லீனா மணிமேகலையின் ’மாடத்தி’ – கடலூர் சீனு
அன்புள்ள ஜெ
மாடத்தி பார்த்தேன். அது ஒரு மிகச்சிறிய படம். பொருளியலில். ஆகவே அதன் எல்லைகளும் மிகமிக குறுகியவைதான். வெளிநாடுகளில் பெரும்பொருட் செலவில் எடுக்கப்படும் படங்களுக்கும் இந்தப்படங்களுக்குமான வேறுபாடு இங்கே பலருக்கும் தெரியவில்லை. எளிமையும், வெளிப்பாட்டின் நேர்மையும், வடிவ நேர்த்தியும்தான் இந்தவகையான சினிமாக்களின் அழகுகள். அந்தவகையில் மாடத்திக்கு தமிழ்ச் சினிமா வரலாற்றில் மிகமிக முக்கியமான இடம் உண்டு.
லீனா இந்தப் படம் வழியாக தமிழின் முதன்மையான கலைப்பட இயக்குநர் என்ற இடத்தை அடைந்துவிட்டார். இனிமேல் உன்னைப்போல் ஒருவன் [ஜெயகாந்தன்] தாகம் [பாபு நந்தங்கோடு] சிலநேரங்களில் சில மனிதர்கள் [ஏ.பீம்சிங்] உச்சிவெயில் [கே.சேதுமாதவன்] டுலெட் [செழியன்] ஆகியோர் வரிசையில் லீனாவையே முதலிடத்தில் வைக்கவேண்டும் என நினைக்கிறேன்.
மாடத்தி ஒரு நிறைவான அனுபவம். அதன் சிறப்பு என நான் சொல்வது முழுக்கமுழுக்க அது காட்சிவடிவாக அமைந்திருப்பதும், கச்சிதமான வடிவ ஒழுங்குடன் இருப்பதும்தான். அதன் அமைப்பில் ஒரு எளிமையான நேர்த்தி இருக்கிறது. படத்தை பலரும் பார்க்கும் தருணம், ஆகவே விரிவான பகுப்பாய்வுகள் தேவையில்லை. ஆனால் இதை வாழ்க்கையின் ஒரு துண்டு என்று பார்க்கவேண்டும் என்பதை மட்டும் சொல்லவிரும்புகிறேன்.
சினிமா என்ற வணிக இலக்கணப்படி பரபரப்பான அகன்ற காட்சிகள் திருப்பங்கள் ஆகியவற்றையும் எதிர்பார்க்கக் கூடாது. உலகக் கலைப்படங்களின் இலக்கணங்களைக் கொண்டு பெரிய தத்துவஞானச் சிக்கல்களையும் படிமச்செறிவையும் எதிர்பார்க்கக் கூடாது. இது நம் வாழ்க்கையின் அடித்தளத்தில், எருவில், இருந்து ஒரு புதிய தளிர் முளைத்து எழுந்து நிற்பதைக் காணும் பரவசத்தை அளிக்கும் படம்.
இங்கே கலைப்படம் என்றால் ‘கருத்துசொல்லும் படம்’ என்று எழுதி நிறுத்திவிட்டார்கள். மையக்கருத்து ‘நாங்கள் நினைக்கும் முற்போக்காக’ இருந்தால் கொண்டாடுவோம் என்று ஒரு தரப்பு சொல்லிக்கொண்டே இருக்கிறது. அவர்களின் குரலுக்கு சூழலில் மதிப்பு இருக்கிறது. ஏனென்றால் அதைச் சொல்பவர்களுக்கு கலையின் அழகியலோ உள்விரிவோ தெரியாது. பருவெட்டான கருத்துக்களே தெரியும். அதை கேட்பவர்களுக்கு அவ்வளவுதான் உள்ளே ஏறும். மேற்குத்தொடர்ச்சிமலை போன்ற கொடிய அனுபவங்களெல்லாம் அப்படித்தான் நமக்கு அமைகின்றன. எல்லாருக்கும் தெரிந்த ஒன்றை மீண்டும் சொல்வது கலையின் வேலை அல்ல, புதிய அகஉலகை கண்டடையாவிட்டால் அது கலையே அல்ல.
