கலையில் தனியுண்மை என்று இருந்தாகவேண்டுமா?

ஜெ,

ஓர் இலக்கிய படைப்பில் ஒரு uncommon wisdom, அரிய மெய்மை வெளிப்பட்டாகவேண்டும் என கூறீனீர்கள். கூடவே, எனது வாசிப்பில் இருந்து, ஒரு இலக்கிய படைப்பு. படைப்பு செயல்பாடு என்பது எழுத்தாளனின் பிரக்ஞையை தாண்டி நிகழ்வது, அவனை மீறி நிகழ்வது என்ற கருத்தையும் அடைந்துள்ளேன். அப்படி என்றால், ஒரு எழுத்தாளன் எழுதுவது எப்படி?

ஒரு கரு தோன்றினால், அதிலிருந்து எழுவது அரிய மெய்மையா என புறவயமாக யோசித்து, பிறகு எழுதுவதா, வேண்டாமா என முடிவு செய்ய முடியுமா? இல்லை அவனை மீறி எழுவதை எழுதி முடித்தப்பின் அதில் அரிய மெய்மை இல்லையென்றால் நிராகரித்துவிட வேண்டுமா? அல்லது, எழுத்தாளனை மீறி எழுபவை படைப்பின் முடிவோ தரிதசனமோ அல்ல.. அதன் form and techniques மட்டுமே. அதன் தரிசனம் புறமனதின் scrutiny கடந்து வந்தது என புரிந்துகொள்ளலாமா?

எனது புரிதலில், அல்லது இந்த இரு கருத்தை தொகுத்துக்கொண்ட விதத்தில் ஏதோ தவறு இருக்கிறது.. என்ன எனதெரியவில்லை. என்றோ ஒரு நாள் நான் எழுத நேரலாம், இன்று ஒரு வாசகனாக, புனைவுச்செயல்பாட்டை புரிந்துக்கொள்ளவிரும்பும் ஒருவனாக மட்டுமே இதை கேட்கிறேன்.

அன்புடன்,

ரியாஸ்

***

அன்புள்ள ரியாஸ்,

நான் கூறியது ஓர் இலக்கிய விமர்சன அளவுகோலே ஒழிய இலக்கிய ஆக்கத்தின் வழிமுறை அல்ல. இலக்கியப் படைப்பை மதிப்பிடும்போது அதில் வழக்கமான உலகியல்பார்வை, அரசியல்பார்வை, ஆன்மிகப்பார்வை வெளிப்பட்டிருக்கிறதா அல்லது தனக்கே உரிய ஒரு புதியபார்வை வெளிப்பட்டிருக்கிறதா என்று பார்க்கவேண்டும். படைப்பு கலையெழுச்சி அடைந்திருந்தால் அது ஒரு தனியுண்மையை, அசாதாரணமான மெய்வெளிப்பாட்டை இயல்பாகவே கொண்டிருக்கும்.

ஆனால் எழுதும்போது ஒருவன் இதோ நான் தனியுண்மையை அடையப்போகிறேன், அசாதாரணமான மெய்வெளிப்பாட்டை கண்டுகொள்ளப்போகிறேன் என திட்டமிட்டு அங்கே செல்லமுடியாது. அவன் செய்யக்கூடுவது தன் மொழியாக ஆழுள்ளத்தை தூண்டுவது, அந்த எழுச்சிக்கு தன்னை ஒப்புக்கொடுப்பது, அது வெளிப்படும்படி இலக்கியப் படைப்பின் வடிவத்தையும் மொழியையும் அமைத்துக் கொள்வது மட்டுமே.

அதில் தனியுண்மை வெளிப்படுவதும் அசாதாரணமான மெய்மை எழுவதும் அவனிடம் இல்லை. அதை முயன்று அடையவும் முடியாது. அது நிகழவேண்டும். ஆனால் ஒரு படைப்பு கலைத்தன்மையுடன் இருந்தால், அது ஒருவனிடமிருந்து நேர்மையுடன் வெளிவந்தால் அது தனியுண்மை வெளிப்படுவதாகவே அமையும்.

