அன்புள்ள ஜெ,
இது அருண் என்பவர் முகநூலில் எழுதியது.
தமிழ் சூழலில் இன்று சினிமா இலக்கியம் என யாவும் குறுகிய குழு அரசியல் கொண்டதாகவே இருக்கிறது. எழுத வருமுன்னர், படம் எடுப்பதற்கு முன்னர் நாம் நமக்கான குழுவை உருவாக்கிக் கொண்டுதான் வரவேண்டியிருக்கிறது. தமிழினி என்கிற மின்னிதழில் வெளிவரும் கதைகள் மட்டும்தான் சிறந்ததா, தமிழில் எவ்வளவோ மின்னிதழ் வெளிவருகிறது. அவற்றிலும் சிறுகதைகள் வெளிவருகிறது. ஆனால் தமிழினியில் வெளிவரும் சிறுகதைகள் குறித்து எல்லாரும் நெக்குருகுகிறார்கள். ஆனால் அவற்றில் வெளியாகும் சிறுகதைகளை படித்தால் இலக்கியம் என்பது யாருக்காக, யாருக்கு எழுதப்படுகிறது என்கிற ஐயமே எழுகிறது.
ரஜினி வெளிச்சத்தில் ரஞ்சித் மிளிர்ந்ததை போல ஜெயமோகன் பரிந்துரையில் அக்கதைகள் எல்லா அரைகுறை வலதுசாரி, பார்ப்பனிய ரசிகரகளையும் சென்று நேர்கிறது. தலித்தியம் சார்ந்து வாள்வீசலாம், ஆனால் காலச்சுவடில் புத்தகம் வெளியிடலாம், ஜெயமோகனுடன் கூட்டு வைத்துக்கொண்டு அம்பேத்கரியம் பற்றி பேசலாம், இடையில் எவ்வித சமரசமும் இல்லாமல் கொண்ட கொள்கையில் வழுவாமல் வாழும் எல்லாரும் இளிச்சவாயர்கள் அல்லது பிழைக்க தெரியாதவர்கள். தமிழில் சினிமாவும் சரி இலக்கியமும் சரி பெரும் குழு அரசியலால் பீடிக்கப்பட்டிருக்கிறது.
கெடுவாய்ப்பாக வலதுசாரி அல்லது மிதவாதி எனும் பார்ப்பனிய கூட்டு வைப்பவர்கள் பெரும் அங்கிகாரம் பெற்று பரவலாக சேர்ந்துவிடுகிறார்கள். அவர்களை பரவலாக கொண்டு சேர்க்கும் வேலையை அரைகுறை அறிவுடன் இயங்கும் வலதுசாரி அமைப்புகள் செய்துவிடுகிறது. தலித்தியம் பேசும் அமைப்பின் இதழ் ஒன்றில் ஜெயமோகனின் சிறுகதை வெளியாகிறது. அந்த அமைப்போடு நெருங்கிய தொடர்புடையவர் இடதுசாரி அமைப்பின் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். என்ன மாதிரியான ஒரு கூட்டு. எழுதவே மனம் கூசுகிறது.
*
இந்த கடிதத்தில் உள்ள புலம்பல் எனக்கு வித்தியாசமாக தெரிந்தது. உங்கள் பார்வைக்காக
ஆர்.ராகவன்
***
அன்புள்ள ராகவன்,
இந்த சுவாரசியமான புலம்பல் வரலாற்றில் பதிவாகவேண்டும். எந்த அடிப்படைச் சிந்தனையோ வாழ்க்கை பற்றிய புரிதலோ இல்லாமல் வெறும் சாதிக்காழ்ப்பை மட்டுமே முன்வைத்துக் கொண்டிருக்கும் ஒருவர் தன் அசட்டு காழ்ப்பெழுத்தை தான் வெறுப்பைக் கக்கும் ‘அரைகுறை வலதுசாரி, பார்ப்பனிய’ தரப்பினரே வாசித்துப் பாராட்டவேண்டும் என்றும் ,இல்லாவிட்டால் அவர்கள் குழுமனப்பான்மை கொண்டவர்கள் என்றும் சொல்லி ‘நாட்ல குழு பெருகிப்போச்சுங்க’ என்று கண்ணீர் விடுகிறார்.
