மழைக்கண்.
துடி.
இனிய ஜெயம்
பொதுவாக வார இறுதிகளில் கடலூர் நற்றிணை கூடல் நண்பர்கள், அவர்கள் வாசித்த சில கதைகளை பகிர, தொலைபேசியில் அக்கதைகள் மேல் கலந்துரையாடல் நிகழும். இந்த வாரம் வந்த கதைகளில் நண்பர் இதயதுல்லா பகிர்ந்த இரண்டு அழகிய கதைகள் உரையாடல் முதன்மை பெற்றன.
முதல் கதை மழைக்கண்.
எழுதியவர் செந்தில் ஜகன்நாதன்.
இவரை நான் அறிந்ததில்லை. புது வரவு எனில் வாழ்த்துக்கள். அதுல ஒரு அரசியல் இருக்குதுங்க, பின்நவீன பாய்ச்சல், வகையறா புதைகுழியில் துவங்காமல், நேரடியாக கண்முன் உள்ள வாழ்விலும், அது என்ன என்பதன் மீதான விசாரணையிலும் சரியாக துவங்கி இருக்கிறார்.சரியான துவக்கம் வெற்றிக்கு முதல் நிபந்தனை என்பது முன்னோர் சொல். மிஸ்டிக்கான கதை. தன்னை அழிக்க வந்த ஒன்றை, தானே நட்டு தண்ணீர் ஊற்றி வளர்த்து எடுக்கும் விசித்திர விதியை நோக்கி திறக்கும் கதை. நம்பகமாக சொல்லப்பட்ட வாழ்வும் வீழ்ச்சியும் கொஞ்சம் பிசகி இருந்தால் சென்டிமென்ட் கதையாக மாறி இருக்கும் அபாயத்தை தனது எழுத்தாற்றல் கொண்டு கடந்திருக்கிறார் ஆசிரியர்.
அதே சமயம் sub text மீது ஆசிரியரின் மிகுபோதம் ஒரு மெல்லிய படலமாக கதை நெடுக பரவி நிற்கிறது. சொல்லப்பட்ட வாழ்வு வழியே சொல்லப்படாத வாழ்வு ஒன்றையும் ‘சொல்லிவிட’ வேண்டும் என்ற போதம் அது. தலைப்பு எனக்கு அசோக வன சீதையை நினைவூட்டியது. தலைப்பு கம்பனின் சொல் என்றே நினைக்கிறேன். கதையின் சாரம் எதுவோ அதற்கு மிக விலகி நிற்கும் பாரமான தலைப்பு. மற்றபடி குறிப்பிட்டத் தக்க நல்ல கதை ஜகன் அவர்கள் வசம் மேலதிகமாக எதிர்பார்க்கலாம்.
இரண்டாவது கதை, துடி.
எழுதியவர் பா.திருச்செந்தாழை. ஐயமின்றி சொல்லிவிடலாம். Master touch. வைல்டு எனும் நிலை டொமெஸ்டிகேட் எனும் நிலைக்கு நகரும் ஆர்க் மீது நிகழும் கதை. காட்டிருந்து இறங்கி வந்து வீடடங்கும் மிருகம். இன்னும் மிருக பண்பு மாறாத மனித நிலை தேராத ஒருவனின் நிலை மாற்றத்துக்கான தவிப்பு. புறச் சித்தரிப்பு× அகச் சித்தரிப்பு, உணர்வுதளம்× அறிவு தளம், கற்பனை×தர்க்கம், ஆர்ட்× கிராஃப்ட் என, எல்லா எதிர் நிலைகளும் தண்டவாளம் போல சமன் கண்டு, அதில் பயணித்து உள்ளுணர்வை தொடும் கதை.
ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி நிலை நிறுத்த, நாவல் எனும் களம் வழங்கும் வசதி எதுவும் சிறுகதை வழங்குவதில்லை. அந்த எல்லையை சவால் எனக் கொண்டு சிறு கதைக்குள் நாவல்அளிக்கும் அதே தாக்கத்தில் கதாபாத்திர உருவாக்கம் நிகழ்ந்திருக்கிறது. ஜனதா வாத்தியாரின் சொல் மிகையோ குறைவோ இன்றி கச்சிதமும் உன்னதமும் கொண்டு கதையின் தளத்தையே உயர்த்தி விடுகிறது. இறுதியில் இன்னாசி இரவின் இருளுக்குள் சைக்கிளை மிதிக்கும் சித்திரம் வருகையில் இவன் லௌகீகத்தில் நிச்சயம் ஜெயிப்பான் என்று தோன்றியது. அழகிய கதை வாசித்து முடித்ததும் கதைக்கு முன்னும் பின்னும் என வாசகன் மனதுக்குள் ஒரு நாவலே எழ சாத்தியத்தை உள்ளடக்கிய கதை.
கடலூர் சீனு