அரவிந்த் கண் மருத்துவக் குழுமம் – ஒரு கடிதம்

காந்தியத் தொழில்முறை: அர்விந்த் கண் மருத்துவக் குழுமம்- பாலா

அன்பின் ஜெ,

நலம்தானே?

சென்ற வருடம் 2019 மே-யில் என்று நினைக்கிறேன். தளத்தில் பாலா எழுதிய காந்தியத் தொழில்முறை சார்ந்த அரவிந்த் கண் மருத்துவக் குழுமம் பற்றிய கட்டுரை வந்திருந்தது. அந்தக் கட்டுரையில் அரவிந்தின் வழிமறைகளாக பாலா குறிப்பிட்டவற்றுள் முதலிரண்டு கூறுகள்…

அருகில் உள்ள கிராமங்களில் இருந்து 10 ஆம் வகுப்பு வரை படித்த பெண்கள், பணியிலமர்த்தப்பட்டார்கள். அவர்களுக்கு, கண் சிகிச்சை முறைகளுக்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இதனால் இரண்டு முக்கிய நன்மைகள் விளைந்தன. உள்ளூரில் படித்து வேலையில்லாமல் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு வேலை கிடைத்தது. அர்விந்த் மருத்துவமனைக்கு, குறைந்த சம்பளத்தில் ஊழியர்கள் கிடைத்தனர்.

அவர்கள் ஒவ்வொருவருக்கும், தனித்துவமான வேலைகளில் பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்களின் செயல்திறன் மேம்படுத்தப்பட்டது.நள்ளிரவு பனிரெண்டு மணிக்கு மேல் கட்டுரையை படித்து முடித்தபின், இவ்வரிகள் மட்டும் என் நினைவுகளை பால்யத்திற்கு கிராமத்திற்கு கூட்டிச் சென்றன.

நான் எங்கள் கிராமமான ஓடைப்பட்டியில் ஊராட்சி ஒன்றியதுவக்கப் பள்ளியில்ஐந்தாவது படித்துக் கொண்டிருந்தேன். பெரியப்பாதான் பள்ளியின் தலைமை ஆசிரியர். மிகவும் கண்டிப்பானவர். பள்ளி மேலப்பட்டி கிராம எல்லையில் ஓடுகள் வேய்ந்த ஒரு சிறிய கட்டிடத்தில் நடந்து கொண்டிருந்தது. ஐந்தாம் வகுப்பிற்கான அறையில் மட்டும்தான் உட்காருவதற்கு பெஞ்சுகள் போடப்பட்டிருக்கும். மற்ற வகுப்பறைகளில் கீழேதான் உட்கார வேண்டும்.

ஒருநாள், மதிய உணவிற்கு முன்னதான தமிழ் வகுப்பில், கரும்பலகையில் ஒரு செய்யுளை எழுதிவிட்டு, ஆறாவதோ ஏழாவதோ வரிசையில் நடுவில் உட்கார்ந்திருந்த என்னை எழுந்து நிற்கச் சொல்லி “விஜயா, சத்தமா செய்யுளை வாசி” என்றார் பெரியப்பா. நான் எழுந்து நின்று கையைக் கட்டிக் கொண்டு கரும்பலகையைப் பார்த்தேன். எழுத்துக்கள் சரியாகத் தெரியவில்லை. கலங்கிப் போய் தெரிந்தன. கண்களை இடுக்கிக் கொண்டு சுருக்கி பார்த்தபோது ஏதோ கொஞ்சம் தெளிவானது போல் இருந்தது.

தட்டுத் தடுமாறி எழுத்துக் கூட்டி ஆரம்பித்து செய்யுளை முழுதும் வாசிக்க முடியாமல் பாதியில் நிறுத்தி விட்டு திருதிருவென்று முழித்தேன். எழுத்துக்கள் சரியாகத் தெரியவில்லையென்று பெரியப்பாவிடம் சொல்லத் தெரியவில்லை. அல்லது சொல்வதற்கு பயமாக இருந்தது. பெரியப்பா நான் படிக்கத் திணறுவதைப் பார்த்து, என்னைப் பார்த்து முறைத்தார். அவர் வலது கை பெஞ்சின் மேலிருந்த பிரம்பை இறுகப் பிடித்திருந்தது.

