‘கிராதம்’ வாசிப்பு – முனைவர் ப. சரவணன்

‘வெண்முரசு’ நாவல் தொடரில் 12ஆவது நாவல் ‘கிராதம்’. ‘கிராதம்’ என்பது, மோகத்தின் முதன்மைத் தெய்வத்தைக் குறிக்கும். கிராதனாகச் சிவனும் கிராதியாகக் காளியும் இந்த நாவலில் இடம்பெறுகின்றனர். இந்த நாவலில் சிவன் பல்வேறு வடிவங்களில் கிராதனாக வருவது கூடுதல் சிறப்பு.

இந்த நாவலின் ‘மையம்’ என்று, வேதங்களுக்கு மாற்றாகப் புதிய வேதத்தை இளைய யாதவர் நிலைநிறுத்த விரும்புவதையும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அனைத்துத் தெய்வங்களும் ஓர் அணியில் திரள்வதையும் குறிப்பிடலாம்.

நாவலின் கதைப்பின்னலாக இருப்பது இரண்டு பெரியஇழைகள் மட்டுமே.

ஒன்று – இளைய யாதவருக்கு நிகர் நிற்பதற்காகவே அர்சுணன் நாற்திசைகளை வெற்றிகொண்டு, அதன் வழியாக ஒவ்வொரு திசைத் தெய்வத்திடமிருந்தும் ஒவ்வொரு மெய்மையைப் படைக்கலமாகப் பெற்றுக் கொள்வது.

இரண்டு – புதிய வேதத்தைத் தடுக்கும்பொருட்டு இளைய யாதவருக்கு எதிராக அர்சுணனைப் போரில் நிறுத்தவே இந்திரன் முதலான அனைத்துத் தெய்வங்களும் பல்வேறு வகையில் முயற்சி செய்கின்றன. அதன் உச்ச நிகழ்வாக இந்திரன் இந்திரலோகத்திற்கு வரும்  அர்சுணனிடம் குருஷேத்திரப் போரின் பின்விளைவுகளை முன்கூட்டியே உரைக்கிறார். ஆனாலும் அர்சுணன் பிடிவாதமாக இளைய யாதவருக்கு நிகராகவும் அவருக்கு என்றென்றும் நண்பனாகவும் திகழவே விழைகிறார்.

இந்த நாவல், ‘வேதமெய்மைகளைப்’ பற்றியே பெரிதும் பேசுகிறது. ‘மெய்மை’ என்பது, அறுதி உண்மை. இந்தச் சொல்லை ‘மெய்ம்மை’ என்று தவறுதலாகப் புரிந்துகொள்ளக் கூடாது.

உள்ளத்தில் பொய்யின்றி ஒழுகுதல் உண்மை; உள்ளத்தில் உள்ள உண்மை மாறாமல் வாய் வழியாக, சொல்லாகவோ பேச்சாகவோ வெளிப்படுவது வாய்மை; வாய்மை மொழி மாறாமல் நடப்பது மெய்ம்மை (மெய் – உடல்; உடலால் செயற்படுதல் மெய்ம்மை). இந்த நாவலில் குறிப்பிடப்படுவது, ‘மெய்மை’ என்ற அறுதி உண்மையையே.

தர்மர் வேதமெய்மையை முற்றறிவதோடு ‘சொல்வளர்காடு’ நாவல் நிறைவு பெறுகிறது. அடுத்த நாவலான இந்த கிராதத்தில், அர்சுணன் வேதமெய்மைகளைப் படைக்கலங்களாகக் கைக்கொள்ளும் விதங்கள் பற்றி விரிவாகக் காட்டப் பட்டுள்ளன.

அர்சுணன் தன்னுடைய அகத்தேடல் பற்றி,

ஒவ்வொரு திசைக்கும் ஒரு மெய்மை. இருண்ட ஆழத்தின் மெய்மை யமனிடம். ஒளிரும் துயரங்களின் மெய்மை குபேரனிடம். நெளியும் உண்மை வருணனிடம். உடையாத வைரத்தின் உண்மை இந்திரனிடம். மெய்மை என்பது, இந்நான்கும் கலந்த ஐந்தாவது ஒன்றாகவே இருக்க முடியும். நான்கையும் கடக்காது ஐந்தாவதற்குச் செல்ல முடியாது என்று தோன்றுகிறது

என்று கூறியுள்ளார்.

