பழமைச்சரிதம்

அன்புள்ள ஜெ.,

உங்களுடைய கேரள பண்பாட்டினைப் பின்னணியாகக் கொண்ட கதைகளை (உங்கள் கதைகளைச் சிறுகதைகள் என்று நினைத்துப் பார்க்கவும் முடியாத விராட உருவை அடைந்து நிற்கின்றன) படிக்கையில் என் மனதில்  படைக்கலன்களின் உலோக உரசல்களோடும், குதிரைக் குளம்படிகளோடும்

ஆரம்பமாகும் இந்தப்பாடல்தான் பின்னணியில் ஒலிக்கும். மலையாளப் பண்பாட்டின் குரல் வடிவமான ஜேசுதாஸ், பருந்தைப் போலத் தொடரும் வயலின் மற்றும் மிருதங்கத்தின் ஒலிகளோடு நம்மைப் பாட்டுக்குள் உறிஞ்சி எடுத்துக்கொண்டு விடுவார்.

அவர் சொல்லுகிற அந்தக் ‘கேரளப் பழம சரிதம்’ என்பது நீங்கள் காட்டுகிற சரித்திரத்திற்கெல்லாம் முந்தையதாக இருக்கும் என்று நினைக்கிறேன். எந்தாக்கும் அது? நீங்கள் சொல்லுகிற மலையாண்மை என்கிற மொழி குறித்தும் இதில் வருகிறது. ரவீந்திரன் மாஸ்டரின்  வசந்தகீதங்கள்(1984) என்கிற தொகுப்பில் உள்ளது இந்தப்பாடல்.

மாமாங்கம் பலகுறி கொண்டாடி….

அன்புடன்,

கிருஷ்ணன் சங்கரன்

அங்கம் என்றால் அரங்கம். அரங்கில் நடக்கும் போர் அங்கக்களி எனப்படுகிறது. அங்கத்தட்டு என்றால் விளையாட்டுப்போர் நடக்கும் மேடை. மாமாங்கம் என்றால் பெரிய விளையாட்டுப்போர். அது கேரளத்தின் பல ஆலயங்களில் நிகழ்வதுதான். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை.

கேரளத்தின் 56 அரசுகளும் சோழர்காலத்தில் உருவாக்கப்பட்ட நாடு என்னும் அமைப்பின் நீட்சிகள். அவர்கள் நடுவே போர் நிகழாமலிருக்க சோழர் காலம் முதல் உருவாக்கப்பட்டது பதிலிப்போர் என்னும் அமைப்பு. கோழிச்சண்டை போலத்தான். இங்கே மனிதர்கள் போரிடுவார்கள்.

இரு அரசர்கள் நடுவே நிலம், பெண், கௌரவங்கள் சார்ந்து பூசல் என்றால் பேசி முடிவுசெய்து ‘அங்கம் குறிக்கப்படும்’ [நாள், இடம்] போரில் இருதரப்பினரும் பயின்ற ஆட்களை கொண்டுவருவார்கள். இரு தரப்பிலும் இணையான எண்ணிக்கையில் வீரர்கள் போரிடுவார்கள்.  வெல்லும் தரப்பை மற்ற தரப்பு ஏற்றுக்கொண்டாகவேண்டும்,

இதற்கென தனிப்பயிற்சி பெற்ற வீரர்கள் உண்டு. அவர்கள் அங்கச்சேகவர் என்று அழைக்கப்படுவார்கள். குறுப்பு என தெற்கு கேரளத்தில். அவர்கள் குடும்ப பாரம்பரியமாக நிலைநிறுத்தப்படுவார்கள். மானியங்கள் உண்டு. மற்றநாட்களில் அவர்கள் போர்க்கலைப் பயிற்சி அளிப்பார்கள். அது களரி எனப்படும். அங்கக் களரி என்பது போட்டிப்போருக்கான தனிப்பயிற்சி.

மாமாங்கங்களில் தலையாயது நிளா அல்லது பாரதப்புழா ஆற்றின் கரையில் திருநாவாய என்னும் இடத்தில் நடந்து வரும் மாமாங்கம். இது ஒரு திருவிழா. மகர மாதம் [மார்கழி] மகம் நட்சத்திரத்தில் நிறைவுபெறும்படி 28 நாட்கள் நடைபெறும். ஆகவே இதற்கு மகாமகம் என்றும் பெயர் உண்டு. இது உண்மையில் கும்பமேளா போல ஒரு பெருவிழா. சௌர மதத்தில் வேர்கள் கொண்டது.சரித்திர காலம் முதல் நடந்துவருவது. கிபி 800 முதல் இது நடந்துவந்தமைக்கான சான்றுகள் உள்ளன

