கரோலினா நினைவுகள்

அன்புள்ள ஜெ,

செப்டம்பர் 2019 ல் உங்கள் வட கரோலினா வருகை மறக்க முடியாத இனியத் தருண நாட்கள். நாம் விரும்பும் எழுத்தாளர்களின் உடனான முதல் சந்திப்பு என்பது எப்போதும் மறக்க முடியாதுதானே.  நண்பர் ராஜன் வாட்ஸாப் குழுமத்தில் உங்கள் வருகைச் செய்தியைப் பகிர்ந்தவுடன் உள்ளுக்குள் தலைகால் புரியாத சந்தோசத்தில்தான் திரிந்து கொண்டிருந்தேன். வீட்டில் வெளிக்காட்டி கொள்ளவில்லை. சந்தோசத்தை வெளிக்காட்டிக்கொண்டு வீட்டில் திரிந்து கொண்டிருந்தால் முதலுக்கே மோசமாகிவிடும். நிகழ்வன்று ஏதாவது பிரச்சினை முளைத்து கலந்துகொள்ள முடியாத முன்னனுபவங்கள் எல்லாம் இருக்கிறது. சூதானமா இருக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். பதிவு செய்யப்பட்ட நபர்களுக்குதான் நூலகக் கூடுகை அறையில் அனுமதி. அதனால், நிகழ்ச்சி பற்றி செய்தியறிந்தவுடன் முதல் ஆளாக பதிவு செய்து கொண்டேன்.

நிகழ்வுக்கு 30 நிமிடம் முன்னரே நூலக அறைக்குச் சென்று மற்ற வாசகர்களோடு உங்களுக்காக காத்துக்கொண்டிருந்தோம். நூலக அலுவலர்கள் பதிவுச் செய்த வாசகர்களின் பெயரைச் சரிபார்த்து உள்ளே சென்றமர அனுமதித்துக் கொண்டு இருந்தனர். உள்ளே சென்று அமர்ந்து வெறுமனே எவ்வளவு நேரம் அமர்ந்திருக்க முடியும். தெரிந்த நண்பர்கள் சிலர் வந்திருந்தது ஆறுதல், சந்தோசம். ராஜனின் மனைவி, மகள் மற்றும் பெற்றோர்கள் கூட்ட அறைக்கு வெளியே ஒரு மேசைமீது தாங்கள் கொண்டு வந்திருந்த புத்தகங்களை அடுக்கி வைத்திருந்தனர். தமிழ்நாட்டில் இருந்து புத்தகங்களை இருப்பதிலேயே குறைந்த விரைவு செலவில் பதிவு செய்தாலும், புத்தக விலையைவிட அனுப்பும் செலவு தான் அதிகம் எப்போது. வாசகர்களுக்கு நல்ல வாய்ப்பும் கூட உங்கள் புத்தகங்களை அங்கேயே வாங்கிக் கொள்ள. இரண்டு புத்தகங்கள் வாங்கிக் கொண்டேன்.

கோட் அணிந்து ராஜனோடு நூலக கட்டிடதிற்கு வெளியில் நுழைநடைபாதையில் நடந்துவரும் போது தான் முதல்முறையாகப் பார்க்கிறேன். உற்சாகமாக இருந்தது உங்கள் நடை. “சார் எப்படி இருக்கீங்க?” என்று கேள்விக் கேட்டு கைகுலுக்கிக் கொண்டேன். நல்ல வேளை, கொரோனா தொற்று நோய்க்கு முன்பு நடந்த நிகழ்வு. இல்லையென்றால் வெறும் கைகும்பிடு மட்டும்தான். நேர்காணல் நிகழ்ச்சியாக அன்றைய முதல் மதிய வேளைக் கூட்டம். நேர்காணல் நிகழ்த்தும் நூலக முதன்மை அலுவலர் (என்று நினைக்கிறேன்), தங்களைப் பற்றிய அறிமுகக்  குறிப்போடு நேர்காணலை நடத்தினார். வெண்முரசு நாவல் வரிசை 26 புத்தகங்கள், 25000+ பக்கங்களென தொடர்ந்து 6 வருடங்களுக்கு மேலாக எழுதிவரும் எழுத்தாளர் என்ற அவருக்கு இருந்த (எங்களுக்கும்) பிரமிப்போடுதான் நேர்காணல் நிகழ்வு நடந்தது. அயல் இலக்கியம், எழுத்தாளர்கள் என்ற அனைத்து கேள்விகளுக்கும் ஆங்கிலத்தில் தங்கு தடையில்லாமல் நீங்க பதில் அளிப்பதை பார்க்க சந்தோசமாக இருந்தது. நேர்காணல் முடிவில் வாசகர்களின் கேள்வி, பதில்களோடு நிகழ்வு இனிதே நடந்தேறியது. என் பங்குக்கு ஓரிரு கேள்விகள் கேட்டுத் திருப்தி அடைந்துகொண்டேன்.