அந்தத் தேடல் சார்ந்த அவரின் வீர தீரப் பயணம் பெரும்பாலும் வழிநடைப் பயணிகளின் வழியாகவே கூறப்பட்டுள்ளது. சூதர்களின் மொழியாகவும் எழுத்தாளரின் கூற்றாகவும் அர்சுணனின் பயணம் விரிந்து விரிந்து நம் கண்முன்னால் நீள்கிறது.

அர்சுணன் வேதமெய்மைத் தேடலுக்காக அடையும் துயர் மிகுதி. வழிநடைப் பயணி சண்டன்,

உயிருடன் உணர்வுடன் ஆடை களைந்து இல்லம் களைந்து ஊர் களைந்து அச்சம் களைந்து ஆணவம் களைந்து அமையும் உணர்வனைத்தையும் களைந்து திசைகளைச் சூடி நின்றிருப்பதற்கோர் ஆண்மை வேண்டும்

என்று கூறுவார்.

அத்தகைய ‘ஆண்மை’ கொண்டவரே அர்சுணன். அதனால்தான் அவரால் நாற்திசைத் தெய்வங்களையும் வெற்றிகொண்டு, அத்திசைகளின் மையமான பாசுபதத்தைப் பெற்று, நிறைவுகொள்ள முடிகிறது.

இந்த ‘கிராதம்’ நாவலில், பிச்சாண்டவர், வைசம்பாயனன், மகாகாளர், கண்டன், ஜைமினி, பைலன், பிரசாந்தர், பிரசண்டன் ஆகியோரின் வழிநடைப் பயணத்தின் வழியாகவே எண்ணற்ற கதைகள் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன.

அவர்களின் பயணத்தில் வழியாக வெவ்வேறு வணிகப்பாதைகள்; வணிகக்குழுக்கள்; வணிகப் பொருட்கள்; பல்வேறு பருவங்களைக் கொண்ட பெருநிலங்கள், அடர்காடுகள், பெருமலைகள் எனப் பலவற்றையும் காட்சிப் படுத்தியுள்ளார் எழுத்தாளர். இந்த நாவலைப் படித்து முடித்ததும் வழிநடைப்பயணிகளோடும் அர்சுணனோடும் நாமும் அந்தப் பயணத்தில் பங்கேற்று, மீண்ட மனநிறைவு எழுகிறது.

மரங்கள் நெருங்கி, நெடிது வளர்ந்து காடாவதுபோலவே, இந்த நாவலில் துணைக்கதைகள் அடர்ந்து, பெருகிக் கதைக்காடாகியுள்ளது. காட்டுச் சிலந்தியின் வாயிலிருந்து வலுமிக்க நூலாம்படை அறுபடாமல் முடிவின்றி வந்து கொண்டிருப்பது போலவே எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்களின்  சிந்தனையிலிருந்து வியத்தகு கதைநிகழ்வுகள் வந்துகொண்டே இருக்கின்றன.

அர்சுணன் தன்னுடைய வேதமெய்மைத்தேடலைத் தெற்கிலிருந்து தொடங்குகிறார். ஆனால், அவரின் தந்தை இந்திரன் இருக்கும் திசையோ கிழக்கு. ஏன் இந்த முரண்? இதற்கு இந்த நாவலிலேயே விடை இருக்கிறது.

ஜைமினி,

சண்டரே! வேதமெய்ப்பொருளை அறிய வேத முதன்மைத் தெய்வமாகிய இந்திரனிடமல்லவா அர்ஜுனன் சென்றிருக்க வேண்டும்?”

என்றான்.

ஆம், அந்தணரே! ஆனால், அறிதலில் மட்டும் படிப்படியாக மேலெழுவதே உகந்தது

என்றான் சண்டன்.

