அறிந்து முன்செல்பவர் வழிபடலாமா?

அன்புள்ள ஜெ,

சமீபத்தில் எனக்கு கோவிட் நோய் வந்த 5 ஆவது நாளில், என் மகனுக்கும் வந்து விட்டது. என் வரையில் நோய் என்று அறிந்த போது, ஒரு விதத்தில் சின்ன சந்தோஷம் தான் இருந்தது.. ஆகா 15 நாள் முழுவதுமாக வாசிப்பில் முழுகி விடலாம் என்று. ஆனால் மகனுக்கு நோய் என்று தெரிந்த உடன், ஒன்னும் செய்ய தோன்றவில்லை. வேண்டிக்கொண்டதை தவிர.

எனக்கு எப்போதும் கடவுள் நம்பிக்கை என்பது, சிறு வயதில் அப்பா அம்மா ஆரம்பித்த பழக்கத்தில் இருந்து உள்ளதே ஒழிய, முழு முற்றாக சிவன், முருகன், பெருமாள் என்று ஆழ்ந்த பக்தி, பூஜை, வேண்டுதல் என்று எல்லாம் செய்வதில்லை. இவை அனைத்தும் பிரம்மம் என்னும் ஒன்றின் குறியீடுகள் என்ற எண்ணம் உள்ளவன் ( இந்த தளத்தில் என் கருத்துகளை நான் அடைய பெரிதாக influence செய்த்தது நீங்கள் தான் என்றும் சொல்வேன்).

பகவத் கீதையில் பெரும் ஈர்ப்பு உண்டு. ஆனால் மகனுக்காக தினமும் கந்த சஷ்டி கவசம் கேட்பது, முருகனிடம் தினமும் வேண்டிக் கொள்வது என்று இதுவரை இல்லாத தீவிரத்துடன் செய்து கொண்டிருந்தேன். இது ஏன் என்று என்னையே கேட்டு கொள்கிறேன். இப்படி ஒரு இக்கட்டு இல்லாத போதும் இந்த மன நிலை இருப்பதை தான் ( கடவுள் நம்பிக்கையில்லோ, இல்லை வேறு கருத்துக்களிறளோ?) நீங்கள் சொல்வதாக புரிந்து கொள்கிறேன்.

இரண்டாவது உதாரணம் என் குமரத்துறைவி வாசிப்பு. முழு நேரமும் மீனாட்சி கல்யாணம் இரண்டு விக்கிரகங்கள் இக்கு  நடந்த விழா என்ற எண்ணம் வரவே இல்லை. மீனாட்சி அம்மன்னும், சுந்தரரும் தெய்வ பிறவிகளாக இருந்து மணம் முடிப்பதாகவும் அதை பார்த்து கொண்டிருப்பதாகவும் தான் மன நிலை இருந்தது. இன்றும் குமரத்துறைவி பற்றி நினைத்தால் அந்த எண்ணமே வருகிறது..

கேள்விகள் சரியானவையா, நான் சரியாக எழுதினேனா  என்று தெரியவில்லை.. தவறு இருப்பின் மன்னிக்கவும்.

அன்புடன்

வெண்ணி

***

அன்புள்ள வெண்ணி,

ஞானம்- பக்தி இரண்டுக்குமான முரண்பாடு என்பது எப்போதுமே பேசப்பட்டுக் கொண்டிருப்பது, தீராத வினா அது. எனென்றால் அதற்கு ஒவ்வொரு மெய்யியல் மரபும் ஒவ்வொரு விடை சொல்கிறது. நான் சொல்வது என் மரபின் பதில்.

ஞானம் எனப்படுவது ஒரு மெய்த்தரிசனத்தை தர்க்கபூர்வமாக அறிந்துகொள்ளல். கற்றுக்கொள்ளல், புரிந்துகொள்ளல், ஏற்றுக்கொள்ளல் என மூன்று படிகள் முதலில். பின்னர் அதைக் கொண்டு உலகை நோக்குதல்,  அதை ஊழ்கப்பொருளாக்குதல், அதுவென்றே ஆதன் என மூன்று நிலைகள்.

நாம் பிரம்மம் அல்லது மகாதர்மம் அல்லது பவசக்கரம் போன்ற பிரபஞ்ச விழுப்பொருள் பற்றி அறியும்போது முதல்படியில்தான் நிற்கிறோம். ஆழ்ந்து கற்றுக்கொள்வதும் ஐயமறப் புரிந்து தெளிந்து ஏற்றுக்கொள்வதும் அடுத்த படிநிலைகள். அடுத்த மூன்றுநிலைகளும் சாதனா எனப்படுகின்றன.  ‘ஆதற்பயிற்சி’ என அதைச் சொல்லலாம். அதைச்செய்வோர் சிலர் மட்டுமே. அதற்குரிய பயணம் நீண்டது.

ஒன்றை அறிந்துகொண்டதனாலேயே நாம் அதை கற்றுவிட்டோம், தெளிந்து ஏற்றுவிட்டோம் என பொருள் அல்ல. நாம் அதை அறிந்துகொள்ளத் தொடங்கிவிட்டோம் என்று மட்டும்தான் பொருள்.அது நம் ஆளுமையாக ஆகவில்லை.