இந்தப்படமும் அடிப்படையில் பெண்விடுதலை பேசுவதுதான். ஆனால் அது இந்தப்படத்தின் தனிச்சிறப்பு அல்ல. அதை மட்டும் பேசியிருந்தால் இது சினிமாவும் அல்ல. இது வளரிளம்பெண்மையின் போராட்டத்தை, தன்னைக் கண்டடைதலை நுட்பமாகச் சொல்கிறது. இதன் பெண்ணியக் கருத்துநிலையை மட்டும் சிலாகித்துப் பேசுபவர்கள்தான் இன்று இப்படத்தின் பெரிய தடைகள். இது கலைப்படைப்பு
லீனா இன்றுவரை அடையாத ஒரு கலைநிகழ்வு இது. அக்கலை நிகழ்ந்திருப்பது இந்தப்படம் அவருடைய பிரக்ஞாபூர்வமான கருத்துக்களைக் கடந்து சென்று மாடத்தியாக அவர் ஆன சில தருணங்களை அடைந்திருப்பதனால்தான். சிந்தனை கலை அல்ல, சிந்தனையை கடந்துசெல்வதே கலை. அது நிகழ்ந்திருக்கிறது. லீனா அதை மீண்டும் மீண்டும் அடையவேண்டும்.
எம்.பாஸ்கர்
அன்பின் ஜெ,
நலம்தானே?
லீனாவின் “மாடத்தி” பார்த்தேன். பல மாதங்கள் காத்திருந்து பார்த்தேன் என்பதுதான் உண்மை.
படம் ஆரம்பிக்கும்போது மூன்று க்ளோஸ்-அப் ஷாட்கள்: டூ வீலர் ஓட்டிக்கொண்டிருக்கும் ஆக்ஸிலேட்டர் பிடித்திருக்கும் கையில் தங்க மோதிரம். பின்னால் உட்கார்ந்திருக்கும் பெண்ணின் காதில் தொங்கும் தங்க ஜிமிக்கி கம்மல். இடுப்பைச் சுற்றி பிடித்திருக்கும் கையில் தங்க வளையல்கள். புதிதாய் திருமணமான கிராமத்து இளம் ஜோடி, டி.வி.எஸ் 50-ல். அங்கு தொடங்கிய காட்சிகளின் மீதான ஈர்ப்பும், கவனமும் இறுதிக்காட்சி வரை நீடித்தன.
தார் சாலையிலிருந்து பிரிந்து “மாடத்தி கோயில்” என்றெழுதப்பட்ட மைல் கல் அருகே டி.வி.எஸ் 50-ல் காட்டிற்கிடையிலான மண்சாலையில் புதுமணத் தம்பதிகள் திரும்பும் காட்சி, இன்னும் புலராத அந்த வைகறை இருட்டில், வேணி, ரயில்வே ட்ராக் ஓரத்தில், கடந்து செல்லும் ரயிலின் வெளிச்சத்தில் உவர்மண் எடுக்கும் காட்சி, தூரத்தில் அம்மாவும் அப்பாவும் முயங்கும் ஒலிகள் கேட்டு படுத்திருக்கும் யோசனா உறக்கத்தில் தண்ணீருக்குள் நீந்துவதாக கனவு காணும் காட்சி, மழைக்கு ஒதுங்கிய வண்ணார்கள் உட்கார்ந்திருக்கும், மழையில் நனையும் அந்த பழைய மண்டபக் காட்சி, வேணியும் அவள் கணவனும் துணி துவைக்கும் அந்த தொரப்பாடு, ஊரில் சாவு விழ, அதை அடக்கம் செய்ய குழி தோண்டி காரியங்கள் செய்ததற்காக ஊர்க்காரர்கள் தரும் கள்ளைக் குடித்துவிட்டு வீட்டிற்கு வரும் சுடலையிடம் மாமியார் பற்றி வேணி புகார் செய்ய, ‘அதைப் போயி நாலு மிதி மிதிச்சிட்டு வாரேன்’ என்று அம்மா வீட்டிற்குப் போகும் சுடலை அங்கு சென்று அம்மாவிடம் கறிச்சோறு