கடவுள்,தொன்மம்- கடிதம்

கடவுள்,தொன்மம்,சில வினாக்கள்

வணக்கத்திற்கும் பேரன்பிற்கும் உரிய ஜெயமோகன்,

இன்று தளத்தில் கடவுள், தொன்மம், சில வினாக்கள் குறித்து நீங்கள் எழுதியிருந்த பதிவு மிகவும் முக்கியமான ஒன்று. ஆழ்ந்த புரிதலோடும் அனுபவம் நிறைந்த தெளிவோடும் சமூகத்தின் மீதான கருணையோடும் எழுதப்பட்ட ஒரு அருமையான விளக்கம்.

இங்கே திருவண்ணாமலையில் எத்தனையோ இல்லற பொறுப்பும் குடும்பக் கடமைகளும் நிறைந்த பலர் செயலின்மை என்னும் மதுவுக்குள் சிக்கி சீரழிவதை கடந்த பல ஆண்டுகளாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். செயல் இன்மையை விட்டொழித்து முயன்று தன்னால் இயற்றப்பட முடிந்தவற்றை இயற்றப்பட வேண்டியவற்றை இயற்றாமல் குடும்பக் கடமைகளை சரியாக நிறைவேற்ற முடியாத குற்ற உணர்விலும் சிக்கித் தவிக்கின்றார்கள். ரமணரின் உபதேசங்களை சரியாகப் புரிந்து கொள்ளாமல் செய்துகொண்டிருந்த வேலையையும் தொழிலையும் விட்டுவிட்டு ஏதோ கொஞ்சநஞ்சம் இருக்கின்ற சேமிப்பை நம்பி குடும்பத்தோடு இங்கே வந்து சாதனை செய்து முக்தி அடைய வேண்டும் என்ற நம்பிக்கையில் அடிப்படைக் கடமைகளை கூட செய்யமுடியாத ஒருவித சோம்பல் நிலையில் விழுந்து விடுகிறார்கள்.

அளவுக்கு அதிகமான பொருளாதார பலமும் சொத்துக்களும் இருப்பவர்களுக்கு செயலின்மை அத்தனை பெரிய சுமையாக இருப்பதில்லை ஆனால் அடிப்படைத் தேவைகளை கூட நிவர்த்தி செய்து கொள்ள முடியாதவர்களுக்கு செயலின்மை பெரும் துயரத்தை அளிப்பதையே பார்த்துக் கொண்டிருக்கின்றேன். ஒரு காலத்தில் வலிமையான பொருளாதாரத்தோடு இருந்து ஒரு முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாக தொழிலையும் வியாபாரத்தையும் விட்டுவிட்டு ஆன்மிக சாதனையின் பெயரால் திருவண்ணாமலைக்கு குடும்பத்தோடு வந்து விட்டவர்கள் இன்றைய நெருக்கடி பொருளாதார சூழ்நிலையில் வாழ முடியாமல் குற்ற உணர்வில் தவிப்பதையும் பார்த்து கொண்டுதான் இருக்கின்றேன். அனைத்தையும் விட்டு துறவு நிலையில் இருந்து செய்ய வேண்டிய ஒரு சாதனை முறையை இல்லறத்தில் இருந்துகொண்டே செயலின்மை பயின்று இல்லற பொறுப்புக்களையும் கடமைகளையும் சரிவர ஆற்றாததனால் விளைகின்ற துயர் இது.

இதன் எதிர்முகமாக எத்தனையோ துறவிகள் அனைத்தையும் விட்டு வேதாந்த சிரவண மனனங்களை முடித்து தீவிரமாக நிதித்யாசனம் செய்ய வேண்டிய காலகட்டத்தில் அதிதீவிர லோகாதாய (உலக மற்றும் சமூக நன்மை) செயல்பாடுகளில் இறங்கி வெளி முகப்பட்டு தாம் எதன் பொருட்டு துறவு மேற்கொண்டோமோ அந்த இலக்கையும் மறந்து செயல்களில் சிக்கி சிக்குண்டு தம் வாழ்வின் அந்திம காலத்தில் கதறி அழுது நிறைவின்மையோடு உயிர் நீப்பதையும் இங்கே பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றேன்.

