நாட்டார்த் தெய்வங்கள் விலக்கமும் ஏற்பும்

வேதாந்தமும் இறைவழிபாடும்

அன்புள்ள ஜெ

நாட்டார் தெய்வங்கள் பற்றி அத்வைதம் கொண்டிருக்கும் கருத்தை விளக்கி நீங்கள் அனுப்பிய கடிதநகலைப் பார்த்தேன். என்னுடைய கேள்விக்கும் அதில் பதில் இருந்தது.

ஆனால் நான் அந்தக்கேள்வியைக் கேட்பதற்கான காரணம் நாராயணகுரு நாட்டார் தெய்வங்களை நீக்கம் செய்தார், அத்தெய்வங்களின் சிலைகளை தூக்கி வீசிவிட்டு அங்கே வேறு பெருந்தெய்வங்களை அமைத்தார் என்ற செய்திதான். அவர் அத்வைதியானதனால்தான் அதைச் செய்தார் என்று சொல்லப்படுகிறது. அதைப்பற்றித்தான் விளக்கம் கோரினேன்.

சுந்தர்

அன்புள்ள சுந்தர்,

பழங்குடித் தெய்வங்கள் மற்றும் நாட்டார் தெய்வங்களையும் பற்றிய பார்வையில் வந்த மாற்றங்களை ஆன்மீகரீதியாக பொருள் கொள்வதை விட சமூகரீதியாக பொருள் கொள்வதே உகந்ததாக இருக்கும்.

நெடுங்காலமாக இந்தியாவில் இந்து, சமண, பௌத்த மதங்கள் மூன்று அடுக்குகளாகவே இருந்து வந்துள்ளன. உச்சியில் தத்துவார்த்தமான ஒரு மதம். அதற்கடியில் பெருந்தெய்வங்களால் ஆன ஒரு வழிபாட்டு மதம். அதற்கடியில் நாட்டார் பழங்குடி வழிபாடுகளின் தொகை ஒன்று. இந்த அமைப்பு இன்று இந்து மதத்தில் அவ்வாறே நீடிக்கிறது.

நாட்டார் தெய்வங்களும் பழங்குடித் தெய்வங்களும் பல்வேறு உள்ளூர் வழிபாடுகள், குலக்குறிகள், ஆசாரங்கள் ஆகியவற்றுடன் இணைந்தவை. ஒரு குலமோ, இனக்குழுவோ பௌத்த, சமண, இந்து மதங்களுக்குள் வரும்போது அவர்களின் தெய்வங்களும் உள்ளே வந்து உள்ளே அந்த மதங்களின் மையத்தரிசனத்திற்கு இயைப சற்று உருமாறி அமைகின்றன.

காலப்போக்கில் அந்த தெய்வங்களுக்கு ஒரு தத்துவார்த்தமான விளக்கம் சிலபோது அளிக்கப்படுகிறது.  புராண உருவாக்கத்தினூடாக அச்சிறுதெய்வங்கள் பெருந்தெய்வங்களின் உலகில் அமையச் செய்யப்படுகின்றன. அவற்றுக்குரிய வழிபாட்டு முறைகள் அந்த மதத்தின் மைய நம்பிக்கைக்கேற்ப உருமாற்றம் செய்யப்பட்டு ஏற்பு கொள்ளப்படுகின்றன. உதாரணமாக பௌத்த, சமண மதத்தில் நுழைந்த தெய்வங்களுக்கு உயிர்ப்பலி இல்லாமலாகியது.

இந்துமதத்தில் தொடர்ந்து மூவாயிரம் ஆண்டுகளாக பழங்குடி, நாட்டார் தெய்வங்கள் உள்ளே நுழைந்து இவ்வாறு ஒர் ஒட்டுமொத்த அமைப்பில் பொருந்திக்கொண்டே இருந்திருக்கின்றன. இந்துமதம் ஒரு பிரம்மாண்டமான உரையாடல் மற்றும் தொகுப்புச் செயல்பாடினூடாக இடைவிடாது நிகழ்ந்துகொண்டே இருக்கும் ஒரு மெய்ஞான செயல்பாடு. ஒரு பண்பாட்டுப் பரிணாமம். இவ்வாறு இந்துமதத்திற்குள் நுழைந்த நாட்டார் தெய்வங்கள் காலப்போக்கில் தாங்களும் பெருந்தெய்வங்களாவது உண்டு.