      “இருண்ட தெற்கின் இறப்புலகில் இருந்து தொடங்கி உயிர் முளைகொண்டெழும் கிழக்குவரை செல்வதே உகந்த சுற்று

என்றான் பைலன்.

பாரதப்பெருநிலத்தின் நான்கு திசைகளிலும் சுற்றியலைந்து மெய்மைகளைப் பெறுகிறார் அர்சுணன். இவரின் அலைச்சலின் வழியாகவே பாண்டவர்களின் வனவாசத்திற்குரிய ஆண்டுகள் சிறுக சிறுகக் குறைவதாக உணர்த்திவிடுகிறார் எழுத்தாளர். நாவலில் கதை நிகழும் காலத்தை இவ்வாறுதான் குறிப்புணர்த்திக் கடக்க இயலும். இது காவியப் புனைவுத் தர்மமும்கூட. இது சிறந்த உத்தியே!.

பாண்டவர்களை நமது கைவிரல் ஐந்திற்கு ஒப்பாகச் சொல்லலாம். நடுவிரல் தர்மர். மோதிர விரல் நகுலன். சுண்டு விரல் சகாதேவன். அவன் எப்போதும் நகுலனுடனேயே இணைந்து நிற்பவன். எதற்கும் முந்தி நிற்கும் ஆட்காட்டி விரலே பீமன். ஐவரோடு எப்போதும் இணைந்து பணியாற்றியும் எப்போதும் விலகியும் இருக்கும் கட்டைவிரல்தான் அர்சுணன்.

அத்தனை திறன்களைப் பெற்றிருந்தும் வாழ்க்கை முழுவதும் தனிமையில் தவிப்பவன் அர்சுணன். தன்னந்தனியன். அதனால்தான் அவனால் ஓர் இடத்திலும் அமைவுகொண்டு இருக்க முடிவதில்லை. அவன் காற்றின் போக்கிற்கு அலையுறும் சருகுபோலவே தன்னுடைய தனிமையைப் போக்கிக்கொள்ள ஏதேதோ காரணங்களை முன்வைத்து, தனிப் பயணியாக அலைந்துகொண்டே இருக்கிறான்.

அர்சுணன் எங்கும் எந்நிலையிலும் தோல்வியை எதிர்கொள்ள விரும்பாதவர். வெற்றிகொண்டு முன்னேறிச் செல்வதே அவரின் வழி. அவர் பெறும் மெய்மையும் அதுவே.

முதுமைகொண்ட சோனக வணிகர்,

“வீரர் செய்வதும் வணிகமே. அவர்கள் வெல்வது பணமல்ல, புகழ்.முதிய வணிகன் புகழ் அல்ல, வெற்றி. தன்மீதான வெற்றி. அது அளிக்கும் மெய்மை என்று கூறுகிறார்.

இது முழுக்க முழுக்க அர்சுணனுக்குப் பொருந்தும்.

ஆனால், அர்சுணன் தான் நாற்திசைத் தெய்வங்களிமிருந்து பெற்ற அதிஅம்புகளைக் கொண்டு போரிட்டும் தோற்பது, கிராதரான சிவனிடம் மட்டுமே. ஆனால், ‘அர்சுணன் கிராதரான சிவனைத் தன் ஆசிரியராகக் கொள்வதால், இந்தப் போர் தோல்வியல்ல; பயிற்சி, கல்வி’ என்று கிராதியான காளி கூறுகிறார்.

ஜாததேவனின் குழந்தையை மீண்டும் உயிர்ப்பிப்பதற்காக அர்சுணன் யமலோகத்திற்குச் செல்வதும் 28 வாயில்களைக் கொண்ட ‘பரிச்சேதம்’ என்பதில் அச்சமின்றி நுழைந்து, மீள்வதும் யமனிடம் இருந்து அன்புப் பரிசாகத் ‘தண்டகை’யைப் பெற்றுக்கொள்வதும் ஜாதவேதனின் இறந்த குழந்தையின் உயிருக்கு ஈடாகத் தன் மகனின் உயிரை வைத்து, அந்தக் குழந்தையை உயிர்ப்பிப்பதும் எழுத்தாளரின் துள்ளல் எழுத்துநடையில், உணர்ச்சிகரமாகக் காட்டப்பட்டுள்ளன. அர்சுணனுக்கு ஏற்படும் அதே பதற்றம் வாசகருக்கும் ஏற்பட்டுவிடுகிறது.