சாப்பிடும் காட்சி, யோசனா மேலிருந்து பார்க்கும்போது தூரத்தில் கீழே நடந்து செல்லும் மனிதன் டிரான்ஸிஸ்டரில் கேட்கும் ‘அடி என்னடி ராக்கம்மா’ பாடல், சாமி செய்ய கல் தேர்ந்தெடுத்து பழங்கள் வைத்து பூஜை முடித்தபின் கல் தூக்கி அவர்கள் சென்றுவிட, அங்கு வரும் யோசனா அந்த பழங்களை குரங்கு நண்பர்களோடு சேர்ந்து சாப்பிடும் காட்சி, கிராமத்து இளைஞர்கள் கபடி விளையாடும் காட்சி, கோவில் திருவிழாக் காட்சிகள் (முளைப்பாரியும், கும்மியும்), அந்த உரையாடல் “விளையாடாதடா, இது சாமி. தொட்டுக் கும்பிடணும்”, ஊர் மக்களின் கண்களில்லாத, குறிப்புணர்த்தும் அந்த ஓவியம்…
படத்தின் எந்தக் காட்சியும் மனதில் பதியாமல் நகரவில்லை. இறுதிக் காட்சியில் இருளில், லட்சுமணனையும் வரிசையில் கண்டு, மற்றவர்களுக்கும் அவனுக்கும் துளியும் வித்தியாசமில்லை என்பதை அறிந்து அந்த சக்தி கொள்ளும் அதிர்ச்சி, அதிகரிக்கும் அழுகை…மனதறுப்பது.
***
கோவையின் பி.எஸ்.ஜி கல்லூரியில் படித்த, பல வீதி நாடகங்களில் நடித்த அனுபவமுள்ள செம்மலர் அன்னம் சிறப்பாக நடித்திருக்கிறார்.பல இடங்களில் ரஃபிக் இஸ்மாயிலின் உரையாடல்களை மிகவும் ரஸித்தேன்.சில வருடங்களுக்கு முன் படித்த இமையத்தின் “கோவேறு கழுதைகள்” நினைவுகளில். ஆரோக்கியமும், மேரியும் மனதில் மேலெழுந்தார்கள்.
லீனாவிற்கும் குழுவிற்கும் வாழ்த்துக்களும் நன்றியும் அன்பும்.
வெங்கடேஷ் சீனிவாசகம்
இனிய ஜெயம்,
மாடத்தி படத்துக்கான வரவேற்பையும் எதிர்வினைகளையும் கண்டேன். பரவாயில்லை டூ லெட் வெளியானபோதான நிலைக்கு இந்த நிலை தேவலாம் :).
எதிர்வினைகள் முற்றிலும் எதிர் எதிர் நிலைகளிலாக, படத்தின் ஜாதிய பெண்ணிய சொல்லாடல்களை முன்வைத்து பூச்சொரிதல் என்றும், இது கலையே அல்ல சுயாதீன மாற்று சினிமா எனும் பெயரில் நிகழும் ‘எதையும்’ குறித்து ஏன் பேச வேண்டும், என்றும் நிகழ துவங்கி இருக்கின்றன
2000 இல் தமிழ்நாடு கண்ட dvd புரட்சியில் நிகழ்ந்த சாபக்கேடுகளில் ஒன்று உலக கலை சினிமா மற்றும் விமர்சகர்களின் பெருக்கம். நிகழ்ந்த ஒட்டுமொத்த தமிழ்த் திரைக்கலாச்சார ஓட்டத்தையும், அதன் கலாச்சார உரையாடல் என்ன என்றே அறியாமல் மொத்தமாக இழிவு படுத்துவது அங்கிருந்து துவங்கியது. மணிரத்னம் கிட்ட என்ன பிரச்னைன்னா என்றோ, கமல் ஓவர் ரேட்டட் என்றோதான் தமிழ் சினிமா குறித்த மதிப்பீட்டு கட்டுரை துவங்கும். இந்தக் கோமாளிகள் பேச்சை அவ்வாறே ஏற்று மொழிய துவங்கியது அடுத்து வந்த ஹைடெக் இளம் மனங்கள்.