ஆங்கிலத்தில் தங்கு தடையற்ற உரையாடலை நிகழ்த்த முடிந்த சந்தோசத்தை எங்களோடுப் பகிர்ந்து கொண்டீர்கள். வாசகர்கள் வழக்கச் சம்பிரதாயமாக கொண்டு வந்த, அங்கு வாங்கியப் புத்தகங்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டார்கள் உங்களிடம். நானும் அவர்களோடு சேர்ந்துகொண்டேன். கையெழுத்து வாங்கிய புத்தகத்தை பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும். கோட் அணிந்து ஆங்கிலத்தில் முழு நேர உரையாடல் என, இதற்கு முன்னர் வேறெங்கும் உங்களுக்கு இந்த மாதிரி அனுபவம் அமைந்ததா என்றுத் தெரியவில்லை.

மூன்று மணிநேர இடைவெளிக்குப் பிறகு மாலை கரோலினா தமிழ் சங்கம் மூலம் “குறளும் கவிதையும்” தலைப்பில் நீண்ட உரை. இறுதியில் வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில்கள் என ஒரே நாளில் இரண்டு நிகழ்வுகள். ஜாக்பாட் தான் எங்களுக்கு. வாசகர்களின் கேள்விகளுக்கு நீங்கள் ஒவ்வொரு முறையும் எழுந்து நின்று பதில்கள் அளித்தது வியப்பாகவும், சந்தோசமாகவும் இருந்தது. உங்கள் தளத்திலேயே இந்த நிகழ்ச்சியின் முழுக் காணொளிகள் காணக் கிடைக்கின்றன.

ஒரு வார இடைவெளிக்குப் பிறகு தமிழ் கலாச்சார சங்க அமைப்பு மூலமாக மூன்றாவது நிகழ்வும் நடைபெற்றது. வாசகர்களின் கேள்வி பதில்கள் உரையாடலாக முழு நிகழ்வும் இருந்தது. ஒரு சில வாசகர்கள் கேள்விகள் கேட்டு பல்பு வாங்கிக் கொண்டதும் நடந்தது. என் பங்குக்கு இரண்டு கேள்விகள் கேட்டேன். ஒரு கேள்வியின் ஒரு பகுதிக்கு எனக்கும் பல்பு கிடைத்தது. நிகழ்ச்சி முடிந்தப் பிறகு பெயர் என்னவென்று என்னிடம் கேட்டுத் தெரிந்து கொண்டீர்கள். பயம் கலந்த சந்தோசம். நிகழ்ச்சி முடிந்து அரங்கத்திற்கு வெளியிலும் வாசகர்களோடு சிறிது நேரம் உங்களுடன் உரையாடல் தொடர்ந்து கொண்டு இருந்தது.

ஒரு வாரத்திலேயே மூன்று சந்திப்புகள் திருப்தியாக இருந்தது. வேறென்ன வேண்டுமென்ற மனநிலை.

இனிய, மிகப் பயனுள்ள சந்திப்புகள். மூன்று சந்திப்புகள் மூலமாக நிறைய வாசக நண்பர்கள் கிடைத்து இன்றுவரை அந்த நட்பு நல்லவிதமாக தொடர்கிறது. இலக்கிய வாசிப்பு உரையாடல்கள் சிறு அளவில் தொடர்ந்து நிகழ்த்தி வருகிறோம்.

நன்றி.

அன்புடன்,
முத்து காளிமுத்து

அமெரிக்க நூலகச் சந்திப்பு

முந்தைய கட்டுரைகி.ரா.உரை- கடிதம்
அடுத்த கட்டுரைநீலகண்டப் பறவையின் நிலம்