அறிதலின் வழி ஒரு தனிச்சிறப்புப் பார்தை [விசேஷம்]. அது நம் ஆழ்ந்த அகவயத்தேடல் சார்ந்தது. நமக்கு மட்டுமே உரியது. நம் வாழ்க்கை முழுக்க மெல்ல அறிந்து, அமைந்து நாம் சென்றடைய வேண்டிய இலக்கு கொண்டது. நாம் கேள்விகள் கொண்டவர் என்பதனால், அறிந்து தெளிவதே நம் பாதையென நம் இயல்பு நமக்கு காட்டுவதனால், எளிய நம்பிக்கையும் சடங்குகளும் மட்டும் நமக்கு போதாது என நாம் உணர்வதனால் நாம் அறிவிவின் பாதையைக் கடைப்பிடிக்கிறோம்.

ஆனால் நாம் இங்குதான் வாழ்கிறோம். உலகியலில்தான் இருந்துகொண்டிருக்கிறோம். மெய்யறிதலின் பொருட்டு உலகியல் வாழ்க்கையை நாம் துறக்கவில்லை. ஆகவே இங்கே நமக்கு துன்பங்களும் பதற்றங்களும் உள்ளன. அவற்றுக்கு நம் அறிதல் உடனடியாக எந்த ஆறுதலையும் அளிப்பதில்லை. அதை ’அன்றாட’ தளம் எனலாம். [சாமானியம்] அங்கே நமக்கு தற்காலிகமாக பக்தியும் சடங்கும் உதவலாம். அவற்றை கைக்கொள்வதில் தவறில்லை.

அன்றாடத்தில் பக்தியோ சடங்கோ எவ்வகையிலும் அறிந்துசெல்லும் பாதைக்கு முரணானவை அல்ல. அறிந்து அமைந்தபின் அவை தேவையில்லாமலாகி அகன்றுசெல்லும் ஒரு நிலை இயல்பாக அமையலாம். அதுவரை அவை நமக்குத் தேவையாகவே உள்ளன.  அறிவதறிந்து அமைந்த ஞானியர் கூட இறைபக்திப் பாடல்களைப் பாடியிருக்கிறார்கள். ஆலயங்களை நிறுவியிருக்கிறார்கள். அது இதன்பொருட்டுத்தான்.

ஆகவே இதை முரண்பாடாகக் கொள்ளவேண்டியதில்லை. தூயஅறிவைச் சார்ந்து மட்டுமே அன்றாடத்தை நிகழ்த்துமளவுக்கு நாம் அறிவில் தெளிந்து அறிவென்றே ஆகிவிடவில்லை.

ஆனால் ஒரு ‘வெறும் பக்தர்’ நம்பிக்கை மட்டுமே கொண்டு இறைவழிபாடும் சடங்கும் செய்வதற்கும் நமக்கும் வேறுபாடுள்ளது. அது நம் இயல்பு, நாம் அதற்கு ஒன்றுமே செய்யமுடியாது. நாம் செய்வதை. நாம் எண்ணுவதை நாமே கவனித்துக்கொண்டிருக்கிறோம். அறிந்துகொண்டிருக்கிறோம். ஆகவே நம் அறிவுதேடலின் களங்களும் கருவிகளும்தான் இவையெல்லாம்.

இன்னொன்று உண்டு. கலையும் இலக்கியமும் நிறைக்கும் ஓர் இடம் நம்முள் உண்டு. அழகுணர்வு மற்றும் உணர்ச்சிகர தேவைகள். அவற்றை நிறைப்பவையே தெய்வங்களும் சடங்குகளும். பக்திமரபு அளிக்கும் இசை, தொன்மங்கள், கவிதை மற்றும்  கலைகள் இல்லையென்றால் நாம் மிகப்பெரிய வெற்றிடம் ஒன்றை அடைவோம்.

நாம் உணர்வுகளால் ஆனவர்கள். உணர்வுகளுக்கு கலையும் இலக்கியமும் இன்றியமையாதது. அவை எப்படி ஆழ்ந்த குறியீட்டுச் செயல்பாடுகளோ அதைப்போலவே சடங்குகளும். தெய்வங்களும்தான்.

அறிந்தமைந்த அத்வைதிக்கு அவை தேவையில்லை. அவர் இன்னும் பெரிய நிலையில் இருக்கிறார். ஆனால் நாம் உலகியலில் நின்றிருக்கிறோம். உலகியல் என்பது குடும்பம் அல்லது தொழில் மட்டும் அல்ல. மானுடவாழ்க்கை சார்ந்த எதுவும் உலகியலே. மானுடத் துயரும் மானுடக் களிப்பும் உலகியலே. அவற்றை முற்றாக உதறிக் கடக்காதவரை நாம் உலகியலிலேயே இருக்கிறோம். யோகசாதகர் கூட முற்றாக விடுபடும் வரை உலகியலிலும் இருக்கிறார்கள்.

ஆகவே ‘நான் ஞான மார்க்கி, எனக்கு எதற்கு பக்தியும் தெய்வமும்?’ என்ற கேள்வி தேவையில்லை. அது குறைவாக அறிந்தமையால் எழும் வெறும் ஆணவம் மட்டுமே. நாத்திகரின் தன்முனைப்புக்குச் சமானமானது அது. நாம் சாதாரண மானுடர். சாமானிய வாழ்வில் வேண்டுதலும் வழிபடுதலும் நமக்கு உரியவை. கூடவே நாம் அகத்தே அனைத்தையும் அறிந்து கடந்துகொண்டும் இருக்கலாம்.

ஜெ

***

முந்தைய கட்டுரைஞானி
அடுத்த கட்டுரைபொன்னியும் கோதையும்