ஒளியே உடலான புழு

அன்பின் ஜெ,

நலம்தானே?

இரானிய இயக்குநர் அப்பாஸ் கியாரோஸ்டமியின் “The Taste of Cherry” படத்தை சமீபத்தில்தான் பார்த்தேன். 1997-ல் வெளிவந்த படம். அவ்வருடத்தில் கேன்ஸ் திரை விழாவில் “Palme d’Or” விருது பெற்றிருக்கிறது. அபாரமான திரைப்படம் ஜெ. வாழ்வின் தரிசனத்தைச் சொல்லமுயலும் ஒரு நல்ல படைப்பு. ஒரு “மினிமலிஸ்ட்” படம். மொத்தப் படத்திலும் நான்கைந்து கதாபாத்திரங்கள்தான். பின்னணி இசை கிடையாது. இயற்கையான ஒலிகள் மட்டுமே. நீள நீளமான குறைந்த எண்ணிக்கையிலான காட்சிகள். ஒன்றரை மணி நேரப் படம்தான். ஆனால் அந்த எழுத்தும், திரைக்கதையும், ஒட்டுமொத்த காட்சிகளும் திரண்டு உண்டாக்கி அளிக்கும் தரிசனத்தின் துளி ஆச்சர்யப்பட வைப்பது.

“நீ ஏன் ஒண்ணும் சொல்லமாட்டேன்ற. உனக்கு என்ன கடன் தொல்லையா? குடும்பத்துல ஏதும் பிரச்சனையா? மனசைத் திறந்து யார் கிட்டயாவது பேசினயா? போகட்டும், நான்தான் உனக்கு முன்னப்பின்ன அறிமுகமில்ல. புதுசு. உன்னோட நண்பர்கள், உறவினர்கள் யாருகிட்டயாவது பேசினயா? நீ மனசத் திறந்து பேசலைன்னா உன்னோட பிரச்சனைக்குத் தீர்வு எப்படிக் கிடைக்கும்? யாரால உனக்கு உதவமுடியும்? நம்ம எல்லாருக்குமே நம்ம வாழ்க்கையில பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யுது. நமக்கு உண்டாகற சின்னச் சின்னப் பிரச்சனைக்கெல்லாம் விரக்தியடைஞ்சி இந்த மாதிரி வழியைத்தான் தேர்ந்தெடுக்கணுமா? இப்படி எல்லாருமே இந்த முடிவெடுத்தா பூமியில அப்புறம் யார்தான் உயிர் வாழ்றது? சொல்லு” இரானின் அஜெர்பய்ஜன் பகுதியைச் சேர்ந்த துருக்கிப் பெரியவர், காரோட்டும் மத்திம வயது “படியிடம்” பக்கத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டே வருகிறார். படி எதுவும் பதில் பேசாமல் கார் ஓட்டிக்கொண்டிருக்கிறான். முன்னால் அந்த மண்பாதை இரண்டாகப் பிரிகிறது. கைகாட்டி “அந்தப் பாதையில போ” என்கிறார் பெரியவர். “எனக்கு அந்தப் பாதை பழக்கமில்லையே? சரியாத் தெரியாதே?” என்கிறான் படி. “எனக்குத் தெரியும். நீ போ. கொஞ்சம் சுத்துதான். தூரம் அதிகம்தான். ஆனா மிக அழகான பாதை” என்கிறார் பெரியவர்.