ஒருவேளை ‘பரிச்சேதம்’ வாயிலுக்குள் தர்மர் நுழைந்திருந்தால், அவரிடம் முதலில் உதவிகோரும் கம்சனையும் அவனின் படையினரையும் மீட்டிருப்பார்.. ஒருவேளை ‘பரிச்சேதம்’ வாயிலுக்குள் கர்ணன் நுழைந்திருந்தால், அந்த முடிவற்ற பெருங்குழியில் கிடந்த அனைத்து உயிர்களையும் மீட்டிருப்பார்.

அர்சுணன், ‘இலக்கு ஒன்றே என் வேதம்’ என்ற கொள்கையுடையவர். அதனால்தான் ‘பரிச்சேதம்’ வாயிலுக்குள் நுழைந்த அவர், யாருடைய குரலுக்கும் செவிசாய்க்காமல், ஜாதவேதனின் இறந்த குழந்தையை உயிர்ப்பிக்கும் இலக்கினை மட்டும் எய்து, திரும்புகிறார்.

ஸ்ரீராமரின் அம்புக்குப் பலியான வாலி, இந்திரலோகத்தில் பாலியாக அமர்ந்திருக்கிறார். அர்சுணனைப் போலவே பாலியும் இந்திரனின் மகன்தான். இளைய யாதவர் முன்பு ஸ்ரீராமராக இருந்தவர். ஆக, இப்போது இளைய யாதவர் அர்சுணனுக்கும் எதிரிதான். இளைய யாதவர் இந்திரனுக்குத் தம் குலத்தில் பூஜைகள் ஏதுமில்லாமல் செய்து, இந்திரனை ஒரு திசைத் தெய்வமாக மட்டும் அமரச் செய்துவிட்டார்.

விஸ்வாமித்திரனின் கொடிவழிவந்த காலவர், தன்னை இழிவு செய்த சித்தரசேனன் என்ற கந்தர்வனைக் கொல்வதற்காக இளைய யாதவரைத் தேர்கிறார். சித்தரசேனனின் மனைவி தன் கணவரைக் காத்துக்கொள்வதற்காக அர்சுணனைத் தேர்கிறார். ஆனால், சித்தரசேனனைக் கொல்வதாக இளைய யாதவர் வாக்களித்திருப்பதை அர்சுணன் பின்னரே அறிகிறார்.

வாக்களித்துவிட்டதால் அர்சுணன் இளைய யாதவரை எதிர்கொள்ள விழைகிறார். அஸ்வபகஷத்தில்  இளைய யாதவருக்கும் அர்சுணனுக்கும் இடையே கடும்போர் நிகழ்ந்தது. ஆனால், காலவரும் கந்தர்வன் சித்ரதேசனனும் தங்களுக்குள் சமரசமானதால், அந்தப் போர் பாதியிலேயே நிறைவுற்றது. அர்சுணன் உயிர்ப் பிழைத்தான்.

அதன்பின்னரே இளைய யாதவருக்கு நிகர்நிற்பதற்காகப் புதிய படைக்கலத்தைத் தேடி நான்கு திசைகளுக்கும் அலைந்தான் அர்சுணன். ஆனால், உண்மையில் அவனின் நோக்கம் வேறுவிதமாக இருப்பதை இந்திரலோகத்தில் பாலியைச் சந்தித்துத் திரும்பும் அர்சுணனின் மனவோட்டத்திலிருந்து அறிய முடிகிறது.