கலை என்பதன் ஒன்றாம் அடிப்படையைக்கூட அறிந்திராத, வாழ்நாளில் ஒரு நல்ல படைப்பை வாசித்துக்கூட உணர்ந்திராத வெள்ளந்தியான உள்ளத்தின் மூர்க்கம் இது. இத்தகையோர் எப்போதும் உள்ளனர். இவர்களுக்கு உண்மையில் கலைசார்ந்த அளவுகோல் ஒன்று உண்டு என்றே தெரியாது. ஒரு படைப்பை ஒருவர் பாராட்டும்போது அவரும் பாராட்டுபெறுவபரும் நெருக்கமானவர்கள் என்றுதான் இந்த பாமர உள்ளம் நினைக்கிறது. அந்த திகைப்பை மறைப்பதுமில்லை.
இதிலுள்ள இன்னொரு வேடிக்கை, இவர் தன்னை சமரசமில்லா, கொள்கை வழுவா நெறியாளராக உருவகித்துக் கொள்கிறார்? என்ன கொள்கை? சாதிக்காழ்ப்பு கொண்ட ஒருவர், அந்தக் காழ்ப்பில் நீங்காமல் நின்றிருப்பது கொள்கைவழுவா நிலையா என்ன? அந்தக்காழ்ப்பே கூட அதே போல காழ்ப்பைக் கொட்டும் சிறுகும்பலை திரட்டி அவர்களிடம் நிதியுதவிபெற்று வாழும்பொருட்டு மட்டுமே என்பது வெளிப்படை.
ஆனால் இந்த ‘கொள்கையாளர்’ இங்குள்ள பிற அத்தனை பேரையும் வசைபாடி இழிவுசெய்யலாம் என்று கருதுகிறார். இங்குள்ள முற்போக்குத் தரப்பை, தலித் தரப்பை சிறுமை படுத்தலாம் என நினைக்கிறார்.அவருடைய எதிர்தரப்பினர் அவரை கண்டுகொள்ளவில்லை என்றால் பார்ப்பனசக்தி. அவருடைய சொந்தத் தரப்பினர் அவரை பொருட்படுத்தவில்லை என்றால் அவர்கள் சமரசம் செய்துகொண்டவர்கள்.
‘சரி, உன்னை பொருட்படுத்த நீ என்ன செய்திருக்கிறாய்?’ என்று ஒருவர் திரும்பி இவரிடம் கேட்கமாட்டார். சூழல் அப்படியே திரும்பிப்பார்க்காமல் இவர்களைக் கடந்துசெல்லும். இவர்கள் ஒரமாக ஓலமிட்டபடியே இருப்பார்கள். ஆகவே, ‘தம்பி, கலையிலும் சிந்தனையிலும் ஒன்றாம் வகுப்பாவது பாஸ் ஆகிவிட்டு மேலே பேசக்கூடாதா?”என்று மெய்யான கனிவுடன் இவருக்குச் சொல்ல விரும்புகிறேன்.
இலக்கியச் சூழலில் தகுதிவாய்ந்த படைப்பு கவனிக்கப்படாமல் செல்வதே இல்லை. அது எங்கே வெளிவந்திருந்தாலும். இந்த தளத்திலேயே மிகுதியாக கவனிக்கப்பட்ட ஆக்கங்கள் கனலி, யாவரும் தளங்களில் வெளிவந்தவை. அதை எழுதிய அனைவரும் ஒரே அரசியல் கொண்டவர்கள் அல்ல.
நான் ஒரு படைப்பைக் கவனிப்பது நான் தகுதியானவர்கள் என நினைக்கும் வாசகநண்பர்கள் கவனித்து எனக்கு அவற்றை சுட்டி அனுப்பும்போது மட்டுமே. அது ஒரு அடிப்படைச் சல்லடை.
மற்றபடி நான் நேராக படிப்பதில்லை. எனக்கு நேரடியாக அனுப்பப்படுவனவற்றைக் கூட நான் படிப்பதில்லை. அவ்வளவு நேரமில்லை.ஒரு படைப்பு முதலில் நல்ல வாசகர் சிலரையாவது பாதிக்கட்டும், அதன்பின் படிக்கலாம் என்பதே என் எண்ணம். நல்ல படைப்பு வெளிவந்த சில மணிநேரத்திலேயே அதன் முதல்பதிவை உருவாக்கிவிட்டிருப்பதை நான் காண்கிறேன்.அது எந்த அரசியல் தரப்பு என்பது எனக்கு முக்கியமே அல்ல. அதை இந்த தளத்தை வாசிப்பவர் எவரும் காணலாம்.