அன்றிரவு இரவுணவின் போது வீட்டிற்கு வந்த பெரியப்பா, அப்பாவிடம், “போர்டுல எழுதியிருக்கறதப் படிக்க சிரமப்படறான். புக்க பார்த்து வாசிக்கச் சொன்னா கடகடன்னு வாசிக்கிறான். கண்ண டெஸ்ட் பண்ணா நல்லது. ஏதாவது கிட்டப்பார்வை/தூரப் பார்வை குறைபாடாயிருக்கும்” என்று சொல்லிவிட்டு மதுரை அரவிந்திற்கு கூட்டிக்கொண்டு போய் காட்டச் சொன்னார். சாப்பிட்டுக் கொண்டிருந்த எனக்கு “ஆஹா… மதுரையா… ஜாலி” என்று தோன்றியது.

அப்போதெல்லாம் சிறிய பயணங்கள் கூட உற்சாகமும், திருவிழா மனநிலையும் தரக் கூடியவை. அம்மா சைக்கிள் கடை ராஜ் மாமாவின் பெண் ஜோதி மதுரை அரவிந்தில்தான் வேலைக்குச் சேர்ந்திருப்பதாக சொன்னார். ஜோதி அக்காவை எனக்குத் தெரியும். பத்தாவது வரை படித்துவிட்டு வீட்டிலிருந்தார். என்னைவிட ஆறு வயது மூத்தவர். காட்டு வேலைகளுக்குப் போய் வருவார். பெரியப்பா அம்மாவிடம் “ஜோதி மட்டும் லேதும்மா. இங்க மன ஊரு பிட்டலு நாலஞ்சு பேரு ஆடதான் பணி சேசரு” (ஜோதி மட்டும் இல்ல. இன்னும் நம்மூர் பொண்ணுங்க நாலஞ்சு பேர் அங்கதான் வேலை செய்றாங்க”) என்றார்.

அப்பா அடுத்த வாரம் வியாழக்கிழமை அரவிந்திற்கு கூட்டிப் போவதாகச் சொன்னார். நான் நாட்களை எண்ணிக் கொண்டிருந்தேன். வகுப்புத் தோழிகள் லதாவிடமும், ஜீவாவிடமும் வியாழக்கிழமை மதுரை போவதைப் பற்றி குதூகலத்துடன் சொல்லிக் கொண்டிருந்தேன்.

அந்த நாள் இன்னும் பசுமையாய் ஞாபகமிருக்கிறது. மருதங்குடியிலிருந்து திரும்பிய 1ம் நம்பர் பஸ்ஸில் ஓடைப்பட்டியில் ஏறி திருமங்கலத்தில் இறங்கினோம் நானும் அப்பாவும். திருமங்கலத்தில் அப்போது பஸ் ஸ்டாண்ட் எதிரிலிருந்த V.P.மதுரா பேக்கரி மிகவும் பிரபலம். அப்பா மதுராவிற்குச் சென்று தேங்காய் பன்னும், பக்கத்துக் கடையிலிருந்து இனிப்புச் சேவும் வாங்கி வந்தார். அக்காலத்தில் மதுரையில் இரண்டு பேருந்து நிலையங்கள் மட்டும்தான் என்று நினைக்கிறேன். பெரியாரும், அண்ணாவும். அண்ணா பஸ் ஸ்டாண்ட்போகும் பேருந்தில் ஏறி உட்கார்ந்து கொண்டோம்.

