ஓர் எழுத்தாளர் மறைந்து நீண்ட நாட்களுக்குப்பின் அவரை இன்னொரு விமர்சகர் முன்னிறுத்துவதில் ஆழமான ஒன்று உண்டு, அது எழுத்தின் அழிவின்மைக்கான சான்று. தனக்கான வாசகர்களை, வழிவந்த எழுத்தாளர்களை இலக்கியம் கண்டுகொள்ளும் என்பதற்கான உதாரணம். அவ்வகையில் சு.வேணுகோபால் எழுதியிருக்கும் இந்த நேர்மையும் ஆழமும் கொண்ட குறிப்பு மிக முக்கியமானது.
நான் ஆர்.சூடாமணி அவர்களின் பெரும்பாலான ஆக்கங்களை வாசித்திருக்கிறேன். இளவயதில் அவருக்கு வாசகர் கடிதம் எழுதியிருக்கிறேன். அவருடைய நாவல் பற்றி ஒரு குறிப்பும் எழுதியிருக்கிறேன். ஆனால் பின்னர் என் இலக்கிய வாசிப்பில் அவர் மிகவும் பின்தங்கிச் சென்றார். அவரைப்பற்றிய மதிப்பீட்டை நவீனத்தமிழிலக்கிய அறிமுகம் நூலில் எழுதியிருக்கிறேன். அவர் மறைந்தபோது ஓர் அஞ்சலிக்குறிப்பாகவும் எழுதியிருக்கிறேன்.
சூடாமணியை தமிழ்ச்சிறுகதையாளர்களின் பட்டியலில் எப்போதும் சேர்த்துவருகிறேன். ஆனால் அவர் ஓரு முதன்மையான சிறுகதையாசிரியர் என்னும் சு.வேணுகோபாலின் கருத்துக்களுடன் என்னால் உடன்பட முடியவில்லை.ஆனால் ஒரு விவாதத்தை தொடங்கிவைக்கும் இந்தக் கட்டுரை முக்கியமானது என நினைக்கிறேன்.