“நல்லா கேளு. என் வாழ்க்கையில எனக்கு நடந்த ஒரு விஷயத்தைச் சொல்றேன். அப்போ எனக்கு கல்யாணமான புதுசு. வாழ்க்கையில என்னென்ன பிரச்சனைகள் வரக்கூடாதோ எல்லாம் மொத்தமா சேர்ந்து வந்தது. மன அழுத்தம். விரக்தி. தாங்கமுடியாத கட்டத்துக்கு வந்து எல்லாப் பிரச்சனைகளையும் ஒழிச்சுக் கட்ட இதுதான் வழின்னு முடிவு பண்ணேன். ஒருநாள் விடிகாலையில சூரியன் உதிக்கிறதுக்கு முன்ன இருட்டுல வீட்லருந்து ஒரு கயிறை எடுத்து கார்ல போட்டுட்டு கிளம்புனேன், எங்காவது போய் மரத்துல தூக்கு மாட்டி தற்கொலை பண்ணிக்கலாம்னு. இது நடந்தது 1960-ல. மியானே பக்கம் இருக்கற மல்பெரி தோப்புக்குள்ள போனேன். இன்னும் விடியல. இருட்டாதான் இருந்தது. ஒரு மரத்துல கயிறத் தூக்கிப்போட்டேன். அது கிளையில சரியா விழுகல. ரெண்டு மூணு தடவை முயற்சி பண்ணியும் சரியா கிளையில மாட்டல. நான் அந்த இருட்டுல மரத்து மேல ஏறி கயிறை டைட்டா கட்டினேன். கட்டும்போது என் கையில மெத்து மெத்துன்னு ஏதோ பட்டுச்சு. மல்பெரி பழங்கள். ஒண்ண பிச்சு சாப்பிட்டேன். என்ன ஒரு சுவை! எத்தனை இனிப்பு! ரெண்டு, மூணுன்னு சாப்பிட்டுட்டே இருந்தேன். அப்பதான் கவனிச்சேன். தூரத்துல மலை உச்சியில சூரியன் உதிக்க ஆரம்பிச்சது. என்ன ஒரு அழகான சூரியன்! எத்தனை அற்புதமான ஒரு காட்சி! மலையில இருக்கற பசுமையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா துலங்குது. சட்னு மரத்துக்குக் கீழ பேச்சுக் குரல்கள் கேட்டேன். பள்ளிக்கூடத்துக்குப் போற ஸ்கூல் குழந்தைங்க. அவங்க நின்னு மேல என்னப் பார்க்கறாங்க. மரத்த ஆட்டச் சொல்றாங்க. நான் ஆட்டினேன். மல்பெரி பழங்கள் கீழ விழுந்தது. அந்தக் குழந்தைங்க எடுத்து சந்தோஷமா சாப்பிட்டாங்க. எனக்கும் சந்தோஷமா இருந்தது. நான் கொஞ்சம் மல்பெரி பழங்கள் எடுத்துக்கிட்டு வீட்டுக்குத் திரும்பிப் போனேன். என் மனைவி இன்னும் தூங்கிட்டுதான் இருந்தா. அவ எந்திரிச்சப்புறம் அவளும் மல்பெரி பழங்கள் சாப்பிட்டா. மல்பெரியோட சுவை அவளுக்கும் பிடிச்சிருந்தது. தற்கொலை பண்ணிக்கிறதுக்காக போன நான் மல்பெரி பழங்களோட திரும்பி வந்தேன். ஒரு சின்ன சாதாரண மல்பெரி பழம் என்னோட வாழ்க்கையை எனக்கு திருப்பித் தந்தது. என்னைக் காப்பாத்துச்சு. அதுக்கப்புறம் நான் மொத்த்மா மாறிப்போனேன். எல்லாமே தெளிவான மாதிரி மனசுக்குள்ள ஒரு வெளிச்சம். உனக்குப் புரியுதா?” என்கிறார் பெரியவர். படி எதுவும் பேசாமல் கார் ஓட்டிக் கொண்டிருக்கிறான்.

“நீ உன்னோட கஷ்டத்த எங்கிட்ட சொன்னாதானே நான் அதுக்கு ஒரு நல்ல தீர்வு சொல்ல முடியும்?. உடம்பு சரியில்லன்னு டாக்டர்கிட்ட போறோம். நமக்கு என்ன பிரச்சனைன்னு சொன்னாத்தானே டாக்டர் அதுக்குத் தகுந்த மருந்து தருவார்” பெரியவர் மேலும் பேசிக்கொண்டு வருகிறார். படி அப்போதும் மௌனமாகவே இருக்கிறான். இந்தக் கிழவரிடம் பேசி என்ன ஆகப் போகிறது என்று விரக்தியுடன் மௌனமாய் சலித்துக்கொள்கிறான். “உனக்கு ஒரு ஜோக் சொல்லட்டுமா? ஒருத்தன் டாக்டர்கிட்டப் போயி ‘டாக்டர், எனக்கு உடம்புல எங்க தொட்டாலும் வலிக்குது. தலையைத் தொட்டா தலை வலிக்குது. வயிறத் தொட்டா வயிறு வலிக்குது. கையில, கால்ல எங்க தொட்டாலும் வலிக்குது. என் உடம்புல ஏதோ பெரிய வியாதி வந்துருக்குன்னு நினைக்கிறேன். நீங்கதான் குணப்படுத்தணும்’-னு சொல்றான். டாக்டர் ஃபுல்லா செக் பண்ணிட்டு ‘உனக்கு உடம்புல எந்த வியாதியும் இல்லை. விரல்லதான் சின்னக் காயம். அதான் அத வச்சு உடம்புல எங்க தொட்டாலும் அங்க வலிக்கிற மாதிரி இருக்கு உனக்கு” என்கிறார் பெரியவர்.

பெரியவரை அவரின் குடியிருப்புப் பகுதியில் விட்டுவிட்டு திரும்புகிறான் படி. வழியில் பள்ளி வளாகத்தில் உற்சாகத்துடன் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளைப் பார்க்கிறான். மாலை நேரம். மேற்கில் சூரியன் இறங்கிக்கொண்டிருக்கிறான். படிக்கு, உட்கார்ந்து அமைதியாய் அஸ்தமனத்தைப் பார்க்கவேண்டும் போலிருக்கிறது. அங்கு போட்டிருக்கும் பெஞ்சில் உட்கார்ந்து மறையும் சூரியனையும், வண்ணங்கள் மாறும் வானையும் பார்த்துக்கொண்டிருக்கிறான்.

படி, அன்றிரவு தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலை செய்ய முடிவெடுத்திருந்தான். ஆனால் இரவு கவியும் அந்த மாலை வேளையிலும், தனக்கு, தானே வெட்டிய குழியில் இரவில் மல்லாந்து படுத்து வானில் மேகங்களையும் நிலவையும் பார்க்கும்போது அவனுக்குள் ஒரு “தரிசனம்” நிகழ்கிறது.

வெங்கடேஷ் சீனிவாசகம்

முந்தைய கட்டுரைநீலம், கோவை சொல்முகம் – வெண்முரசு கலந்துரையாடல்
அடுத்த கட்டுரைஅசோகமித்திரன் என்னும் பெயர்