அரவிந்த் அண்ணா பஸ் ஸ்டாண்ட் அருகிலேயே இருந்தது. உள்ளே நுழைந்ததும், ஒரு கண் மருத்துவமனையின் அந்தச் சூழல் கிராமத்துச் சிறுவனான எனக்கு மெல்லிய ஆச்சர்யத்தையும் பிரமிப்பையும் தந்தது. நான் அப்பாவின் கைபிடித்துக் கொண்டேன். ஒருவித அமைதியில் மனிதர்கள் இங்குமங்கும் நடந்து கொண்டிருந்தார்கள். வரவேற்பில் உட்கார்ந்திருந்த பெண்ணிடம் சென்று அப்பா, ஜோதி அக்கா எங்கிருக்கிறார் என்று விசாரித்தார். அப்பெண் சிரித்துக்கொண்டே “மீரு ஓடைப்பட்டினா?” என்று கேட்டார். அப்பா ஆம் என்றதும், “உட்காருங்க. வரச் சொல்றேன்” என்றார்.

சேரில் உட்கார்ந்து மனிதர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். பத்து நிமிடத்திற்கொரு முறை வெள்ளைச் சீருடை அணிந்த ஒரு அக்கா பெயர்கள் சொல்லி சிலரை அழைப்பதையும், அவர்கள் எழுந்து அந்த அக்காவின் பின்னால் போவதையும வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தேன். அழைக்கும் பெயர்களில் கிராமத்தில் பரிச்சயமான பெயர்களோடு தொடர்புபடுத்தி அவர்களா என்று திரும்பித் திரும்பி தேடிக் கொண்டிருந்தேன். கந்தசாமி, ராமக்கா, பவுனுத்தாயி…தாத்தா, பாட்டிகள்தான் அதிகமிருந்தனர். கைகளில் மஞ்சள் பைகள்.

ஜோதி அக்கா சிரித்துக்கொண்டே வந்தார். அப்பாவைப் பார்த்து “மாமா, ரண்ட (வாங்க)” என்று சொல்லிவிட்டு, என் தலையில் கைவைத்து “ஏமிரா விஜி? நஸ்ஸ உண்டாவா?” என்றார். கிராமத்தில் பார்த்த ஜோதி அக்காவிற்கும், இங்கு பார்க்கும் ஜோதி அக்காவிற்கும்தான் எத்தனை வித்தியாசம்! முகத்தில் ஒளி கூடியிருந்தது. பேச்சில் தயக்கங்கள் இல்லை. உடைகள் மாறியிருந்தன. அப்பா எனக்கு தூரத்தில் இருக்கும் எழுத்துக்கள் சரியாகத் தெரிவதில்லை என்றார். “கிட்டப் பார்வை”ங்க உண்டச்சும். செக் சேத்தம்” என்று அப்பாவிடம் சொல்லிவிட்டு, என்னிடம் சிரித்துக்கொண்டே “ம். விஜி, கண்ணாடி வேசுகுண்டவா? (கண்ணாடி போட்டுக்குறியா?) என்றார்.

அன்று ஒவ்வொரு அறைக்கும் செக் செய்ய அழைத்துப் போவதிலிருந்து, உள்ளேயே கண்ணாடி ஃப்ரேம்கள் கடைக்கு அழைத்துப்போய் பொருத்தமான ஃப்ரேம் தேர்வு செய்து ஆர்டர் தரும் வரை எங்களுடன்தான் இருந்தார் ஜோதி அக்கா, அப்பாவுடன் கிராமத்துக் கதைகள் பேசிக் கொண்டே. உடன் தங்கியிருந்த தோழிகளை (வெவ்வேறு கிராமத்திலிருந்து வேலைக்கு தேர்வாகி அரவிந்திற்கு வந்தவர்கள்) எங்களுக்கு அறிமுகப்படுத்தினார். உள்ளிருக்கும் சிறிய கேண்டீனிற்கு எங்களை அழைத்துச் சென்று டீ வாங்கித் தந்தார்.

அரவிந்த் எத்தனை மாற்றியிருந்தது அக்காவை? அக்காவை மட்டுமா, அக்காவைப் போன்ற இன்னும் பல அக்காக்களை, அவர்களின் குடும்பங்களை!. டாக்டர் வெங்கிடசாமியை அவ்விரவில் மிகுந்த நன்றியுடன் நினைத்துக் கொண்டேன்.

வெங்கி

***

முந்தைய கட்டுரைகர்ணனும் பீஷ்மரும்- கடிதம்
அடுத்த கட்டுரைகி.ரா.உரையாடல்- கடிதங்கள்