“அந்த விழிகளிலிருந்த வஞ்சம் எத்தனை உண்மையானது என அவன் உள்ளம் அன்று அறிந்தது. அவனை அலைக்கழித்தது அதுதான். அவன் திசைத் தேவர்களின் படைக்கலம் தேடிச் சென்றது அதனால்தான். நான் நிகர்நிலை நிற்க விரும்பி படைக்கலம் தேடவில்லை. அவனை அஞ்சியே அலைகிறேன். அவனிடமிருந்து என்னைக் காத்துக்கொள்ளவே இவையனைத்தும்.”

       அர்சுணன் இந்த உலகத்தில் அஞ்சுவது இளைய யாதவரிடம் மட்டுமே என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

‘வெண்முரசு’ தொடர் நாவல்கள் அனைத்துமே நவீனக் காவியம்தான். யதார்த்த வாழ்வோடு இணைத்துப் புரிந்துகொள்ள உதவாத காவியங்களால் எப்பயனும் இல்லை. அவ்வாறு இணைத்துப் புரிந்துகொள்ளத் தெரியாத வாசகரின் வாசிப்பால் அந்தக் காவியங்களுக்கு எப்பயனும் இல்லை.

சான்று – 01 –

விருத்திரனின் படைத்தலைவன் கௌமாரன் விருத்திரரின் சொல்கொண்டு புற்றிகபுரியை ஆள்பவர். விருத்திரனைத் தேடிவரும் வருணன் அவரிடம் உரையாடும் பகுதி முக்கியமானது. நமது யதார்த்த வாழ்வோடு இணைத்துப் புரிந்துகொள்ள வேண்டிய ஒன்று என நான் நினைக்கிறேன். சான்று –

வருணன் கௌமாரனிடம்,

“உங்கள் அரசன் இன்று அந்திக்குள் என்னை வந்து சந்திக்க வேண்டும். பெருங்கடல்களின் ஆழத்தில் எனது மாளிகை உள்ளது. அதன்முன் அவன் ஒரு காலத்தில் இரந்து கையேந்திய முற்றம் உள்ளது. அங்கே வாயிலில் கைகட்டி வாய்பொத்தி நின்று சந்திப்பு கோரவேண்டும். இல்லையேல், அவன் இறுதிக் குருதியும் எஞ்சுவதுவரை போரிடுவேன். இறுதிச் சாம்பலும் எஞ்சுவதுவரை வஞ்சம் கொண்டிருப்பேன். அவனை அறிவுறுத்துவதற்கே வந்தேன்

என்றான்.

கௌமாரன்,

வருணனே, நீர் உளம் திரிந்திருக்கிறீர். இப்புவிக்கு மட்டுமே நீர் பேருருவர். இன்று விண் எழுந்த ஏழு உலகங்களையும் வென்று இந்திரனென அமர்ந்திருக்கிறார் விருத்திரர். விதையென இருக்கையில் ஆலமரத்திற்கு நீர் நீரூற்றியிருக்கலாம். பன்னிரண்டாயிரம் விழுதுகள் எழுந்தபின் ஆலமரம் உமது முற்றத்துத் தொட்டியில் அடங்கவேண்டுமென நினைத்தீர் என்றால், உலகறியாப் பேதையெனப் பேசுகிறீர்.

என்று அவரைச் சினக்கிறான்.

யதார்த்த வாழ்வில் இந்த ஆணவம் இல்லாத பெரிய மனிதர்களே இல்லை. இத்தகையவர்கள் குறிப்பாக வணிகம் சார்ந்தும் கல்விசார்ந்தும் அரசியல் சார்ந்து இருப்பதையே பார்க்க முடிகிறது.

யாருக்காவது ஏதாவது ஒரு தருணத்தில் எதையாவது உதவிபோலச் செய்துவிட்டு, பின்னாளில் தன்னிடம் உதவிபெற்றவர்கள் தன்னைத் தாண்டி வளர்ந்து நிற்கையில், தன்னுடைய வெற்று ஆணவத்தால், முன்னாளைய தருணத்தின் அடிப்படையிலேயே அவர்களைத் அளவிட எண்ணுவது எவ்வளவு பெரிய மூடத்தனம்! அந்த மூடத்தனத்தால் அவர்கள் அடையும் இழப்பு குறித்ததாகவே கௌமாரனின் பின்வரும் சொல்லாடல் அமைந்துள்ளது என்று நினைக்கிறேன்.

