ஞானி, தத்துவஞானி, தத்துவவாதி எனும் சொற்கள்

எழுத்தின் இருள்

அன்புள்ள ஜெயமோகன்

சமீபத்தில் நீங்கள் எழுதிய “எழுத்தின் இருள்” என்ற கட்டுரையை படித்த பின் ஒரு சிறு குழப்பம். அந்த கட்டுரையில் நீங்கள் “தத்துவஞானியிலும் மெய்ஞானியிலும் அமையும் நேர்நிலையான நிறைவு ஒரு பெருங்கொடை. அதை தன் புனைவின் உச்சியில் கலைஞன் நிகழ்த்திக்காட்டிவிடமுடியும். காட்டியதுமே அவன் கீழிறங்கி தன்னியல்புக்கு மீளவும் வேண்டியிருக்கும்” என்று கூறிய இருந்தீர்கள்.

தத்துவவியல் பட்ட படிப்பில் தங்க பதக்கம் பெற்ற ஓஷோவும், தத்துவத்தை கற்று தேர்ந்த ஜெ.கிருஷ்ணமூர்த்தியும் மெய்ஞானி  என்பதை நான் மறுக்கவில்லை. அதே நேரத்தில் தத்துவம் பற்றி பெரிதாக நூல் அறிவு இல்லாத ரமணரும், ராமகிருஷ்ணரும் மெய் ஞானிகள் தானே? வெறும் நூல் அறிவு மட்டுமே கொண்ட யு.ஜி.கிருஷ்ணமூர்த்தி போன்றவர்களை தான் நீங்கள் தத்துவஞானி என்று சொல்கிறீர்களா? அப்படி பார்த்தால் நீங்களும் பல தத்துவங்களை நித்யா குருகுலத்தில் கற்று இருப்பீர்கள் என்று ஊகிக்கிறேன். ஆனால் ஏன்  “நான் வெறும் எழுத்தாளன் மட்டுமே தத்துவவாதி இல்லை” என்று உங்களை நீங்களே தாழ்த்துகிறீர்கள்?

எனது சந்தேகம் என்னவென்றால் ரமணரும், யு.ஜி.கிருஷ்ணமூர்த்தியும் சம நேர்நிலை கொண்டவர்கள் என்று நீங்கள் கருதுகிறீர்களா?(இதை நீங்களே ஏற்க மாட்டீர்கள் என்று தெரிந்தே கேட்கிறேன்) ஒருவேளை “யு.ஜி.கிருஷ்ணமூர்த்தி ஒரு தத்துவஞானியே இல்லை” என்று நீங்கள் சொன்னால், தத்துவஞானி என்ற வார்த்தையை என்ன பொருளில் பயன்படுத்துகிறீர்கள்? தத்துவஞானி என்பவருக்கு என்ன அளவுகோலை பயன்படுத்துகிறீர்கள்?

உங்கள் அளவுகோல் என்னவாக இருந்தாலும், உங்கள் அளவுகோலிலின் படி  பொருந்தக்கூடிய தத்துவஞானியை, ஒரு மெய்ஞானியுடன் ஒரே தட்டில் வைப்பீர்களா? அவர்கள் இருவரும் சம நேர்நிலை கொண்டவர்கள் என்று நீங்கள் கருதுகிறீர்களா?

அன்புபுடன்

கார்த்திகேயன்.J

அன்புள்ள கார்த்திகேயன்,

சில சொற்களை நாம் குறிப்பிட்ட வரையறையை அளித்து பயன்படுத்துகிறோம். தமிழ்ச் சூழலில் தத்துவ விவாதங்கள் மிகக் குறைவு. இலக்கிய விவாதங்களும் குறைவுதான். ஆகவே சொற்கள் ஒரு பொதுவான பொருளில் பயன்படுத்தப்படுவது மிக அரிது. இச்ச்சூழலில் ஒவ்வொரு ஆசிரியரும் அவருடைய மொத்த உரையாடலிலும் ஒரு சொல்லை எப்படிப் பயன்படுத்துகிறார் என்பதைக் கொண்டு அவர் கூறவருவது என்னவென்பதை தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும்.