இளையஎழுத்தாளர் எழுதும் ஆக்கங்களில் சரியாக வராதவை குறித்து ஏதும் சொல்வதில்லை. ஆகவே எதிர்மறை விமர்சனம் செய்வதில்லை.நான் சொன்னால் அது எண்ணியதைவிட பெரிய அடியாக அவர்கள்மேல் விழுந்துவிடும். அதோடு சிலசமயம் நாங்கள் எங்கள் முந்தைய தலைமுறைப் பார்வையால் எழும் புதுமை ஒன்றை எதிர்த்துவிடவும்கூடும்.
ஆனால் அவர்கள் தங்களுக்குள் எதிர்மறை விமர்சனம் செய்துகொள்ளவேண்டும் என்று வற்புறுத்துகிறேன். பொதுவெளியில் அல்ல, தனி களங்களில். பொதுவெளியில் விவாதித்தால் சம்பந்தமில்லாதவர்கள் உள்ளே வந்து அதை தனிப்பட்ட காழ்ப்புக்களமாக, அரசியல் சொறிச்சூழலாக ஆக்கிவிடுவார்கள். ஒரு peer review அமைப்பு அவர்களிடையே இருந்துகொண்டிருக்கவேண்டும்.
எங்கள் தலைமுறை எழுதவந்தபோது முன்பு ஒரு கடிதச்சூழல் வைத்திருந்தோம். அப்படியொன்று சுந்தர ராமசாமி – கி.ராஜநாராயணன் காலத்திலும் அவர்களிடையே இருந்தது. அக்கடிதத்தொகுதிகளை நான் கண்டிருக்கிறேன்.
ஒர் ஆக்கத்தில் கலையின் ஓர் அம்சம் இருந்தாலும் அதைக் கவனிக்கவேண்டும் அடையாளம் காட்டவேண்டும் என்பதே என் எண்ணம். ஓர் இளம்படைப்பாளி தன் மொழியை கண்டடைய, பிசிறில்லா வடிவை அடைய பத்துப்பதினைந்தாண்டுகள் ஆகும். அதுவரை நடை, வடிவில் அவருக்குச் சலுகை கொடுத்தே ஆகவேண்டும்.
இது என் நிலைபாடு. நான் பரிந்துரைக்கும் கதைகளை பொதுவாசகர் சட்டென்று உள்வாங்க முடியாமல் போகலாம். ஏனென்றால் அவர்கள் இச்சலுகைகளை அளிப்பதில்லை. நான் இலக்கியப்போக்கை கூர்ந்தறிய முயலும் வாசகர்களுக்காகவே பரிந்துரைக்கிறேன். ஒரு தொடர்ச்சிக்காகவே இந்தப் பரிந்துரைகளைச் செய்கிறேன்.
இதை நான் செய்யத்தொடங்கி முப்பதாண்டுகள் ஆகின்றன. முன்பு ஒரு நல்ல கதையை கவனித்தால் இருபது முப்பது கடிதங்கள் எழுதுவேன். சுந்தர ராமசாமிக்கும் ஞானிக்கும் அவர்கள் கவனிக்கவேண்டிய கதைகளை நான் பல ஆண்டுக்காலம் தொடர்ந்து பரிந்துரை செய்திருக்கிறேன். அது ஓர் இலக்கியப் பணி.
*
இந்தக் குறிப்பை எழுதியவர் போன்றவர்கள் ஒரு படைப்பு நல்ல இதழில் பிரசுரமாகும்போது, அது பாராட்டப்படும்போது, பிற இளம் எழுத்தாளர்கள் விருதுபெறும்போது சட்டென்று அவர்களெல்லாம் தாஜாசெய்து அங்கீகாரம் பெறுகிறார்கள், குழு அரசியல் செய்து கவனம்பெறுகிறார்கள் என்று சொல்லிவிடுகிறார்கள். ஆற்றாமையால் அப்படிச் சொல்கிறார்கள். பலசமயம் அந்த உணர்ச்சிகள் மெய்யானவை. அசடுகளின் துயரம் பெரும்பாலும் ஆத்மார்த்தமானது.
