காந்தி அரசியல்படுத்தியவர்கள்- கடிதம்

காந்தி அரசியல்படுத்திய மக்கள் எங்கே?

சதீஷ் அவர்களின் கடிதம் கண்டேன். அதற்கான உங்கள் மறுமொழி தெளிவாகவும், நேர்மறையாகவும் இருந்தது. வரலாற்றுப் பார்வையில் எங்கே முன்னகர்ந்து வந்திருக்கிறோம் என்பதையும், காந்தியையும், உங்கள் அளவுக்கு, சமகாலத்தில், தமிழ்ப் பொது வெளியில் யாரும் பேசியதில்லை. நன்றி.

நாம் ஒரு விஷயத்தை  ஒட்டு மொத்தப் பார்வையில் பார்க்கையில்,  ஒரு எதிர்மறை மனநிலை எப்படியோ நம்மைச் சூழ்ந்து கொள்கிறது. எப்படியோ வந்து விடுகிறது. இது ஏன் என ஆராயப்பட வேண்டும்.

அவர் கமலஹாஸனைச் சொல்லியிருக்கிறார் என நினைக்கிறேன். அவர் தோல்வியடைந்தது வருத்தமே.அரசியல் என்பது, தேர்தலில் வெற்றி பெற்று, கோட்டையில் அமர்ந்து முதல் நாள் முதல் கையெழுத்துப் போடுவது என்பது மட்டுமல்ல.. அது ஒரு குறுகிய வரையறை.

தகவலறியும் சட்டம் கொண்டு வர உழைத்த அருணா ராய் (அவர் தந்தை ஒரு காந்தியர். அருணா ஆசஃப் அலியின் நினைவாக அவருக்கு அருணா எனப் பெயர் வைத்தார்), தொடக்கத்தில் தன் கணவர் பங்கர் ராயுடன், வெறும்பாதக் கல்லூரியில் பணிபுரிந்து வந்தார். அது ஊரக மக்களுக்கான பொருளாதாரத் தற்சார்பை அடைய மக்களுக்கான பயிற்சிகளையும், திட்டங்களையும் உருவாக்கும் ஒரு நிறுவனம்.

ஆனால், அருணாவுக்கு, ஜெயப்பரகாஷ் நாராயண் ஆதர்சம். மக்களை அரசியல் படுத்தி, மக்களிடம் அதிகாரத்தைக் கைமாற்ற வேண்டும் என்பது அவர் கனவு.  எனவே, இரண்டு நண்பர்களோடு, ஒரு தனிப் பயணத்தைத் தொடங்குகிறார். 18 ஆண்டு களப் பணியின் விளைவாக, அது தகவலறியும் சட்டத்துக்கான ஒரு இயக்கத்தை முன்னெடுக்கிறார்.

அதன் விளைவாக, ஒரு ஒன்றிய அரசின் தேசிய ஆலோசனைக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்படுகிறார். அங்கே அவரைப் போலவே இன்னொருவரும் வருகிறார். தகவலறியும் சட்டம், உணவுப்பாதுகாப்புச் சட்டம்,  ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் என்னும் மிக முக்கியமான மக்கள் நலச் சட்டங்கள் நிறைவேறுகின்றன.  இவை மூன்றும் சுதந்திர இந்தியாவில், வறுமை மீது மிக நேரடியான தாக்கத்தை ஏற்படுத்திய அரசுத் திட்டங்கள். ஒரு பத்தாண்டில், 23 கோடிப் பேர் வறுமையில் இருந்து மேல் எழுந்து வருகின்றனர்.

(பஸ்மாசுரன் தன் தலையில் கைவைத்து மாண்ட புராணக் கதை போல, தான் கொண்டு வந்த தகவலறியும் சட்டம் வழியே வெளிவந்த ஊழல் புகார்களில், அரசியல் அதிகாரத்தை அந்தக் கட்சி இழந்தது ஒரு நகைமுரண்).

இந்தியச் சமூக வெளியில் எவ்வளவு பெரும் அரசியல் விளையாட்டை, தேவ்துங்ரி என்னும் சிறு கிராமத்தில், குறைந்த பட்சக் கூலியை ஊதியமாகப் பெற்றுக் கொண்டு வெற்றிகரமாக நிகழ்த்தியிருக்கிறார் அருணா ராய் என நினைக்கையில் அதிசயமாகத் தோன்றலாம்.. ஆனால், அதன் பின்னால் காந்தி இருக்கிறார் என அறிந்து கொள்கையில், அப்படித் தோன்றாது.

குத்தப்பாக்கம் இளங்கோ

இந்திய அரசியலில் பெரிதும் அறியப்படாத இரண்டு அரசியல் தலைவர்கள் உள்ளனர். ஒருவர் குத்தம்பாக்கம் இளங்கோ. இன்னொருவர் ஓடந்துறை சண்முகம். குத்தம்பாக்கம் இளங்கோ, காரைக்குடி மின்வேதியல் கல்லூரியில் படித்து, அரசுப் பணியில் இருந்தவர். அவர், குன்றக்குடி அடிகளாரால் ஈர்க்கப்படுகிறார். நாமும் சமூகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைக்கிறார்.