கௌமாரன் வருணனின் தோளைத்தொட்டு,

முதுமையின் அறிவின்மை ஒன்றுண்டு, அது இளையோரை எப்போதும் இளையோரென்றே காணும். காட்டில் குலமாளும் முதுகளிறும் அவ்வண்ணமே. அது இளங்களிறின் கொம்புபட்டு குடல்சரிந்து சாகும்

என்றான்.

சான்று – 02 –

யதார்த்த வாழ்வில் சிலரின் ஆசைகளைப் புரிந்துகொள்ளவே முடிவதில்லை. ஜாதவேதனும் அவரின் மனைவியும் இறந்த குழந்தையை உயிர்ப்பிக்குமாறு அர்சுணனிடம் வேண்டுகின்றனர். அர்சுணன் யமலோகத்தில் தன் மகனை ஈடாக்கி அந்தக் குழந்தையை மீட்கிறார். அந்தக் குழந்தையுடன் சில நாட்கள் தங்குகிறார். ஜாதவேதனும் அவரின் மனைவியும் அந்தக் குழந்தைக்கு விழா எடுக்க நினைத்து, அதற்குரிய பொருள் இல்லாமல் திண்டாடுகிறார்கள். வறுமை தரும் அழுத்தத்தின் காரணமாக அந்தக் குழந்தையை அவர்கள் வெறுக்கின்றனர்.

அவர்களுக்கு முதலில் எது முதன்மையாக இருந்ததோ அது மற்றொரு தருணத்தில் தேவையற்றதாக, பெருஞ்சுமையாக மாறுவதை எழுத்தாளர் காட்டியுள்ளார். அர்சுணன் மிகுந்த மனவருத்தம் அடைகிறான். இத்தகையவர்களுக்காகத் தம் வாழ்க்கையில் உதவிய எண்ணற்றோர், அர்சுணனின் அடைந்த அதே மனநிலையைத்தான் அடைந்திருப்பர். எப்போதும் காவியங்கள் நிகழ்காலத்தின் கண்ணாடியாகவே திகழ்கின்றன.

இந்த நாவலில் எழுத்தாளரால் காட்சிப்படுத்தப்படும் தருணங்களுள் ஐந்து மிக அழகானவை.

  1. அர்சுணன் தன் தந்தை இந்திரனின் கோரிக்கையைப் புறக்கணித்து, எதை இழந்தாலும் தான் இளைய யாதவனுடனேயே இருப்பேன் என்று கூறுவது.
  2. ஊர்வசி தன்னை விலக்கிய அர்சுணனின் மீது தீச்சொல்லிட்டு, அவனைப் பெண்ணாக்குவது. பெண்ணுருவை விரும்பி ஏற்ற அர்சுணன் மனத்தளவில் ராதையாக மாறி, இளைய யாதவருடன் செல்ல நினைப்பது.
  3. குழந்தை உக்ரன் தெய்வ அருள்கொண்டு வியாசரின் மனவோட்டத்தில் பேசுவதும் பாடுவதும். ஒருநிலையில் அவன் குழந்தையாகவும் மறுநிலையில் பெருஞ்சூதனாகவும் திகழ்கிறான். அவனை வழிநடைப் பயணிகள் நால்வரும் ‘மகாசூதன்’ என்று பாராட்டித் தம்முடன் நடைவழிப் பயணத்திற்கு அழைத்துச் செல்கின்றனர்.
  4. நாற்திசைக்கும் நடுவில் உள்ள பாசுபதத்தைப் பெறுவதற்காகத் தம்மைத் தேடி வரும் அர்சுணனைச் சிவனும் காளியும் விநாயகரும் முருகரும் வேட்டுவக்குலத்தினர் போல உருமாறி, அவனை எள்ளிநகையாடுவது.
  5. இந்திரலோகத்தைக் கைவிட்ட இந்திரன் சதகூபம் பெருங்காட்டில் பிரபாலம் ஆலமரத்தின் உச்சிப்பெந்தில் ஒளிந்துகொண்டு, தேனுக்குள் தேனீயாக மயங்கிக் கிடக்கும் காட்சி. அவனை நாரதர் தெளிவிக்கும் பொருட்டு மேற்கொள்ளும் உரையாடல்.