ஒவ்வொரு வட்டாரத்திலும் அந்த ஊருக்கான நாட்டார்த் தெய்வ வழிபாடு இந்துமதத்திற்குள் இருப்பதைப் பார்க்கலாம்.  வடஇந்தியாவில் ஏகவீரன் போன்ற தெய்வங்கள். தமிழ்நாட்டில் முனியசாமி, சுடலைமாடன் போன்ற தெய்வங்கள், கன்னி தெய்வங்கள், மூத்தார், நீத்தார் உருமாறிய தெய்வங்கள். இந்துமதத்தின் தத்துவக் கட்டமைப்பும் பெருந்தெய்வ வழிபாட்டுக் கட்டமைப்பும் இச்சிறுதெய்வங்களுக்கும் உள்ளே இடமளிப்பதாகதான் எப்போதும் இருந்துள்ளன.

ஏனென்றால்  இந்துமதத்தின் அடிப்படைத் தத்துவ தரிசனமாகிய வேதாந்தம் எந்நிலையிலும் சிறுதெய்வங்களுக்கு இடமளிக்கிறது. வேதாந்தத்தின் சிறப்பே அனைத்தையும் தன்னுள் கோக்கும் அந்த மையத்தரிசனம்தான். ஒரு பொற்பட்டுநூல் போல பல்லாயிரம் மணிகளைக் கோத்து இந்துமதத்தை உருவாக்கியிருப்பது அதுதான்.

இந்துமதத்தின் மையச் சடங்கு முறைமைகளான வேள்வி மரபும் சரி, ஆலய வழிபாட்டு மரபும் சரி,  நாட்டார் பழங்குடி தெய்வங்களை உள்ளே அமைத்துக்கொள்ளும் தன்மையுடன்தான் இருந்திருக்கின்றன. இன்றும் அவ்வாறே. நம் கண்ணெதிரிலேயே அந்த இணைவுச்செயல்பாடு நடந்துகொண்டிருக்கிறது.

[இந்துமத எதிர்ப்பாளர்கள் அஞ்சுவது அந்த இணைவுச்செயல்பாட்டைத்தான். அவர்கள் அதை அழித்தொழிக்கும் செயல்பாடு என திரித்து வசைபாடுகிறார்கள். ஆனால் அழித்தொழிக்கும் கொள்கை கொண்ட மதங்களை ஆதரிக்கிறார்கள். அழித்தொழிக்கும் கொள்கை கொண்ட மதங்கள் இந்துமதம் நாட்டார்- பழங்குடிப் பண்பாடுகளை அழிக்கிறது என கூக்குரலிடுகின்றன]

ஆனால் இந்துமத மறுமலர்ச்சிக் காலம் என்று நாம் சொல்லும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்த நாட்டார்த் தெய்வங்களைப் பற்றிய ஒரு மாற்றுப் பார்வை உருவாகி வந்தது. நாட்டார்- பழங்குடி தெய்வங்களும் சடங்குகளும் இந்துமதத்தின் மையமாக இருக்கும் தத்துவ தரிசனத்துடன் முரண்படுபவை அல்லது தொடர்பற்றவை இவை என்ற புரிதல் உருவாகியது. இவை பின்பட்ட மதநம்பிக்கைகள் என்றும் பண்படாதவை என்று மதஅறிஞர்கள் எண்ணத்தலைப்பட்டனர். இவர்கள் பெரும்பாலும் மதச்சீர்திருத்த நோக்கம் கொண்டவர்கள்.

இந்துமதச் சீர்திருத்தம் என்பது அடிப்படையில் இந்துமதம் ஐரோப்பாவுடன் உரையாடியதன் விளைவு என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். இந்துமதத்தின் பழமையான அமைப்புகள் அவ்வுரையாடலுக்குள் செல்லவில்லை. இந்து மதம் கிறிஸ்தவப் போதகர்கள்  வழியாகவும் சுதந்திர சிந்தனையாளர்கள் வழியாகவும் ஐரோப்பாவின் அறிவு மரபுடன் ஒரு உரையாடலை மேற்கொண்டது. அதுவே இந்துமதச் சீர்திருத்ததின் அடிப்படை.

கிறிஸ்தவப் பார்வையை இங்குள்ள மிகச் சிறுபான்மையினரான சிலர் கருத்தில் கொண்டனர். ஆனால் ஐரோப்பாவில் அறிவொளி காலத்தில் உருவாகிவந்த தனிமனிதவாதம், ஆன்மீக சுதந்திரம் குறித்த பிரக்ஞை, தத்துவத்தின் தனித்த இயக்கம் குறித்த புரிதல், மனித உரிமை, அடிப்படை மானுட அறம் ஆகியவற்றைப் பற்றிய விழிப்புணர்வு ஆகியவை இங்குள்ள கற்ற பெரும்பான்மையினரிடம் பெரும் செல்வாக்கை செலுத்தின.