தனியுண்மையை ஏன் வலியுறுத்திச் சொல்லவேண்டியிருக்கிறது என்றால் கலையில் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் மாயங்கள் மிகுதி என்பதனால்தான். நாம் நம்மை அறியாமலேயே வெளியே ஒலிக்கும் குரல்களை ஏற்று எதிரொலிக்க தொடங்கலாம். பிறருடைய கருத்துக்களையும் உணர்ச்சிகளையும் நாம் முன்வைக்க ஆரம்பிக்கலாம். ஏனென்றால் நம் சூழலென்பது அத்தகைய ஆற்றலுடன் நம்மை வளைத்திருக்கிறது. பேரொலியுடன் பல ஊடகங்கள் நம்மை நோக்கி பேசிக்கொண்டிருக்கின்றன. சமூக ஊடகங்கள் வழியால பலநூறுபேர் நம்மிடம் உரையாடிக்கொண்டிருக்கிறார்கள்.

அத்துடன் நமக்கு புகழ், சமூக ஏற்பு ஆகியவை சார்ந்த ஆசைகள் இருக்கலாம். அந்நிலையில் மக்கள் எதை விரும்புகிறார்களோ அதை நாம் அவர்களுக்கு அளிக்க ஆரம்பிக்கக் கூடும். நம்மையறியாமலேயே நாம் சமைத்துப் பரிமாறுபவர்களாக மாறிவிடுவோம். அவ்வாறு மாறுவது மிக நுட்பமாக நடைபெறுவதனால் நாம் உண்மையில் நம்மைத்தான் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்று நம்பிக்கொண்டும் இருக்கநேரிடலாம்.

ஒருவர் தன் படைப்பை எழுதும்போது தன் தனிப்பட்ட தேடலுக்காக, தன் ஆழ்ந்த தவிப்பிற்காக எழுதிச்செல்வார் என்றால் அது எதைக் கண்டடைகிறது, எதை தவறவிடுகிறது என்று அவருக்கே தெரியும். உதாரணமாக, ஒரு பெருந்துரோகம் ஒன்று உங்களுக்கு இழைக்கப்படுகிறது. அல்லது நீங்கள் அப்படி ஒரு நிகழ்வை அறிந்து உளக்கொந்தளிப்பு அடைகிறீர்கள். நீங்கள் எழுத ஆரம்பிக்கையில் துரோகம் என்றால் என்ன என்பதை தேடிச்செல்கிறீர்கள். அதை ஒருவகையில் புரிந்துகொள்கிறீர்கள். அது அப்படைப்பில் இருக்கிறது. அது தனியுண்மை கொண்டது என தெரிந்துவிடும் உங்களுக்கு.

மாறாக நீங்கள் துரோகம் என்பதை எழுத ஆரம்பிக்கிறீர்கள். நீங்கள் ஆழமாக உசாவிச்செல்லவில்லை. துரோகம் பற்றி பொதுவாக அனைவரும் என்ன நினைப்பார்கள் என்றே உங்கள் உள்ளம் கணக்கிடுகிறது. எதைச்சொன்னால் வாசகர்கள் கதையில் தீவிர ஈடுபாடுகொள்வார்கள் என்று நீங்கள் திட்டமிட்டு எழுதுகிறீர்கள். இதை நீங்கள் உங்களை அறியாமலேயே செய்தாலும்கூட உங்கள் படைப்பில் அது உங்கள் சொந்தக் கேள்வியும் கண்டடைதலும் இல்லை என்று உணர்ந்துகொள்வீர்கள்.

இந்த வேறுபாடு எப்போதும் நமக்கே தெரியும். முழுமையாக நம் ஆழுள்ளத்திற்கு நம்மை ஒப்படைத்து எழுதவேண்டியது மட்டுமே நாம் செய்யவேண்டியது. அது கலையென நிகழ்ந்தால் அதில் கலைக்குரியதென நான் சொல்லும் இயல்புகள் இருக்கும். சிலசமயம் வடிவச்சிக்கல்களால் அது முழுமையடையாமல் போகும். அந்நிலையில் நான் சொல்லும் அந்த தனியுண்மை அதில் துலங்காமல் போகும். அது நமக்கே தெரியும், அது கூர்கொள்ளவில்லை என. கூர்கொண்டு வந்த ஒரு படைப்பைத்தான் நாம்  ‘இதோ இது என் படைப்பு’ என முன்வைப்போம் அல்லவா?

ஜெ

முந்தைய கட்டுரைஅந்த முகில் இந்த முகில்
அடுத்த கட்டுரைஅனந்தத்தை அறிந்தவன் – கடலூர் சீனு