காந்தி அரசியல்படுத்தியவர்கள்- கடிதம்

காந்தி அரசியல்படுத்திய மக்கள் எங்கே?
காந்தி அரசியல்படுத்தியவர்கள்- கடிதம்

அன்புள்ள ஜெயமோகன், நலமாயிருக்கிறீர்களா ?

‘காந்தி அரசியல்படுத்திய மக்கள் எங்கே?’ என்ற கேள்விக்குத் தங்களது விரிவான பதிலில் தற்கால ஜனநாயக அரசியல் வழிமுறைகளில் அஹிம்சை முறையில் மக்கள் பங்கெடுப்பதும், காந்தீய முறையிலான போராட்டங்களைக் கொண்டு தங்களது கோரிக்கைகளை அரசுக்குத் தெரிவித்துப் பெறுவதன் வழியே, காந்தி அரசியல்ப்படுத்திய மக்களின் வாரிசுகள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்ற தங்களது பதில் நேர்மையானது.

கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன், பாபா ஆம்தே போன்ற மகான்கள் உலவிவரும் காலத்தில் வாழ்வதால் காந்தீய முறைகள் யாவை, காந்தீய முறைகளைக் கையாண்டால் கிடைக்கும் மரியாதை பற்ற்றி அறிந்துகொள்ளும் பேறு பெற்றுள்ளோம் என்பது உண்மையே. சமீபத்தில் மறைந்த நானாஜீ தேஷ்முக் ஆற்றியிருந்த பணிகள் மூலமும் காந்தீய வழிமுறைகள், கிராமப் பொருளாதாரம் மேம்படத் தனி நபர்கள் எடுக்கும் முயற்சிகள் அடையும் வெற்றி முதலானவையுமே கூட காந்தீய வழிமுறைகள் நடைமுறையில் உள்ளன என்பதையே காட்டுகின்றன. தற்காலத்திலும், ஊருக்கு ஒரு கெத்தேல் சாஹிப் இருக்கிறார் என்று நீங்கள் சொன்னதைப் போல, ஆங்காங்கே ஓரிரு காந்தீயவாதிகள் தென்படுகிறார்கள் என்பது உண்மை. ஸ்வயம் ஸேவகர்கள் சிலர், கம்யூனிஸ்டுகள் ஆங்காங்கே அவ்வாறானவர்களாக இருப்பதை நான் அறிந்தே இருக்கிறேன்.

ஆனாலும் உங்கள் கட்டுரை மன நிறைவை அளிக்கவில்லை. ஏனெனில், ‘காந்தி அரசியல்படுத்திய மக்கள் எங்கே?’ என்ற கேள்விக்கான பதில் கிடத்ததாக என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

கேள்வி முக்கியமானது. தற்காலத்தில் இளைஞர்கள் மனதில் ‘காந்தி’ என்பது ஏதோ வேறெங்கோ, எந்த நூற்றாண்டிலோ வாழ்ந்த புராண புருஷர் என்பதான பிம்பமே உள்ளதை அவர்களுடன் அடிக்கடி உரையாடுவதன் மூலம் காண்கிறேன். ஆகவே, காந்தியைத் தற்போதுள்ளவர்கள் உணர்ந்துகொள்ள, அவர் வழியில் நடக்கும் அரசியல் தலைவர்கள் எங்கே என்கிற கேள்வியை நானே கேட்டுக் கொள்கிறேன். அவர் அரசியல் வழி காட்டினார். பலர் அவ்வழியில் நடந்தனர். பெண்கள் அரசியலில் ஈடுபடுவதை ஊக்குவித்தார். ‘நான் காந்தியவாதி’ என்று சொல்லிக்கொண்டு பெண்கள் அரசியலில் கௌரவத்துடன் வலம் வர முடிந்தது. ஆயினும், அவர் உருவாக்கிய தலைவர்கள், அவர் வழியில் நடப்பதற்கான மற்ற தலைமுறையினரை உருவாக்கத் தவறிவிட்டனரா? இன்று ஏன் ஒரு காந்தியவாதத் தலைவரையும் அரசியலில் காண முடிவதில்லை?