திருநாவாய மாமாங்கத்தின் காவலனாக அமர்பவரே பழைய சேரன் செங்குட்டுவனின் வழித்தோன்றலென கருதப்படுவார். அதற்கு கோழிக்கோடு சாமூதிரி அரசர், கொச்சி அரசர், கொடுங்கல்லூர் அரசர் ஆகியோர் போட்டியிடுவார்கள். அதை முடிவுசெய்ய ஒவ்வொரு மாமாங்கத்தின்போதும் ஒரு போட்டிப்போர் [அங்கம்] நிகழும். வெல்பவர் செங்கோலேந்தி அமர்வார். அடுத்த 12 ஆண்டுகள் அவருடைய சடங்குகளுக்கு அவரே சேரமான் பெருமாள் என்னும் தகுதி கொண்டவர்

இந்த அதிகாரத்துக்காக ஆயிரமாண்டுகள் போர் நடந்துள்ளது. கோழிக்கோடு சாமூதிரி கடல்வணிகம் வழியாக செல்வம் ஈட்டி அதிகாரம் கொண்டவராக ஆனபோது முந்நூறாண்டுகள் மாமாங்கத்தில் அரசனாக செங்கோலேந்தி அமர்ந்தார். அதற்கு எதிராக கொச்சி நாடு போராடிக்கொண்டே இருந்தது. 12 ஆண்டுகள் பயிற்சி எடுப்பார்கள், மாமாங்கத்தில் போரிடுவார்கள். ஆனால் வெல்லமுடியவில்லை.

இறுதியாக மாமாங்கம் நடந்தது 1756ல் என ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். மைசூர் சுல்தான் ஹைதர் அலி கோழிக்கோட்டை கைப்பற்றி சாமூதிரியை சிறைப்பிடித்தமையால் அவர் தன் அரச அதிகாரத்தை கைவிட்டார். ஹைதர் அலியின் படையெடுப்பை அஞ்சி கொச்சி அரசரும் அமைதிகாத்தார். அதன்பின் கோழிக்கோடு திப்புசுல்தானால் தாக்கப்பட்டது. திப்பு சுல்தான் பிரிட்டிஷாரால் வெல்லப்பட்டபோது கோழிக்கோடு சென்னை ராஜதானியாகியது.

2010ல் மாமாங்கத்தை கேரளச் சுற்றுலாத்துறை மீட்டமைக்க முயன்றது. ஆனால் போதிய நிதி இல்லாமல் அது சிறப்பாக நிகழவில்லை.

நான் எழுதியிருக்கும் கேரளச் சரித்திரக் கதைகள் முழுக்க முழுக்க திருவிதாங்கூர் சார்ந்தவை. அவற்றுக்கும் மாமாங்கத்திற்கும் சம்பந்தமே இல்லை. அங்குள்ள அங்கக்களரி என்னும் பதிலிப்போர் முறையே இங்கே கிடையாது. திருவிதாங்கூர் மன்னர் மாமாங்கத்தில் பங்கெடுப்பதுமில்லை.

நான் எழுதும் திருவிதாங்கூர் வரலாற்றுக் கதைகள் 1700 களில்தான் தொடங்குகின்றன. ஓரளவு தெளிவான வரலாறு 1730 களில் மார்த்தாண்ட வர்மா திருவிதாங்கூரை ஆட்சி செய்ய தொடங்கிய பின்னரே கிடைக்கிறது. நான் எழுதிய கதைகளில் ஆயிரம் ஊற்றுக்கள் மார்த்தாண்ட வர்மா ஆட்சிக்கு சற்று முன் உமையம்மை ராணியின் காலத்தில் [1677-1684] நிகழ்கிறது. பிற எல்லா கதைகளும் அவருக்கு பின், பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில்தான்.

ஆனால் குமரித்துறைவி 1377-78 ல் நிகழ்கிறது. அக்காலத்தைய திருவிதாங்கூர் வரலாறு தெளிவற்றது. ஆட்சியாளர்களின் பெயர்களும் உதிரிச் செய்திகளும் மட்டுமே கிடைக்கின்றன.

ஜெ

குமரித்துறைவி வான் நெசவு இரு கலைஞர்கள்
பொலிவதும் கலைவதும் தங்கப்புத்தகம் ஆனையில்லா
முதுநாவல் ஐந்து நெருப்பு மலைபூத்தபோது
தேவி எழுகதிர் அந்த முகில் இந்த முகில்

முந்தைய கட்டுரைஒரு கனவு நிலம் தேவை…
அடுத்த கட்டுரைபுதிய எழுத்தாளர்களுக்கு– கடிதங்கள்