குழந்தைகளும் நாமும் – கடிதம்

அன்புள்ள ஆசானுக்கு,

உங்கள் பதில் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. எதிர்பார்க்கவில்லை. என்ன கேட்பது என்றும் சட்டென தோன்றவில்லை. உங்கள் பிறந்தநாள் அன்று கன்னியாகுமரி பயணம் பற்றி பகிர்ந்தமைக்கு நன்றி. இங்கு நிலைமை கட்டுக்குள் உள்ளது. சில தினங்களுக்கு முன், சமூகப்பரவல் அதிகரித்ததை தொடர்ந்து, மேலும் சிற்சில கட்டுப்பாடுகள் செயல்படுத்தியுள்ளனர்.

ஒருமுறை ZOOM சந்திப்பில் உங்கள் உழைப்பிற்கு ஈடு கொடுக்கும் – உங்கள் உணவு மற்றும் உடற்பயிற்சி பழக்கங்களை குறித்து கேட்டு இருந்தேன். அதற்கு தாங்கள், “அந்த வேலைக்கென்று ஒரு தனி சக்தி இருக்கிறது” என்றவாறு பதிலளித்தீர்கள். என் அலுவலுக பணிகளில் நான் மூழ்கி இருக்கும் தருணங்களை  நினைத்து பார்க்க முயன்றேன். எனினும், எனக்கு உங்கள் உடல் ஆரோக்கியம் பற்றியும், கொரோனா காலத்தில் நீங்கள் மும்பை மற்றும் பல பயணங்கள் செய்தது பற்றியும் அவ்வப்போது நினைத்து பார்ப்பேன்.

உங்கள் சமீபத்திய பதிவில், நீங்களும் அஜிதனும் பாதிக்கப்பட்டீர்கள் என அறிந்து கவலையுற்றேன். மீண்டது குறித்தும், அதன் தாக்கம் சற்றும் தெரியாமல் உங்கள் ஈடுபாடு குறித்தும் மிக்க மகிழ்ச்சி. தாங்கள் நல்ல ஆரோக்கியத்துடன், நெடுங்காலம் தமிழ் சமூகத்திற்கு உங்கள் பங்களிப்பை தர வேண்டுமென்பது பல வாசகர்களை போல எனக்குமான வேண்டுதல்.

ஆங்கிலவழி பள்ளி படிப்பில் அவ்வளவாக தமிழிலக்கிய அறிமுகம் இல்லாத சூழலிலே வளர்ந்தேன். “சிவாஜி – MGR” பதிவு மூலம் உங்களை பற்றி அறிந்து, “யானை டாக்டர்” படித்ததிலிருந்து உங்கள் வாசகன் ஆனேன். உங்கள் ஆக்கங்களை/வலைப்பக்கங்களை படிக்கும் போது, ஒரு கலவையான உணர்வு எனக்குள் இருக்கும். நிறைவு + ஆற்றாமை + எச்சரிக்கை உணர்வு. நிறைவு:  பற்றி விளக்கவேண்டியதில்லை. ஆற்றாமை:  நீங்கள் எழுதும் வேகத்தில் பாதி அளவு கூட படிக்க முடியாமல் போவதால். ஒவ்வொரு முறை சிங்கை நூலகம் சென்று, அந்த பெரிய வெண்முரசு வரிசைகளை பார்த்ததும் (படம் இணைத்துள்ளேன்) ஒரு மிரட்சி  கலந்த குற்றவுணர்வு தோன்றும். பிறகு சிறிய புத்தகம் ஒன்றை எடுத்துக்கொள்வேன்.

எச்சரிக்கை உணர்வு:  நேரத்தை பணமாக்கும் காலத்தில் வாழ்வதால், உங்கள் எழுத்துக்களில் மூழ்கிவிடாமல் பார்த்துக்கொள்வது பெரும் சவால். ஒருவிதமான obsession ஆகிவிடுகிறது. எனவே சில நாட்கள் எதுவும் படிக்காமல் break  எடுத்து கொள்வேன். “தன்மீட்சி”யில் வரும் “நான்கு வேடங்கள்” பற்றி நினைத்து கொள்வேன். இதுவரை நான் படித்த உங்கள் புத்தகங்கள் – அறம், விஷ்ணுபுரம், பனிமனிதன், காடு, இந்தியப்பயணம், குறுநாவல்கள் மற்றும் பல சிறுகதைகள். இன்னும் சென்றடைய வேண்டிய தூரம் நினைத்தால் மலைப்பாக இருக்கிறது. சீரான வாழ்க்கைக்கு எது சிறந்தது என்று சமூகம் அறிவுறுத்துவதற்கும், வீட்டில் பெற்றோர்கள் சொல்லித்தருவதற்கும்,  ஒரு 20 ஆண்டுகளுக்கு முன் (90-களில்) அவ்வளவு வித்தியாசம் இருந்ததாக தோன்றவில்லை.

ஆனால் இன்று அறச்சிந்தனை செறிந்த எழுத்துக்கும், இலக்கிய வாசிப்பிற்கும் அன்றாட முக்கியத்துவம் குறைந்து, YouTube, TikTok, Social Media -இல் மூழ்கி அதில் shallow கருத்து பகிர்தலும், followers பெறுதலும், அதன்மூலம் கிடைக்கும் celebrity status-ஐ  கொண்டாடுவதும் – நிகழ்ந்துகொண்டிருக்கும் வேலையில், குழந்தைகளுக்கு நல்லது-கெட்டது அறிவுபுகட்டி,  அதே நேரத்தில் அவர்கள் காலத்தில் (contemporary)  outcast-ஆக ஆகாமல் தவிர்ப்பது எப்படி என்று அடிக்கடி சிந்திப்பேன்.

உங்களுக்கு நேரமிருந்தால் பதிலளிக்கவும்.

மிக்க நன்றி.

அன்புடன்

மகேஷ்.

***

அன்புள்ள மகேஷ்,

குழந்தைகளை ‘வளர்ப்பது’ என்ற சொல்லாட்சியே காலாவதியாகிக் கொண்டிருக்கிறது. இன்றைய குழந்தைகளின் வளர்ப்பில் பெற்றோரின் பங்கு குறைவு. பள்ளி, அரசு, சமூகம், ஊடகம் என பொதுச்சூழலின் செல்வாக்கே மிகுதி. ஆகவே நம் குழந்தைகள்மேல் நம்மை முழுமையாக பதியவைக்க முடியாது. நாம் செய்யக்கூடுவது ஒன்றே. கூடுமானவரை குழந்தைகளுடன் உரையாடலில் இருப்பது. ஒருபோதும் அந்த உரையாடல் அறுபடாமல் பார்த்துக் கொள்வது.

ஜெ

***

முந்தைய கட்டுரைவெண்முரசு ஆவணப்படம் திரையிடல் – சிகாகோ – கடிதம்
அடுத்த கட்டுரைஆடை களைதல் – கடிதம்