நமதே ஆன கலாச்சார மேன்மைகள், சிக்கல்கள், நாம் சென்றடைந்த இன்மைகள், அனைத்தையும் ஏற்றும் மீறியும் உருவானதே நமது தமிழ் படங்கள். ( ஸ்டாலின் ராஜங்கம் எழுதிய, நீலம் பதிப்பக வெளியீடான எண்பதுகளின் தமிழ் சினிமா இந்த இழையை அணுகி அறிந்து கொள்ள முக்கியமான நூல்). இப்படி உருவான நமதே ஆன படங்களில் இந்த நூறு வருடத்தில் குறைந்தது நமது படம் என்று உலகம் முன்பு வைக்க, இருவர் ஹேராம், வெயில் உள்ளிட்ட 25 நல்ல படங்களேனும் நிச்சயம் நம் வசம் உண்டு. நிச்சயம் அவை நமது பெருமிதங்கள்.
நாம் போக வேண்டிய தூரம் அதிகம்தான் ஆனால் இந்தியாவுக்கு வெளியே பார்த்து நம்மை ஒப்பு நோக்கி நம்மை நாமே குறைத்து மதிப்பிட்டுக் கொள்வது பேதைமை. உலக அரங்கில் உயிர் தொழில் நுட்பம், குவாண்டம் இயற்பியல் என எதில்தான் நாம் ‘அவர்களை’ மிஞ்சி இருக்கிறோம்? முதலில் இங்கே ராமானுஜன் போதிய அளவு நம்மால் கொண்டாடப் பட்டிருந்தால் அந்த ஒளியில் அந்த பாதையில் இங்கே எவரேனும் நம்பி முன்வருவர். அதில் நூறில் ஒருவர்கு குவாண்டம் இயற்பியலில் சாதனை நிகழ்த்தும் திறப்பு ஒன்றை அளிக்க சாத்தியம் வாய்க்கும். நமது கலாச்சார யதார்த்தம் இவ்வாறு இருக்க ஏன் நமது கலாச்சாரத்தின் வெளிப்பாடுகளில் ஒன்றான தமிழ் சினிமா மேல் இத்தனை காழ்ப்புணர்ச்சி பொழிய வேண்டும்?
இதன் ஒரு பகுதியே தமிழில் மாற்று சினிமா எனும் களமும். ஜெயகாந்தன் முயற்சிகளை தவிர்த்துப் பார்த்தால் அப்படி நிகழ்ந்த ஒரு கை விரல்களுக்குள் அடங்கும் எண்ணிக்கை கொண்ட முயற்சிகள் தாண்டி, மாற்று சினிமா மரபு எனும் நிலையே தமிழில் இல்லை. அது இனி தான் துவங்கபட வேண்டும். நூற்றாண்டு தொட்டுவிட்ட சூழலில்த்தான் தமிழில் உலக சிறந்த கலை படங்கள் இயக்குனர்கள் எனும் பட்டியல் வெளியாகும் நிலையே வந்திருக்கிறது. இன்னும் போக வேண்டிய தூரம் மிக மிக நீண்டது. இந்தப் பின்புலத்தில்தான் செழியன் லீனா போன்றவர்களின் சுயாதீன முயர்ச்சி முக்கியத்துவம் கொள்கிறது.