நான் சில சொற்களை குறிப்பிட்ட வரையறையை அளித்து பயன்படுத்துகிறேன். ஞானி, மெய்ஞானி போன்ற சொற்களை seer, sage என்ற சொற்களுக்கு இணையான சொற்களாகப் பயன்படுத்துகிறேன். அவர்கள் கற்றறிந்தவர்கள் அல்ல. புனிதர்களுமல்ல. மதத்தலைவர்கள் அல்ல. அவர்கள் கற்றவர்களோ, புனிதர்களோ, மதத்தலைவர்களோ ஆக இருக்கலாம். ஆனால் அடிப்படையில் அவர்கள் மெய்ஞ்ஞானத்தை உணர்ந்தவர்கள்.

உணர்ந்தவர்கள் என்ற சொல்லைக் கூர்ந்து பயன்படுத்துகிறேன். அறிந்தவர்களல்ல. வேதாந்தத்தில் அறிவது, அறிவென்றாகி அறிவில் அமைவது இரண்டும் வேறு வேறு. அறிவதை ஞானம் என்றும் அமைவதை சாக்ஷாத்காரம் என்றும் சொல்கிறார்கள். தோராயமாக ஆங்கிலத்தில்  self-realization என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள். Realization என்ற வார்த்தையை மேலும் பொருத்தமாகப் பயன்படுத்தலாம் – அதுவாதல். இங்கனைத்தும் உள்ளது பிரம்மமே என்றறிவதற்கு இரண்டு நிமிடங்கள் போதும். அவ்வறிவை உணர்வாக்கி தன்னிருப்பாக்கி அதிலமைந்து பிறிதொன்றில்லாது எஞ்ச ஒரு வாழ்நாள் முழுவதும் நீளும் யோகம் தேவை. அதையே சாதனா என்கிறோம்.

அகப்பயிற்சியினூடாக அப்பயிற்சியைக் கொண்டு நிகழ்த்தும் ஆழ்ந்த நெடும் பயணத்தினூடாக அறிவென்றாகி அமைந்தவர்களையே ஞானி என்று சொல்கிறோம். அச்சொல்லை அத்தனை எளிதாக நாம் பயன்படுத்தி விடக்கூடாதென்ற தன்னுணர்வு நமக்கு வேண்டும். அதற்கு நமது உலகியலிலிருந்து எளிய வரையறைகளை நாம் அளிக்கக் கூடாது.  உலகியலாளனின் வரையறையின்படி ஒரு ஞானி திகழ வேண்டும் என்பதைப் போல் அபத்தம் வேறில்லை.

பெரும்பாலான தருணங்களில் உலகியலாளர்கள் தங்கள் மதநம்பிக்கைக்கு உகந்த பெரியவர்களை ஞானிகள் என்று சொல்ல விரும்புகிறார்கள்.  தாங்கள் உகந்ததென்று எண்ணும் ஆசாரங்களைக் கடைப்பிடிப்பவர்கள், நோன்புகளை பற்றி ஒழுகுபவர்கள் அவர்களுக்கு ஞானிகளாகத் தென்படுகிறார்கள்.

வயது முதிர்ந்தவர்களை ஞானிகள் என்று கருதும் ஒரு போக்கு உண்டு நமக்கு. நம்முடைய தந்தை வழிபாட்டின் விளைவு அது. ஒருவர் நூறாண்டுகளுக்கு மேல் வயது முதிர்ந்தவர் என்றால் இயல்பாகவே அவர்களுடைய அசைவுகளில், பேச்சுக்களில் ஒரு முதிர்வும் தளர்வும், அவர் இயல்பில் ஒரு அமைதியும் கூடிவிடும். நாம் நெடுங்கால தந்தை வழிபாடு கொண்டவர்களாதலால் அவரை இறைவடிவராக நினைப்போம், ஞானி என்போம்.

அத்துடன் உலகியலாளர் செய்ய முடியாத சிலவற்றை செய்பவர்களை ஞானி எனச் சொல்லும் வழக்கம் உண்டு. சித்து வேலைகள், முக்காலமும் உணர்தல், போன்ற சிலவற்றை ஞானிகளின் இயல்பாகக் கூறுவதுண்டு. ஒருவரை ஞானி என்று சொல்பவரிடம் எவ்வகையில் அதைச் சொல்கிறீர்கள் என்று கேட்டால் அவர் சொல்லும் ‘சான்றுகள்’ பெரும்பாலும் எளிய மாய மந்திரங்களாகவே இருப்பதைப் பார்க்கலாம்.