இந்த நாவலில் ஓர் ஒத்திசைவு நிகழ்ந்துள்ளது. இதனை எழுத்தாளர் திட்டமிட்டுச் செய்தாரா அல்லது நாவலில் அது தானே நிகழ்ந்துவிட்டதா எனத் தெரியவில்லை.

அத்ரி முனிவரின் மனைவி மகாகாலரைக் குழந்தைவடிவில் காண்பது. அதன் வழியாகத் தன் கணவரின் சினத்திலிருந்து தப்புகிறார். இந்திரகீலத்திற்குச் செல்லும் அர்சுணனை இறுதியாக வழிநடத்தும் இளம்பெண்ணின் பெயர் மத்யை. சிறுமியாக உருமாறும் அவளை அர்சுணன் தூக்கிக் கொஞ்சிக்கொண்டே மலையேறுகிறார். அதனால்தான் அவர் இறுதித் தடையையும் கடந்து, இந்திரனைச் சந்திக்க முடிகிறது.

அன்னை தன் மைந்தனைக் குழந்தையாகப் பார்ப்பதும் தந்தை தன் இளமகளைச் சிறுமியாகப் பார்ப்பதும் என இந்த இரண்டு நிகழ்வுகளும் இருநிலைஎதிர்வுகளாக அமைந்துள்ளன.

‘வெண்முரசு’ தொடர் நாவல்களில் சில இடங்களில் சங்க இலக்கிய வரிகள், அற இலக்கிய வரிகள், இலக்கண நூற்பா ஆகியன மெல்லத் தலைகாட்டும். அவை வாசிப்புச் சுவைக்கு மேலும் வலுவூட்டும்.

எழுத்தாளர் அந்த வரிகளை அப்படியே மேற்கோளாகக் காட்டியிருக்க மாட்டார். அவற்றின் சாரம் சார்ந்த சொல்லடுக்கை இடத்துக்கு ஏற்ப  கதைமாந்தர்களின் உரையாடலில் பயன்படுத்தியிருப்பார்.

‘வண்ணக்கடல்’ நாவலில் இடம்பெற்றுள்ள முதல் இரண்டு அத்யாயங்களை அதற்குச் சான்றாகக் காட்டலாம். முழுக்க முழுக்க எள்ளல் சுவைக்காகவே அவற்றைப் பயன்படுத்தியிருப்பார். இந்த ‘கிராதம்’ நாவல் கதைநகர்வுக்கு ஏற்பப் பயன்படுத்தியிருக்கிறார்.

 

இலக்கண நூற்பாவுக்குச் சான்று

“வேள்வி என்பது சொல். எல்லாச் சொல்லும் பொருள்குறித்தனவேஎன்று ஜைமினி தொடர்ந்தான்.

இது தொல்காப்பியம் என்ற இலக்கண நூலில் உள்ளது.

“எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே”

(தொல்காப்பியம், சொல்லதிகாரம், பெயரியல், நூற்பா எண் – 642.)

 

சங்க இலக்கிய வரிகளுக்குச் சான்று

‘காவல்யட்சி’ வாமை தன்னைப் புறக்கணித்துச் செல்லும் அர்சுணனிடம் கூறுவதை இங்குச் சான்றாகக் காட்டலாம்.

“திரும்பாமல் அவன் கடந்துசென்றபோது மெல்லிய விம்மலோசை கேட்டது.

நில்லுங்கள், என் விழைவு மெய்யானது. இனி அது நிறைவுறப்போவதே இல்லைஎன்றாள் அவள். அவன் அவ்வெல்லையைக் கடக்கையில், ‘நலமுணப்படாது துறக்கப்பட்டோர் சூடுநர் இட்ட பூவோரன்னர்’ என்றாள்.