1992 ஆம் ஆண்டு, இந்திய அரசியல் சாசனத்தின் 73 ஆவது மாற்றமாக, பஞ்சாயத்து ராஜ் சட்டம் நிறைவேற்றப்படுகிறது. குத்தம் பாக்கம் இளங்கோ தன் வேலையை விட்டுவிட்டு, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு, குத்தம்பாக்கம் கிராமப்பஞ்சாயத்துத் தலைவராகிறார்.

தன் அதிகாரத்தையும், தொடர்புகளையும் பயன்படுத்தி, உள்ளூரில் வேலைவாய்ப்புகளை உருவாக்கி, அங்கே பெரும் பிரச்சினையாக இருந்த கள்ளச்சாராயத்தை ஒழிக்கிறார். இலவச அரசு வீடு கட்டும் திட்டத்தில், ஒரு புதுமையைப் புகுத்துகிறார். அதாவது, எல்லாச் சாதியினரும் ஒரே குடியிருப்பில் வசிக்குமாறு. தமிழகத்தின் முதல் சமத்துவபுரம் உருவாகிறது. பின்னர் அது மாநிலமெங்கும் திட்டமாக மாறுகிறது.

ஓடந்துறை சண்முகம்

ஓடந்துறை சண்முகம் அதிமுக கட்சியைச் சார்ந்தவர். கோவை மாவட்டத்தில் உள்ள ஓடந்துறை என்னும் ஊரைச் சார்ந்தவர். 12 கிராமங்கள் அடங்கிய ஓடந்துறைப் பஞ்சாயத்தில், கிட்டத்தட்ட 10 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். ஊர்களில் குடிநீர் வசதி கிடையாது. பல கிலோமீட்டர்கள் நடந்து போய் நீர் கொண்டு வர வேண்டும்.  1999 ஆம் ஆண்டு, தேசியக் குடிநீர் இயக்கம் என்னும் ஒரு திட்டம் வருகிறது. குடிநீர்த்திட்டத்தில் 10% பணத்தை மக்கள் ஏற்றுக் கொண்டால், அரசு 90%த்தை மானியமாகத் தரும் என்னும் திட்டம். ஏன் மக்கள் 10% தர வேண்டும்? அப்போதுதான், அந்த திட்டத்தின் மீது மக்களின் stake holding உயிர்ப்போடு இருக்கும் என்பதுதான் காரணம். பவானி ஆற்றிலிருந்து, 48 லட்சம் செலவில், மக்களின் நிதிப்பங்களிப்போடு, 12 கிராமங்களுக்கும், தூய்மையான குடிநீர் வீடுகளைச் சென்றடைகிறது. அடுத்த முன்னெடுப்பாக, பஞ்சாயத்து நிதியுடன், வங்கிக் கடனும் பெற்று,  காற்றாலை மின் உற்பத்தியில் முதலீடு செய்கிறார். அதில் வருடம் 19 லட்சம் வருமானம் வருகிறது.

இந்தியாவின் பெருமிதங்கள் இந்தத் தலைவர்கள்.  ’தமிழகத்தில் கிட்டத்தட்ட ஆயிரம் நேர்மையான பஞ்சாயத்துத் தலைவர்கள் இருக்கிறார்கள்.. அவர்களை இணைத்து, ஒரு இயக்கமாக முன்னெடுத்து வருகிறோம்’, என்கிறார் குத்தம் பாக்கம் இளங்கோ.. தமிழகத்தில் மொத்தம் 12000 கிராமப் பஞ்சாயத்துகள் உள்ளன.  8% நேர்மை நல்ல விஷயம்தான்.

வாக்களிப்பு ஜனநாயகத்தோடு நின்றுவிடும் நாம், நாம் தேர்ந்தெடுப்பவர்கள் நமக்கான கனவு தேசத்தை உருவாக்குவார்கள் என எதிர்பார்க்க முடியாது. ஒரே ஒரு தலைவரில், தேர்தலில், சமூகம் மாறிவிடாது.. அது மெல்ல மெல்லத்தான் மாறும். அதுதான் வாக்களிப்பு ஜனநாயகச் செயல்திறனின் எல்லை.

அந்த மாற்றத்தை வேகமாக்க வேண்டுமெனில், நாமும் பங்கு பெற்று, நாட்டை பங்கேற்பு ஜனநாயகமாகவும், பங்களிப்பு ஜனநாயகமாகவும் மாற்ற வேண்டும். இதுதான் அருணா ராய்களும், குத்தம்பாக்கம் இளங்கோக்களும், ஓடந்துறை சண்முகங்களும் நமக்குச் சொல்லும் சேதி.

அன்புடன்

பாலசுப்ரமணியம் முத்துசாமி

முந்தைய கட்டுரைகி.ரா, கஞ்சிக்கிழங்கு- லோகமாதேவி
அடுத்த கட்டுரைஉரைகள்,கடிதங்கள்