ஒருவர் ஆன்மிகப் பெருநிறுவனங்களை உருவாக்கி அதன் தலைமையில் இருப்பவர் என்றால் அந்நிறுவனங்களை சார்ந்தவர்கள் அவரை எளிதில் ஞானி என்கிறார்கள், அவ்வண்னம் ஏற்கிறார்கள். அவ்வாறே அவரை முன்னிறுத்துகிறார்கள். ஆகவே இன்றைய சூழலில் ஞானி, மெய்ஞானி என்னும் சொற்கள் மிகமிக பொருள்மழுங்கல் கொண்டவை.

ஒருவர் இன்னொருவரை ஞானி என்று சொல்லும்போது அவ்வாறு அல்ல என்று மறுப்பது, வாதிடுவது எளிதல்ல, நல்லதுமல்ல. ஏனெனில் ஞானியை  அளவிடுவதற்கு நம்மிடம் அளவுகோல்கள் இல்லை. உலகியலாளர்களாகிய நாம் அவ்வாறு அளவுகோல்களை உருவாக்கி வைத்துக்கொண்டிருப்பதும் பொருத்தமல்ல. ஆகவே ஞானி என ஒருவர் இன்னொருவரை சொல்லுவார் என்றால், அது அவருடைய முடிவு, அவருடைய நம்பிக்கை என்று விட்டுவிடுவதே உகந்தது.

நான் என்னளவில் ஞானி அல்லது மெய்ஞானி எனக் கருதுபவர் இங்கு ஆற்றுவது ஆற்றி, அறிவது அறிந்து விடுபட்டவர். நாராயண குருவை நான் ஞானி என்று நினைக்கிறேன். ரமணரை, வள்ளலாரை, ராமகிருஷ்ண பரமஹம்சரை ஞானியர் எனக் கருதுகிறேன். அவர்களை இங்கிருந்து அகன்று, அதன்பின்னரும் இங்குளோருக்கு தன்னை அறியக்காட்டித் திகழ்பவர்கள் என்று புரிந்துகொள்கிறேன்.

தத்துவ ஞானி என்று கூறுபவர்கள் தத்துவத்தின் வழியாக மெய்மையை அறிந்தவர்கள். அதை அறிவின் மொழியில் வரையறுத்துக் கூறுபவர்கள். ஜே.கிருஷ்ணமூர்த்தியோ, ஓஷோவோ, நித்ய சைதன்ய யதியோ, நடராஜ குருவோ அவ்வரிசையில் வருவார்கள். தத்துவம் அவர்களுக்கு அறிவதற்கும், அறிந்ததை உணர்த்துவதற்குமான கருவியாக உள்ளது. அறிந்து, கனிந்து தங்கள் முதிர்வின் கணத்தில் அவர்கள் பிறிதொன்றென ஆகிறார்கள்.

ஆனால் நாம் அவர்களை அறியும் காலம் முழுக்க அவர்களிடம் தத்துவம் இருந்துகொண்டே இருப்பதனால், அறிந்தவை அவர்களின் அகம் என்று ஆகி அவர்கள் பிறிதொன்றிலாது மாறாதிருப்பதனால் அவர்களை ஞானி என்று உரைப்பதற்கு மாறாகத் தத்துவ ஞானி என்கிறோம்.

தத்துவவாதி என்ற வார்த்தையை இன்னும் கவனமாகப் பயன்படுத்துகிறேன். தத்துவத்தைக் கற்றவர், அதில் அறிவுடையவர், அதை விரித்துரைக்கும் தகுதி கொண்டவர், தத்துவவாதி. ஒரு தத்துவக் கொள்கை மேல் நம்பிக்கை கொண்டவர். அதை முன்வைப்பவர். அவ்வாறு பல தத்துவவாதிகளை நம்மைச் சுற்றிப் பார்க்கலாம்.