இந்துமதத்தை அந்த புதிய பார்வையின் அடிப்படையில் மறுஅமைப்பு செய்வதற்கான முயற்சியை ஒட்டுமொத்தமாக இந்து மறுமலர்ச்சி என்கிறோம். பலநூறு மதச் சீர்திருத்தவாதிகளால் ஆன ஓர் அறிவியக்கம் இது. தயானந்த சரஸ்வதி, ராஜாராம் மோகன்ராய், விவேகானந்தர், வள்ளலார், நாராயண குரு என அந்த சீர்திருத்தவாதிகளின் பட்டியல் மிக நீண்டது.

அவர்களின் பார்வையில் பழங்குடி, நாட்டார் வழிபாடுகள் பண்படாதவையாகவும் காலத்தால் பிற்பட்டவையாகவும் தோன்றின. ஏனென்றால் அத்தனை  மதச்சீர்திருத்தவாதிகளும் மதத்தை அதன் மையத்திலுள்ள தத்துவத்தின் அடிப்படையில் மறுதொகுப்பு செய்யவே முயன்றார்கள். மையமே உண்மை, விளிம்புகள் திரிபுகள் அல்லது விலகல்கள் என புரிந்துகொண்டனர்.

வேதாந்த தரிசனத்தின் அடிப்படையில் ஒட்டுமொத்த இந்துமதத்தையும் மறுவரையறை செய்வதற்கு ராஜாராம் மோகன்ராய் முயன்றார் என்றால் வேதவேள்வி மரபின் அடிப்படையில் மொத்த இந்துமதத்தையும் மறுஅமைப்பு செய்வதற்கு தயானந்த சரஸ்வதி முயன்றார். இவ்வாறு முயன்றவர்கள் அந்த மையத்துடன் நாட்டார், பழங்குடி பண்பாடுக்கு வெகு தொலைவிருப்பதை உணர்ந்தனர்.

நாட்டார் பழங்குடி மரபில் இருக்கும் பலிச்சடங்குகள், கொடைச்சடங்குகள், தன்னை வருத்திக்கொள்ளும் வழிபாட்டு முறைகள், பலவகையான நோன்புகள், விலக்குகள் ஆகியவற்றை வெறும் மூடநம்பிக்கைகள் என்றும், மதத்துடன் தொடர்பற்ற பழங்குடிப் பண்பாட்டுக் கூறுகள் என்றும் அவர்கள் எண்ணினார்கள்.  ஆகவே ஆரம்பகட்ட மதச்சீர்திருத்தவாதிகள் அவற்றை நிராகரித்து பேசியிருக்கிறார்கள், தடை செய்ய முயன்றிருக்கிறார்கள்.

சமூகசீர்திருத்தப் பார்வையில் பழங்குடி நாட்டார் வழிபாடுகளை அணுகியவர்கள் அத்தெய்வங்களின் குறியீட்டுத் தன்மை மக்களிடம் உருவாக்கும் உளச்செல்வாக்கை கருத்தில் கொண்டனர். நாராயண குரு அதைப் பற்றிப் பேசியிருக்கிறார். உதாரணமாக, ஒரு போர்க்குடி உக்கிரமான போர்த்தெய்வங்களை தங்கள் குலதெய்வமாகவும் குடித்தெய்வமாகவும் வழிபடலாம். ஆனால் போர் யுகம் முடிந்துவிட்டது. சமாதானத்தின், ஜனநாயகத்தின் யுகம் வந்துவிட்டிருக்கிறது. இன்று போர்த்தெய்வங்கள் அளிக்கும் உளவியல் செல்வாக்கு என்பது அக்குடியை வெறும் வன்முறையாளர்களாக கலகக்காரர்களாக மாற்றிவிடக்கூடும்.

வாளேந்திய தெய்வம் குடித்தெய்வமாக இருக்குமென்றால் அக்குடியில் குருதி சிந்துவதைத் தடுக்க முடியாது என்று நாராயண குரு சொன்னார். ஆகவே புத்தகத்தை ஏந்திய தெய்வம், ஒளிச்சுடரை ஏந்திய தெய்வம், அருள்புரியும் தெய்வம் மட்டுமே வழிபடப்படவேண்டுமென்று அவர் அறிவுரைத்தார். அக்காரணத்தால்தான் தாங்கள் செல்லும் இடத்தில் எல்லாம் அங்கிருந்த நாட்டார் தெய்வங்களை நீக்கம் செய்து அங்கு பெருந்தெய்வங்களை நிறுவும் பணியை அவர் செய்தார்.