காந்தியை நம்பி அவரது ஆஸ்ரமத்திற்குச் சென்று, தங்கி, சேவை ஆற்றிய பெண்கள் பலர் இருந்தனர். திருமணம் ஆன பெண்கள் கூட அவ்வாறு சென்றிருந்தனர். எஸ்.ராமகிருஷ்ணனின் ‘காந்தியோடு பேசுவேன்’ சிறுகதையில் அவ்வகையிலான ஒரு சித்தரிப்பு வருவது நினைவிருக்கலாம். எங்கள் வீட்டில், 1940களில், மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே வாசித்திருந்த என் பாட்டி, காந்தி சொன்னார் என்பதற்காக ராட்டினம் வாங்கி நூல் நூற்று, அதனை சர்வோதயப் பண்ணையில் கொடுத்துள்ளார். காந்தி இறந்த அன்றும், பின்னர் பல காந்தி ஜெயந்திகளிலும் நூற்பது ஒரு வழக்கமாக இருந்துள்ளது. காந்தி என்னும் ஒற்றைச் சொல்லுக்கு அவ்வளவு தாக்கம் இருந்துள்ளது.

‘நான் பெரியாரிஸ்ட்’, ‘நான் கம்யூனிஸ்ட்’, ‘நான் அம்பேத்காரிஸ்ட்’ என்று கூறிக்கொள்ளும் தற்கால இளைஞிகள் மத்தியில், ‘நான் காந்தியிஸ்ட்’  என்று கூறும் இளைஞிகள் காணப்படுவதில்லை. இளைஞர்களில் ‘நான் காந்தியவாதி’ என்று கூறிக்கொள்பவர்கள் யாராகிலும் உள்ளனரா ( டாக்டர்.சுனில் கிருஷ்ணன் தவிர). இளைஞர்களைக் காந்தி சென்றடையவில்லை என்பது வருத்தமான விஷயம் இல்லையா? 40 கோடி மக்களின் பெருங்கனவை சிருஷ்டி செய்து, வளர்த்தெடுத்து, அவர்களுக்கு அக்கனவை மெய்ப்பித்தும் கொடுத்து மறைந்த அந்தக் கதராடைக்காரரை முற்றிலுமாகப் புரிந்துகொண்டு அவரது வழியில் நடப்பேன் என்று சொல்லும் இளைஞர்கள் இல்லாமல் ஆனது நமது துரதிருஷ்டமா? எவ்விடத்தில் தோல்வி? நேரு வழியமைத்துக் கொடுத்த கல்வித்திட்டத்தில் காந்தியைத் தொன்மமாகக் காணும் பார்வை மட்டுமே போதிக்கப்பட்டதா? என்னதான் நடந்துள்ளது?

சுருக்கமாக: நாம் காந்தியை எங்கே தொலைத்தோம்? இன்று காந்தி போன்ற ஒரு அரசியல் வழிகாட்டி எங்கே?

நன்றி.

ஆமருவி தேவநாதன்.

www.amaruvi.in

அன்புள்ள ஆமருவி தேவநாதன்,

நான் சொன்ன பதில் காந்தி அரசியல்படுத்திய சமூகம் எங்கே என்னும் கேள்விக்கு பதில். காந்தி அரசியல்படுத்திய சமூகம் அவர் காலத்தில் இலட்சியவாத அரசியலை முன்னெடுத்தது.ஜனநாயகப் போராட்டத்தை நிகழ்த்தியது. அப்போது பொதுஎதிரி இருந்தான். நாடு அடிமைப்பட்டிருந்தது. விடுதலைக்குப் பின் இங்கே உருவானது உரிமையரசியல். அதுவும் முற்றிலும் ஜனநாயகபூர்வமாகவே இங்கே நிகழ்கிறது. காரணம் இந்திய சமூகம் அரசியல்படுத்தப்பட்டமையால்.

அப்படி அரசியல்படுத்தப்படாத சமூகங்கள் வாழும் அண்டைநாடுகளில் எங்கும் மெய்யான ஜனநாயகம் சென்ற எண்பதாண்டுகளில் உருவாகி வரவில்லை. அதையே சுட்டிக்காட்டினேன். அரசியல்படுத்துதல் என்றால் ஜனநாயக விழுமியங்களைப் பயிற்றுவித்தல், ஜனநாயகமுறைப்படி உரிமைகளுக்காக போராடும் மனநிலையை நிலைநாட்டுதல். காந்தி அதைச் செய்தார்.

