நேரம் – ஒரு கடிதம்

நேரா நிர்வாகம்

அன்புள்ள ஆசிரியருக்கு,

ஒவ்வொருநாளும் என்ற தங்களது அனுபவ கட்டுரையை படித்தேன். கிட்டத்தட்ட 13 வருடங்களுக்கு முன் எழுதிய கட்டுரை. ஆனாலும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துகள் என்றைக்குமானது என்றே தோன்றுகிறது. அதுவும், இந்த ஊரடங்கு காலத்தில் மிகவும் அவசியமானதும் கூட. தினமும் மனம் பல நிலைகளில் சிதறி கிடக்கிறது. அதை ஒன்று திரட்டி செயலாக்குவது என்பது மிக கடினமான ஒன்றாகவே இருக்கிறது. குறிப்பாக, என்னை போன்ற இளைய தலைமுறையின் முன் வைக்கப்படும் மித மிஞ்சிய பொழுது போக்கு ஒரு அறைகூவலாகவே தென்படுகிறது. இணையத்தில் அரை நிமிடத்தில் எங்கும் செல்ல முடியும், தொடங்கிய பின் வெளியேறும்போது கிட்டத்தட்ட ஒரு நாளில் பாதி நேரம் கூட மறைந்து விடுவதும் உண்டு. அதன் உள பாதிப்பில் இருந்து வெளிவர எஞ்சிய அரைநாள் என்று ஒரு நாள் மிக இயல்பாக வீணடிக்கப்படுகிறது. அது மட்டுமில்லாமல் தூக்கம் ஒழுங்கற்று அடுத்த நாளின் காலையும் சோம்பலுடன் விழிக்க வேண்டியதாக இருக்கிறது.

என் நேரம் என்னுடைய கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமென்பதில் எப்போதுமே எனக்கு பிடிவாதம் உண்டு என்று கூறும் நீங்கள் என்னைப் போன்றவர்களின் முன் ஒரு பெரும் வியப்பாக, எங்கோ எட்ட முடியாத இலக்காக இருக்கிறீர்கள் என்றே நினைக்கிறேன். ஆனால், கட்டுப்பாடு, திட்டமிடல் போன்றவற்றை நீங்கள் வலியுறுத்தும் போது சிறிது நம்பிக்கை பிறக்கிறது. அதன் பிறகு, உங்கள் செயல்நிரைகள் பற்றி கூறும் பொழுது, மிகவும் பாதித்த இடம் உங்கள் தூங்கும் நேரம், கிட்டத்தட்ட ஒரு நாள் முழுவதும் எடுத்தாலும் ஐந்து மணி நேரம் மட்டுமே தூங்கி இருக்கிறீர்கள். அதை எவ்வாறு சாத்தியமாக்கினீர்கள் என்று தெரியவில்லை. பிறகு, அதிலுள்ள ஒரு தொடர்ச்சியான பழக்கங்கள், நேரம் முன்பின்னானாலும் அதிலுள்ள விடுபடாத ஒரு தொடர்ச்சியும் பிரமிக்க வைத்தது. ஒரு நாள் என்பது ஒரு வாழ்க்கையின் முழுமை என்றே உணர செய்தது.

இறுதியாக, திட்டமிடல் பற்றி மட்டும் உங்களிடம் கேட்டு கொள்கிறேன். நீங்கள் திட்டமிட்டபடி நடந்து கொள்ள பல வருடங்களாக பழகி இருக்கிறீர்கள். ஆரம்ப காலத்தில் உள்ள ஒருவன், திட்டமிடுதலை எவ்வாறு நிகழ்த்த வேண்டும்? அதன் முன் அவன் கணக்கில் கொள்ள வேண்டியது என்ன?

ஒவ்வொருநாளும்

அன்புடன்,

நரேந்திரன்.

***

அன்புள்ள நரேந்திரன்,

நேரத்திட்டமிடல் என்பது உண்மையில் நேரம் பற்றிய பிரச்சினை அல்ல. நம் கவன ஒருங்கிணைப்பு பற்றிய பிரச்சினை. கவனம் எவ்வாறு ஒருங்கிணைகிறது என்றால் நாம் நமக்குரிய செயலைச் செய்யும்போது. அதை செய்வதற்கான வழியை கண்டடையும்போது. ஆகவே நம் பணி என்ன, அதை செய்வதற்கான உகந்த வழி என்ன என்பதை நாம் தெளிவுபடுத்திக்கொள்ளவேண்டும்

நேரத்திட்டமிடலில் உள்ள முக்கியமான அம்சம் பழக்கம். உடல் மனம் இரண்டுமே திட்டவட்டமான காலத்தன்மை கொண்டவை. ஒன்றை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மாறாமல் செய்தோமென்றால் அதற்காக உடலும் உள்ளமும் பழகிவிடுகின்றன. நேரத்தை திட்டமிட்டபின் அதை மாறாப்பழக்கமாக, பிடிவாதமாக, சில மாதங்கள் முன்னெடுத்தாலே போதும் அதுவே வழக்கமாக ஆகிவிடும். காலை ஏழுமணிக்கு சரியாக ஒரு கவிதையை படிப்பவன் ஆறுமாதம் அவ்வாறு படித்தால் காலை ஏழுமணிக்கு அவனுக்குக் கவிதை தேவைப்படும். இதைத்தான் தொன்மைக்காலம் முதல் யமநியமங்கள் என்று சொல்லி வந்தனர்.

எந்த நேரத்திட்டமிடலையும் எளிதாக நடைமுறைப்படுத்த முடியாது. அதற்கு நாம் ஏற்கனவே இருந்துகொண்டிருக்கும் வாழ்க்கைமுறையை மாற்றவேண்டும். வாழ்க்கைமுறை உளநிலையில் வெளிப்பாடு. ஆகவே அதை மாற்றவேண்டும். அகமும் புறமும் மாறுவது ஒரு பெரும்பணி. அதற்கு படிப்படியான மாற்றம், கொஞ்சம் கொஞ்சமான மாற்றம் என்பது சாத்தியமே அல்ல. ஒரு புள்ளியில் தொடங்கும் முழு மாற்றமே இயல்வது. அதை ஒரு சுயவதைத் தன்மையுடன், முழுமூச்சாக, சிலமாதங்கள் விடாமல் செய்து மெல்ல உடல்மனப் பழக்கமாக ஆக்கிக் கொள்ளவேண்டும். வேறு வழியே இல்லை.

அத்துடன், முழுமையாகவே ஒழுங்கமைந்த சீரான வாழ்க்கையும் உகந்தது அல்ல. அவ்வப்போது ஒழுங்கிலிருந்து விடுமுறையும் தேவை. நான் அடிக்கடி பயணங்கள் செல்வேன். எந்த கால ஒழுங்கும் இல்லை. அது ஒரு கட்டற்ற விடுதலை.

ஜெ

முந்தைய கட்டுரைஅன்புராஜ் ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைபாமர வாசகர் என்பவர்…