இந்த உவமை கலித்தொகையில் உள்ளது.

“நல்குநர் புரிந்து நலனுணப் பட்டோ

ரல்குநர் போகிய வூரோ ரன்னர்

கூடினர் புரிந்து குணனுணப் பட்டோர்

சூடின ரிட்ட பூவோ ரன்னர் (கலித்தொகை, பாலைக்கலி, பாடல் எண் – 23)

சில தருணங்களில் மட்டும் கதைக்குத் திருப்புமுனையாக அமையும் இடத்தில், அவற்றை நுட்பமாகப் பயன்படுத்தி, வாசக மனத்தைப் பேரெழுச்சிப் பெறச் செய்துவிடுகிறார்.

 

சான்று

போர்முரசின் ஒலி கேட்டு கவசங்களை அணிந்துகொண்டு அமர்ந்த அசுரன் விருத்திரன் மது கொண்டுவர ஆணையிட்டான். மேலும் மேலும் என அருந்தி, கவசங்களுடன் படுத்துத் துயின்றுவிடுகிறான்.

“மறுநாள் விழித்தெழுகையில் உடலில் கவசங்கள் இருக்கக் கண்டு, நடந்ததை உணர்ந்து, பாய்ந்து சென்று விரைந்து அமைச்சரை அழைத்து, “என்ன நிகழ்ந்தது?” எனக் கேட்டான் விருத்திரன்.

அரசே, இந்திரனின் படைகள் அணுகிவிட்டன. நகருக்குள் அவை நுழைந்துகொண்டிருக்கின்றனஎன்றார் அமைச்சர்.

இனி ஒருகணம்கூட நமக்கு இல்லைஎன்று கூவினார். ஆம், காலம்…” என்று விருத்திரன் சொன்னான்.

நாள் என ஒன்றுபோல் காட்டி வாளென்று வருவது. அவ்வாறே ஆகுக!என்றான்.

‘காலம் நாள் என ஒன்றுபோல் காட்டி வாளென்று வருவது’ என்ற குறிப்பு திருக்குறளில் உள்ளது.

“நாள்என ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்

வாளது உணர்வார்ப் பெறின்

(திருக்குறள், நிலையாமை அதிகாரம், குறட்பா எண்:334)

வழிநடைப் பயணி சுமந்து வியாசரைப் பற்றி,

அவருடைய சொற்களை என்னால் பல்லாயிரம் சொற்களுக்கு நடுவே முதல்செவியிலேயே சொல்லிவிட முடியும். அவரன்றிப் பிறர் அந்த உயரத்திற்குச் செல்ல முடியாது. தோழரே! விண்ணிலிருந்து செம்பருந்து உதிர்க்கும் ஒற்றை இறகு போதும், அது அங்கே அளாவிய முகிலையும் ஒளியையும் நாம் அறிவதற்கு.

என்று கூறுகிறான்.

எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்களின் அறிவாழத்துக்கும் கற்பனைப் பெருக்கிற்கும் சொல்வளத்துக்கும் நான் இதே வரிகளையே கூற விரும்புகிறேன்.

முனைவர் . சரவணன், மதுரை

 

சொல்வளர்காடு -ப சரவணன்

‘செந்நா வேங்கை’ வாசிப்பு-முனைவர் ப. சரவணன், மதுரை  

‘இமைக்கணம்’ வாசிப்பு-முனைவர் ப. சரவணன்

பன்னிருபடைக்களம்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன்,

‘வெய்யோன்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன்

காண்டீபம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன், மதுரை  

‘இந்திர நீலம்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன், மதுரை

‘வெண்முகில் நகரம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன்

‘பிரயாகை’ வாசிப்பு- முனைவர் ப. சரவணன்

வண்ணக்கடல் வாசிப்பு- முனைவர் ப.சரவணன்

முதற்கனலும் நீலமும் – முனைவர் ப. சரவணன்

முந்தைய கட்டுரைசீவகசிந்தாமணி-உரை
அடுத்த கட்டுரைவல்லினம் சிங்கைச் சிறப்பிதழ்