விகடன் பேட்டி- கடிதங்கள்

அன்புள்ள ஜெ

விகடன் பேட்டியின் இரண்டாம் பாகமும் பார்த்துவிட்டேன். சுருக்கமான உரையாடல். நீங்கள் உற்சாகமாகவும் கூர்மையாகவும் பதிலளித்தீர்கள். உங்கள் கதைகளையும் கட்டுரைகளையும் இணையத்தில் வாசிப்பவர்களுக்கு அதில் புதியவை என சில கோணங்களையும், சில புதிய அவதானிப்புகளையும்தான் சொல்லமுடியும். ஆனால் புதிய வாசகர்களுக்கு நல்ல அறிமுகமாக அமையும் என நினைக்கிறேன். சற்று சீண்டிப்பேசவைக்கும் கேள்விகளும் ஆழமான கேள்விகளும் கலந்தே இருந்தன.

நாகராஜன்

அன்புள்ள ஜெ,

விகடன் பேட்டியின் இருபகுதிகளும் சிறப்பானவை. என் அலுவலகத்தில் இதுவரை உங்களைப் பற்றி பெரிதாகக் கேள்விப்படாதவர்கள் பலர் பார்த்தனர். அவர்களில் ஆசாரமான பார்வையும், மத விஷயமெல்லாம் கொஞ்சம் தெரியும் என்னும் நம்பிக்கையும் கொண்ட [ஆனால் வாட்ஸப்பை தாண்டி வாசிக்காத] சிலருக்கு பேட்டி சீண்டலாக அமைந்தது. அவர்களுக்கு ஓர் எழுத்தாளன் இத்தனை நிமிர்வுடன் இருப்பது ஆச்சரியம். எழுத்தாளன் பணிந்து மென்மையாகப்பேசவேண்டும் என நினைப்பவர்கள். மதவிஷயங்களில் ஒன்றும் தெரியாதவனாகவும் ஆசாரவாதிகளுக்கு அடங்கியவனாகவும் பேசவேண்டும் என நினைப்பவர்கள். அவர்களுக்கு ஒரு எரிச்சல். கொஞ்சம் பதற்றம். அதேபோல பெரிதாக படிக்காதவர்களுக்கு இதென்ன என்னென்னவோ சொல்கிறார் என்று குழப்பம். அவர்களில் எவரும் படிக்கப்போவதில்லை. ஆனால் இளைஞர்கள் சிலர் இதன்வழியாக வாசிப்புக்கு வந்தால் மிக நல்லது

ஜெயராஜ்

***

முந்தைய கட்டுரைமலைபூத்தபோது
அடுத்த கட்டுரைஇலக்கியம், இடதுசாரிகள், தலித்தியர்