எஸ்.என். நாகராஜனையும் கோவை ஞானியையும் தத்துவவாதிகளாகப் பார்க்கிறேன். அத்தத்துவத்தின் சாரமுணர்ந்து தெளிந்த நிலை அவர்களிடம் இல்லை என்பதனால் அவர்களைக் குறிக்க தத்துவ ஞானி என்ற சொல்லைப் பயன்படுத்துவதில்லை. தத்துவத்தைப் பயின்று மேலும் தேடி சென்றுகொண்டிருக்கும் நிலையில் நாம் அவர்களை அறிகிறோம்.

இச்சொற்களுக்கிடையேயான வேறுபாடுகளின் ஊடாக நாம் அறிதலின் படிநிலைகளை வகுத்துக் கொள்கிறோம். தத்துவத்தின் ஊடாக செல்பவர் தத்துவவாதி. தத்துவத்தைக் கடந்து அமைந்தவர் தத்துவ ஞானி. அறிவதறிந்து அதுவானவர் ஞானி.

எழுத்தாளன் இம்மூன்றும் அல்ல. அவனுடைய கருவி தத்துவம் அல்ல, அது புனைவே. புனைவின் வழி என்பது கற்பனை. தத்துவத்தின் வழி என்பது தர்க்கம். கற்பனையினூடாக ஓர் உலகை உருவகிக்கும் எழுத்தாளன் அதன் ஒட்டுமொத்தப் பார்வையை வகுத்துரைக்கும் பொருட்டு தத்துவத்தைக் கையாளக்கூடும், ஆனால் அது தத்துவம் அல்ல. புனைவின் ஒரு பகுதியாக இருக்கும் தத்துவம். புனைவுத் தத்துவம்தான். அது தத்துவத்தின் மொழியில் அமைந்திருப்பதில்லை. புனைவின் மொழியில் அமைந்திருக்கிறது.

தஸ்தாவெய்ஸ்கி ஆனாலும் தல்ஸ்தோய் ஆனாலும் தாமஸ் மன் ஆனாலும் சரி, விஷ்ணுபுரமோ வெண்முரசோ ஆனாலும் சரி அதில் உள்ளது நேரடியாகத் தத்துவம் அல்ல. புனைவென மறு ஆக்கம் செய்யப்பட்ட தத்துவமே.

புனைவிலக்கியவாதி எந்நிலையிலும் தத்துவவாதி ஆவதில்லை. புனைவிலக்கியத்தின் ஊடாகக் கனிந்து அதைக் கடந்து ஒரு முழுமையடைந்தவரை நாம் இலக்கிய ஞானி என்று சொல்லக்கூடும். தல்ஸ்தோய் அவ்வாறு ஒரு இலக்கிய ஞானி. பாரதியையும், தாகூரையும், பஷீரையும், சிவராம காரந்தையும் நான் அவ்வாறு வரையறுப்பேன்.அவர்களின் எழுத்து மட்டுமல்ல அவர்களின் ஆளுமையுமே அதற்குச் சான்று.

சரி,இலக்கியத்தின் ஊடாக மெய்ஞ்ஞானி ஆனவர்கள் உண்டா? நம்மாழ்வாரோ, கபீரோ, ரூமியோ அவ்வாறு இலக்கியத்தின் ஊடாக மெய்ஞ்ஞானி ஆனவர்களாக நமக்கு வரலாற்றில் காணப்படுகிறார்கள். எந்தப் பாதையும் அறுதியாக சென்றடைவது மெய்ஞ்ஞானத்தையே. இலக்கியமும் அதற்கான வழி ஆகலாம்.

ஜெ

எழுத்தின் இருள் கடிதங்கள்

எழுத்தின் இருள்- கடிதங்கள் 2


தத்துவம் இன்று…

தத்துவம் மேற்கும் கிழக்கும்

தியானமும் ஜே.கிருஷ்ணமூர்த்தியும்

பார்ப்பான், பார்ப்பவன்- ஒரு திரிபு

கடவுளை நேரில் காணுதல்

மெய்ஞானம் டாட் காம்

குருவும் குறும்பும்

இந்துமதமும் ஆசாரவாதமும்

புலிக்காலடி

திருமந்திரம் பற்றி…

முந்தைய கட்டுரைஅருண்மொழியின் சொற்கள்
அடுத்த கட்டுரைஅஜ்மீர்,பிருத்விராஜ்- கடிதம்