அன்புள்ள ஜெ,
நீங்கள் தன்னறம் உரையை ஆற்றியபோது அங்கே நானும் இருந்தேன். பயன்நோக்காமல் செய்யும் நேர்நிலையான செயல் பற்றிச் சொன்னீர்கள். ஆனால் நான் இலக்கியத்தில் பெரிய கனவுகளுடன் இருக்கிறேன். என் சாதனைகளையே ஒவ்வொரு நாளும் நான் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறேன். அவ்வாறு திட்டமிடுவது தவறா? அந்தக் கனவை நோக்கி நான் செல்லக்கூடாதா?
நிவேதன்
***
அன்புள்ள நிவேதன்,
நான் பெருங்கலைஞன் என நம்பும் ஒரு நண்பருக்கு எழுதிய கடிதம் இது.
’உங்கள் உள்ளம் செல்லும் திசைகளை அறிகிறேன். அதன் அலைக்கழிப்பும் கண்டடைதல்களும் ஆழமானவை. ஆனால் இத்தருணத்தில் ஒன்று சொல்வேன். கலைஞனுக்கு ‘ஆம்பிஷன்’ எனப்படும் ‘இலட்சியசாதனைகள் பற்றிய கனவுகள்’ இருக்கலாகாது. அவன் சாதனைகளை நிகழ்த்தும்போதுகூட.
இன்றைய சூழல் ஒவ்வொருவரையும் சாதனையாளராக அறைகூவுகிறது. அவ்வண்ணம் சாதனையாளராக ஆகமுடியாதவர்களுக்குச் சோர்வை அளிக்கிறது. சாதனையை நிகழ்த்த முடியுமா என்னும் ஐயமே சோர்வாக ஆகிறது. கலையும் இலக்கியமும் சோர்வுறுத்துவனவாக ஆவது அவ்வாறுதான்.
தன் கலைச்சாதனை அங்கீகரிக்கப்படவேண்டும் என்னும் வேட்கையையும் சாதனை குறித்த முன்முடிவே உருவாக்குகிறது. அங்கீகரிக்கப்படவில்லையோ என்ற ஐயமும், அங்கீகரிக்கப்படவில்லை என்னும் சீற்றமும் எழுகிறது. ஏமாற்றமும் காழ்ப்பும் விளைகின்றன.
கலையின் முதன்மைச் சாதனை என்பது முழுக்க முழுக்க நம்மை அதில் ஈடுபடுத்தி வைத்திருப்பதுதான். அதுவே என வாழ்வது. அதில் திளைப்பது. நாம் அடைவதல்ல, நாம் இருப்பதே நம் சாதனை. திரும்பிப் பார்க்கையில் ஒவ்வொரு நாளையும் கலைவேட்கையுடன் கலைநிகழ்வுடன் செலவிட்டிருந்தால் நாம் வென்றோம். ஒருநாள்கூட வீணாகாத வாழ்க்கையையே கலைவாழ்க்கை என்கிறோம்.
வெல்வதும் தோற்பதும் நம் கணக்கே அல்ல. காலத்தில் நிற்பதும் மறைவதும் நாம் அறியக்கூடுவன அல்ல. பெருங்கனவுகள் அல்ல அன்றாடத்தில் ஒவ்வொரு கணமும் கலையில் இருத்தலே கலைஞனுக்கான வழியாக இருக்க முடியும்’
ஜெ
***