நீங்கள் கேட்பது காந்தியவாதிகள் எங்கே என. காந்தி இந்தியர் அனைவரையும் காந்தியவாதிகளாக ஆக்கவில்லை. அது எளிதும் அல்ல. அவருடன் காங்கிரஸில் இருந்தவர்களிலேயே பலரை அவர் காந்தியவாதிகளாக ஆக்க இயலவில்லை. முற்றிலும் காந்தியவாதியாக ஆவது எளிதும் அல்ல.

ஆனால் இந்திய அரசியல்வாதிகளிலேயே காந்தியவழியில் நம்பிக்கை கொண்டவர்களே மிகப்பெரும்பாலானவர்கள். இந்தியாவில் கம்யூனிசமே காந்தியவழிமுறைகளை மேற்கொண்டது. காரணம் இ.எம்.எஸ் போன்ற தலைவர்கள்.வன்முறையை முற்றாகத் துறந்த அம்பேத்கர் கடைப்பிடித்தது காந்தியப் போராட்டங்களையே. [காந்தி அம்பேத்கரை எப்படி பாதித்தார் என அறிய டி.ஆர்.நாகராஜின் எரியும் பாதங்கள் வாசிக்கலாம்]

இன்றும் இந்தியாவின் ஆட்சிநோக்கமில்லா அரசியல், இலட்சிய அடிப்படைகொண்ட அரசியல், முழுக்க முழுக்க காந்தியவழியிலானதே. இந்தியாவின் சூழியல்போராட்டங்கள் முழுமையாகவே காந்தியவழியிலானவை.பழங்குடி உரிமைகளுக்கான போராட்டங்களும், விவசாயிகளுக்கான போராட்டங்களும் காந்திய வழியையே கைக்கொண்டிருந்தன. ‘அறப்போர்’ என்னும் சொல்லே காந்திய வழியைச் சுட்டுவதுதான்.

நான் முகநூலில் காழ்ப்பைக் கக்குவதை அரசியல் என நினைக்கவில்லை. தொண்டைகிழிய எதிரியை நோக்கி கூச்சலிடுவதை பொதுப்பணி என நம்பவில்லை. அதிகார நோக்குடன் மக்களை ஒன்றுதிரட்டுவதுதான் அரசியலாளன் செய்யவேண்டிய ஒரே வேலை என்று கருதவுமில்லை. மக்களை தன்பக்கம் திரட்டும்பொருட்டு அவர்களிடையே கசப்பையும் பிளவையும் விதைப்பதை அரசியலுக்கு எதிரான மோசடிச்செயல்பாடாகவே நினைக்கிறேன்.

அவற்றுக்கு அப்பால் ஆக்கபூர்வமாக அரசியல், பொதுச்சேவை செய்பவர்களாக நான் கண்டிருக்கும் அத்தனை இளைஞர்களும் காந்தியர்களே. இந்த விவாதத்தில் பாலா சுட்டிக்காட்டிய குத்தப்பாக்கம் இளங்கோ, ஓடந்துறை சண்முகம் உதாரணம். அதைப்போல பலநூறு பேரை காட்ட முடியும். அப்படி அல்லாத பிற அரசியல் நம்பிக்கை கொண்ட ஒருசில கம்யூனிஸ்டுகளை கண்டிருக்கிறேன், அவ்வளவுதான்.

இலட்சியவாதமும் காந்தியமும் இன்று உலகமெங்கும் ஏறத்தாழ ஒன்றாகவே ஆகியிருக்கின்றன. நம்மைச் சுற்றி அத்தகையோர் உள்ளனர். நாம் நமக்கு உவப்பான அரசியல் தரப்பை கொண்டவர்களை மட்டுமே பார்க்க விழைகிறோம். அவர்களையே நம்புகிறோம். ஆகவே மெய்யான மக்கள் பணியாளர்களை காண்பதில்லை. கண்டாலும் ஏற்பதில்லை. சற்று கண் திறந்திருந்தால் அவர்களைக் காணவும்  உடன்நிற்கவும் இயலும்

ஜெ

முந்தைய கட்டுரைகளப்பிரர்கள் பற்றிய ஊகங்கள்
அடுத்த கட்டுரைஆலயம் எவருடையது? கடிதங்கள்-3