இதில் நாம் மிக மிகத் துவக்க நிலையில் இருக்கிறோம். சுயாதீன மாற்று சினிமா என்றாலுமே கூட, அதற்கான திரையிடல் களம் கோரும் சூத்திரங்கள் பல உள்ளது. தமிழ் கேளிக்கை சினிமா வுக்கு என்னென்ன சூத்திரம் சார்ந்த கோரிக்கை உண்டோ அதற்கு சற்றும் குறையாது அது. தாத்தா பேரன் உறவு, தேசத்தால் மதத்தால் ஒடுங்கும் பெண்ணியம், அகதி வாழ்வு, மனித உரிமை மீறல், அரசியல் நெருக்கடி, சாதி, உடல் அரசியல், பாலியல் பேதம், உள்நாட்டு போர், பின்நவீனப் பாய்ச்சல், சமகால உளவியல் முக்கல், என ஒரு பத்துப் பதினைந்து சூத்திரங்களுக்குள் சிக்கி தள்ளாடிக் கொண்டிருப்பதே இன்றைய உலக அளவிலான மாற்று சினிமா, அந்த லேபில் அதுதான் உலக மாற்று சினிமாச் சரடின் வணிகக் கூறுகளை நிர்ணயிக்கும் முதல் காரணி.
தமிழில் இப்போதுதான் முளை விடும் சூழலில், பொதுஜன சினிமாவுக்கு எதிர் நிலையான மாற்று சினிமா, உலக மாற்று சினிமா ஒழுக்கில் நுழைய அது கோரும் சூத்திரங்களை அடி ஒற்றி தகவமைவது தவிர்க்க இயலாதது. இத்தகைய சூழல் பின்புலத்தில் தமிழில் நிகழும் எந்த சுயாதீன மாற்றுச் சினிமா முயற்சியும் முதலில் மாற்றுக் கருத்தே இன்றி நிச்சயம் அடையாளம் கண்டு வரவேற்கப்பட வேண்டும்.
இதன் அடுத்த படியே விமர்சன நோக்கு. முற்றிலும் கலாப்பூர்வமற்ற படமே எனினும் கூட, அப்படம் விரிவான விமர்சன உரையாடலுக்குப் பிறகே நிராகரிக்கப்பட வேண்டும். இந்த இரண்டு நிலையும் ‘அய்யா உலக கலை சினிமா விமர்சன மேதைகளே கொஞ்சம் பாத்து செய்யுங்கய்யா’ என்பதன் பகுதி அல்ல. சொந்த அரிப்புக்கான சொறிதல் கருவியாக அன்றி மெய்யாகவே கலைச்சினிமாவை தனது பாதையில் ஒன்றெனக் கண்டவர் இயல்பாக ஆற்றவேண்டிய பணி இது.
மாடத்தி மீது இந்த இரண்டு எல்லைகளில் இருந்தும் வெளியேறிநிற்கும் ஆக்கப்பூர்வ விமர்சனங்கள் இனிமேல் வரும் என்று நினைக்கிறேன். லீனா அவருக்கு வசதியான பெண்ணிய புளகாங்கித உரையாடல்களில் இருந்து வெளியேறி இப்படத்தின் கலாப்பூர்வ பெறுமதியை கத்தி வீச்சு போல முன்வைக்கும் விமர்சனங்களை நோக்கி நகர்வது, அவரது பாதையை செப்பணிட்டுக்கொள்ள உதவும். அவரது உண்மையும் தீவிரமுமே அவரை இங்கு வரை கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. அவரது படங்களை தொடர்ந்தவன் என்ற வகையில் இப்போதான் லீனா துவங்கவே செய்திருக்கிறார் என்று சொல்வேன். மாடத்தியில் துவங்கி கலை நோக்கி மென் மேலும் உயர லீனாவுக்கு வாழ்த்துக்கள்.
கடலூர் சீனு