நீங்கள் உங்களுடைய கட்டுரையில் மிகத்தளிவாகஇவற்றின் வரையறைகளையும் விளக்கங்களையும் முன் வைத்திருக்கிறீர்கள். தனக்கான பாதையை சரியாக தேராததனால் வருகின்ற குழப்பங்களே இவைகள். பூரண ஞானமும் முக்தியும் மட்டுமே தனக்கான தலையாய குறிக்கோள் என்று உண்மையில் தனது உள்ளத்து ஆழத்தில் உணர்கின்ற ஒருவர் துறவு பாதையை தேர்ந்து சிந்தையை அடக்கி சும்மா இருந்து செயலின்மையில் திளைத்தல் மிகச் சரியானதே. அதையே மொட்ச சன்யாச யோகத்தில் கிருஷ்ணனும், “சும்மா இரு” என தனது உபதேசமாக ரமணரும் முன்வைக்கிறார்கள்.

பூரண ஞானத்தையும் முக்தியையும் தவிர பிற ஏதோ ஒன்றை அல்லது பலவற்றை தனக்கான தலையாய இலக்காக உள்ளத்தில் உணர்பவர்கள் அந்தப் பாதையில் முயன்று தன்னால் இயன்றவரை அதிதீவிரமாக செயலாற்றுவதே நல்லது. செயலாற்றல் ஒன்றே அவர்களுக்கான யோகம். காலப்போக்கில் அந்த செயல் யோகமே அவர்களை தூய்மைப்படுத்தி சித்த சுத்தி அளித்து மெல்ல மெல்ல பூரண ஞானம் மற்றும் முக்திக்கான பாதையை நோக்கி செலுத்தும். அதுவரையில் அவர்கள் “செயல் செயல் செயல்” என்றே தமது இலக்கை நோக்கி தீவிரமாக முயல்வதே நன்று.

துறவுப்பாதையில் இருப்பவர்களே என்றாலும் கூட அவர்களுக்கு வாசனைகள் அகத்தில் எஞ்சி இருக்கின்ற நிலையில் செயலின்மை என்பது சாத்தியமாவதில்லை. அதனாலேயே நன்கு உணர்ந்த ஞான குருமார்கள் சிரவண மனன காலத்தில் அத்தகைய இன்னும் பக்குவப்படாத துறவிகளை உபாசனை மற்றும் கர்ம யோகத்தில் ஆழ்த்தி தீவிரமாக செயலாற்ற வைத்து அவர்கள் பக்குவப்பட்ட பிறகே நிர்விகல்ப சமாதியை இலக்காகக் கொண்ட செயலின்மை யோகத்தை பரிந்துரைக்கின்றார்கள். சில நாட்களுக்கு முன்பான ஒரு கடிதத்தில் மிக அழகாக இதை நீங்கள் வார்த்தைகளில் தெளிவுபடுத்தி இருந்தீர்கள். சொல்லின் தெய்வம் உங்களோடு இருக்கிறது அதனாலேயே நமது மெய்ஞான பொக்கிஷத்தை உங்களால் மிக அழகாக தமிழில் வார்த்தைகளாக வடித்து எடுக்க முடிகிறது.

நீங்கள் மேலும் மேலும் மெய்யியல் குறித்த பல கட்டுரைகளை எழுத வேண்டும். உங்கள் தனித்துவமான, உள்ளம் கொள்ளை கொள்ளும், எழுத்து நடைக்கே உரித்தான சக்தியும், நமது மெய்யியலின் ஆழ்ந்த உண்மைகளும் இணைந்த பிரவாகம் எத்தனையோ குழம்பித் தவிக்கின்ற அன்பர்களுக்கு தெளிவை அளித்து அவர்களின் தேடுதல் தாகத்தை தீர்த்துவைக்கும். அவர்கள் தங்களின் சரியான வாழ்க்கைப் பாதையை தேர்ந்து எடுப்பதில் அவர்களுக்கு பேருதவி புரியும்.

மிக்க அன்புடன்,

ஆனந்த் சுவாமி

திருவண்ணாமலை

முந்தைய கட்டுரைஅறஞ்செயவிரும்பு- கடிதம்
அடுத்த கட்டுரைவேதாந்தமும் இறைவழிபாடும்