இதை இவரைப்போன்ற அசடுகள் சொல்லும்போது பிரச்சினையில்லை. ஆனால் அரிதாக நன்றாக எழுதும் வாய்ப்புள்ள இளம்படைப்பாளிகளே இந்த மனநிலைக்கு ஆளாகிறார்கள். இப்படிச் சொல்லாமலிருக்கும் தற்கட்டுப்பாடு எந்த நல்ல எழுத்தாளனுக்கும் அவசியமானது. ஏனென்றால் அதன் வழியாக அவர்கள் எழுத்தியக்கத்தையே அவமதிக்கிறார்கள். சக எழுத்தாளர் அனைவரையும் சிறுமைசெய்கிறார்கள். இலக்கியச்சூழலே மோசடியானது, தானொருவனே யோக்கியன் என ஒருவன் நினைப்பான் என்றால் அவன் ஒருவகை நோயாளிதான்.
தன் படைப்பின் மீதான ஏற்பையும் மறுப்பையும் எழுத்தாளன் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கவேண்டும். தனிமனிதர்களுக்கு தனிப்பட்ட விலக்கங்கள் இருக்கலாம். சூழலுக்கு அப்படி ஏதும் இருக்க வாய்ப்பில்லை. அந்த ஏற்பையும் விலக்கத்தையும் ஒரு நோக்கில் ஆராயும்போதே மறுநோக்கில் எழுத்தாளன் தன் எழுத்தையும் ஆராய்ந்துகொண்டிருக்கவேண்டும்.
எழுதும்போது தன் எழுத்துமேல் கொஞ்சம் மிகைப்பற்று இருக்கும்தான். கொஞ்சம் காலம் கடந்தால் தன் படைப்பை தானே பார்க்க முடியும்.தான் எழுதிய எந்தப் படைப்பையும் எழுத்தாளன் சற்றுக் காலம் கழிந்து மீண்டும் படிக்க முடியாதவனாக ஆவான். அது அவன் நகர்வதன் இலக்கணம்— அது எப்போதும் வளர்வதாக இருக்கவேண்டியது இல்லை. தளநகர்வாகவும் இருக்கலாம். அவ்வாறு நகர்ந்து செல்வது எழுத்தாளனின் அடிப்படைப் பண்பு. எழுதியதன் மேலேயே பீடமிட்டு அமர்வது நல்ல படைப்பாளி செய்யும் செயல் அல்ல.
சூழல் பல்வேறு ‘தப்பான’ காரணங்களுக்காக தன் படைப்பை புறக்கணிக்கிறது என பாவலா செய்வது எழுத்தாளனைச் சுற்றி ஒரு கோட்டையை உருவாக்குகிறது. தன்னிரக்கக் கோட்டை அது. அதற்குள் இருந்துகொண்டு அவன் வசைபாடினால் அவனை அனைவரும் கடந்து செல்வார்கள்.
ஏனென்றால் சூழலில் ஒருவன் பொருட்படுத்தும்படி இருந்தால் மட்டுமே சூழல் அவனிடம் விவாதிக்க, மறுக்க முன்வருகிறது. வசைபாடுவதும்கூட ஒருவன் முக்கியமானவனாக இருப்பதனால்தான். பொருட்படுத்தத் தகாதவனின் வசைபாடலைக்கூட சூழல் கண்டுகொள்ளாமல் சென்றுவிடும். ஏன் எதிர்வசையாடி நேரத்தை வீணடிக்கவேண்டும் என நினைக்கும். அவ்வாறாக கவனிப்பின்றி விமர்சனமும் இன்றி அவ்வெழுத்தாளன் விடப்படுகிறான். அதன்பின் வளர்ச்சியே இல்லாமலாகிறது.
அத்தனைக்கும் பிறகு ஒன்றுண்டு, உண்மையிலேயே வாசிப்புச்சூழல் ஒருவகை எழுத்துக்கு எதிராக இருக்கலாம். அவ்வாறெனில் அதை எழுதிவெல்வதே எழுத்தாளனின் பணி. நான் எழுதவந்தபோது நான் எழுதிய இரு களங்கள் நாட்டார்ச்சூழல் [படுகை] புராணச்சூழல் [திசைகளின் நடுவே] இங்கிருந்த நவீனத்துவச் சூழலுக்கு ஒவ்வாததாக, எதிரானதாகவே இருந்தது. எனக்கான ஏற்பை நான் எழுதி அடைந்தேன்.
ஜெ