ஈழவர்கள் வழிபட்டு வந்த அறுகொலை, மருதா, குளிகன் போன்ற பலி தெய்வங்களையும் பல்வேறு ஆவி தெய்வங்களையும் நாராயணகுரு விலக்கினார். அவற்றை வழிபடக்கூடாதென்று தடுத்தார். பல இடங்களில் வழிபடப்பட்டு வந்த சிலைகளை தன் கையால் தொட்டெடுத்து அருகில் இருந்த கிணற்றில் போட்டு மூடிவிட்டு அங்கு வேறு தெய்வங்களை நிறுவி அவர்களை வழிபடச் செய்தார். அத்தெய்வங்களுக்கு ரத்தபலி கொடுப்பதை உறுதியாக மறுத்தார். உடலை வருத்திக்கொண்டு செய்யும் நோன்புகளை நிராகரித்தார்.

இதற்கான சமூகக் காரணங்கள் உண்மையானவை என்றுதான் நான் நினைக்கிறேன். இன்றும் கூட எந்தக் குடி, வன்முறை வெளிப்பாடு கொண்ட குடித்தெய்வங்களை வழிபடுகிறதோ அந்தக் குடியில் இருந்து வன்முறை அகல்வதில்லை. வன்முறை என்பது இந்த நூற்றாண்டில் ஒரு உயர்பண்பல்ல. தவிர்க்கப்படவேண்டிய ஒன்று அது

வன்முறைப்பண்பு குறுகிய காலஅளவில் உலகியல் வெற்றியையோ பொருளாதார நன்மையையோ அளிக்கலாம். ஆனால் அவ்வன்முறை குடும்பத்துக்குளேயேதான் பெரும்பாலும் செயல்படும். வன்முறைத்தன்மை கொண்ட சாதிகளில் உச்சகட்ட வன்முறைக்கு ஆளாவது அக்குடும்பத்தின் உறுப்பினர்களாகிய பெண்களும் குழந்தைகளும்தான். இது கண்கூடான உண்மை.

இது நான் பிறந்த ஜாதியிலேயே அரைநூற்றாண்டுக்கு முன்புவரை இருந்த ஒரு நிலைமை. படிப்படியாக போர்த்தெய்வங்களை அகற்றிவிட்டு அருள் புரியும் தெய்வங்களை, வித்யா தெய்வம் என்று சொல்லக்கூடிய கல்வித் தெய்வங்களை ஏற்றுக்கொண்ட பின்னரே நான் பிறந்த போர்க்குடியிலேயே உளவியலில் பெரும் மாற்றங்கள் வந்தன.

நூறாண்டுகளுக்கு முன்பு எங்கள் சாதியில் ஒவ்வொரு குடியிலும் தலைமுறைக்கு ஓரிருவர் பூசலில் கொல்லப்பட்டிருப்பார்கள். ரத்தம் சிந்தாமல் ஒரு பொதுச்சடங்கு நடக்கும் வாய்ப்பே இல்லை என்பார்கள். குடும்ப உறுப்பினர்களே வெட்டிக்கொண்டு சாவார்கள். நீதிமன்றங்களில் சீரழிவார்கள். அச்சூழல் முழுக்க மாறியது வழிபாட்டு முறையில் வந்த மாற்றத்தினால்தான். அதற்கு சட்டம்பி சாமி முதன்மைக் காரணம்

இன்னும் சொல்லப்போனால் தெய்வங்களுக்கு ரத்தபலி கொடுப்பது என்பது குறியீட்டுரீதியான நடவடிக்கையாக தவிர்க்கப்படவேண்டிய ஒன்றுதான். அதன் உளவியல் விளைவுகளை நம்மால் எளிதில் தாண்டமுடியாது. ஆகவே நாராயண குருவோ சட்டம்பி சுவாமியோ வள்ளலாரோ சிறுதெய்வங்களை விலக்கியதும் பழித்ததும் புரிந்துகொள்ளத்தக்கதுதான். மறைமலை அடிகள் போன்ற சைவக்குரவர்கள் சிறுதெய்வங்களுக்கு எதிராக மிகக் கடுமையாக எழுதி பிரச்சாரம்  செய்திருக்கிறார்கள். சைவ மதமே மிக அதிகமான சிறுதெய்வங்களை உள்ளடக்கியது என்னும் போது அந்த எதிர்ப்பு இன்னும் கவனத்துக்குரியது.

