொல்லி அவன் பல முறை அழைத்தும் எப்படியோ போகமுடியாமலே  இருக்கிறதுஇத்தனைக்கும் கேரளா எனக்கு ஒரே ஒரு மணி  நேர பிரயாண தூரம்தான். கதகளியை, கதகளி ஆசான்களை குறித்து சிவா நிறைய பேசி இருப்பதாலும், உங்கள் தளம் வழியாகவுமே  இக்கலையை சிறிது தெரிந்துகொண்டிருக்கிறேன்..மூணாறில் ஒரு நிகழ்ச்சியை மட்டும் நேரில் பார்த்திருக்கிறேன்.தளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் படங்களை  இனி ஒவ்வொன்றாக பார்க்கவிருக்கிறேன்

சிவா பாலக்காட்டில் ஒரு நீர்வீழ்ச்சி இருக்கும் காட்டுப்பகுதியில்  சில  வருடங்களாக  பணியிலிருக்கிறான். ,அங்கு நானும் சென்றிருக்கிறேன் அத்தனை அருமையான இடத்தில்  இருந்துகொண்டு இரவுப்பணியில் அவ்வப்போது  என்னிடம் வெண்முரசு  கதை கேட்டுக்கொண்டுயானைகளை   பார்த்துக்கொண்டு, கதகளியை நினைத்துக்கொண்டு, பேசிக்கொண்டு, காணொளிகளில் அவற்றை பார்த்துக்கொண்டு அவன் இருப்பதில் எனக்கு ஏகத்துக்கும் பொறாமை இருக்கிறது

 தமிழ்  வாசிக்க தெரியததால் நான் சொல்ல சொல்ல கேட்டே வெண்முரசை  ஏறக்குறைய பாதி கேட்டிருக்கிறான். ஒரு வயதாகும்  அவன் மகனுக்கு துருவன் என்றுதான் பெயரிட்டிருக்கிறான். உங்கள் மீது பெரும் மரியாதை வைத்திருப்பவர்களில் அவனும் ஒருவன்.

 சமீபத்தில்உள்ளத்தில் நல்ல உள்ளம்பாடலின் வரிகளில் செஞ்சோற்றுக்கடனுக்கு அர்த்தம் கேட்டு  அழைத்த அவனுடன் பேசி பேசி எப்படியோ வெய்யோனுக்கு வந்துபின்னிரவு  வரை கர்ணனை குறித்து பேசிக்கொண்டிருந்தோம் அப்போது தான் இந்த காணொளியை அனுப்பினான்.

 குந்தி கர்ணனிடம் பாண்டவர்களை போரில் ஏதும் செய்யக்கடாதென்று சத்தியம் வாங்கிக்கொண்டு சென்றபின்னால் கர்ண சபதத்தின் ஒரு பகுதியான கர்ணனின் மனதை சொல்லும் ’’எந்திக மன்மானஸே ‘’என்னும் ஒரே ஒருபாடலுடன்  மிக சிறிய காணொளிதான் எனினும் மீள மீள பார்த்தேன். முதலில் மகாபாரதமென்று நினைத்துக்கொள்ளாமல்  விலகி நின்று ஒரு கலையாக அதை பொறுமையாக பார்த்தேன், பின்னர்  பாடலின் அர்த்தத்தை மட்டும் இன்னொரு முறை, பின்னர் அந்த கலைஞரின் ஆட்டத்துக்கென ஒருமுறை , பின்னர் என் மனதில் இருக்கும் வெய்யோனாக அந்த கலைஞரை நினத்துக்கொண்டு மற்றொருமுறை. வெண்முரசை வாசிக்காமல் இருந்த்திருந்தால் இந்த காணொளியை அப்படியே சாதாரணமாக கடந்து சென்றிருப்பேனாயிருக்கும். இப்போது பெரும் மனநிறைவை அல்லது துயரை அளிக்கும் அனுபவமாக இருக்கிறது. துண்டால் கணகளை ஒற்றும் அந்த பாவனையில் என்னையும் கர்ணனாக உணரவைத்து கண் நிறைய வைக்கிறார் அவர்.

இந்த பதிவில் நீங்கள் சொல்லி இருப்பது போல //கதகளி  கலைஞர்கள் இன்றைய உலகுடன் சம்பந்தமில்லாத ஒரு பழய உலகில் வாழ்பவர்கள் தான்//, இதை நான் அந்த  காணொளியை இன்று மீண்டும் பார்க்கையில் நினைத்துக்கொண்டேன்

கேராளாவின் நீ ஸ்டீரிமில் ரெஞ்சி பணிக்கர் நடிப்பில் ’’கலாமண்டலம் ஹைதர் அலி’’ வெளியாகி இருக்கிறது இந்த வார கடைசியில் பார்க்கவிருக்கிறேன். .

தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்க வைக்கும் உங்களின்   எழுத்துக்களுக்கான நன்றிகளுடன்

லோகமாதேவி 

முந்தைய கட்டுரைபேசாதவர்கள் [சிறுகதை]
அடுத்த கட்டுரைகுமரித்துறைவி