ஆனால் இன்று சிறுதெய்வங்களைக் குறித்த நமது பார்வை இன்னொரு கட்டத்தை அடைந்திருக்கிறது. இன்று தொடர்ச்சியாக நாம் கல்வி, பொருளியல் சூழலில் மேம்பட்டிருக்கிறோம். மிக வேகமாக உலகமயமாகிக் கொண்டிருக்கிறோம். நம்முடைய தனிஅடையாளங்கள் முழுக்க கரைந்தழிந்து சர்வதேச அளவில் எங்கும் காணப்படும் ஒரு பொதுவான அடையாளம் அமைந்துகொண்டிருக்கிறது. வெறும் நுகர்வோனாக நாம் மாற்றப்படுகிறோம். இச்சூழலில் நம்முடைய கலாச்சார வேர்களை ஆழ ஊன்றிக் கொள்வது, நம்மை நம் மண்ணுடன் பிணைத்துக் கொள்வது நம்முடைய அடையாளத்தை மீட்டுத் தக்க வைத்துக் கொள்வதற்கு உதவியானது.

நம்முடைய முன்னோர்களின் நீண்ட உணர்வுச்சரடில் நம்மைத் தொடுத்துக்கொள்ளவேண்டிய தேவை இன்றுள்ளது. அதற்கு நாட்டார் தெய்வ வழிபாடு இன்று வழிவகுக்கிறது. இன்று நமது மூதாதையர் நாட்டார் தெய்வங்களுடன் கொண்டிருந்த ஆழ்ந்த உளரீதியான உறவு நமக்கில்லை. ஆகவே ஒருவேளை அத்தெய்வங்கள் நம்மைத் தீவிரமான குறியீட்டுரீதியான பாதிப்புக்கு உள்ளாக்காமல் போகலாம்.

அத்துடன் இன்று மிகப் பெரும்பாலான நாட்டார் தெய்வங்கள் உருமாறிவிட்டிருக்கின்றன. கண்கூடாக சென்ற இருபத்தைந்து ஆண்டுகளிலேயே சுடலைமாடன்களும் முத்தாலம்மன்களும் சைவ தெய்வங்களாக, அருள்மிகு தெய்வங்களாக மாறியிருப்பதை காண்கிறேன். அதன்பின் அத்தெய்வங்களை வழிபடுவதற்கான பழைய தடைகள் பொருளில்லாமலாகி இருக்கின்றன.

இன்று நாம் நமது வேர்களை நிறுவிக் கொள்வதற்காக நமது குலதெய்வங்களை வழிபட்டே ஆகவேண்டிய இடத்திற்கு வந்திருக்கிறோம். அத்தெய்வங்களை கைவிட்டுவிட்டால் நாம் வேரிழந்து நீரில் மிதந்தலையும் பாசிகளைப் போலாகிவிடக்கூடும். பெருந்தெய்வங்கள், சிறுதெய்வங்கள் இரண்டுமே வெவ்வேறு வகையில் நமக்கு இன்று  தேவைப்படுகின்றன. ஒரு இந்துவுக்கு இன்று அவனுடைய குலதெய்வவழிபாடு காவல்தெய்வ வழிபாடு ஊர்த்தெய்வ வழிபாடு முக்கியமானது, பெருந்தெய்வவழிபாடும் முக்கியமானது. தத்துவ தெய்வத்தைப் பற்றிய அறிதலும் ஊழ்கமும் முக்கியமானது.

மூன்று நிலையிலும் இருந்தால் மட்டுமே மெய்யாகவே ஓர் இந்து தன் ஞானத்தை அடைகிறான் என்று பொருள். அத்வைதம் உருவாக்கும் தத்துவத் தெய்வ உருவகம் சுடலைமாடனை வழிபடுவதற்கு எந்த வகையிலும்   தடையாவதில்லை என்பது மட்டுமல்ல அதைப் போற்றுகிறது, அதற்கு இடம் கொடுக்கிறது என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும். சுடலைமாடனையும் சுசீந்திரம் தாணுமாலயனையும் பிரபஞ்ச வெளியின்இ நுண்பொருளாகத் திகழும் பிரம்மத்தையும் ஒரேசமயத்தில் வழிபடும்போதுதான் நான் ஓர் இந்துவாக அமைகிறேன்.

ஜெ

***

முந்தைய கட்டுரைஒரு புதிய வீச்சு
அடுத்த கட்டுரைவெண்முரசில் நிறைநிலவு- சுபஸ்ரீ